அமெரிக்க - ரஷ்சிய ஆயுத கட்டுப்பாட்டு தளர்வு: இராஜதந்திர நகர்வா? -ஐ.வி.மகாசேனன்-
ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு சனவரி 20ஆம் திகதி சனாதிபதியாக பதவியேற்றத்திலிருந்தே அதிரடியான முடிவுகளால் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானர். உலக வல்லரசான அமெரிக்கா அரசு கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த பல ஒப்பந்தங்களிலிருந்தும் ட்ரம்ப் சுயாதீனமாக விலகி வந்தார். அமெரிக்க தேசியம் என்ற அடையாளத்துடன் வல்லாதிக்க அரசை தனித்து பயணிப்பதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்துள்ளார். அண்மையில் ஆயுதக்கட்டுப்பாடு தொடர்பிலே ரஷ்சியாவுடன் மேற்கொள்ளப்பட்ட 'திறந்த வான்வெளி' ஒப்பந்தத்திலிருந்தும் விலக போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ட்ரம்பின் விலகல்கள் தொடர்பிலே ட்ரம்பிற்கு எதிரான கருத்துக்கள் மேலோங்கி வருகின்ற போதிலும் அண்மையில் அமெரிக்காவின் சர்வதேச விவகாரங்களை மையப்படுத்திய கட்டுரையாளர் டேவிட் இக்னேஷியஸ் த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் (The Washington Post) ட்ரம்பின் விலகல் செயற்பாட்டை இராஜதந்திர நகர்வாக ஆதரித்துள்ளார். அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை ட்ரம்ப் அமெரிக்க அரசின் ஒப்பந்தங்களை முறித்து விலகுவது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை சிதைக்கிறதா? அல்லது இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை பலப்படுத்துகிறதா? என்பதை ஆராய்வதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது முதலாவது அமெரிக்க சனாதிபதி தேர்தல் காலத்திலிருந்தே அமெரிக்க தேசியம் என்பதையே பிரதான உரையாடலாக முன்வைத்து வருகின்றார். அமெரிக்க தேசியம் என்பதை பலப்படுத்த அமெரிக்காவை கட்டுப்போடும் சில ஒப்பந்தங்களிலிருந்து முறித்து அமெரிக்காவை தனித்து நகர்த்துவதை மூலோபாயமாக கொண்டு செயற்பட்டு வருகின்றார். அமெரிக்க மற்றும் மெக்ஸிகோவிற்கு இடையில் மதில் கட்டியமை முதல் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலக தீர்மானி;த்தது வரையிலான ட்ரம்ப் நிர்வகத்தின் ஒப்பந்த முறிவுகள் அமெரிக்காவினுள்ளேயே ட்ரம்பிற்கு பலத்த எதிர்ப்பை உருவாக்கியது. எனிலும் தொடர்ச்சியாக ட்ரம்ப் ஒப்பந்தங்களை முறித்தே வருகின்றார். அந்த வரிசையிலேயே ரஷ்சியாவுடனான ஆயுத கட்டுப்பாட்டு தொடர்பிலான திறந்த வான்வெளி ஒப்பந்தத்திலிருந்தும் ட்ரம்ப் விலக தீர்மானித்துள்ளார்.
அமெரிக்கா ரஷ்சியா உள்ளிட்ட 35 நாடுகளின் ஒப்பந்தத்தில், உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர உளவு விமானங்களை அனுமதிப்பதன் மூலம் தற்செயலான யுத்தத்திற்கான வாய்ப்புகளை குறைக்க வடிவமைக்கப்பட்ட கிட்டத்தட்ட 30 ஆண்டுகால ஒப்பந்தமான திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் மே 21அன்று தெரிவித்தார். திறந்த வான்வெளி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் இராணுவத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கண்காணிப்பு விமானங்களை கொண்டு குறுகிய கால அறிவிப்பில் சோதனை நடத்த அனுமதிக்கிறது. கண்காணிப்பு விமானங்கள் மூலம் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தலாம் மேலும் புகைப்படம் எடுக்கலாம். இதன் மூலம் இந்த நாடுகள் தங்களுக்கு இடையிலான மோதல்களை தவிர்க்க வழிவகுக்கும். ஐரோப்பாவை அச்சுறுத்த கூடிய நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதங்களை ரஷ்சியா குவித்து வருவதை கண்காணிக்க அமெரிக்க உளவு விமானங்களுக்கு அனுமதி அளிக்காததை காரணமாக கூறி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறது. 'ரஷ்சியா இந்த ஒப்பந்தத்தை பின்பற்றவில்லை. எனவே அவர்கள் கடைபிடிக்காத வரையில் நாங்கள் வெளியேறுவோம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ரஷ்சிய இணக்கம் குறித்த கவலைகள் இருந்த போதிலும் இந்த ஒப்பந்தத்தில் இருக்குமாறு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளன. ட்ரம்பின் திறந்த வான்வெளி ஒப்பந்த விலகல் அறிவிப்பு மிகவும் கவலையளிப்பதாகவும் இது இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கைகளை நிராகரித்து திறந்த வான்வெளி' ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையில் மற்றொரு பிளவை ஏற்படுத்தும் அபாயங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு 1992க்குப் பிறகு இதுவரை எந்த அணு ஆயுத சோதனையிலும் ஈடுபடவில்லை எனக்கூறப்படும் நிலையில் ட்ரம்ப் தலைமையிலான இப்போதைய அரசு முதன்முறையாக சோதனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் 1992க்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க அரசு அணு ஆயுத சோதனையில் ஈடுபடவுள்ளதாக தற்போதைய அதிகாரி ஒருவரும், முன்னாள் அதிகாரிகள் இருவரும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. சீனா, ரஷ்சியா ஆகிய நாடுகள் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில் உயர் மட்ட தேசிய பாதுகாப்பு ஏஜென்சிகளின் அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அணுசக்தி சோதனை நடத்துவதற்கான எந்தவொரு உடன்படிக்கையுடனும் கூட்டம் முடிவுக்கு வரவில்லை. ரஷ்சியா மற்றும் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மற்ற நடவடிக்கைகளை எடுக்கவும், சோதனை மீண்டும் தொடங்குவதைத் தவிர்க்கவும் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க அதிகாரிகளை உடனடியாக அணுக முடியவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ரஷ்சியாவுடனான திறந்த வான்வெளி ஒப்பந்தத்திலிருந்தான வெளியேற்றம் அணு ஆயுத போருக்கான அடித்தளத்தை விஸ்தரிக்கப்போவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1972க்குப் பிறகு முதன்முறையாக இரண்டு பெரிய அணுசக்தி நாடுகள் எந்தவொரு சட்டபூர்வமான அல்லது சரிபார்க்கக்கூடிய வரம்புகளும் இல்லாத ஒரு சகாப்தத்திற்குத் திரும்பும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை மீறுவதை ரஷ்சியா மறுத்துள்ளது. முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களிலிருந்து ட்ரம்ப் நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் விலகுவதாய் விமர்சித்தது. 'துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க நிர்வாகத்தால் சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு இது முதல் அடி அல்ல' என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா (Maria Zakarova) அரசு நடத்தும் ரோசியா - 24 தொலைக்காட்சி சேனலில் தெரிவித்தார்.
'ட்ரம்ப் நிர்வாகம் உண்மையில் இந்த இணக்க சிக்கல்களை சரிசெய்ய முயற்சிப்பது போல் தோன்றவில்லை. விஷயங்களை எப்படி உடைப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று தோன்றுகிறது.' என ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் பரவல் அல்லாத மையத்தின் மூத்த இயக்குனர் அலெக்ஸ் பெல் (Alex Bell) கூறியுள்ளார். அத்துடன் 'ஐசனோவர் மற்றும் ஜி.எச்.டபிள்யூ. புஷ் போன்ற மரியாதைக்குரிய குடியரசுக் கட்சித் தலைவர்களின் மரபுரிமையை குப்பைத்தொட்டிக்குள் வீசும் நிலையை ட்ரம்ப செயற்படுத்துகின்றார். மூன்று ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை கைவிட்டு, எதையும் உருவாக்காத ஒரே அமெரிக்க தலைவர் என்ற அபூர்வமான நிலையில் அதிபர் ட்ரம்ப் உள்ளார்.' என்றும் விசனம் தெரிவித்துள்ளார்.
சில குடியரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதிகள், புஷ் நிர்வாகத்தின் மூத்த புலனாய்வு அதிகாரியான ஜெனரல் மைக்கேல் வி. ஹேடன் (Michael v. Hayden) உட்பட இந்த நடவடிக்கையை விமர்சித்தனர். 'இது பைத்தியம்' என்று அவர் ட்வீட் செய்துள்ளார். செனட் வெளியுறவுக் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சென். ராபர்ட் மெனண்டெஸ் (Chen. Robert Menendez), ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவை பொறுப்பற்றதாக விவரித்தார். ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு முன்னர் நிர்வாகம் மறுஆய்வு காலத்தை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்டளையிட்டது என்றும், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் நிர்வாகம் சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
நேரெதிரான விமர்சனங்களுக்கு அப்பால் ட்ரம்பின் விலகல் தீர்மானத்துக்கு ஆதரவாக ட்ரம்பின் குடியரசு கட்சியை சார்ந்த சிலர் ஆதரவு தெரிவித்;துள்ளனர். அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாட்டுக்கான வெளியுறவுத்துறையின் புதிய சிறப்பு தூதர் மார்ஷல் பில்லிங்ஸ்லியா (Marshall Billingslea) 'இந்த பந்தயங்களை எவ்வாறு வெல்வது என்பது எங்களுக்குத் தெரியும். எதிரியை மறதிக்கு எப்படி செலவிடுவது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டுமானால், நாங்கள் செய்வோம். ஆனால் அதைத் தவிர்க்க நாங்கள் நிச்சயமாக விரும்புகிறோம்.' என்று கூறினார்.
அமெரிக்காவின் சர்வதேச விவகாரங்களை மையப்படுத்திய கட்டுரையாளர் டேவிட் இக்னேஷியஸ் த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், ட்ரம்பின் விலகல் செயற்பாட்டை இராஜதந்திர நகர்வாகவே ஆதரித்துள்ளார். 'பல ஆய்வாளர்கள் ரஷ்யாவுடனான உறவுகளை மோசமாக்குவதற்கான அறிகுறியாக ஒப்பந்தம் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தினர். ஆனால் குறித்த செயற்பாட்டில் மிகவும் சிக்கலான ஒன்று இருப்பதாகவும், அமெரிக்க - ரஷ்யா உறவுகளுக்கு அதிக நம்பிக்கையுள்ளதாகவும் நான் நினைக்கிறேன். சீனாவுடனான சொல்லாட்சிக் கலை மோதல்கள் அதிகரித்து வரும் நேரத்தில், அமெரிக்கா மாஸ்கோவுடனான ஆயுதக் கட்டுப்பாடு, ரஷ்யாவிற்கு மனிதாபிமான உதவி, கோவிட் -19 மற்றும் பரஸ்பர அக்கறை தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து அதன் ஈடுபாட்டை விரிவுபடுத்துகிறது. டிரம்ப் நிர்வாகத்துடன் எப்போதும் இருப்பது போல, உள்நாட்டில் முரண்பட்ட குரல்கள் உள்ளன. ஆயினும் சில அதிகாரிகள் ஆயுதக் கட்டுப்பாட்டை விரும்பவில்லை மற்றும் அமெரிக்க விருப்பங்களை கட்டுப்படுத்தும் அனைத்து ஒப்பந்தங்களையும் துண்டிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதிபர் டிரம்ப் தலைமை மாஸ்கோவுடன் எப்போதும் அதிக ஈடுபாடு கொண்ட ஒரு முகாம் உள்ளது. மேலும் அவை கொள்கையை ஒட்டுகின்றன என்று நான் சந்தேகிக்கிறேன். நிர்வாக அதிகாரிகள் இதை வெளிப்படையாகச் சொல்லவில்லை, ஆனால் இந்த வாரம் நிர்வாகத்தின் நடவடிக்கைகளின் நிகர விளைவு ரஷ்சியாவை நோக்கி ஒரு தந்திரோபாய சாய்வாகும் என்பது என் கணிப்பு.' என ஆழமான பார்வையில் விபரித்துள்ளார். அத்துடன் 'அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக சீனா இருக்க வேண்டும் என்ற அமெரிக்க பார்வையை ரியாப்கோவ் பகிர்ந்து கொள்கிறார் என்று தான் கருதுவதாக பில்லிங்ஸ்லியா கூறினார்.' என்பதனூடாக சீனாவை மையப்படுத்திய புதிய ஓர் ஒப்பந்தத்திற்காகவே குறித்த பின்வாங்கல் என்றும் குறிப்பிடுகின்றார். அமெரிக்க ரஷ்சியாவிற்கு அப்பால் இன்று மூன்றாவதாய் சீனாவும் அணு ஆயுதத்தில் அபரிவித வளர்ச்சியை பெற்றுள்ளமையால் சீனாவின் அணு ஆயுத வளர்ச்சியை கண்காணிப்பதற்கான ஓர் புதிய ஒப்பந்தத்தை உருவாக்கவே குறித்த ஒப்பந்தம் முறிக்கப்படுகிறதாக அண்மைய ரஷ்சிய - அமெரிக்க சனாதிபதிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல்களை அனுமானித்து விபரித்துள்ளார்.
டேவிட் இக்னேஷியஸின் கருத்துக்கள் இரகசிய உறவுகளை மையப்படுத்தியே அனுமானிக்கப்பட்டுள்ளமையால் அதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்துவது கடினமாகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதம் மற்றும் மூன்றாம் உலகப்போர் என்ற உரையாடல் மேலோங்கும் சூழலில் ஆயுதக்கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகும் அமெரிக்காவின் தன்னிச்சையான செயல் அணு ஆயுதம் பற்றிய உரையாடல்கள் உலகை மேலும் பதட்டத்துக்கே கொண்டு செல்லக்கூடியதாகும். ஏதோவோர் நாடு பதட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தாக்குதலுக்கு முன்னுரிமை அழிக்க முற்படின் உலக அழிவு தவிர்க்க முடியாத நிலைமையை ஏற்படுத்தும் என்பதே அவதானிப்பாய் உள்ளது.
Comments
Post a Comment