ஜெயவர்த்தனாவின் நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் அரங்கேற்றும் இருபதாவது திருத்தம் -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் 20வது சீர்திருத்தம் என்பது நீண்டதொரு விவாதத்தை பல்கோணத்தில் உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அப்பால் ஆளுந்தரப்பினுள்ளேயே முரண்நகையான கருத்துக்களே 20வது சீர்திருத்தம் தொடர்பில் பொதுவெளியில் அலசப்படுகிறது. 20வது சீர்திருத்தத்தை எதிர்ப்போர் அதன் வடிவமாக, அது இலங்கையில் சர்வதிகாரத்தை கட்டமைக்கப்போவதாகவும், ஜனநாயகத்தின் புதைகுழியாகவும் சித்தரிக்கிறார்கள். இந்நிலையில் இக்கட்டுரையானது 20வது சீர்திருத்தத்தின் வடிவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
20வது சீர்திருத்தம் பிரதானமாக கடந்த மைத்திரி – ரணில் தேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 19வது சீர்திருத்தத்தை நீக்குவதையே ஆழமான கருத்தியலாக கொண்டுள்ளது. இந்நிலையில் 19வது சீர்திருத்தத்திற்கு பிரச்சாரமாக வழங்கப்பட்ட ஜனநாயக மீட்பு என்ற வடிவமானது, 19வது சீர்திருத்தத்தை நீக்க 20வது சீர்திருத்தம் வடிவமைப்பதால் 20வது சீர்திருத்திற்கான வடிவத்தை பிரச்சாரம் செய்வதில் ஆழமாக செல்வாக்கு செலுத்துகிறது. அதனடிப்படையில் முதலில் 19வது சீர்திருத்தத்தை ஆதரித்தோரால் 19வது சீர்திருத்தம் ஜனநாயக மீட்பு என வடிவம் கொடுத்து செய்யப்பட்ட பிரச்சாரம் செய்தது சரியானதா என்பதை தேட வேண்டும்.
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரு அரசியலமைப்புகளாயினும் சரி, இறுதியாக உருவாக்கப்பட்ட 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 19 சீர்திருத்தங்களாயினும் சரி யாவும் உருவாக்கத்தின் பின்னணியில் அன்றைய நடப்பு அரசாங்கத்தின் அபிலாசைகளை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறான பின்புலமே 19வது சீர்திருத்தத்திலும் இருந்தது. ஐனநாயகம், சட்டவாட்சி, சுதந்திர பொறிமுறைகள் என கொள்கைகளை பிரதானப்படுத்தி இருப்பின் என்றோ இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றிருக்கலாம்.
19வது சீர்திருத்தமானது உட்கிடக்கையில் இன்று ஆட்சியதிகாரத்தில் உள்ள ராஜபக்ஷாக்களின் அரசியலை தடுப்பதற்கான ஏற்பாடுகளையே அதிகம் கொண்டது. எடுத்துக்காட்டாக 19வது சீர்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சீர்திருத்தங்களான, இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது; இரு நாட்டு குடியுரிமை உடையவர்கள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியாது; மற்றும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான வயது எல்லையாக 35இனை அதிகரித்தமை என்பன நேரடியாகவே ராஜபக்ஷாக்களின் குடும்ப உறுப்பினர்களான இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷா, இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா, பசில் ராஜபக்ஷா மற்றும் நாமல் ராஜபக்ஷா அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க விதிக்கப்பட்ட தடைகளேயாகும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இரட்டை குடியுரிமையில் அமெரிக்க குடியுரிமையை நீக்கிய பின்னரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகையில் பல சவால்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த கருத்தினடிப்படையில், 19வது சீர்திருத்தத்தின் மையப்பொருள் ராஜபக்ஷாக்களின் அரசியலை தடுப்பதாகும். இதற்கு ஆதரவு தரப்பு வழங்கிய ஜனநாய மீட்பு என்ற வடிவம் கொள்கைவழி ஏற்க முடியுமா என்பது சிந்தனைக்குரியது.
19வது சீர்திருத்தத்தின் மேலதிக உள்ளடக்கங்களான தகவலறியும் உரிமைச்சட்டம், சுதந்திர ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது கொள்கைவழி ஜனநாயக காப்பான்களே பாராட்டத்திற்குரியது. எனிலும் இவ்அம்சங்களை தனித்து நோக்கி 19வது சீர்திருத்தத்தை ஜனநாயக மீட்சியாக குதூகலிப்பதாயின் அவர்கள் ஜனநாயகம் தொடர்பான தமது எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டு விட்டனர் என்பதே யதார்த்தமான வெளிப்பாடாகும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு புறத்தே 19வது சீர்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், இலங்கையின் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு வடிவமைத்த நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையில் ஜனாதிபதியின் நிறைவேற்றுத்துறை அதிகாரங்களை குறைத்து பாராளுமன்ற ஜனநாயக முறைமையை பலப்படுத்த முயன்றது என்றே கொள்கைவழி வடிவத்தை வழங்க முடியும். அவ்விடயத்தையும் 19ஆம் சீர்திருத்தம் முழுமைப்படுத்தியிருக்கவில்லை. 19வது சீர்திருத்தத்தின் முதல் வரைபுகளில் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பிரதமர் பிரயோகிப்பதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், இவற்றை நிறைவேற்றுவதற்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்பளித்திருந்ததால் இந்தப் பிரிவுகளும் இறுதியில் திருத்தத்தில் இடம்பெறவில்லை.ஆக, பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு பின்னரே ஜனாதிபதியால் கலைக்க முடியும்; ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். என்பனவே சேர்க்கப்பட்டாலும் அமைச்சரவை நியமன ஆலோசனை பெறலில் சரியான சட்டவரையறை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இப்பின்னணியில் 19வது சீர்திருத்தத்திற்கு ஜனநாயக மீட்பு வடிவம் வழங்கப்பட்டதே தவறானா வடிவமாகும். 19ஆம் திருத்தம் சாதிக்க விளைந்த முக்கியமான இரண்டு விடயங்கள். ஒன்று ராஜபக்ஷா குடும்ப உறுப்பினர்களின் அரசியல் பயணத்தை தடை செய்தல். இரண்டு – சுயாதீனமாகப் பொதுத் தாபனங்கள் மற்றும் நீதித்துறை இயங்குவதற்குரிய ஏற்பாடுகளைக் கொண்டுவரல். இதை தாண்டி ஓரளவில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க முயன்றுள்ளது.
19வது சீர்திருத்தத்தை மேற்குறித்த உள்ளார்ந்த வடிவத்தில் பொதுப்பார்வையில் பார்ப்போமாயின், 19வது சீர்திருத்தத்தை நீக்குவதால் 20வது சீர்திருத்தம் சர்வதிகார சீர்திருத்தம் என்ற வடிவம் கருத்தியல்வழி ஏற்புடையது இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். 20வது சீர்திருத்தம் செய்வது, முன்னைய மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் 19ஆம் சீர்திருத்தம் மூலமான அரசியலமைப்புத் தாக்கத்தை நீக்கி மீண்டும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மூல அரசியலமைப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளமையே அன்றி அடிப்படையில் 1978 அரசியலமைப்பிலோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலோ பெரிதளவில் 20வது சீர்திருத்தம் தாக்கம் செலுத்தாது.
யாழ்ப்பாணத்து சுவர்களில் முன்னிலை சோசலிஷ கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டிகளில் குறித்துள்ள “J.Rஇன் சர்வதிகார வெறித்தனத்தை மீண்டும் அரங்கேற்ற வரும் G.Rஇன் 20க்கு எதிராவோம்” என்பது யதார்த்தமான எதிர்ப்பாகும். 19இன் பாதையால் 20ஐ பார்ப்பதற்கு மாறாக 20ஐ எதிர்ப்போர் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் பாதையிலேயே 20ஐ பார்ப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்.
நடைமுறையில் இலங்கை அரசியல், நாகரீகமான அரசியல் கலாசாரத்தின் கீழ் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதிமுறை இலங்கைக்கு ஆரோக்கியமானதா என்ற விவாதமே பொருத்தமானதாகும். மாறாக 20வது சீர்திருத்தத்திற்கு சர்வதிகார வடிவம் கொடுத்து விவாதத்தை நகர்த்துவது அரசியல் நாகரீகமற்ற செயலாகிறது.
இலங்கையில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை தொடர்ந்து ஆட்சிப்பீடமேறியவர்கள் தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றாகவே நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே வாக்குறுதி அளித்து வந்துள்ளார்கள். அதன் பின்னணியில் இலங்கையின் ஆட்சியாளர்களே நிறைவேற்றுத்துறை இலங்கைக்கு பொருத்தமில்லாத முறைமை என்பதை ஏற்றுக்கொள்வது உறுதியாகிறது.
அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையானது பொருத்தமானது எனும் கருத்தியல் சர்வதேச ஜனாதிபதி முறைமையின் அனுபவத்தில் காணப்படுகின் போதிலும், இலங்கையின் அரசியல் கலாசாரம். நிறைவேற்றுத்துறையை சர்வதிகாரமாக நகர்த்தக்கூடிய பண்பினையே கொண்டுள்ளது. குறிப்பாக நடைமுறையில் உள்ள அரசாங்கம் பல்லின சமூக கட்டமைப்பு உள்ள அரசில் முழுமையாக சிங்கள – பௌத்தம் சார்ந்ததாகவே காணப்படுகிறது. இவ்ஒருபக்க சிந்தனையுள் நிறைவேற்றுத்துறையும் கலக்கப்படுகையில், ஏனைய இனங்கள் மற்றும் மதங்கள் ஒடுக்கப்படும் நிலைமையே காணப்படும். அதற்கான சான்றாகவே நடைமுறை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கிழக்கு செயலணி காணப்படுகின்றது.
மேலும், ஆளுந்தரப்பினுள்ளேயே 20வது சீர்திருத்தத்திற்கு எதிராக எழுந்துள்ள விமர்சனம் 20வது சீர்திருத்தம் வரைபிலிருந்து சட்டமாக முற்றுப்பெறுமா என்பது தொடர்பாக ஆழமாக சிந்திக்க தூண்டியுள்ளது.
19வது சீர்திருத்த உருவாக்கத்தில் தேசிய அரசாங்கத்தில் பிரதான அங்கமாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் நடப்பு அரசாங்கத்திலும் அங்கத்துவராக உள்ள நிலையில் தமது நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட 19வது சீர்திருத்தத்தை முழுமையாய் நீக்குவதில் உடன்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும்முகமாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிபுணர்குழுவூடாக 20வது சீர்திருத்தத்தினை பரிசீலித்தே ஆதரிக்கும் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரா அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஆளுந்தரப்பாகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் 20ஆம் சீர்திருத்தம் தொடர்பிலே முரணான கருத்துக்கள் நிலவுகின்றமை பொதுவெளியில் வெளிவரும் செய்திகளூடாக அறிய முடிகிறது. குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷா அவர்களுக்கும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவிற்குமிடையிலேயே 20வது சீர்திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பிலே முரண்பாடு நிலவுவதாகவே புலப்படுகிறது. “அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான போட்டியில் அண்ணனை எப்படி மண்டியிட்டு வைக்க முடியும் என்றே தம்பி எண்ணுகிறார்” என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். அத்துடன் 20வது சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் நியமித்த குழுவின் அறிக்கை அமைச்சரவையில் உள்வாங்காமை மற்றும் 20ஆம் சீர்திருத்தத்துக்கான பொறுப்பை ஜனாதிபதி ஏற்றமை உட்பிணக்கையே வெளிப்படுத்துவதாக உள்ளது.
வரைபு நிறைவேற்றப்படுவதில் ஆளுந்தரப்பினுள்ளேயும், எதிர்த்தரப்பினராலும் பிணக்குகள் நிறைந்த 20வது சீர்திருத்தத்தின் வடிவம் நிறைவேற்றுத்துறையை மீள வடிவமைக்கின்றது என்பதே யதார்த்தமானதாகவும், 20ஐ எதிர்ப்போர் இலங்கைக்கு பொருத்தமற்ற நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமைசார் விமர்சனத்தையே விவாதத்துக்கு முற்படுத்துவதே சிறந்ததாகும். அதனூடாகவே வரையப்படவுள்ள புதிய அரசியலமைப்பிலாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை அகற்ற முற்படலாம்.
Comments
Post a Comment