பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிரான போராட்டம்; யூததேசியத்தின் இன்னோர் வடிவமே! -ஐ.வி.மகாசேனன்-
மேற்கு ஆசியாவில் போராட்டங்களும் துயரங்களும் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் நிகழ்வாக மாறி விட்டது. மேற்கு ஆசியாவின் பல போராட்டங்களுக்கும் துயரத்துக்கும் பின்ணனி காரணியாக மேற்கு ஆசியாவில் முளைத்த யூத தேசமாகிய இஸ்ரேலின் அரசியல் அபிலாசைகளே காணப்பட்டு வந்துள்ளது. எனிலும் கடந்த சனிக்கிழமை (06.06.2020) சற்று மாறுதலாய் இஸ்ரேல் போராட்ட களமாக வடிவம் பெற்றிருந்தது. கொரோனா அபத்தத்தின் நடுவே கொரோனா சாரந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர் கூடி நெத்தன்யாகு - கான்ட்ஸ் கூட்டணி அரசாங்கம் ஜூலை 01ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இஸ்ரேலுடனா மேற்குகரை இணைப்புக்கு எதிராக போராட்டம் நடாத்தி இருந்தனர். இது மேற்கு ஆசியாவின் அரசியல் மறுபட்டதோர் நிகழ்வாகவே காணப்படுகின்றது. அதனடிப்படையில் இக்கட்டுரை இஸ்ரேலியர்களின் போராட்ட காரணியை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
'இணைத்தல்' என்பது காலனித்துவ சகாப்தத்தின் ஆக்கிரமிப்பின் உருவங்களை வரவழைக்கக்கூடிய ஒரு சொல். இணைத்தல் என்ற சொல்லாடலில் இன்றும் நவீன சகாப்தத்தில் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. இந்தோனேசியா 1975இல் கிழக்கு திமோரை ஆக்கிரமித்தது. ஈராக் சுருக்கமாக 1990இல் குவைத்தை ஆக்கிரமித்தது. ரஷ்சியா 2014இல் கிரிமியாவை ஆக்கிரமித்தது. இஸ்ரேலும் காலனித்துவ சகாப்தத்தின் பின்பும் ஆக்கிரமிப்பை தொடரும் ஒரு தேசமாகும். 1980ஆம் ஆண்டில், இது பெரும்பான்மை பாலஸ்தீனிய கிழக்கு ஜெருசலேமை ஆக்கிரமித்தது. ஒரு வருடம் கழித்து, சிரியாவிலிருந்து கைப்பற்றப்பட்ட கோலன் உயரங்களை ஆக்கிரமித்தது. தற்போதும் இணைப்பு வடிவில் ஆக்கிரமிப்பு தொடர்பாகவே இஸ்ரேல் அரசியல் தரப்பினர் உரையாடுகின்றனர்; மக்கள் போராடுகின்றனர்.
ஒரு நாடு அதன் எல்லைகளுக்கு வெளியே ஒரு பகுதியினை தனது இறையாண்மைக்கு உரிய ஒரு பகுதி என்று அறிவிக்கும் போது இணைத்தல் ஏற்படுகிறது. பெரும்பாலும் இது இராணுவ ஆக்கிரமிப்பிற்குப் பிறகு செய்யப்படுகிறது. அங்கு வாழும் மக்கள் விரும்புகிறார்களா? இல்லையா? இணைப்பது குறித்து சர்வதேச சட்டம் மிகவும் தெளிவாக இது சட்டவிரோதமானது என்கின்றது.
சர்வதேச சட்டங்கள் பலம் குறைந்த நாடுகள் மீதே பிரயோகிக்க கூடியதாகும். வல்லாதிக்க நாடுகள் மற்றும் அதன் கூட்டுகள் சர்வதேச சட்டங்களை மீறுகையில் சர்வதேச அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும் கண்டனங்களுடன் கடந்து செல்கின்றனர். சர்வதேச சட்டங்களை மீறி இணைக்கப்பட்ட இணைப்புக்கள் இயல்பாகி விடுகின்றது.
இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் 2020 ஜனவரி அமெரிக்கா விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவின் கரங்களை பிடித்தவாறு 'அமைதியை நோக்கி இஸ்ரேல் பெரிய படியை எடுத்து வைத்துள்ளது. இது தான் பாலஸ்தீனத்திறகான கடைசி வாய்ப்பு' என பாலஸ்தீனத்தை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேலிய - பாலஸ்தீனிய முரண்பாட்டிற்கு தீர்வாக, மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையான்மையுடன் அங்கு பாலஸ்தீன சுதந்திர அரசு காணப்படும் எனவும், ஜெரூசேலம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக தொடர்ந்து இருக்கும் எனவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆள்புல பிரிவினை வரைபடமும் உருவாக்கி மத்திய கிழக்கு அமைதி திட்டம் எனும் பெயரில் அறிவித்தார். ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தின் அறிவிப்பை தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். மறுபுறம் பாலஸ்தீன சனாதிபதி மஹ்முத் அப்பாஸ் ட்ரம்பின் திட்டம் சதி திட்டம் என நிராகரித்திருந்தார்.
1967ஆம் ஆண்டில் ஜோர்டானில் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய நிலத்தின் ஒரு பகுதியான மேற்குக் கரையின் மீது அரை நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தி வருகிறது. எனிலும் இறையாண்மை விவகாரத்தில் தொடர்ந்தும் சர்ச்சை நீடிக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நூறாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வசிக்கும் மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள், புறக்காவல் நிலையங்களை உலகளாவிய கண்டனத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு கூறினார். தனது வெற்றியை உறுதிப்படுத்தினால் மேற்கு கரை நிலப்பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பதாக நெத்தன்யாகு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அமெரிக்காவின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்காகவே காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேலே ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டம் நெத்தன்யாகுவின் விருப்புக்களை உள்வாங்கி இருப்பதனால், ட்ரம்பினுடைய ஆட்சிக்காலப்பகுதியினுள் குறித்த திட்டத்தை விரைந்து மேற்கொள்வதற்கான நகர்வையே நெத்தன்யாகு முயற்சி செய்து வருகின்றார். ட்ரம்பின் ஜனாதிபதி பதவியை இஸ்ரேலில் உள்ள கடுந்தேசியவாதிகள் நீண்டகாலமாக தடைசெய்யப்பட்டதாக கருதப்பட்ட நடவடிக்கைகளை வாஷிங்டன் ஊடாக மேற்கொள்வதற்கான வாழ்நாளில் ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறார்கள்.
நெத்தன்யாகு அரசியல் இருப்பை உறுதி செய்ய மேற்குகரை இணைப்பை ஒரு கருவியாக மேற்கொள்ள முயற்சிக்கின்றார். இஸ்ரேலில் நெத்தன்யாகு மீது தொடுக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளால் அவருடைய அரசியல் ஸ்திரத்தன்மை மலினப்படுத்ப்பட்டுள்ளது. அதனாலேயே குறுகிய ஒரு வருடத்தினுள் இஸ்ரேலில் மூன்று முறை தேர்தல் நடைபெற்றும் உறுதியான அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. தற்போதும் நெத்தன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் இராணுவ தலைமை தளபதி பென்னி காண்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் வையிட் கட்சிக்குமிடையிலான ஒப்பந்தம் ஊடாக முதல் 18 மாதங்களும் நெத்தன்யாகு பிரதமராக இருப்பது எனவும் அடுத்த 18 மாதங்களும் காண்ட்ஸ் பிரதமராக இருப்பது எனவும் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டே ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் காண்ட்ஸ், ஊழல்வாதி நெத்தன்யாகுவுடன் உடன்படிக்கை மேற்கொண்டது தவறு என காண்ட்ஸ் ஆதரவாளர்கள் வீதியிலிறங்கி போராடுவதுடன் உடன்படிக்கையில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராகவும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்களை மறைத்து தன் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த தேசியவாத போர்வையுடன் மேற்குக்கரையை இணைப்பதை பிரதான செயற்பாடாக நெத்தன்யாகு முன்னெடுக்கின்றார். ஜூலை 1 முதல் இஸ்ரேலிய குடியேற்றங்கள் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் சில பகுதிகளை இணைப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதனையும் உள்ளடக்கியே காண்ட்ஸ் உடனான கூட்டு அரசாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் நிலப்பரப்பை அதிகரிப்பதினை இஸ்ரேலியர்கள் எதிர்த்து போராடுவது என்பது இஸ்ரேலிய வரலாற்றில் புதுமையான விடயமே ஆகும். எனிலும் இந்த போராட்டம் இடதுசாரி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் பரந்த மக்களின் ஆதரவைக்காணவில்லை. சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, இஸ்ரேலியர்களில் பாதி பேர் இணைப்பதை ஆதரிப்பதாகவே அல்-ஜஸிரா செய்தித்தளம் குறிப்பிடுகிறது.
இஸ்ரேலின் நிலப்பரப்புடன் மேற்குக்கரையை இணைப்பதை பெரிதும் எதிர்ப்பவர்களாய் இஸ்ரேல் இடதுசாரியினரே காணப்படுகின்றனர். எனிலும் இங்கு இஸ்ரேலிய இடதுசாரியினரும் இஸ்ரேலிய தேசியவாத நிலையிலிருந்து செயற்படுவதாகவே அவர்களது பதாகைகளில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் சுட்டி நிற்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் 'இணைக்க வேண்டாம், ஆக்கிரமிப்பு இல்லை, அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு ஆம்' என்ற பதாகையின் கீழ் கூடினர். சிலர் பாலஸ்தீனிய கொடிகளையும் அசைத்தனர். இங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின் அமைதியினையே பிரதானமாக வலியுறுத்துகிறார்கள்.
இஸ்ரேலினுள் மேற்குக்கரையை இணைப்பதால் இஸ்ரேலின் அமைதி பாதிக்கப்படக்கூடிய தன்மை பிரதானமாக இரு விடயங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது.
முதலாவது, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலத்தை உண்மையில் இணைப்பது பாலஸ்தீனிய அதிகாரத்தை இஸ்ரேலுடனான அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகும் என்று அச்சுறுத்துவதற்கு தூண்டியுள்ளது. இஸ்ரேலின் உருவாக்கத்திலிருந்தே இஸ்ரேலியருக்கும் பலஸ்தீனியருக்கும் முரண்பாடு காணப்படுகிற போதிலும், 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கை மற்றும் அதன் பின்னரான சமாதான உரையாடல்களே முரண்பாடுகள் தொடரினும் யுத்தத்தை அமுழ்த்தி வைத்துள்ளது. பாலஸ்தீனம் ஒப்பந்தங்களை முறித்து செல்லுமாயின் மீள இஸ்ரேலிய நிலப்பரப்பில் போர்மேகங்களே காணப்படும். அத்துடன் இஸ்ரேலிய-ஜோர்டானிய சமாதான உடன்படிக்கை ஆபத்தில் இருக்கும் என்று ஜோர்டானின் மன்னர் சூசகமாகக் கூறினார். இவற்றால் இஸ்ரேலின் அமைதி களைந்து போய் விடுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய அமைதியூடாக இஸ்ரேலிய தேசியவாதத்தை முன்னிறுத்துகிறார்கள்.
இரண்டாவது, உலகளவில் இஸ்ரேல், பகைமையை தேட வேண்டிய நிலை ஏற்படுமென அச்சப்படுகிறார்கள். இஸ்ரேலுடனான மேற்குக்கரை இணைப்பை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஆதரிக்கின்ற போதிலும், உலக நாடுகளிடையே இணைப்பு தொடர்பாக கடுமையாக எதிர்ப்பு காணப்படுகிறது. இஸ்ரேலை சூழ்ந்துள்ள மேற்காசிய நாடுகள் அதனை பலமாக எதிர்க்கின்றன. அதுமட்டுமன்றி இணைப்பு தொடரின் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முயற்சிக்கலாம் என்று ஐரோப்பிய நாடுகள் பரிந்துரைத்துள்ளன. சாத்தியமான வன்முறை மற்றும் இராஜதந்திர விளைவுகளின் எச்சரிக்கை, சில ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து, பல நாடுகளால் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் அதன் குடியேற்றங்களை இணைக்க வேண்டாம் என்று இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிச்சயமாக, இஸ்ரேல் நிலத்தை தனது அரசின் ஒரு பகுதியாக முறையாக அறிவித்தால், எதிர்காலத்தில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் அதை விட்டுக்கொடுப்பது இன்னும் கடினமாகிவிடும். 'இரு-அரசு தீர்வு' என்ற கருத்தை இன்னும் ஆதரிக்கும் பலர், இணைப்பது கொலை அடியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இருப்பினும் மற்றவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாக வாதிடுகின்றனர். எது எவ்வாறாயினும் இணைப்பு இஸ்ரேல் - பலஸ்தீன முரண்பாட்டை மீள வன்முறை போர்களாக மாற்றிடும் என்பதே யதார்த்தம்.
இஸ்ரேலுடன் மேற்குக்கரை ஆக்கிரமிப்பு பிரதேசத்தை இணைக்க முற்படும் அரசியல் தரப்பாயினும் சரி, இணைப்பை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பாயினும் சரி இரு தரப்புமே இஸ்ரேல் தேசியவாத்தையே முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். ஆதலால் இறுதி வெற்றி இஸ்ரேலின் தேசியவாதத்தையே பலப்படுத்தும் என்பதே நிதர்சனமாகும். தேசியம் நீக்கம் செய்யப்பட்டு வரும் ஈழத்தமிழர்கள் தேசியத்தின் இருப்பு தொடர்பான அவசியத்தை இஸ்ரேலியரிடமிருந்து கற்க வேண்டியோராய் உள்ளனர்.
Comments
Post a Comment