இலங்கையின் சனநாயகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

கொரோனாவின் குழப்பம் தீராத நிலையில் இலங்கை அரசியலில் பாராளுமன்ற தேர்தலே சூடான விவாதப்பொருளாக ஆரம்பம் தொட்டே அரசியல் பரப்பில் நீடித்து வருகிறது. உலகளவில் கொரோனா அபத்தம் உக்கிரம் பெற்ற காலப்பகுதியில், 2020 மார்ச்3 அன்று சனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் என அறிவிக்கப்பட்டது. எனிலும் இலங்கையிலும் கொரோனா பரவல் அடையாளம் காணப்பட்டதன் பிற்பட பிற்போடப்பட்ட தேர்தல் ஜூன்-20 திகதி மீள தேர்தல் திகதியாக தேரதல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனிலும் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஜூன்-2 இற்குள் மீளக்கூட்டப்பட வேண்டும் இல்லையேல் அது அரசியலமைப்பு மீறலென எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. எனிலும் ஆளுந்தரப்பு தொடர்ச்சியாக அசண்டை செய்தே வந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. ஒரு வாரத்துக்கு மேற்பட்ட விசாரணையின் இறுதியில் ஜூன்-2ஆம் பாராளுமன்ற கலைப்பு வர்த்தகமானி தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜூன்-3 அன்று பாராளுமன்ற தேர்தலை நடாத்துவது தொடர்பிலே தேர்தல் ஆணைக்குழு மீளக்கூடி கலந்துரையாடுகிறது. இதனடிப்படையில் இக்கட்டுரையானது, இலங்கை ஆளும் தரப்பு கொரோனா அபத்தத்தை அரசியல் நலன் கொண்டு சனநாயகத்தை மலினப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலை கையாள்கிறதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா அபத்தத்தினை பயன்படுத்தி தமது வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்துவதற்கான வியூகத்தையே ஆரம்பம் முதல் ஆளுந்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. அதனை பிரதானமாக 3 விடயங்களில் அவதானிக்கலாம்.
முதலாவது, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் ஆளும் தரப்பு உறுதியாக காணப்பட்டது. அதனை மையப்படுத்தியே தேர்தலை பிற்போடுவதை விரும்பாது செயற்படுகின்றது. இலங்கையில் மார்ச்11அன்று முதலாவது இலங்கையை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட போதிலும் வேட்புமனுத்தாக்கலை மையப்படுத்தி மார்ச் 20வரையில் இலங்கையில் ஊரடங்கை அமுல்படுத்தாது சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதற்கான காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்hது இலங்கை அரசாங்கம் செயற்பட்டிருந்தது. இலங்கையின் தேர்தல் திணைக்களமும் மார்ச்18 அன்று வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த பின்னரே மார்ச் 19 அன்று திகதியிடப்படாது பாராளுமன்ற தேர்தலை ஒத்தி வைத்தது. இச்செயற்பாடு தேர்தல் ஆணைக்குழுவின் நடுநிலை தன்மையை சாமணிய பிரஜையும் சந்தேகிக்க செய்தது.

இரண்டாவது, கொரோனா வைரஸ் கட்டுக்குள் பேணியமை என்ற சிறப்பின் இலாபத்தை உடனடியாக தேர்தலூடாக அனுபவிக்க இலங்கை ஆளுந்தரப்பு விருப்பம் கொண்டு செயற்படுகின்றது. அவுஸ்ரேலியாவின் அங்கிகாரம் பெற்ற முகாமைத்துவ செயற்பாட்டாளர்களின் ஒன்றிணைந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கொவிட்19 என்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டப்படுத்தும் செயற்றிட்டத்தில் உலக நாட்டின் தலைவர்களின் பங்கும் அவர்கள் பெறும் நிலையினை சார்ந்த ஆய்வொன்றினை கடந்த ஏப்ரல்14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. அதில் இலங்கையின் அரச தலைவர் 9ஆம் இடத்தை பெற்றிருந்தார். அத்துடன் உலக சுகாதார நிறுவனமும் கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் இலங்கையை பாராட்டியிருந்தது. இந்நிலைமையில் மக்கள் மனங்களிலும் ஆபத்தை சீர்செய்யக்கூடிய தரப்பாக ஆளுந்தரப்பே நிலைபெற்றிருக்கும். குறித்த விளைவை உடனடியாக பெறுவதற்கே தேர்தலை பிற்போடுவதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகின்றது.

மூன்றாவது, ஆளுந்தரப்பின் சனநாயக விரோத செயற்பாடுகள் மக்களிடம் சென்றடைவதை தடுக்கவும் அரசாங்கம் கொரோனா அபத்த காலத்திலேயே தேர்தலை நடாத்தி விட முனைகின்றது. கொரோனா அபத்தத்தை மையப்படுத்தி முழுமையாக சனநாயகத்தை சிகை;கும் வகையிலாகவே இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையப்பெற்று வருகின்றது. இலங்கையின் முக்கிய சிவில் பொறுப்புக்களை இராணுவமயமாக்கும் செயற்பாடுகளை கொரோனா அபத்த காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒருங்கே செய்து வருகின்றது. சிவில் சேவைகள் இராணுவயமயமாக்கம் என்பது இலங்கை தமிழர்களுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த இலங்கைக்குமே ஆபத்தானதே ஆகும். இந்நிலையில் சிங்கள சனநாயகவாதிகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவமயமாக்கத்தை எதிர்க்கின்றனர். எனிலும் கொரோனா அபத்த காலத்தினுள் தேர்தலை நடாத்துவதால் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் பிரச்சாரத்தினூடாக பொதுவெளியில் வெளிவராது தடைசெய்யலாம் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தே பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதை எதிர்க்கின்றது.

கொரோனா அபத்த காலத்தில் தேர்தல் நடைபெறுவது இலங்கையின் பிரதான தரப்புக்களில் ஒன்றான சஜித் பிரமேதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கு பெரும் இழப்பாக காணப்படும். இலங்கை பொதுஜன பெரமுன தனது முதலாவது தேர்தலிலேயே உள்ளூராட்சி சபையிலும் பின்னர் சனாதிபதி தேர்தலிலும் பெருவாரியான வெற்றியை பெற்றமையே ராஜபக்ஷ தரப்பு சுதந்திர கட்சியை விட்டு வெளியே வந்த போதிலும் தமது நிலையை உறுதிப்படுத்த முடிந்தது. பாராளுமன்ற தேர்தல் என்பது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியே வந்து தனியான கூட்டு உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாசாவின் அரசியல் இருப்போடு சம்பந்தப்பட்டதாகும். இந்நிலையில் கொரோனா அபத்தத்தில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுவது என்பது சஜித் பிரேமதாசாவின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்க கூடியதாகும்.

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்திலும் குறித்த பாராளுமன்ற தேர்தல் பல தரப்பிற்கு வாழ்வா? சாவா? ஏன்ற நிலையிலேயே காணப்பட்டது. எனிலும் கொரோனா அபத்தம் என்பது ஒரு தரப்பிற்கே பெருவாரியான சாதகத்தை ஏற்படுத்த கூடியதாக காணப்படுகின்றது. இம்முறையும் மக்களின் மாற்று தெரிவிற்கான யோசனையை ஏற்படுத்த கூடிய சூழலை தடை செய்வதாக கொரோனா அபத்தம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் மாற்றுக்கான கருத்துநிலை வேரூன்றி வருகின்ற போதிலும் பிரச்சாரமற்ற நிலையில் தேர்தலை நடாத்துவது புதியவர்களுக்கு வாய்ப்பை அரிதாக்குவதாகவே காணப்படுகின்றது. இது இம்முறை புதிகாக கூட்டினை உருவாக்கிய முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தரப்பிற்கும், கஜேந்திரகுமார் தலைமையிலான தரப்பினரிற்கும் பெரும் சவாலாக அமைந்து விடுகின்றது. அதேவேளை கடந்த காலங்களில் தமிழ் தரப்பின் பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை வழங்க முடியாது உள்ளமை அவர்களுக்கும் சவாலை ஏற்படுத்துவதாகவே காணப்படுகிறது.

கொரோனா அபத்த காலத்தில் தேர்தலை நடாத்துவது கண்காணிப்ற்ற தேர்தலாகவே நடைபெற அதீத வாய்ப்புண்டு. விமான போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டு நாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வெளிநாட்டு கண்காணிப்புக்கு இலங்கையில் அறவே வாய்ப்பு இல்லாமலே போகின்றது. மேலும் உள்நாட்டு கண்காணிப்பும் கொரோனா அபத்த காலத்தில் உயிரோட்டாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படும். அதனை மையப்படுத்தியே இலங்கையின் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான பவ்ரல், சி.எம்.ஈ.வி (ஊஆநுஏ) முதலானவை இணைந்து கொரோனா அபத்த காலத்தில் தேர்தல் நடைபெறின் கண்காணிப்பினை சரியாக மேற்கொள்ள இயலாது அது சனநாயகத்தை உறுதிப்படுத்த இயலாது போய்விடுமென தேர்தலை பிற்போடுமாறு கடந்த ஜூன்-1ஆம் திகதி கூட்டு அறிக்கை விட்டிருந்தனர்.

நிதி சார்ந்தும் இலங்கையில் தேர்தல் நடாத்துவது சிரமமான விடயமாகும். கொரோனா அபத்த காலத்தில் உலகளவில் இதுவரை தென்கொரியாவில் மாத்திரமே தேர்தல் நடைபெற்றுள்ளது. எனிலும் சுகாதார பாதுகாப்பு செலவிற்காக தென்கொரியா பெருமளவு நிதியை செலவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொரோனாவை மையப்படுத்தி மார்ச்13 அன்று மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதிலேயே பாடசாலைகளுக்கான சுகாதார ஏற்பாடுகளை மேற்கொள்ள கூடிய நிதிப்பிரச்சினையே காரணங்கூறப்படுகின்றது. இந்நிலையில் சுகாதார ஏற்பாடுகளுடன் தேர்தலை நடாத்துவதற்கான நிதியை இலங்கை பெறப்போகும் வழியும் குழப்பமாகவே உள்ளது. இலங்கையை பொருளாதார நிலையினை மேலும் சிதைக்கும் நிலையையே தேர்தல் ஏற்பாடுகள் ஏற்படுத்த உள்ளது.

தேர்தல் நடாத்துவது தொடர்பில் எதிரக்கட்சிகளும், பொது அமைப்புக்களும் பலத்த எதிர்ப்பை காட்டுகின்ற போதிலும் முழுமையான சுயநலப்போக்கில் ஆளுந்தரப்பு தேர்தலை நடாத்துவதில் உறுதியாகவே உள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருந்த தேர்தல் ஆணைக்குழுவும் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஆகஸ்ட் ஃ செப்ரம்பர் மாதங்களில் தேர்தலை நடாத்துவது தொடர்பிலே ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றது. பொனப்பாட்டிச செல்நெறி அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் தேர்தல் சனநாயகமும் முற்றாக சிதைக்கப்பட்டே செல்கின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-