சீனா - இந்திய எல்லைப் பிரச்சினை வல்லரசுப் போட்டிக்கான ஒத்திகையா? -ஐ.வி.மகாசேனன்-
21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பது 18ஆம் நூற்றாண்டில் காலத்திலிருந்தே உரையாடப்பட்டு வருகிற போதிலும், கொரோனா அபத்தமும் அது ஏற்படுத்திவரும் மாறுதல்களும் 21ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாய் சடுதியாக உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இதனைத்தொடர்ந்து சர்வதேச அவதானிப்பு ஆசியாவில் சூழந்துள்ள நிலையில் சீனா - இந்தியா எல்லை முரண்பாடு சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பல வினாக்களையும் ஆச்சரியத்தையும் உருவாக்கியுள்ளது.இந்த நேரத்தில் சீனா ஏன் இந்தியாவை விரோதமாக தேர்வு செய்துள்ளது? அமெரிக்காவுடனான சீனாவின் உறவு வீழ்ச்சியடைந்து வருகிறது; சீனா ஏற்கனவே கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக சர்வதேச சமூகத்திடமிருந்து ஒர் எதிர்ப்பை பெற்று வருகிறது; தென் சீனக்கடலில் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது, மற்றும் முன்னோடியில்லாத சமூக அமைதியின்மைக்கு மத்தியில், குறிப்பாக ஹாங்காங்கில். இந்தியாவுடனான தற்போதைய நெருக்கடியைத் தூண்டுவதற்கு அல்லது தீவிரப்படுத்துவதற்குப் பின்னால் சீனாவின் நோக்கம் அல்லது நோக்கங்கள் என்னவாக இருக்கும்? எனப்பல கேள்விகள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த கட்டுரை இந்திய – சீன எல்லையை மையப்படுத்தி மூளும் முரண்பாட்டின் அரசியல் பின்னணியை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சுமார் ஐந்து வார காலமாக பூதாகரமாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.அக்சாய் சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஆனால் சீனாவோ, கல்வான் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே கடந்த திங்கள் (15.06.2020) இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவ துருப்புகளின் எண்ணிக்கை இருபதாக அதிகரித்துள்ளதாக இந்திய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நான்கு இந்திய ராணுவத்தினர் கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இரு நாட்டு இராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. தற்போது உள்ள பிரச்சனையை தீர்க்க அரசு ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் இந்தியாவும் சீனாவும் நெருங்கிய பேச்சுவார்த்தையில் உள்ளது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், எல்லைக் காட்டுப்பாட்டு கோட்டைக் கடந்து சீனப் பகுதியில் இந்த மோதல் நடந்துள்ளது. எனவே இதற்கு சீனா பொறுப்பல்ல எனவும் அந்த அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறியுள்ளதாக சீன அரசின் குளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது. கடைசியாக 1975ஆம் ஆண்டு இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லை இந்தியா மற்றும் சீன இராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நான்கு இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதை சில முன்னாள் தூதர்கள், தாக்குதல் என்றும்; சிலர் விபத்து என்றும் கூறியிருந்தனர்.
சீனாவின் அரசு ஊடகங்களும் இந்த சம்பவத்தைப் பற்றிய தகவல்களைக் கட்டுப்படுத்தாமல், பெரும்பாலும் ஒரு சில கட்டுரைகளில் மட்டுப்பாடுடன், இந்தியா சட்டவிரோதமாக அத்துமீறுவதுடன், எல்லையைத் தாண்டி கால்வான் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் சீனாவின் நிலப்பரப்பில் பாதுகாப்பு வசதிகளை நிர்மாணிக்கிறது என்ற உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைப் பற்றிக் கூறுகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர சீன எல்லைப் படையினருக்கு வேறு வழியில்லாமல் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், மறுபுறம், சீனாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இணையத்தில் இந்த விவகாரத்தில் சில உற்சாகமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடந்துள்ளன. இது சீனா நிலைமையை எவ்வாறு கையாளக்கூடும் என்பதற்கான முக்கியமான குறிப்புகளை வழங்குகிறது.
இந்தியாவில், எல்லையில் உள்ள தற்போதைய நெருக்கடி பெரும்பாலும் உலகெங்கிலும் சீனாவின் தொற்றுநோய்க்கு பிந்தைய உறுதியான வெளியுறவுக் கொள்கையின்தொடர்ச்சியாகவும், சமீபத்திய காலங்களில் சீனா-இந்தியா உறவுகளின் ஒட்டுமொத்த ஆதாரத்தின் வீழ்ச்சியாகவும் காணப்படுகிறது. ஆசியாவின் நூற்றாண்டில் சீனா தன் நிலையை உறுதிப்படுத்த இந்தியாவின் மூலோபாய நடவடிக்கைகளை தடைசெய்வதுடன், இந்தியாவிற்கு எதிரான சர்வதேச கருத்தியலை உருவாக்கவே எல்லைப்பிரச்சினையை ஆயுதமாக எடுத்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
முதலாவது, சீனா தனது தெற்காசிய கொள்கையை இன்னொரு முறை கவனிப்பதாகத் தெரிகிறது. லடாக் மற்றும் சிக்கிமில் உள்ள பரந்த சீனா - இந்தியா முரண்பாடுகளுக்கு துணைப்பிரிவாக கலபானி மீது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் ஒரே நேரத்தில் உயர் அழுத்தங்கள் வெடித்ததாக சிலர் சந்தேகிக்கின்றனர். சீன வெளிப்பாட்டில், இந்தியா-நேபாள எல்லை வரிசை முக்கிய சதி என்றும் தெரிகிறது. நிலைமையைப் பார்க்கும்போது, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான ஒரு பொதுக் கருத்துத் தாக்குதலைத் தொடங்குவதே நிகழ்ச்சி நிரலாகும். இந்தியாவை தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் ஒரே ஸ்திரமின்மைக்குரிய காரணியாக சித்தரிக்கிறது. 'ஓநாய் லட்சியங்களைக் கொண்ட ஒரு நாடு', இது ஒரே நேரத்தில் நாடுகள் அவற்றின் அளவைப் பொருட்படுத்தாமல், அனைத்து அண்டை நாடுகளுடனும் முரண்பாட்டை தூண்டுகிறது. எனும் வகையிலான சீன பிரச்சாரம் இந்தியாவை தெற்காசியாவில் ஒரு விரிவாக்க சக்தியாகக் கருதுகிறது. அது 'பாகிஸ்தானைக் கலைத்து, சிக்கிமை இணைத்து, பூட்டானைக் கட்டுப்படுத்துகிறது, இப்போது நேபாள இறையாண்மையை மிதித்து வருகிறது. இருப்பினும், சீனா மீட்புக்கு வந்து நேபாளம் அடுத்த சிக்கிம்களாக மாறாமல் பார்த்துக் கொள்ளும்.' என்றதொரு செய்தியை வழங்குவதாகவே சமீபத்திய எல்லை முரண்பாடு புலனாகிறது. தெற்காசியாவில் அதன் நோக்கங்களுக்கு ஏற்ப நேபாள வரலாற்றை சீனா தந்திரோபாயமாக பயன்படுத்துகிறது. சீன விவாதங்களில், நேபாளத்தின் வரலாற்று நிலையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன சாம்ராஜ்யங்களுக்கு ஒரு 'வசதியான நாடு' என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
இரண்டாவது, சமீபத்திய இந்தியாவின் சர்வதேச உறவுகள் சீனாவுக்கு எதிரான நாடுகளுடன் அமைவதும் சீனா - இந்தியா முரண்பாடு மோதலாய் பரிணமிக்க காரணமாகியுள்ளது. தைவானுடனான உறவில் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டில் இருந்து மாறல் ஏற்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் இன் முதல் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெயரிட்ட பின்னர், இந்திய அரசாங்கம் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இது இந்திய – தைவான் உறவில் பெரும் ஏமாற்றத்திற்கு வழிவகுத்தது. சீனாவின் எதிர்வினை பற்றி கவலைப்படுவதாக பலர் சந்தேகித்தனர். எனிலும் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டில் முடிவுக்கு முரணாய்,தைவானுடன் இந்திய மற்றொரு அசாதாரண இராஜதந்திர நாடகத்தை உருவாக்கியது. ஒர் அசாதாரண நடவடிக்கையில், ஆளும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மீனாட்சி லேக்கி மற்றும் ராகுல் கஸ்வான்) ஜனாதிபதி சாய் இங்-வென் பதவியேற்பு விழாவில் ஆன்லைனில் கலந்து கொண்டனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சாய்க்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, இந்தியா - தைபே சங்கத்தின் செயல் இயக்குநர் ஜெனரல் சோஹாங் சென், இந்த விழாவில் தைப்பேயில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக கூறப்படுகிறது. விழாவில்,ஒரு தனி வீடியோ செய்தியில், 'இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையிலான விரிவான உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதை' லெக்கி வலியுறுத்தினார்.
மூன்றாவது அவுஸ்ரேலியாவுடன் இந்திய சமீபத்தில் நெருக்கமான உரையாடலை வளர்த்துள்ளது.மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் தங்களது முதல் மெய்நிகர் இந்தியா - அவுஸ்ரேலியா உச்சி மாநாட்டை முடித்தனர். உச்சிமாநாடு முதலில் பிப்ரவரியில் திட்டமிடப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ மற்றும் பின்னர் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய பிரச்சினைகள் குறித்த பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது. கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இரு தலைவர்களும் 2009 இல் எட்டிய மூலோபாய கூட்டாண்மை நிலையை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு (சிஎஸ்பி) உயர்த்த முடிவு செய்தனர். கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை பல முக்கியமான செய்திகளுடன் கவனமாக சொல்லப்படுகிறது. கையெழுத்திடப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட ஒன்பது ஒப்பந்தங்களில், சில குறிப்பாக குறிப்பிடத்தக்கவை: இந்தோ-பசுபிக் கடற்படை ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட பார்வைக்கான கூட்டு பிரகடனம்; பரஸ்பர ஆயுத தளவாட ஆதரவு (எம்.எல்.எஸ்.ஏ) தொடர்பான ஏற்பாடு; முக்கியமான மற்றும் மூலோபாய தாதுக்களின் சுரங்க மற்றும் செயலாக்க துறையில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்; மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு தொடர்பான ஏற்பாடு. கொந்தளிப்பான இந்தோ-பசுபிக் செல்லவும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் திறன் இவை. மலேபார் கடற்படைப் பயிற்சிக்கு புதுடில்லி இறுதியாக ஆஸ்திரேலியாவை அழைக்கப்போவதாக இந்தியாவில் பத்திரிகை செய்திகள் வந்தன. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
நான்கு அமெரிக்க, இந்திய – சீன முரண்பாட்டில் கருத்து தெரிவித்த போதிலும் உறுதியான நிலைப்பட்டை தவிர்த்தே வருகிறது. ஜூன் 2 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக, அவர்களின் உரையாடலில் சீன-இந்திய எல்லை நிலைப்பாடு மற்றும் உலக சுகாதார அமைப்பை சீர்திருத்த வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிது. உலக சுகாதார அமைப்பு சீனாவுடன் மிகவும் வசதியானதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களுக்கிடையேயான உரையாடலுக்குப் பின்னர், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் 'எந்த மூன்றாம் தரப்பினரும் தலையிட வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார். இது கொரோனாவிற்கு பின்னரான வல்லரசுப் போட்டி, என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்அரசியல் பின்ணனியில், இந்தியாவினை முடக்கி கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் சீனா தன் வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இந்திய - சீன எல்லைப் பிரச்சினையை நகர்த்துகிறது. இரு அணுஆயுத நாடுகள் ஆயுத பயன்பாடின்றி தடிகளாலும் கற்களாலும் மோதுவதே இது ஆதிக்க ஆற்றலை தீர்மானிப்பதற்கான போட்டி என்பது தெளிவாக புரிகிறது. சீனாவிற்கு, இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகள் எவ்வாறு விளக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியா மீதான இடைவிடாத சீனாவின் அழுத்தம் இந்தியாவை இன்னும் தூரம் தள்ளி அதன் பாதுகாப்பு கூட்டாண்மைகளை ஆழப்படுத்த வழிவகுக்கும் எனும் உரையாடலும் சர்வதேச பரப்பில் ஆழமாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. காலமே சீனாவின் அணுகுமுறையா? இந்தியாவின் அணுகுமுறையா? வெற்றி பெறப்போகிறது என்பதை உறுதிசெய்யும்.
Comments
Post a Comment