தமிழர் அரசியல் பரப்பில் மாற்றுத்தலைமை உருவாக்கத்திற்கான தேவைப்பாடு -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் தேர்தல் நிலவரங்கள் கடுமையாக சூடுபிடித்துள்ளது. வடக்கு – கிழக்கிலும் தேர்தல் பிரச்சாரங்கள் கொரோனா அபத்தத்தையும் தாண்டி வேகமாக நடந்து கொண்டுள்ளது. காப்பெற் தெருக்கள், மதில்களிலெல்லாம் வேட்பாளர்கள் புள்ளடிய போராட ஆரம்பித்துவிட்டார்கள். வடக்கு – கிழக்கில் மொததமாக உள்ள 29 ஆசனங்களுக்காக 1768 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர். இதில் முதன்மையான அணிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பனவே காணப்படுகிறது. தமிழ் அரசியலில் மாற்றுத்தலைமையை பற்றிய உரையாடல் இம்முறை கோலோச்சிக்காணப்படுகிறது.

2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே அரசியலில் ஏகபிரதிநிகளாய் இருந்து வந்துள்ளனர். எனிலும் இம்முறை குறித்த ஏகபிரதிநிதித்துவம் என்பது சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மாற்று அணிகள் மாற்றுத்தலைமைகளாக உருவாகக்கூடிய வல்லமைகளை பெற்று வருகின்றமை வெளிப்படையாய் தெரிகிறது. எனிலும் தொடர்ச்சியாய் தேர்தல் பிரச்சாரங்களில் மாற்றுத்தலைமை என்பது தமிழர் அரசியலின் அழிவுப்பாதை என்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறிவருகிறது. 

இதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை தமிழ் மக்கள் மாற்றுத்தலைமையை உருவாக்க வேண்டி ஏற்பட்டதன் பின்ணனியினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலிருந்தே தமிழர்கள் ஓரணிக்குள் திரளவே அரசியல் தலைமைகளால் தூண்டப்பட்டு, பழக்கப்படுத்தி வந்துள்ளார்கள். ஆரம்பத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியில் வளர்ச்சியுற்றது. 1970 காலப்பகுதிகளில் தமிழர் ஐக்கியம் என்பதை வலியுறுத்தி தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கிய அரசியல் கட்சிகள் ஒன்றினைக்கப்பட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியாய் போட்டியற்ற ஏகபிரதிநித்துவம் தொடர்ச்சியாய் பேணப்பட்டு வந்தது. இவ்ஏக பிரதிநிதித்துவத்தின் தோல்வியே தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் 1977களில் எதிர்க்கட்சி தலைமைமையை அலங்கரித்து, தமிழர்களின் உரிமைக்கோரிக்கைளில் தளர்வு நிலையில் போனமையினால் ஆயுதப்போராட்டம் வளர்ச்சியுற்றமையும், அரசியல் உறக்க நிலைக்கு போனமையும் ஆகும். 

தொடர்ச்சியான ஆயுத போராட்டத்தில் ஏகபிரதிநிதித்துவமே தவிர்க்க முடியாத அவசியமாகியது. அதனடிப்படையில் முப்பதாண்டு ஆயுதப்போராட்டத்தில் அரசியல் மௌனிக்கப்பட்டு தமிழர்களில் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையை ஆயுத போராட்ட குழுவாகிய தமிழீழ விடுதலைப்புலிகள் பெற்றிருந்தனர். இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கமும் அதனை ஏற்றிருந்தது என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும்.

அதன் தொடர்ச்சியாக 1999ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலில் முற்றாக தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இல்லாது போன சூழலில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகங்களின் முயற்சியில் 2001ஆம் மீள புத்துயிர் பெற்ற தமிழர் அரசியலில் தமிழ்க்கட்சிகள் இணைக்கப்பட்டு ஓரணியாய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உதயமாகியது. 2001ஆம் ஆண்டு தேர்தலில் 15ஆசனங்களைப்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாய் 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 22 ஆசனங்களைப்பெற்று அரசியலில் தமிழர்களின் பிரதிநிதிகளாய் நிலைப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே ஆயுதப்போராட்டம் மௌணிக்கப்பட்டதன் பிற்பட தமிழர்களின் ஏகபிரதிகளாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரிணாமம் பெற்றுள்ளது. 

2009ஆம் ஆண்டிற்கு பிற்பட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள்ளேயே பிளவுபட்டு மாற்று அணி என்ற சொல் தமிழரசியலில் Nசுபொருளாக ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 2010ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்த்தேசிய நீக்க அரசியலை செய்ய முற்படுகிறது எனக் குற்றஞ்சாட்டி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மாற்று அணியாக அடையாளப்படுத்திக்கொண்டது. எனிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினரால் மாற்று தலைமைகளாக அக்காலப்பகுதியில் உருவாக முடியவில்லை. தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையே மக்கள் ஆதரித்தனர். 2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 22 ஆசனங்களையும், 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 16 ஆசனங்களையும் பெற்றிருந்தனர். குறிப்பாக 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைமை என்ற அந்தஸ்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்ற போதிலும் அரசாங்கத்தின் இருப்பில் முழு ஆதரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பே வழங்கி வந்திருந்தது. எனிலும் தமிழர்களின் அரசியல் தீர்விலேயோ அல்லது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பிலேயோ சரியான தீர்வினைபெற்றுத்தர தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தவறி விட்டனர். 

இந்நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் மேலும் பிளவுகள் அதிகரித்தன. 2015ஆம் ஆண்டில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி இருந்தனர். தொடர்ச்சியாய் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியால் அழைத்து வரப்பட்ட நீதியரசர் விக்னேஸ்வரனும் பதவிகாலத்திலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தமிழ் மக்களுக்கு எதிரான ஆட்சியை விசனப்பட்டு கருத்து தெரிவித்து வந்த நிலையில் மாகாணசபை முடிவடைந்த பின் புதிய கட்சியை அறிவித்திருந்தார். இதனைத்தவிர வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், பொ.ஜங்கரநேசன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மற்றொரு பங்காளி கட்சியான ரெலோ வின் யாழ்ப்பாண மாவட்டக்கிளை அதன் செயலாளர் ஸ்ரீகாந்தா தலைமையில் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி இருந்தது. 

2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மாற்று அணிகளாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும், விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன், ஸ்ரீகாந்தா ஆகிய அணிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியாகவும் களமிறங்கியுள்ளனர். இதுவரை பயன்படுத்தப்பட்ட மாற்று அணிகள் என்ற சொல்லாடல் 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் பிற்பட மாற்று தலைமைகள் என்ற நிலையை அடையும் என்ற அச்சத்திலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் தொடக்கம் அடிவருடிகள் வரை மாற்று அணி பயனற்றது, மாற்று அணியால் எதனை சாதித்திட முடியுமென பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இலங்கை தேசியத்தில் சனநாயகத்தை காக்க போராடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே தமிழ்த்தேசியப்பரப்புக்குள் சர்வதிகாரத்தை நிலைநாட்ட துடிப்பது முரணான நடவடிக்கையாகவே காணப்படுகிறது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இலாபகரமாய் ஒன்றை மறைக்க முயலுகின்றனர். தாங்கள் கடந்த காலங்களில் மக்களின் நலன்சார்ந்து செயற்படாமையினாலே மாற்று அணிகள் மாற்று தலைமைகளாக உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கபட்ட பின்னரும் ஒரு தசாப்த கால ஆட்சி, ஏக பிரதிநிதித்துவம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கே வழங்கப்பட்டது. எனிலும் குறித்த காலப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்டே வந்துள்ளார்கள். இலங்கையின் பிரதான தேசிய கட்சிகளின் ஏமாற்று அரசியலை கடந்த காலங்களில் அனுபவித்த போதிலும் வரலாற்றை மறந்து தமது சுகபோக அரசியலுக்காக தமிழ் மக்கள் தேர்தல் காலப்பகுதியில் அளித்த பேரம்பேசும் வல்லமையை இதயத்திலான ஒப்பந்தமூடாக கடந்த நான்கரை ஆண்டுகளில் வீணாக்கி விட்டனர். நான்கரை வருடமும் பட்ஜெட் வாக்கெடுப்புகள் மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக பிரதமருக்கான ஆதரவை அளித்தமை என எந்த விடயத்திலும் பேரம்பேசும் வல்லமை இருந்தும் அதனை தட்டிக்கழித்து சென்றனர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வினை காண முடியாத போதிலும் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மக்களின் நாளாந்த பிரச்சினைகளான காணமாலாக்கப்பட்டோர், காணி மீட்பு போராட்டங்களுக்கு உரிய தீர்வினை பெற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட பேரம்பேசும் ஆற்றலை பயன்படுத்தி இருக்கலாம். எனிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கோடிகளில் புரளவே தமிழ் மக்கள் அளித்த பேரம்பேசும் ஆற்றலை கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மக்கள் தமது நாளாந்த பிரச்சினைகளுக்காக வீதியிலிறங்கி போராடும் போதெல்லாம் அரசியல் தலைமைகளாய் அதற்கு சரியான வழிகாட்டல்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வழங்க தவறி விட்டனர். மேய்ப்பானற்ற மந்தைகளாகவே மக்கள் செயற்பட்டு வருகின்றனர். சர்வதேச மன்றங்களில் தம்மை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக அடையாளப்படுத்தி அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், வடக்கு - கிழக்கில் வாக்களித்து தமக்கு ஏகபிரதிநிதித்துவம் அந்தஸ்து அளித்த தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாய், தமிழ் மக்களின் தலைமையாய் செயற்பட தவறி விட்டனர். அதன் பெறுபேறே புலம்பெயர் நாடுகளுக்கு அப்பால் வடக்கு - கிழக்கிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு எதிராகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுத்தர தவறினர் என்பதனையும் தாண்டி, கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எதிர்காலங்களிலும் உரிமைகளைக்கோராத வகையில் தமிழ்த்தேசியத்தை நீக்கும் செயற்பாடுகளையும் தமிழ்த்தேசிய பாசறைக்குள் இருந்தே மேற்கொண்டு வருகிறது. இலங்கை தேசிய கட்சிகளிலிருந்து வடக்கு - கிழக்கில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் செய்யும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலையே தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளும் தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்துடன் செய்கின்றனர். தமிழ்த்தேசிய நீக்க அரசியல் என்பது தமிழர்களின் உரிமைக்கோரிக்கைகளை நீர்த்து போகச்செய்யும் செயலாகும். இலங்கை தேசியத்தினுள் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்குள் வாழப்பபழக்குவதையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்ய முயலுகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மேற்குறித்த செயற்பாடுகளால் ஏற்பட்ட விரக்தியே மக்கள் மாற்று அணிகளை மாற்று தலைமைகளாய் உருவாக்கும் நிலைமைக்கு சென்றனர் என்பதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

மறுதலையாய் மாற்றுத்தலைமைகளின் உருவாக்க பிண்ணனியில், புதிதாக உருவாக்கப்படும் மாற்றுத்தலைமைகளும் படிப்பினையை பெறுதல் வேண்டும். மாற்று அணி, மாற்று தலைமை என்பது அரசியல் தமிழ் தேசிய கூட்டமைப்பை நீர்த்துப்போகச் செய்து மாற்றுவதற்கு பயன்படும் ஒரு கேடயமாக மாத்திரமாக இருக்க முடியாது. கொள்கையளவிலும் செயற்பாட்டிலும் மாற்று நடவடிக்கைகளை கொண்ட கட்டமைப்பாக காணப்பட வேண்டும். கடந்த காலங்களைப்போன்று 1970 காலப்பகுதியில் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியாகவும், 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகவும் பரிணமித்தது போன்று மோதகம் கொழுக்கட்டையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் மாற்று தலைமைகளும் காணப்படின் நாளை மாற்று தலைமைக்கும் இன்னொரு மாற்றுத்தலைமையை தேடும் படலத்தை தமிழ் மக்கள் நாடுவார்கள் என்பதை மாற்றுத்தலைமைகள் புரிந்து செயற்பட வேண்டும். 

மாற்றுத்தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைந்து விடாதபடி தமது வியூகங்களை வகுத்து, தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவம் தவறான தரப்புக்களின் கைகளுக்கு சென்று விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பையும் பெற்றுள்ளனர். மக்களை சரியாக சிந்திக்க வைக்க வேண்டிய பொறுப்பு இந்தச்சந்தர்ப்பத்தில் சமூகச் செயற்பாட்டாளர்களும், மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போருக்கும் உரியது. இல்லையேல் மீண்டும் சுயநல அரசியலே தமிழ் மக்களை ஆள நேரிடும். பழைய வேதாளமே புதிய வடிவில் முருங்கை ஏறும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-