இயலாமைக்குள் தமிழர் அரசியல்! செயலணிக்குள் முடங்கும் வடக்கு, கிழக்கு. -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா அபத்தம் உலக அளவில் பல நடைமுறைக்கோட்பாடுகளை சிதைத்து வருகின்றது. ஆட்சியாளர்கள் பலரும் நெருக்கடியை பயன்படுத்தி தங்கள் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதனையே முதன்மைப்பபடுத்துகிறார்கள். இலங்கையின் ஆட்சியாளர்களும் உலக ஒழுங்கில் தங்களது அரசியல் நலனை முதன்மைப்படுத்தியே கொரோனா நெருக்கடி காலத்தை நகர்த்தி செல்கின்றார்கள். இந்நிலையிலேயே செயலணிகள் என்ற வடிவில் சிங்கள - பௌத்த - இராணுவ முக்கூட்டு வாதத்தை இலங்கையின் ஆட்சி அணியாக உருவாக்கும் ஓரு நிலை உருவாகி வருகிறது. இலங்கையில் முக்கூட்டுவாதம் தொடர்பிலே இலங்கையினுள் எதிர்க்கட்சிகளாலும் உலகளவில் பொது அமைப்புக்களாலும் பரந்துபட்ட எதிர்ப்பு அறிக்கைகள் காணப்படுகின்ற போதிலும், செயலணி உருவாக்கங்களால் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் ஆக்கபூர்மான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதனடிப்படையிலே செயலணிகள் உருவாக்கம் அதனை மையப்படுத்தி கட்டமைக்க வேண்டிய சனநாயக போராட்டங்கள் தொடர்பிலே தேடுவதாவே குறித்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி சந்திப்பினை மேற்கொள்ளும் பௌத்த ஆலோசனைக் குழுவுடனான இரண்டாவது சந்திப்பு கடந்த மே 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில், மகா சங்கம் உட்பட, மால்வத்தே அத்தியாயத்தின் அனுநாயகே, நியங்கொட விஜிதசிறி தேரோ, அஸ்கிரியா அத்தியாயத்தின் அனுநாயக்க மோஸ்ட் வென், வெண்டுருவே உபாலி தேரோ, மால்வத்து அத்தியாயத்தின் பதிவாளர் பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரோ, மால்வத்து அத்தியாயத்தின் லேகாடிகாரி டாக்டர் மேடகம தம்மநந்த தேரர், ருவன்வேலி மகா சேயாவின் தலைமைத் தலைவர் வென் பல்லேகம ஹேமரதன தேரர், மகாரா நாயகா, ராஜகியா பண்டிதா திருகோணமலை ஆனந்த தேரர், தட்சிணலங்க மோஸ்ட் வென் தலைமை சங்கநயக மாதராபா ஹேமரத்னா தீரோ, சபராகமுவ பல்கலைக்கழக அதிபர் பேராசிரியர் வென் கும்பருகமுவே வஜிரா தீரோ  மற்றும் ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுகா ஆகியோர் கூட்டத்தில்  கலந்து கொண்டனர். கூட்டத்தில் பௌத்த மத பாதுகாப்பு சார்ந்து பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதில் பிரதானமாக இரு விடயங்கள் உடனடியாக செயற்படுத்தப்பட்டுள்ளது. 

முதலாவது, வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு ஏற்பட்ட அழிவு குறித்து பௌத்த சங்கங்கள் தங்கள் கவலையை தெரிவித்துக்கொண்டன. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, வரலாற்று இடங்களை பாதுகாப்பதற்காக தொல்பொருள் துறையின் ஆதரவுடன் ஒரு பரந்த திட்டம் தொடங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்துவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாதுகாப்பு செயலாளரின் கீழ் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த ஜூன் 02ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் முழுமையாக சிங்கள - பௌத்த - இராணுவ உறுப்பினர்களை மாத்திரம் உள்ளடக்கிய செயலணி ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார்.

இரண்டாவது, நாட்டை அச்சுறுத்தும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க ஒரு விரிவான திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மகா சங்கம் வலியுறுத்தியது.  அதற்கும் ஜனாதிபதி, நாட்டிற்குள் கடத்தப்பட்ட பெரிய அளவிலான மருந்துகள் மிகக்குறுகிய காலத்திற்குள் கைப்பற்றப்பட்டன, மேலும் நிலவும் சூழ்நிலையை அதிகபட்ச நிலைக்கு கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக அகற்றவும் நான் ஒவ்வொரு நடவடிக்கையும் எடுப்பேன் என்றும் உறுதியளித்திருந்தார். அதனடிப்படையிலும் கடந்த ஜூன் 02ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலமாக முழுமையாக இராணுவ – பொலிஸ் - புலனாய்வு உறுப்பினர்களை உள்வாங்கி பாதுகாப்பான நாட்டுக்கும் சட்டத்தை மதிக்கும் ஒழுக்க பண்புள்ள சமூகத்துக்கான ஜனாதிபதி செயலணி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இரு ஜனாதிபதி செயலணிகளும் முழு இலங்கைக்கும் என்ற பெயரில் கட்டமைக்கப்படுகிற போதிலும் இதன் உடனடி விளைவுகளை அனுபவிக்க உள்ள சமூகமாக வடக்கு – கிழக்கு தமிழ் சமூகமே காணப்படுகின்றது. ஏற்கனவே கொரோனா அபத்தத்திலிருந்து பாதுகாத்தல் என வடக்கு – கிழக்கில் இராணுவமயமாக்கல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் செயலணிகள் வடிவிலும் இராணுவமயமாக்கலை ஊக்கப்படுத்தும் செயற்பாடு கொரோணா வைரஸிலும் அபத்தமானது. கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத போதிலும் குறுகிய காலத்தில் கொரோனா வைரஸிற்கான மருந்து கண்டுபிடிக்கப்டும் வரையில் கொரோனாவோடு வாழப்பழகிட முடியும். எனிலும் கொரோனா அபத்தத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு இலங்கையில் கட்டமைக்கப்படும் சிங்கள – பௌத்த - இராணுவமயமாக்க முக்கூட்டை அனுமதித்து வாழப்பழகுவோமாயின் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மீளத்திரும்ப முடியாத துயரை அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

சர்வதேசம் இலங்கையில் கட்டமைக்கப்படும் இராணுவமயமாக்கலை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இலங்கையில் காணப்படும் இராணுவமயமாக்கலையும் வடக்கு – கிழக்கு தமிழர் நிலங்களில் குடியேற்றங்களையும் ஜனாதிபதி செயலணிகள் இன்னும் அதிகரிக்கும் என வோஷிங்டனை தளமாகக்கொண்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புக்கள போன்றே இலங்கையின் எதிர்க்கட்சிகளும், இலங்கையின் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் இலங்கையில் கட்டமைக்கப்படும் இராணுவமயமாக்கத்தை விமர்சனத்துடனேயே கடந்து செல்கிறார்கள். 

தமிழ் அரசியல் தலைவர்களும் செயலணிகளின் பாதிப்புக்களை முழுமையாய் அறியாதவர்கள் போன்று செயலணிகள் தொடர்பிலே சாதாரணமாக தங்கள் துயரங்களையே அறிக்கைகளூடாக பகிருகின்றனர். ஜனாதிபதி செயலணிகளூடாக தற்போதைய அரசாங்கம் இராணுவமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் செயலணி தொடர்பில் எதிர்காலத்தில் அறிக்கை விடுவதாக கூறிவிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷாவின் 50ஆண்டு கால அரசியல் பயணத்தை வாழ்த்தி மக்கள் நாயகனென அறிக்கை விட்டிருப்பது தமிழ் அரசியல் தலைமையின் வங்குரோத்து அரசியலை காட்சிப்படுத்துகிறது.

செயலணியினூடான இராணுவமயமாக்கம் தொடர்பிலே கருத்துரைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சர்வதேச ரீதியிலான அழுத்தத்தினூடாக தற்போதைய அரசாங்கத்தின் தமிழ் மக்களின் இருப்புக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக தமது கூட்டணிக்கட்சிகளின் கலந்துரையாடலில் முடிவு எடுத்துள்ளார். அதன்பிரகாரம் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரையும் மற்றும் சர்வதேச நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் புதிய இந்திய உயர் ஸ்தானிகரை சந்திக்கும் போது தமிழ் மக்கள் கூட்டணியினர் தற்போதைய அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை அறியப்படுத்தவதாக கூறியுள்ளார். இது தற்போதைய சூழலில் முன்னேற்றகரமான செயற்பாடாய் அமைகின்ற போதிலும்,  சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் என்ற ரீதியில் தமிழ் மக்களை திரட்டி மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டத்தை மேற்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளார் என்பதையும் சிந்திக்க வேண்டும். சர்வதேச ரீதியிலான ஓர் அழுத்தம் இலங்கைக்க ஏற்பட வேண்டுமாயின் சமாந்தரமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் செய்தியாக அனுப்ப வேண்டி உள்ளது யதார்த்தபூர்வமான விடயமாகும்.

கொரோனா அபத்தத்தை சாதகமாக பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடக்கு – கிழக்கில் இராணுவமயமாக்கத்தை துரிதப்படுத்துவது சாதாரண பார்வையில் புரிகிறது. எனிலும் வடக்கு – கிழக்கின் உயர் கல்வி நிறுவனமாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சமூகம் மௌனித்திருப்பது, பல்கலைக்கழகங்களின் செயற்பாட்டை கேள்விக்குறியாக்கிறது. ஒரு சமூகத்திற்கு எதிராக அநீதி இழைக்கப்படுகிறதாயின் அதற்கு எதிரான முதற்குரல் பல்கலைக்கழக சமூகங்களிலிருந்தே ஒலிக்க வேண்டும். கடந்த காலங்களிலும் தமிழ் சமுகத்திற்கான குரல்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்தே ஒலித்துள்ளது. ஆயினும் கொரோனா அபத்த காலத்தில் தமிழ் சமூகத்தின் இருப்பையே முழுமையாய் அகற்றும் செயற்பாடுகள் அரங்கேறுகின்ற போதிலும் வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக சமூகங்கள் மௌனித்திருப்பது தமிழர்களின் துயரே ஆகும்.

சமகாலத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனவெறிக்கு எதிராக இடம்பெறும் பாரிய போராட்டத்திலிருந்து இலங்கை தமிழர்களாகிய நாம் படிப்பினையை பெற்றுக்கொள்ள வேண்டும்.  உலகளவில் கொரோனா வைரஸ் பரவுகையாhல் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளாகவே அமெரிக் மற்றும் ஐரோப்பிய நாடுகள் காணப்படுகிறது. எனிலும் காவல்துறையினால் மிலேச்சத்தனமாக கறுப்பின இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இனவெறிக்கு எதிராக நீதிகோரி அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் ஐரோப்பிய நாடுகள் வரை பரவியுள்ளது. கொரோனா முழுமையாய் கட்டுப்படாத சூழலிலும் அங்கு இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் கொரோனா வைரஸிலும் அபத்தமானது இனவெறி என்ற ஒரு உண்மையை உலகிற்கு எடுத்துக்கூறுவதாக உள்ளது. இப்படிப்பினையை இன்னும் இனவெறியால் இருப்பை இழந்து கொண்டு செல்லும் தமிழினம் பெறாமை துர்ப்பாக்கியமே ஆகும். இங்கு அரசியல் தலைமைகளின் தேவைப்பாடும் பெரிதில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தேசங்களில் இடம்பெறும் இனவெறிக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது எவ்வித தலைமையுமற்று மக்கள் சுயாதீன போராட்டமாகவே நடைபெறுகின்றது. தலைமையற்ற தமிழ் சமூகமும் இவ்வாறான சுயாதீன போராட்டங்களை முன்னெடுப்பதற்கான உரையாயடல்கள் தமிழ்ப்பரப்பில் திறந்து விடப்பட வேண்டும். 

இலங்கையில் திட்டமிட்டு நகர்த்தப்படும் இனவாத – மதவாத - இராணுவமயவாத சிந்தனைக்கு எதிராக ஓர் அறிக்கையில் எவ்வித எதிர்விளைவுகளையும் பெறப்போவதில்லை. இலங்கையின் அரசியல் இருப்பு இனவாத – மதவாத - இராணுவமயவாத சிந்தனைகளுடன் இணைந்தது என்ற ரீதியில் இன்றைய எதிர்க்கட்சிகள் நாளை ஆளும் கட்சிகளாக மாறுகையிலும் இம்முக்கூட்டை ஏதோ ஒரு வடிவில் பேணுபர்களே ஆவார்கள். அதனடிப்படையில் அரசியல் கட்சிகள் தான் தம் அரசியல் நலனுக்கு உட்பட்டு அறிக்கையிடலுடன் செயற்படுகிறார்களாயின், இலங்கையின் ஜனநாயகவாதிகளும் இலங்கையின் சமீபத்திய இனவாத – மதவாத - இராணுவமயவாத சிந்தனைகளின் வளர்ச்சிக்கு எதிராக மக்கள்மயப்படுத்தப்பட்ட ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்காது அரசியல் கட்சிகள் போன்று அறிக்கையிடலுடன் அரசியல் செய்வது இலங்கையின் எதிர்கால ஜனநாயகத்தை கடினமாக்குகிறது. 

இலங்கையின் சமீபத்திய போக்குகளுக்கு எதிராக மக்கள்மயப்படுத்தப்பட்ட சனநாயக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான அறிவினை சர்வதேச அனுபவங்களிலிருந்து இலங்கை மக்கள் திரட்ட வேண்டும். கொரோனா அபத்த காலத்திலும் நூதனமான முறையில் பல்வேறு வழிகளில் சர்வதேச ரீதியாக மக்களின் ஜனநாயக போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இலங்கையில் இடம்பெறும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் இடம்பெற தவறும்பட்சத்தில் கொரோனாவிலிருந்து நம் தலைமுறை காலத்திலேயே மீண்டிடுவோம். எனிலும் இலங்கையின் இனவாத – மதவாத - இராணுவமயவாத முக்கூட்டுக்குள் ஜனநாயக சூழலற்ற சமூகத்திலேயே எம் அடுத்த அடுத்த தலைமுறைகளும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-