சீனா – அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்கு ஒடுக்குமுறையின் மாறுபட்ட வடிவங்களே! -ஐ.வி.மகாசேனன்-

உலகம் கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்டுள்ளது என்ற தோற்றப்பாட்டையே சமீபத்திய சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அடையாளப்படுத்துகின்றது. உலகில் கொரோனாவின் வீரியம் முழுமையாக கட்டுப்படாத சூழலிலே, கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் சக்கரவர்த்தி மகுடம் தரிக்க போகும் நாடுகள் என்ற போட்டியில் காணப்படும் சீனாவிலும், அமெரிக்காவிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளே சர்வதேச அரசியலின் சமீபத்திய பேசுபொருளாக காணப்படுகின்றது. கொரோனா பரவுகை அதனை கட்டுப்படுத்துதல் என்ற சர்வதேச நிலைமை மாறி சீனா மற்றும் அமெரிக்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோருவதாகவே சர்வதேச அரசியல் நிலைமை மாற்றம் பெற்றுள்ளது. அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை சீனா மற்றும் அமெரிக்காவில் நிகழும் மனித உரிமை மீறல்களையும் இதன் பின்னணியில் எதிர்கால உலக ஒழுங்கின் வடிவத்தையும் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவை மையப்படுத்தி உரையாடப்படும் மனித உரிமை மீறலானது சீனா - ஹொங்கொங் பிரச்சினையோடு தொடர்புடையதாகும். சீனா - ஹொங்கொங் பிரச்சினை என்பது நீண்டகால முரண்பாட்டு வரலாறாகும். கொரோனா அபத்தம் சிறு ஓய்வைக்கொடுத்த போதிலும் சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு சட்டம் என்ற வடிவில் ஹொங்கொங் மீதான அடக்குமுறையை சீனாவும் முறுக்கி விட ஹொங்கொங் மீண்டும் ஓய்வை தளர்த்தி போராட்டகளமாக மாறி உள்ளது. சீனாவிற்கு எதிரான ஹொங்கொங் போராட்டத்தில், 'ஹொங்கொங் சின்ஜியாங்காக மாறும்! ஸ்டான்லி கின்செங்காக மாறும்!' என்று ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகைகளின் பின்னுள்ள மனித உரிமை மீறலை அணுகுவதாயின் சீன - ஹொங்கொங் முரண்பாட்டு வரலாறு தொடர்பிலான புரிதலும் அவசியமாகிறது.

ஹொங்கொங் ஆரம்ப வரலாற்றை சீனாவுடனேயே பகிர்ந்து கொள்கிறது. 1842ஆம் ஆண்டு சீனாவுக்கும் பிரிட்டனுக்குமிடையே இடம்பெற்ற அபினி யுத்தத்தில் சீனாவின் ஜிங் அரச வம்சம் நான்ஜிங் உடன்படிக்கை மூலம் ஹொங்கொங்கை பிரிட்டனிடம் விட்டுக்கொடுக்கின்றது. தொடர்ந்தும் சீனாவில் ஜிங் அரச வம்சத்தின் தொடர்ச்சியான போர்கள் மூலம் சுமார் 3கோடி வரையான மக்கள் இறந்துள்ளனர். இதனால் சீன பெருநிலப்பரப்பிலிருந்து பெருந்தொகையான மக்கள் ஹொங்கொங் இற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக 1898ஆம் ஆண்டில் ஜிங் அரச வம்சம் பிரிட்டனுடான ஓர் உடன்படிக்கையினூடாக 99வருட குத்தகைக்கு ஹொங்கொங் தீபகற்பத்தில் புதிய பிராந்தியங்களை பிரிட்டனிடம் ஒப்படைத்தது. பின்னரான காலப்பகுதியில் 1945ஆம் ஆண்டில் சீனாவில் ஏற்பட்ட கொம்யூனிச புரட்சி மற்றும் 1962ஆம் ஆண்டில் சீனாவில் இடம்பெற்ற கலாசாரப்புரட்சி என்பன சீனாவிலிருந்து ஹொங்கொங் மக்களின் வாழ்வியல் கலாசாரங்களை மாற்றியது. ஹொங்கொங் சீனாவிலிருந்து வேறுபட்டது. பிரித்தானியாவின் அரைகுறை ஜனநாயக காலனித்துவத்தினுள் நிறைந்த தாராள பொருளாதார சுதந்திரத்துக்குள் தன்னை பழக்கப்படுத்தி கொண்டது. எனிலும் ஹொங்கொங் அசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகள் பலதிற்கும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற சுதந்திரம் தமக்கும் என்றோ ஒருநாள் கிடைக்குமென எதிர்பார்த்திருந்தனர். ஆயினும் பிரித்தானியர் சனநாயகத்தை ஒரு எல்லைக்கு அப்பால் சீனாவுக்கு கொடுக்க மறுதலித்து விட்டனர். 1980 - 1990 க்கு இடைப்பட்ட காலங்களில் வயது வந்தோருக்கான சர்வஜன வாக்குரிமை கோரி பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக ஹொங்கொங்கில் போராட்டங்கள் வெடித்தன. போராட்டங்கள் யாவும் பயனற்றே போனது.

1997ஆம் ஆண்டில் 99வருட குத்தகையின் முடிவாய் சீனாவிடம் ஹொங்கொங்கை பிரிட்டன் மீள ஒப்படைக்கும் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது. அரைகுறை சனநாயகத்துடன் காலனித்துவத்தின் கீழ் வாழ்ந்த ஹொங்கொங் மக்கள் நிறைந்த தாராள பொருளாதார சுதந்திரத்தை அனுபவித்தார்கள். அதிலிருந்து வேறுபட்ட கலாசாரத்தையுடைய கொம்யூனிச சர்வதிகாரத்தினுள் செல்ல விருப்பு இருக்கவில்லை எனிலும் ஹொங்கொங்கை கைமாற்றுவது தொடர்பில் 1985ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டு பிரகடனத்தில், சீனாவுக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையில் பாரிய சமூக இடைவெளி இருப்பதை கருத்திலெடுத்து அதன் விளைவாக, ஹொங்கொங் விசேட நிர்வாகப்பிராந்தியத்தை உருவாக்கி வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்கள் தவிர்ந்த சகல விவகாரங்களிலும் கணிசமான சுயாட்சியை சீனா வழங்க வேண்டியிருந்தது. அத்துடன் ஹொங்கொங் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் பெற்ற சுதந்திரங்களை 1997ஆம் ஆண்டிற்கு பிற்படவும் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் எனக்கூறப்பட்டது. இப்பிரகடன சொல்லாட்சிகள் 1997ஆம் ஆண்டு வரையில் ஹொங்கொங் மக்களுக்கு நிம்மதியை தந்த போதிலும் சீனாவிடம் ஹொங்கொங் கைமாற்றப்பட்டதும் பிரகடனங்கள் காலாவதியாகிப் போயின. ஹொங்கொங்கின் புதிய இடைக்கால சட்டசபைக்கு மக்களால் தெரிவு செய்யப்படாதவர்களை சீனா நியமித்தது. சனநாயகவாதிகள் வீதியிலிறங்கிய போராடிய போதிலும் கொம்யூனிச சர்வதிகார ஆட்சியில் சனநாயக போராட்டங்கள் கேலிக்குரியவை தானே. 2000ஆம் ஆண்டில் ஹொங்கொங்கின் சட்டங்களை ஏற்பதாக இணங்கிய போதிலும் வியாக்கியானம் செய்வதில் சீனா தன் விருப்புக்களை நிறைவேற்றியது.

சீனா கொம்யூனிசத்திற்குள் கைமாற்றப்பட்டதிலிருந்தே சனநாயகத்தை கோரி ஹொங்கொங்கில் போராட்டங்களும் தொடர்கதையாக மாறிவிட்டது. சீன நிலப்பரப்பில் தடைசெய்யப்பட்டிருந்த அமைப்புக்களை ஹொங்கொங்கிலும் தடைசெய்வதற்கு அனுமதிக்கும் தேசத்துரோக சட்டம், 2014ஆம் ஆண்டில் ஹொங்கொங் சட்டசபைக்கு வேட்பாளர்களை அங்கீகரிப்பதற்கான உரிமையை தன்சம் வைத்திருக்கப்போவதாக சீனா அறிவித்தமை, 2019ஆம் ஆண்டில் நாடுகடத்தல் சட்டம் என சீனாவின் ஹொங்கொங் மீதான சட்டங்களுக்கு எதிராக ஹொங்கொங்கில் போராட்டம் தொடர்ந்தது. இறுதியாக கொரோனா பாதிப்புக்கு முன்னர் வரையில் நாடுகடத்தல் சட்டம் தொடர்பிலேயே ஹொங்கொங்கில் போராட்டம் தொடந்தது. சீனா அச்சட்டத்தை நிறுத்தி வைத்த போதிலும் அதனை முழுமையாக கைவிடுமாறே போராட்டம் தொடர்ந்திருந்து.

கொரோனா ஓய்வுக்கு பின்னரான சூழலில், பாதுகாப்புச் சட்டம் என்ற வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அடக்குமுறைக்கு எதிராக, ஹொங்கொங்கில் போராட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் சீனா கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு தாக்கி வருகின்றனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நகரத்தின் மையத்தை நோக்கி ஊர்வலம் செல்கின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து இருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். சீன தேசிய மக்கள் காங்கிரஸால் இசைவு அளிக்கப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு அறிக்கை ஹொங்கொங் தனது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹொங்கொங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது. அதாவது ஹொங்கொங் விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமுல்படுத்தும். இதனூடாக தேசத்துரோகம், பிரிவினை ஆகியவற்றை தடுக்கும் என்கிறது சீனா. சீனாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் ஹொங்கொங் அரசின் நிர்வாக தலைவர் கேரி லாம் இந்த சட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறார். இந்த சட்டத்தால் ஹாங்காங்கின் சுதந்திரம் பாதிக்கப்படாது என்கிறார். போராட்டக்காரர்கள், 'இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் அரசை எதிர்த்து பேசவும் எழுதவும் முடியாது. அப்படி செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதனால்தான் நாங்கள் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம்,' என்கின்றனர். சீனாவின் இந்த சட்டத்தை எதிர்த்து உலகெங்கிலும் இருந்து 200 மூத்த அரசியல்வாதிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர். சுயாட்சி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

சீனா - ஹொங்கொங் வரலாற்றின் ஆரம்பம் ஒரே அடியாய் இருந்தாலும் 150ஆண்டு கால பெரும் பிளவு ஹொங்கொங் மக்களை தனியான தேசிய இனமாக உணர வைத்துள்ளது. ஆதலால் தனியான தேசிய இனமாக உள்ள ஹொங்கொங் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் தனித்து வாழ சர்வதேச அரசியல் நியமங்களின்படி முழு உரிமையும் உடைய மக்களாவார்கள். சீனா தொடர்ச்சியாய் ஹொங்கொங் மக்களை சீனப்பேரரசுக்குள் முழுங்க நினைப்பது சமகால அரசியல் நியமத்தில் முரணாணதாகும். சீனாவின் கீழ் உலக ஒழுங்கு செல்லுமாயின் ஏற்பட போகும் மாற்றத்தை ஹொங்கொங் மக்களின் வாழ்வியலை பரிசோதிப்பதன் மூலம் தெளிவாக அறியலாம். சனநாயகம் என்ற நியமத்தின் கீழ் வாழ்ந்த ஒரு சமூகம் கொம்யூனிச ஆட்சிக்குள் சென்றதன் பின், மீள துடிப்பது; மீள முடியாது தவிப்பது உலகிற்கான எடுத்துக்காட்டகும். கொரோனா உலக ஒழுங்கின் மாற்றம் சீனா பக்கம் சாரின் உலகம் ஹொங்கொங் மக்களின் வாழ்வியலுக்கு பழக்கப்படுத்தப்பட வேண்டிய சூழலே ஏற்படும்.

மறுதலையாய் ஹொங்கொங் மீதான சீனாவின் அடக்குமுறையை அமெரிக்க விமர்சனம் செய்கின்றது. நாட்டாமை செய்ய முயலுகின்றது. ஹொங்கொங்கின் சுதந்திரத்திற்கான சாவுமணி இதுவென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ குறிப்பிடுகிறார். ஜனாதிபதி ட்ரம்ப், ஹொங்கொங் போராட்டத்தை கையாள்வதற்கு ஹொங்கொங் அரசு கையாண்ட முறை தவறானது என குற்றஞ்சாட்டுவதுடன், அதைக்காரணங்காட்டி ஹொங்கொங் இற்கு வழங்கப்பட்டு வரும் சில முக்கிய சலுகைகளை மீட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹொங்கொங் இன் தலைமை நிர்வாகி கேரி லாம், அமெரிக்க வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இரட்டை வேடம் போடுவதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் கலவரங்களை மாநில அரசுகள் கையாண்டு வரும் விதத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் ஹொங்கொங் இல் அதே போன்ற கலவரங்கள் நடந்த போது அமெரிக்க பின்பற்றிய நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரியும் எனக்குறிப்பிட்டிருந்தார். கொங்கொங் அரசு கலவரத்திற்கு எதிராக கையாளும் முறை ஏற்க முடியாது என்கின்ற போதும், அமெரிக்க தொடர்பிலே கேரி லாம் முன்வைத்த விமர்சனம் சரியானதாகும்.

அமெரிக்காவின் மின்னபொய் நகரில், மே 25அன்று கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளொய்ட் பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளையின அதிகாரத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரலெழுப்பட்டு போராட்டங்கள் வலுத்தன. அமெரிக்காவில் ஆரம்பமாகிய கறுப்பின போராட்டங்கள் ஐரோப்பா வரையில் வலுத்துள்ளது. போராட்டத்தை அடக்க போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க சனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளமையும் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. நிறவெறி பிரச்சினைக்கான பின்னணி மற்றும் அரசு பிரச்சினையை கட்டுப்படுத்த கையாளும் விதம் என்பன அமெரிக்காவின் கீழான உலக ஒழுங்கின் நியத்தோற்றத்தை தோலுரித்து காட்டுகின்றது. அமெரிக்காவின் நிறவெறி பிரச்சினையும் நீண்டதொரு பின்பக்க வரலாற்றை கொண்டது. அமெரிக்காவின் புகழ்பூத்த ஜனாதிபதிகளில் ஒருவராகிய ஆபிரகாம் லிங்கனின் உயிரை பறித்த வரலாறும் அமெரிக்காவின் நிறவெறி வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் நிறவெறி வரலாறு அமெரிக்காவின் வரலாற்றோடு தெடர்புடையதாக காணப்படுகின்றது. அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட 1867 ஆம் ஆண்டின் புனரமைப்புச் சட்டம், 1870ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் பதினைந்தாவது திருத்தத்தினூடான வாக்களிக்கும் உரிமையையும், 1875ஆம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டம் அமெரிக்காவில் தங்குமிடங்களில் இனப்பிரிவினைக்கு தடை விதித்தது. இதன் விளைவாக, தெற்கில் உள்ள கூட்டாட்சி ஆக்கிரமிப்பு துருப்புக்கள் கறுப்பர்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் தங்கள் சொந்த அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் உறுதியளித்தனர். புனரமைப்பு திருத்தங்கள் தேசிய அரசின் மேலாதிக்கத்தையும் அதற்குள் உள்ள அனைவரின் சட்டத்தின் கீழான முறையான சமத்துவத்தையும் உறுதிப்படுத்தின. இருப்பினும், வெள்ளை அமெரிக்கர்களின் மனங்களில் முழுமையாய் நிறவெறியை அகற்ற முடியவில்லை என்பதையே நூற்றாண்டு கடந்த வரலாறு உறுதி செய்கிறது. 'என்று அமெரிக்காவின் கறுப்பின பிரஜை ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடிகின்றதோ அன்றே அமெரிக்கா உண்மையில் சுதந்திரமடைகின்றது' என ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டார். ஆபிரகாம் லிங்கன் கண்ட கனவு 2009இல் அமெரிக்க ஜனாதிபதியாய் ஒபாமா வந்ததில் நிறைவேறிய போதும் நிறவெறியை முழுமையாய் அகற்ற முடியாதது துர்ப்பாக்கியமே ஆகும்.

அமெரிக்க கறுப்பின ஜனாதிபதியாக புகழாரம் சூடப்படும் ஒபாமவினுடைய ஆட்சிக்காலத்திலும் வெள்ளையின ஆதிக்க மனப்பாங்கு அடக்குமுறைகள் பதிவாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொலிஸ்  எரிக் கார்னர் என்பவரின் கழுத்தை நெறித்துக் கொன்றது. 'என்னால் மூச்சுவிட முடியவில்லை' என கார்னரும் அந்தப் பொலிஸிடம் கெஞ்சினார். ஈவிரக்கமற்ற முறையில் நியூயோர்க் பொலிஸ் கார்னரைப் படுகொலை செய்தது. கொல்லப்படும் போது எரிக் கார்னருக்கு இருந்த வயதுதான் தற்போது கொல்லப்பட்டிருக்கும் பிளொய்ட் க்கும் இருக்கும். 'இது, எனது மகன் மறுபடியும் கொல்லப்பட்டதற்கு இணையானது' என்கிறார் எரிக் கார்னரின் தாய் க்வென் கர்.

அமெரிக்க வரலாற்றில் நிறவெறி தவிர்க்க முடியாத வகையிலேயே வளர்ந்து வந்துள்ளது. தீவிர வலதுசாரி தலைவர் ட்ரம்ப் ஆட்சி காலம் அமெரிக்க வெள்ளையின நிறவெறிக்கு உரம் போடுவதாக அமைந்துள்ளது. அதன் சாட்சியமாகவே ஜோர்ஜ் பிளொய்ட் இன் படுகொலை அமைகின்றது.  ட்ரம்பின் ஆட்சி காலத்திலே 24.04.2018அன்றும் வெள்ளையின அமெரிக்க பொலிஸாரின் காட்டுமிராண்டி தனத்தால் 25வயதான சிக்கசியா கிளமென்ஸ் பொலிஸாரால் கடுமையாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பிளொய்ட் இன் மரணத்தை பற்றியும் எதுவித கருத்தும் கூறாத ட்ரம்ப் அதனை அடக்குவது தொடர்பிலேயே தனது வலதுசாரி நிலையிலிருந்து கருத்து தெரிவித்திருந்தார். 'இந்த பொறுக்கிகள் ஜார்ஜ் பிளொய்ட் இன்; நினைவை அவமரியாதை செய்துள்ளனர். அவ்வாறு நடப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். அம்மாநில கவர்னர் டிம் வால்ஸ் இடம் இராணுவம் அவருக்குத் துணையாக எப்போதும் இருக்கும் என்று கூறினேன். ஏதேனும் சிரமம் இருந்தால், நாங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். கொள்ளை துவங்கும்போது, துப்பாக்கிச் சூடு துவங்கும். நன்றி !' என்று தனது டிவிட்டரில் மிரட்டல் விட்டுள்ளார். இது மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.

கொரோனா அபத்தத்தினையும் மிஞ்சி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வெள்ளையின ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் மேலெழுகின்றதாயின் அதன் அடக்குமுறையின் வீரியம் உய்த்தறிய வேண்டியதாக உள்ளது. ஆறாண்டுகளுக்கு முன்னரும், 'கறுப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது' என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் நடக்கத் துவங்கின. கறுப்பினத்தவருக்கும், வெள்ளையினத்தவர்களுக்குமான நீதியில் பாரபட்சம் கூடாது என்பதுதான் அவர்களது அதிகபட்சக் கோரிக்கையே. அவர்களது கோரிக்கைகளுக்கு இன்றுவரை செவிசாய்க்கப்படவில்லை. அமெரிக்காவில் இன்று நடக்கும் தீவைப்பு, சூறையாடல், கலவரம் ஆகியவற்றிற்கான காரணத்தை இப்போராட்டத்தில் காணப்பட்ட பதாகைகள் சுட்டிக்காட்டின. 'கலகம் என்பது செவிசாய்க்கப்படாதவர்களின் மொழி' எனும் மார்ட்டின் லூதர் கிங் இன் மொழிகள் அமெரிக்காவில் இன்று பதிவாகிறது. அமெரிக்காவில் நீண்டகாலமாக நிலவும் இனவெறிப் பாகுபாடு, அமெரிக்க பாணியிலான மனித உரிமை மிகவும் போலித்தனமானது என்பதை உறுதி செய்கின்றது. 

இதுவரையான உலக ஒழுங்கிலும் அமெரிக்க வெள்ளையின ஆதிக்கமே போலியான சனநாயக வேடத்துடன் உலக ஒழுங்கை தீர்மானித்து வந்துள்ளது என்பதையே வெள்ளையின ஆதிக்கத்துக்கு எதிரான அமெரிக்க கறுப்பின மக்களின் போராட்டம் பறைசாற்றுகின்றது. அமெரிக்காவின் கீழான உலக ஒழுங்கும் ஓர்வகை அடக்குமுறை வடிவமே ஆகும்.

அமெரிக்க மற்றும் சீனாவின் சுயரூபங்களை தோலுரித்து காட்டும் அண்மைய நிகழ்வுகளை அதன் வரலாற்று பின்ணணியுடன் தொகுத்து நோக்குகையில் சீனாவின் கீழாக உலக ஒழுங்காயினும் சரி, அமெரிக்காவின் கீழான உலக ஒழுங்காயினும் சரி ஒடுக்குமுறையே அதன் வடிவங்களாகும். அமெரிக்கா போலியான சனநாயக தோற்றத்தோடு ஒடுக்குமுறை நிகழ்த்த சீனா வெளிப்படையாய் கொம்யூனிச போர்வையோடு ஒடுக்குமுறையை நிகழ்த்தும் தேசங்களாகும். அமெரிக்காவின் கீழ் பழக்கப்பட்டது, சீனாவின் கீழ் உலக ஒழுங்கு செல்லின் புதிதாக பழக வேண்டியதாய் இருக்கும். எனிலும் அடிப்படையான ஒடுக்குமுறை மாற்றமின்றியே தொடரக்கூடியது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-