இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் கைகோர்க்க வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

உலகம் கொரோனாவோடு வாழப்பழகிக்கொண்டுள்ளது என்ற தோற்றப்பாட்டையே சமீபத்திய சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அடையாளப்படுத்துகின்றது. உலகில் கொரோனாவின் வீரியம் முழுமையாக கட்டுப்படாத சூழலிலே, அமெரிக்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளும் அதற்கு எதிரான மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டங்களும் சர்வதேச அரசியலின் சமீபத்திய பேசுபொருளாக காணப்படுகின்றது. கொரோனா பரவுகை அதனை கட்டுப்படுத்துதல் என்ற சர்வதேச நிலைமை அமெரிக்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோருவதாகவே சர்வதேச அரசியல் நிலைமை மாற்றம் பெற்றுள்ளது. இது நிறவெறிக்கு எதிராக உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இதிலிருந்து ஈழத்தமிழர்களும் தங்களுக்கான படிப்பினையை பெற வேண்டிய கடமைப்பாட்டிலும், இவ்போராட்டங்கள் ஊடாக ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெறக்கூடிய வழிவகைகளை தேடவேண்டியோராயும் உள்ளனர். அதனடிப்படையிலேயே இக்கட்டுரை நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளில் வியாபித்துள்ள போராட்டத்திலிருந்து ஈழத்தமிழர்கள் பெறவேண்டிய அனுகூலத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாய் கேட்டுக்கொண்டிருந்த ஒரு இனத்தின் குரல் இந்த ஆண்டு 2020 மே மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கேட்டது. 'என்னால் சுவாசிக்க முடியவில்லை ப்ளீஸ் காலை எடுங்கள்' என்று தன் கழுத்துப்பகுதியில் சிக்கியிருந்த பொலிஸ் ஒருவரின் காலை எடுக்கச் சொல்லி நடந்த  போராட்டத்தில் அடங்கிப்போனது அந்தக்குரல். பொலிஸ் அதிகாரியால் ஜோர்ஜ் பிளொய்ட் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளையின அதிகாரத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரலெழுப்பட்டு போராட்டங்கள் வலுத்தன. அமெரிக்காவில் ஆரம்பமாகிய கறுப்பின போராட்டங்கள் ஐரோப்பா வரையில் வலுத்துள்ளது. ஜோர்ஜ் பிளொய்ட்டின் கொலை ஒரு பெரும் காட்டுத்தீயாய் உலகமெங்கும் பற்றிப்பரவி வருகின்றது. உலகெங்கும் 2000க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இலண்டன், பெர்லின், ரோம், வியன்னா, பாரீஸ் போன்ற இடங்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், துனிசியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்றவற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
மிகவும் வேடிக்கை உள்ளூரில் ஓர் தனித்தேசிய இனத்தின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு சிங்களத்தேசமும் அமெரிக்க கறுப்பின மக்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள். இலங்கையில் சிங்கள - பௌத்த மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை நிராகரிக்கும் முன்னிலை சோஷலிச கட்சியினரே அமெரிக்க வெள்ளையின மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் கறுப்பின மக்களின் நீதிக்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போராடியுள்ளார்கள். சிங்கள மக்களின் ஜனநாயக வழி போராட்டத்திற்கு எதிராகவே தற்போதைய அரசாங்கம் பொலிஸாரை ஏவிவிட்டு, பொலிஸாரின் மூலம் போராட்டம் ஒடுக்கப்பட்டமை இலங்கையின் இன்றைய நிலைமையை புரிந்து கொள்ள ஏதுவாக அமையும். இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் ஒடுக்கப்படும் இனத்திற்கு ஆதரவாக தன் குரலை அழுத்தமாக கொடுக்க இயலாத சூழலியே வாழ்கின்றனர். எனிலும் ஈழத்தழிழரும் மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தேசிய இனம் என்ற ரீதியில் ஒடுக்கப்படும் இனங்களுக்கான நீதி கோரும் போராட்டங்களில் தங்களது ஆதரவை காட்ட வேண்டிய தார்மீக பொறுப்பில் உள்ளனர். 

இத்தார்மீக பொறுப்பை நிறைவேற்ற கூடிய தமிழ்த்தலைமை தமிழ்த்தேசிய இனத்திற்கு இல்லாமை துர்ப்பாக்கியமேயாகும். உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் நிறவெறிக்கு எதிராக தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர். கனடா பிரதமர் போராட்ட களத்திற்கே நேரடியாக சென்று முழங்காலில் நின்று ஜோர்ஜ் பிளெய்ட்hவிற்காக பிரார்த்தனை செய்தார். பேரினவாத மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகள் காத்திரமான ஓர் அறிக்கையூடாக கூட தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிக்காமை எம் தலைமைகளின் இராஜதந்திரமற்ற நிலைமையையே உணர்த்துகிறது. சலுகை அரசியலுக்கு விலைபோகும் அரசியல் தலைமைகளை தேர்வு செய்யும் தமிழ் தரப்பு அவ்அரசியல் தலைமையிடம் இராஜதந்திரத்தை எதிர்பார்ப்பதும் மடமைதனமேயாகும். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சீரான தலைமையற்ற நிலையில் இலங்கையின் ஆள்புலத்தினுள் வழும் தமிழ் மக்களும், ஆள்புலத்துக்கு வெளியே வாழும் புலம்பெயர் தமிழ் மக்களும் நெறிப்படுத்தல் இல்லாது சந்தர்ப்பங்களை நழுவ விட்டு செல்கின்றனர்.

இலங்கையில் கொரோனாவை காரணங்காட்டி ஜனநாயக வழி போராட்ட களங்கள் முடக்கப்படும் சூழ்நிலையில் புலம்பெயர்வாழ் தமிழ் சமூகம் நிறவெறிக்கு  எதிராக இடம்பெறும் போராட்டத்துக்கு உயரளவில் பங்களிப்பை வழங்க வேண்டும். இதுவே பின்னாளில் தமிழர்களின் பேரினவாத மேலாதிக்கத்திற்கு எதிரான உரிமைசார் போராட்டங்களிலும் ஏனைய சமூகங்களின் ஆதரவை திரட்ட உதவியாக அமையும். யூதர்களின் தேச உருவாக்கம் என்பது புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த யூதர்கள் அந்த அந்த சமூகங்களுடன் கொண்ட இராஜதந்திர உறவின் விளைவானதே என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையினுள் தான் தமிழ் மக்களின் போராட்டங்கள் மரணித்து செல்கின்றதாயின், புலம்பெயர் நாடுகளிலும் அதே நிலைமையே காணப்படுகிறது. 2009ஆம் ஆண்டு தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதனை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சூழலில், ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க கூடிய உத்வேகம் இலங்கை வாழ் தமிழர்களிடையே காணப்படாத நிலையிலும்,  உத்வேகமான போராட்டங்கள் பலதும் புலம்பெயர் தேசங்களிலேயே ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. போர்குற்றம் தொடர்பிலான நீதிக்கோரிக்கைகளும் புலம்பெயர் தமிழ் சமூகமே ஆரம்பத்தில் முன்னெடுத்தன. எனிலும் இன்று புலம்பெயர் தேசங்களிலும் தமிழர் உரிமை போராட்டங்கள் வலுவிழந்து செல்கின்றமை துயரமான பதிவாய் காணப்படுகிறது. 

யாவற்றையும் தாண்டி நீதி கோரிய தமிழர்களின் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்களில் வலுவிழந்து செல்கையில், கறுப்பினத்தவர்கள் துணிவுடன் போராடுகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா வின் மனித உரிமைகள் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பிற இனத்;தவர் திரளாய் ஒன்று கூடி நிலைமாறுகால காலநீதிக்கான அரசாங்கம் மீதான சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு உதிராக போராடுகையில், தமிழர் ஒருவர் தனித்து நின்று போர்க்குற்றத்துக்கு நீதிகோரி போராடியமை புலம்பெயர் தேசத்தில் தமிழரின் போராட்டம் வலுவிழப்பதற்கு தக்கசான்றாகும். அண்மையில் அவுஸ்ரேலிய தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுமெக்டோர்மட், 'இலங்கையில் இனப்படுகொலை இடம்;பெற்றது' என கருத்து தெரிவித்திருந்தார். இதனை பெரும்பான்மை இனத்தவரின் புலம்பெயர் அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்திருந்தன. அமைதி ஐக்கியத்திற்கான சமூகம்  மற்றும் மனித உரிமைகளிற்கான இலங்கை என்ற அமைப்புக்கள் தனது கண்டனத்தை வெளியிட்டன. அத்துடன் ஹியுமெக்டோர்மட் க்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றையும் அச்சமுகம் மேற்கொண்டிருந்தது அதில் பலர் கையழுத்திட்டிருந்தனர். எனிலும் புலம்பெயர் தமிழ் சமூகம் ஹியுமெக்டோர்மட் க்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை தாமதமாகவே முன்னெடுத்திருந்தனர். இவ்வாறு வலுவிழந்து செல்லும் புலம்பெயர் தமிழ்சமூகத்தின் போராட்ட நிலைப்பாடு தமிழர்களின் உரிமை போராட்டத்தை இருள்நிறைந்த சூழலுக்குள் நகர்த்தக்கூடியதாகும்.

கொரோனா அபத்தத்தையும் தாண்டி உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் நிறவெறிக்கு எதிராக நீதிகோரி இடம்பெறும் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனங்களின் உரிமைக்கான போராட்டமாக பரிணமிக்க வைக்கக்கூடிய வல்லமை அறிவுத்தளத்திலும் ஆட்பல தளத்திலும் புலம்பெயர் தமிழர்களுக்கு அதிகம் உண்டு. எனிலும் தமிழ் சமூகம், இராமாயண இதிகாசத்தில் தன் வலு அறியாது அனுமான் இருந்ததைப்போன்றே தம் வலு அறியாது காணப்படுகின்றனர். அத்துடன் புலம்பெயர் தேசங்களிலும் தனித்து  உள்ளனர். அதாவது தமிழர்களின் ஒற்றுமையின்மை பண்பு புலம்பெயர் உறவுகளிடம் சிதைவை ஏற்படுத்தியுள்ளமையை அவர்களின் செயற்பாடுகள் புலப்படுத்துகிறது. உரிமைக்காக போராடும் சமூகத்திடம் இவ்வாறான எண்ணிறைந்த பிளவுகள் உரிமைப்போராட்டத்தை சீர்குலைக்கும் காரணியாக உள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகம் தமிழர்களின் உரிமை போராட்டத்தில் தங்களின் காத்திரமான பங்களிப்பை புரிந்து கொண்டு சமகாலத்தில் கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். நிகழ்காhல அரசாங்கத்தால் தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இரட்டை குழல் தாக்குதல்களான சிங்கள பௌத்தமயமாக்கம் மற்றும் இராணுவமயமாக்கத்திற்கு எதிராக காட்டமான எதிர்ப்பினை நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் இணைத்து புலம்பெயர் தமிழ் சமூகம் வெளிப்படுத்த வேண்டும். அதனூடாக நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டமாக மாற்ற முயல வேண்டும்.

ஈழத்தமிழர்கள் சர்வதேச அரசியல் அனுபவத்தினூடாக தம் பாதையை சீர்செய்ய சரியான ஒரு காலம் தற்போது கணிந்துள்ளது. பெனடிக் நெப்போலிய மன்னன் காலத்தில் நிக்கலஸ் சோவின் எனும் பிரான்ஸ் வெள்ளையின இராணுவவீரனின் மேலாதிக்க அராஜகத்தால் வடிவம் பெற்ற சோவினியவாதத்தின் (Chauvinism - மேலாதிக்கவாதம்) இருப்பால், 21ஆம் நூற்றாண்டில் டெறக் சோவின் என்ற அமெரிக்க வெள்ளையின பொலிஸின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களால் கட்டமைக்கப்படும் போராட்டத்தை வெள்ளையின சோவினியவாதத்திற்கு (White Chauvinism) எதிரான போராட்;டமாக கட்டுப்படத்ததாது பரந்த அளிவில் சோவினியவாதத்திற்கு எதிரான போராட்டமாக கட்டமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் காணப்படுகிறது. அதனை சிந்தித்து தமிழர்களின் போராட்டத்தை வேறொரு தளத்திற்கு நகர்த்த புலம்பெயர் சமூகத்திடையே பரந்துபட்ட சிந்தனை விரிவு அவசியமாகிறது. அத்துடன் இலங்கையிலும் பொதுத்தேர்தல் அண்மிக்கும் சூழலில் கடந்த கால அனுபவங்களைக்கொண்டு, தமிழ் மக்கள் விலைபோகாத அரசியல் தலைமைகளை தெரிவு செய்வார்களாயின் புலம்பெயர் தமிழ் சமூகம் கட்டமைக்கும் சோவினியவாதத்திற்கு (மேலாதிக்கவாதம்) எதிரான போராட்டத்திற்கு பலமான தலைமையை உருவாக்கக்கூடியதாகவும் காணப்படும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-