சீனாவுக்கு எதிரான பனிப்போரில் ஆசியாவை நோக்கிய அமெரிக்காவின் விஸ்தரிப்பு -ஐ.வி.மகாசேனன்-

கொரோனாவுக்கு பின்னரான உலக ஒழுங்கு மாற்றம் தவிர்ப்பட முடியாதது என்பது உர்ஜிதமாகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னராக அமெரிக்க மற்றும் ரஷ்சியாவை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டதோர் பனிப்போர் சூழலே கொரோனாவிற்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்க மற்றும் சீனாவை மையப்படுத்தி கட்டமைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் அமெரிக்க மற்றும் சீனாவை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பனிப்போர் சூழல் அமெரிக்க - ரஷ்சியாவிடையே காணப்பட்டதான கருத்தியல் மோதலாக காணப்படாது என்பதுவும், பொருளாதார நலனுக்கிடையிலான போட்டித்தன்மேயே இங்கு பிரதான நிலை பெறும் என்பதுவே ஆய்வாளர்களது கருத்தாக காணப்டுகின்றது. பனிப்போருக்கான கட்டமைப்பை, அமெரிக்க தன் கூட்டு நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக ஆசியாவில் இராணுவ கட்டமைப்பு ரீதியாய் ஓரு கூட்டை உருவாக்குவதற்குரிய முயற்சியிலிருந்து காணலாம். 

அதனடிப்படையில் இக்கட்டுரை சீனாவை தவிர்த்து ஆசியாவில் அமெரிக்க மற்றும் அமெரிக்க நட்பு நாடுகள் கட்டமைக்கும் இராணுவ கட்டமைப்புக்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளையின் அறிக்கையின் பிரகாரம், 2021 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 20.1 பில்லியன் டாலர் கூடுதல் செலவினத்தை இராணுவச்செலவுக்காக கோருகிறது. இந்த நிதி புதிய ரேடார் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும்  ஏவுகணைகளுக்கு செலவிடப்படும். மேலும் கூட்டணி நாடுகளுடனான கூடுதல் பயிற்சிகளுக்கும் அத்தகைய செலவீனம் ஈடுசெய்யப்படும் எனவும், கூடுதல் படைகளின் வரிசைப்படுத்தல் மற்றும் புதிய உளவுத்துறைகளுக்கிடையிலான பகிர்வு மையங்கள் அமைப்பதுடன் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தைத் தடுக்கும் விதத்தில் யு.எஸ். இராணுவத்தின் திறனை மேம்படுத்த இந்த முயற்சிகள் உதவும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் டிஃபென்ஸ் (Breaking Defenseமற்றும் டிஃபென்ஸ் நியூஸ் (Defense News) முதன்முதலில் தெரிவித்த இந்த கோரிக்கை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் தொற்றுநோய்க்கு மத்தியில் வளரக்கூடும் என்று அமெரிக்க மற்றும் ஏனைய நாடுகளின் இராணுவத்தினர் கருதுகின்றனதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன் வாஷிங்டனை தளமாகக் கொண்ட பெக்கான் குளோபல் மூலோபாய மையத்தின் (Beacon Global Strategies) துணைத் தலைவர் சேயர்ஸ் (Sayers), பசிபிக் பிராந்தியத்தில் சீன விரிவாக்கம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக குறுகிய கால இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து முதன்மைப்படுத்தியுள்ளார். 

இவற்றுடன் ஏவுகணை பாதுகாப்புக்களை கட்டமைக்கவும் குறித்த செலவுத்திட்டம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முதல் தீவு சங்கிலியை விட கிழக்கே அமைந்துள்ள குவாம் மற்றும் இரண்டாவது தீவு சங்கிலி என்று அழைக்கப்படும் பிற பகுதிகளில் அமெரிக்கா தனது ஏவுகணை பாதுகாப்பை கட்டியெழுப்ப செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை சிறப்பாகக் கண்டறிய இது ஹவாய், பலாவ் மற்றும் பிற இடங்களில் ரேடார் நிறுவல்களுக்கும் நிதியளிக்கும் திட்டத்தை கொண்டுள்ளது. அமெரிக்க - ரஷ்சியா பனிப்போர் காலத்தில் ரஷ்சியாவை அச்சுறுத்தும் வகையில் 1962இல் இத்தாலி, துருக்கியில் ஏவுகணைகளை நிறுத்தியது போன்ற ஏற்பாடுகளையே அமெரிக்க தற்போது சீனாவுக்கு எதிராக திட்டமிடுகின்றது.

சீனாவுக்கு எதிரான பனிப்போர் சூழலை வெற்றிகொள்ள அமெரிக்கா ஆசிய நாடுகளில் தன் இராணுவக்கூட்டை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அதனடிப்படையில் தென்கிழக்காசிய நாடாகிய சிங்கப்பூரை மையப்படுத்தி தனது இராணுவ கூட்டினை பலப்படுத்துவதற்கான உத்தியை அமெரிக்க சமீபத்தில் வகுத்து வருகிறது.

ஆசியாவில் அளவில் சிறியதாயினும் கனமான எடையுடைய தேசமாக சிங்கப்பூர் காணப்படுகின்றது. சிங்கப்பூர் ஒர் உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார மையமாகும். இது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடலின் சந்திப்பு இடத்தை நோக்கி அமர்ந்திருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் நெருங்கிய மூலோபாய பங்காளியான சிங்கப்பூர், சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்குவதைத் தவிர்க்க முற்படும் ஒரு சீரான வெளியுறவுக் கொள்கையை அது பின்பற்றி வருகிறது.

சிங்கப்பூரின், அமெரிக்க - சீனா தொடர்பிலான சீரான கொள்கை இடைவெளியில் தன் பலத்தை கூட்ட அமெரிக்க பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. இரு நாடுகளும் குறிப்பாக மேம்பட்ட இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் போராளிகள் ஒன்றாக வழக்கமான பயிற்சிகளை நடத்துகின்றனர். மேலும் அமெரிக்க கடற்படை தென்கிழக்கு ஆசியாவில் அதன் செயல்பாடுகளை ஆதரிக்க சிங்கப்பூர் கடற்படை வசதிகளைப் பயன்படுத்துகிறது. இது ஒர் அமெரிக்க ஒப்பந்த நட்பு நாடு என்ற வகையில், 2020 ஆம் ஆண்டின் ஜனவரியில், சிங்கப்பூர் அமெரிக்க தயாரிப்பான எஃப்-35 (F35) போர் விமானங்களை கொள்வனவு செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துடன், 2020 பெப்ரவரியில் அமெரிக்க  காங்கிரஸின் அனுமதியும் கிடைக்கப்பெற்று கொள்வனவு செய்யப்பட்டுள்து. எஃப்-35 போர் விமானம் களமிறங்கியுள்ள முதல் மற்றும் ஒரே தென்கிழக்கு ஆசிய நாடாக சிங்கப்பூர் காணப்படுகின்றது. சிங்கப்பூர் ஏர் ஷோவுக்கான (Airshow) அமெரிக்க தூதுக்குழுவின் உறுப்பினரான கூப்பர் (Cooper), 'இந்த கொள்முதல் சிங்கப்பூருடனான நீண்ட கால செயல்முறையின் ஒரு பகுதியாகும்;. அமெரிக்க - சிங்கப்பூர் கூட்டு, பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் மிகவும் இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் ஒரு தெளிவான உறுதியான எடுத்துக்காட்டு' என்று அவர் கூறினார்.

அமெரிக்க தனது நட்பு நாடுகள் மூலம் பராந்திய ரீதியில் சீன சமநிலைக்கான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றது. 2020 மார்ச் 23அன்று அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூர் புதிய இராணுவ பயிற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு  நாடுகளுக்கிடையேயான பரந்த இருதரப்பு உறவின் பாதுகாப்பு அம்சத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியில் இந்த வளர்ச்சி மற்றொரு ஊடுருவல் புள்ளியைக் குறித்தது. அவுஸ்ரேலியாவில் இராணுவ பயிற்சி மற்றும் பயிற்சி பகுதி மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் என்ஜி எங் ஹென் (Ng Eng Hen) மற்றும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ்  (Linda Reynolds) ஆகியோர் கையெழுத்திட்டனர். மற்றும் 5ஆவது சிங்கப்பூர் - அவுஸ்ரேலியா தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் லீ ஹ்சியன் லூங் (Lee Hsien Loong) மற்றும் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) ஆகியோர் சாட்சியம் அளித்தனர். உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு வீடியோ மாநாடு நடத்தப்பட்டது, முறையே சிங்கப்பூரில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் அவுஸ்ரேலியாவின் கான்பெராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டது. அவுஸ்ரேலியா அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்சீனக்கடலில் மூண்ட சீனாக்கு எதிரான போர்ப்பதட்டத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவாக அவுஸ்ரேலிய கப்பற்படையை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூருடன் அமெரிக்காவின் மற்றொரு நெருக்கமான நாடான தென்கொரியாவும் இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.

ஏனைய ஆசிய நாடுகளுடனும் நட்பை பாராட்டுவதில் அமெரிக்க மும்மரமாக காய்நகர்த்துகின்றது. நீண்டகாலமாக நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த சில ஆயுதப்பொருட்களை அமெரிக்க வழங்க மறுத்து வந்திருந்தது. எனிலும் சமீபத்தில் கொரோனா பரவுகை காலத்தில் நட்பு நாடுகள் கோரி வந்த ஆயுத பொருட்களை வழங்கி நட்பை பலப்படுத்த அமெரிக்க திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றது.

கொரோனா வைரஸ் சீனாவிற்கு வெளியே உலக நாடுகளிடையே பரவிய ஆரம்ப காலங்களில் 2020 மார்ச் மாதப் பகுதிகளில் அமெரிக்காவின் நட்பு நாடாகிய இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பிலான உரையாடலில் சீனாவுடன் ஒரு நல்லுறவை வளர்ப்பதற்கான முன்னடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய - சீன - ரஷ்சிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சகளின் உரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையிலேயே இவ்உறவை எதிர்க்கும் வகையில், அமெரிக்க இந்தியாவிடம் கொரோனாவிற்கான மருந்தாக குளோறோகுயின் வில்லைகளை கேட்டு எச்சரிக்கை விடுத்தது. பின்னர் இந்தியா நீண்ட காலமாக கோரியிருந்த 10AGM 84 – L Harpoon Block II air Launch  ஏவுகணைகளையும், 16 MK 54 Light Weight Torpedoes16 MK 54 Light Weight Torpedoes, கொள்கலன் தொடர்புடைய உபகரணங்களையும் வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலை வழங்கியது. இது கொரோனாவை மையப்படுத்தி தோற்றம் பெற இருந்த சீன - இந்திய கூட்டை பலவீனப்படுத்தும் வகையிலும், அமெரிக்க - இந்திய உறவை வலுப்படுத்தும் வகையிலுமான அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வாகவே காணப்படுகிறது.

தைய்வானும் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் நாடாக காணப்படுகின்ற போதிலும் தைய்வான் கோரிக்கை விடுத்தும் நீண்டகாலம் மறுக்கப்பட்டு வந்த  ஆயுதப்பொருட்களையும் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது தைய்வானுக்கு வழங்கியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் தைய்வானுக்கு விற்பனை செய்ய தயங்கிய எப்16 போர் விமானங்களில் அறுபத்தாறை டொனால்ட் ட்ரம்ப் அந்த நாட்டிற்கு எட்டு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தார். அத்துடன் 2020 பெப்ரவரி 10ஆம் திகதி சீன குண்டு விமானங்கள் சீன - தைய்வான் கடல் எல்லையை தாண்டி பறந்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பி52 குண்டு வீச்சு விமானங்கள் தைய்வானின் கிழக்கு கடற்கரை பிராந்தியத்தில் பறந்தன. 

தென்சீனக்கடலில் மலேசியா மற்றும் தைய்வானுக்கு எதிராக சீனா அவிழ்த்து விடும் அழுத்தங்களுக்கு எதிராக மலேசியா மற்றும் தைய்வானுக்கு ஆதரவாக களமிறங்கி அமெரிக்க கூட்டை பலப்படுத்துகின்றது. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா இரண்டு முறை போர்க்கப்பல்களை சீனக் கப்பலின் (drill ship) அருகே பயணித்தது. இது, அப்பகுதியில் உள்ள வளங்களை அபகரிக்கும் எந்தவொரு சீன முயற்சிகளையும் அமெரிக்க கடற்படை சவால் செய்ய முடியும் என சீனாவிற்கு சமிக்ஞை செய்யும் நோக்கம் கொண்ட ஒரு காட்சியாகும். 'தென் சீனக் கடலில் ஒரு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், கடல்களின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் தொடர்ந்து பெறுவோம்' என்று அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மான் ஜான் அக்விலினோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

'கொவிட்-19க்குப் பிந்தைய உலகில் நாம் எதிர்பார்க்க வேண்டிய அனைத்து மாற்றங்களுக்கும், ஆசியாவில் மாற்றப்படும் இராணுவ சமநிலையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு அது உருவாக்கிய அக்கறையும் நீடிக்கும்.' என சேயர்ஸ் (Sayers) குறிப்பிடும் கருத்துநிலை கவனிக்கத்தக்கது. இது பொருளாதார நலனை மையப்படுத்தி கொரோனாவிற்கு பின்னர் எழும் அமெரிக்க – சீன பனிப்போர் காலத்தில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் இலக்கு ஆசியாவை மையப்படுத்தியே காணப்படுகிறது. இந்தோ - பசுபிக் மூலோபாயம் மற்றும் பெல்ட் மற்றும் சாலை முயற்சிகளின் மோதலாக கொரோனாவிற்கு பிந்தைய உலக ஒழுங்கு வடிவமைக்கப்படுவதன் அறிகுறிகளையே சமீபத்திய உலக அரசியல் புலப்படுத்துகின்றன.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-