மீண்டும் பதட்டத்துக்குள்ளாகும் கொரிய தீபகற்பம்! -ஐ.வி.மகாசேனன்-

கொரிய தீபகற்பம் என்றுமே சர்வதேச அரசியலில் தனக்கான தனித்துவத்தை பெற்று வந்துள்ளது. பனிப்போர் காலமாயினும், இன்றைய கொரோனா அபத்த காலமாயினும் ஏதோவோர் வடிவில் கொரிய தீபகற்பம் தொடர்பான செய்தி முதனிலை பெறுவது தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. பனிப்போர் காலத்தில் இருதுருவ அரசியல் ஒழுங்கிற்குள் சிக்குண்ட கொரியா போர், முதன்மை பெறலாயிற்று. கொரோனா அபத்த காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய தேசங்களில் முதன்மையாய் கொரிய தேசங்கள் பேசுபொருளாயின. இன்று கொரோனா அபத்தம் உலகளவில் முழுமையாய் கட்டுப்படாது அமெரிக்க மற்றும் தென்னாசிய நாடுகளை உலுக்கி கொண்டிருக்கையில் கொரிய தீபகற்பம் போருக்கான முன்னாய த்தங்களை இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டு;ள்ளது.  அதனடிப்படையிலே கொரிய தீபகற்ப போரியல் வரலாற்றையும், போருக்கான முன்னாயர்த்த காரணங்களை தேடுவதாகவும் குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா அபத்த காலத்திலும் கொரிய தீபகற்பத்துக்குள் சூழ்ந்துள்ள போர் மேகத்துக்கான உடனடி காரணியாக கொரிய தீபகற்பத்தின் பலூன் அரசியல் காணப்படுகிறது. ஹைட்ரஜன் பலூன்கள் உலகின் மிக அதிக பாதுகாப்புடன் இருக்கும் எல்லையில் மிதக்கின்றன. வட கொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியா சென்றவர்கள், எல்லையிலிருந்து வட கொரிய அரசை விமர்சிக்கும் துண்டுப்பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை பறக்க விட்டதே வட கொரியாவின் திடீர் கோபத்துக்கான காரணமாகக் கருதப்படுகிறது. இதனைத்தொடர்து கடந்த வாரம் (ஜூன்-09), வடகொரியா, தென்கொரியாவுடன் அனைத்து தகவல் தொடர்புகளையும் கடுமையான அறிக்கையினூடாக துண்டிப்பதாக அறிவித்தது. தென் கொரியாவை 'எதிரி' என்று அழைத்தது. இதற்கு முன்னரும் பல தடைவ பலூன் அரசியல் கொரிய தீபகற்பத்தை பதற்றத்தக்குள் தள்ளியுள்ளது. 2014ஆண்டிலும் வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னை விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை சில தென் கொரிய செயற்பாட்டாளர்கள், வட கொரியா நோக்கி பறக்க விட்டதால் இரு நாடுகள் இடையே எல்லையில் துப்பாக்கிச்சூடு நடந்தது. பலூன் அரசியல் கொரிய தீபகற்கத்தில் தொடர்கதையாய் நீடிக்கிறது.

வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான தொடர்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. இரு நாடுகளுக்கிடையில் மோதல்கள் பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, எல்லை தாண்டிய பொருளாதார திட்டங்கள் போன்றவற்றில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் குறைந்தபட்சம் 49 ஹாட்லைன்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தகவல்தொடர்பு வழிகள் முதன்முதலில் 1970களில் நிறுவப்பட்டதுடன், பின்னர் நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டன. இரு நாடுகளுக்கிடையில் உறவுகள் மோசமடையும் போது, நிலைமை மேம்படும் வரை இரு நாடுகளுக்கிடையில் இந்த தொடர்புகள் நிறுத்தப்படுகின்றன. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வந்ததனை தொடந்து, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும்; இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்த பின்னர் 2016 ஆம் ஆண்டில் இந்த தொடர்புகள் கடைசியாக வெட்டப்பட்டது. அதன் பின்னர் 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட சற்றே சுமூகமான உறவு, தொடர்பை இணைத்த போதும் தற்போது மீளத்துண்டிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான மோதல் வரலாறு நீண்டது. ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு, 194ஆம் ஆண்டில் கொரியா விடுதலை பெற்றது. அதன் பின்னர் பனிப்போர் காலத்தில் வட பகுதி கொரியாவில் சோவியத் ஒன்றியமும், தென் பகுதி கொரியாவில் அமெரிக்காவும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. 1950இல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது. 1953இல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போரில் 25 லட்சம் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவானது.

ஆனால், போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அதனால் அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சனைகள் இருந்து வருகிறது. கொம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கா பின்பற்றும் முதலாளித்துவ கொள்கையைத் தென் கொரியா ஏற்றுக்கொண்டது. 1980களுக்கு பிறகு இராணுவ கட்டமைப்பில் கவனம் செலுத்திய வட கொரிய அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றைத் தொடர்ந்து நடத்தியது. இது அந்த பிராந்திய நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கு இணையாக தென் கொரியாவும் அமெரிக்காவின் உதவியுடன் தனது இராணுவத்தை பலப்படுத்தியதுடன், தொழிற்சாலைகள் மீது அதிக கவனம் செலுத்தியது. பனிப்போர் காலத்தில் இருதுருவ உலக ஒழுங்கில் வலுப்பெற்ற கொரிய நாடுகளுக்கிடையிலான மோதல் பனிப்போர் உலக ஒழுங்கு நிறைவடைந்த பின்னரும் மீளாத்துயராக தொடர்கிறது. வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளிடையே அடிக்கடி இராணுவரீதியாகவும் தொழில்நுட்பரீதியாகவும் மோதல்கள் தொடந்து கொண்டே உள்ளது. இடையிடேயே பேச்சுவார்த்தையூடாக சமாதான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்ட போதிலும் அவை எவையுமே சமாதானத்திற்கான வலுவான முடிவாக அமைவதில்லை.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வட கொரியா தனது அணியை அனுப்பி வைத்தது. கொரிய போரிலிருந்து இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வந்த பகைமை கடந்த 2018இல் சற்று தணிந்தது. சமாதான கிராமமான பன்முன்ஜோம் இல் 2018 ஏப்ரல் 27ஆம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் இடையில் உச்சிமாநாடு நடைபெற்றது. அணு ஆயுத ஒழிப்பு, அமைதியைக் கட்டமைத்தல், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சீரமைத்தல் ஆகியவற்றை இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் முதல் முறையாகச் சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடந்தது. இவற்றினடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக இரு கொரிய நாடுகள் இடையே பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தனது தொடர்புகளை வட கொரியா துண்டித்துள்ளது.

வடகொரிய அரசியலை ஆய்வு செய்யும் நிபுணர்கள் இதனை வடகொரியாவின் இராஜதந்திர அரசியலாகவே நோக்குகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, தென் கொரியாவில் புத்துயிர் பெற இயலாமை, அமெரிக்க அழுத்தத்தின் கீழ், முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சியின் கீழ் வடகொரியாவிற்கு நன்மைபயக்க கூடிய விதத்தில் முன்னேற்றகரமாக செயற்பாடுகள் காணப்படாமையால் ஏற்பட்ட விரக்தியின் என்பவற்றின் விளைவாக போருக்கான முன்னாயர்த்த தடைகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும், வேறுசில நிபுணர்கள் உடனடி காரணத்தை மையப்படுத்தி தென்கொரியாவில் உள்ள ஆர்வலர்களிடமிருந்து வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரம் வட கொரியாவில் முறுக்கி விடப்படுவதால் இந்த தகவல் தொடர்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருத்;து தெரிவிக்கின்றனர். தென்கொரியாவுடனான வடகொரியாவின் தொடர்பு முறிவிற்கு பிரதானமாக மூன்று காரணியினை முன்வைக்கலாம்.

முதலாவது, முடி காணப்படவில்லையாயினும் வடகொரியாவின் ஆட்சி மன்னராட்சி இயல்புகளையே ஒத்ததாகும். வடகொரிய ஆட்சியாளர் இராணுவ சர்வாதிகாரியாகவோ அல்லது கொம்யூனிச சர்வதிகாரத்தை ஒத்து ஒரு கட்சியூடாக சர்வாதிகாரத்தை நிலைநாட்டுபவர் அல்ல. பரம்பரை ரீதியாகவே ஆட்சியுரிமை பரிமாறப்படுகிறது. இந்நிலையில் வடகொரிய அதிபரின் செயற்பாடுகள் வரண்ட தன்மையில் காணப்படுவது இயல்பாகவே காணப்படுகிறது. வடகொரிய அதிபருக்கு ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை ஏனைய நாடுகள் மேற்கொண்டால் முடிவுகளும் சடுதியானதாக காணப்படும். அவ்வகையிலான சடுதியான ஒரு தீர்மானமாகவே தென்கொரியாவுக்கு எதிரான தொடர்புகள் நிறுத்தமும் காணப்படுகிறது.

இரண்டாவது, அமெரிக்க - வடகொரிய சமாதான முன்னெடுப்பின் தோல்வி எதிரொலியாய், கொரோனா அபத்த காலத்திலும் வடகொரிய அணு பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தென்கொரியாவுடன் நட்பு தொடருவது, வடகொரியாவின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்த கடினம் என்ற நிலையிலேயே, தென்கொரியாவுடன் பகைமை அறிவிப்பை அறிவித்துள்ளது என்ற கருத்து நிலையும் வலுவாக காணப்படுகிறது. வடகொரிய ஆட்சியாளர் கிம் ஜாங்-உன் மரணம் தொடர்பான சர்ச்சை நீடிக்கையில் தென்கொரியா ஆரம்பத்திலிருந்து கிம் ஜாங்-உன் மரணம் தொடர்பான செய்திகள் வதந்தி என்பதை உறுதிப்படுத்தியிருந்தது. இது தென்கொரியாவால் வடகொரியாவின் இரகசியத்தன்மை வலுவிழப்பதை உறுதி செய்கிறது.

மூன்றாவது, தென்கொரியா, வடகொரியா எதிர்ப்பாளர்களை ஆதரிக்கும் நிலைப்பாடும் கிம் ஜாங்-உன் ஜ ஆத்திரமூட்டியிருக்கலாம். தெற்கில் உள்ள பழமைவாத எதிர்க்கட்சியான ஐக்கிய எதிர்காலக் கட்சி  சார்பில் தென் கொரிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட லண்டனில் உள்ள வட கொரியாவின் தூதரகத்தின் முன்னாள் மூத்த இராஜதந்திரி தே யோங்-ஹோ, சியோலில் உள்ள கங்னம் மாவட்டத்திற்கான ஒரு இடத்தை வென்றார். தே யோங்-ஹோ வடகொரியாவினால் தேசத்துரோக குற்றச்சாட்டில் குற்றஞ்சுமர்த்தப்பட்டவர் ஆவார். இத்தகைய வடகொரிய எதிர்ப்பாளர்களை தென்கொரியா ஆதரிப்பதன் தொடர்ச்சியாய் வடகொரியா அதிபருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் பலூன் மூலமாய் பறக்க விடப்பட்டமை தென்கொரிய தொடர்பை துண்டிக்க உடனடி காரணமாகியது.

வடகொரியாவின் கோபம் கொரிய தீபகற்பத்தில் போர்மேகத்தை தூண்டியுள்ள போதும் தென்கொரிய போர்மேகத்தை களைக்கும் நடடிக்கைகளையே முன்னெடுக்கின்றன. வடகொரிய அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுர பிரச்சாரம் மேற்கொண்டதற்காக வடக்கிலிருந்து வெளியேறிய இரண்டு சகோதரர்கள் மீது அரசு வழக்குத் தொடுத்துள்ளது. 2020 ஜூன்-04ஆம் திகதி, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் அலுவலகம் துண்டுப்பிரசுரங்களையும் பிற பிரச்சாரங்களையும் எல்லையில் அனுப்பும் முயற்சிகள் குறித்து 'முழுமையான ஒடுக்குமுறை' நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதியளித்தது. ஏப்ரல் தேர்தல்களில் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்ற திரு. மூனின் ஜனநாயகக் கட்சியின் முன்னணி உறுப்பினரான கிம் டே-நியோன், இந்த வாரம் துண்டுப்பிரசுரங்களைத் தடை விதிக்க கட்சி மீண்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று கூறினார். ஆயினும் இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தென்கொரிய மனித உரிமைகள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடகொரிய – தென்கொரிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர்ப்பதட்டம் ஏதோ ஒன்றுக்கான அடிப்படையை ஏற்படுத்தப் போகின்றது என்பது கடந்த காலத்தை வைத்துக் கொண்டு உணரமுடிகிறது. மரபுவழி தலைவரான கிம் ஜாங்-உன் இன்உபாயத்திற்குள்ளே  கொரிய தீபகற்பத்தின் நிலைமை தீர்மானிக்கக்கூடியதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-