எதிர்காலத்தை இழக்கும் 13ஆம் திருத்த சட்டம்? -ஐ.வி.மகாசேனன்-

9வது பாராளுமன்ற தேர்தலூடாக 2/3 பலத்துடன் தனிப்பெரும்பான்மை ஆட்சியமைத்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆரம்பம் முதலாகவே தேர்தல் காலங்களில் அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எனக்கூறியவற்றை முதன்மையான செயற்பாடுபாய் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதில் முதல் கட்டமாக முதலாவது பாராளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்னர் கூடப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் ராஜபக்சாக்களுக்கு பெருந்தடைகளை போட்ட ரணில் – மைத்திரி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19க்கு மறுசீர்திருத்தமான 20க்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. 


அவ்வாறே இனப்பிரச்சினை தீர்வாக 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் சிபார்சு செய்யப்பட்ட 13வது சீர்திருத்தமும் பெரும் இழுபறியாகவே உள்ளது. அதனடிப்படையில் குறித்த கட்டுரை இலங்கை இனப்பிரச்சினை தீர்வாக இந்திய அரசாங்கத்தால் சிபார்சு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட 13ஆம் திருத்த சட்டத்தின் எதிர்கால இருப்பை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

13ஆம் திருத்தச்சட்டம் என்பது முழுமையாக இந்திய அரசாங்கத்தின் இலங்கை மீதான செல்வாக்காகவே காணப்படுகிறது. எனிலும் மறுதலையாய் ஈழத்தமிழர் போராட்டாக்குழுவிற்கும் இந்திய மத்திய அரசிற்கும் இடையில் பிணக்கை உருவாக்கும் ஆயுதமாக 13ஐ பயன்படுத்தியதில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் வெற்றியும் கொண்டார். 13இன் அமுலாக்கம் இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்குக்காக உருவாக்கப்பட்ட போதிலும் இராஜதந்திரரீதியிலான வெற்றியை இலங்கை அரசாங்கமே பெற்றுள்ளது. 13ஆம் திருத்தம் செயலற்று பரிதவித்த காலங்களில் 13ஆம் திருத்தம் சார்ந்து எத்தகைய ஆரோக்கியமான முடிவுகளையும் இந்தியா எடுக்க முடியாமையே இந்தியாவின் செல்வாக்கு பலவீனமாய் போனதை தெளிவாக காட்டுகிறது.


இந்தியா, 13ஆம் திருத்த சட்டத்தை இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு முழுமையாக அமுல்படுத்துமாறு வெறும் அறிக்கையிடும் அரசியலை மேற்கொள்ளும் வல்லமையுடன் செயற்படுவதனையே கடந்த கால இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அடையாளப்படுத்தி உள்ளது. 


இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்றதும் முதலாவது வெளிநாட்டு பயணத்தை 2019, நவம்பர் இறுதியில் இந்தியாவிற்கே மேற்கொண்டிருந்தார். அங்கு இந்திய பிரதமருடன் இடம்பெற்ற உரையாடலில் இந்திய அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வாக 13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இடித்துரைத்ததாக தமிழ் மக்ககளின் மனங்குளிரும் வகையிலான   செய்திகள் தமிழ் பத்திரிகைகளில் வந்தன. எனிலும் இந்தியாவில் நின்றே 2019, நவம்பர் 30ஆம் திகதி  இந்தியாவின் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள், 13ஆம் திருத்தத்துக்கான மாற்றுவழிகளை பற்றி கலந்துரையாடவே தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அதிகார பகிர்வு தொடர்பாக கருத்துரைக்கையில், “அரசியல் பிரச்சினைகளை நாம் விவாதிக்க முடியும், ஆனால் 70ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு விஷயத்தை உறுதியளித்துள்ளனர்: அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு.  ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்ல. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.” எனத்தெரிவித்திருந்தார். ஆக அதிகார பகிர்வை நடைமுறைப்படுத்தவே முயலப்போவதில்லை என்பதையே  இந்தியாவிற்கும் துணிவாக தெளிவுபடுத்தியிருந்தார். எனிலும் இந்தியா எவ்வித எதிர்வினைகளையுமேயே வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்,   ஐக்கிய தேசியக்கட்சியின் செல்வாக்கு பெற்ற நவதாராளவாத எண்ணம் கொண்ட பொருளாதாரவாதியாக காணப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவிற்கு ஆலோசனை வழங்கும் பாற்பைன்டர் அமைப்பின் பணியாளராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் காணப்படுகின்ற மிலிந்த மொறகொட 13ஆம் திருத்த சட்டத்தின் இருப்பு தொடர்பாக கூறிய கருத்துக்களும் கவனத்திற்குரியவை. (Economics Next - 29.06.2020) 'மாகாணசபை அமைப்பு முறையானது மிதமிஞ்சியதும், அதிக செலவீனத்தை கொண்டதும், இனங்களை பிளவுபடுத்துவதுமாகவும், திறமையற்றதுமான அமைப்பாக விளங்குகிறது. இதனால் 13வது திருத்த சட்டமூலத்தை இரத்து செய்யுமாறு பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளிடம் கோரியிருப்பதுடன், அதற்கு பதிலாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்ற  செனட்சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், அது ஒரு அதிகாரமுள்ள செனட் சபையாக விளங்குவதுடன் இன, மத பிராந்திய வேறுபாட்டை தவிர்ப்பதும் ஜனநாயகத்தை பலப்படுத்தவும் உதவும்' என்கின்றார். அதுமட்டுமன்றி இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதனூடாக பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக இணக்கப்பாடு எனபவற்றை உருவாக்க முடியுமென தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தம் எதிர்காலத்தை இழக்கப்போகிறது என்ற சமிக்ஞையே மிலிந்த மொறகொடவின் கருத்தும் வலியுறுத்துகிறது. 


புதிய அரசாங்கத்தில்  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சரத் வீரேசகர  இராஜங்க அமைச்சு பதவியை உத்தியோகபூர்வமாக கடமையேற்ற நாள்முதலாகவே 13ஆம் திருத்த சட்டத்தை நீக்குவது தொடர்பாகவே முதன்மையாக கருத்துரைத்து வருகின்றார். நாட்டுக்கு எதிரான விடயங்கள்  13இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடுமையாக சாடியுள்ளார். மேலும்,  “மாகாணசபை முறைமை இந்த நாட்டிற்கு பொருத்தமில்லாத ஒரு முறைமயாகும். இந்தியாவின் ஆதிக்கத்தினால் வேண்மென்றே எமக்கு திணித்த 13ஆம் திருத்தசட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.


இன்றைய நடைமுறை சூழலில் தமிழ் அரசியல் தரப்புக்கள் 13இன் இருப்பை உறுதிப்படுத்த இந்தியாவை நாடுகின்ற போதும், தமிழ் தரப்பை கையாள்வதில் இந்தியாவும் தர்மசங்கடமான நிலையிலேயே காணப்படுகிறது. காரணம் இலங்கை அரசாங்கம் சீரான இராஜதந்திரரீதியாக இந்தியாவை கையாள முற்படுகிறது. ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த ஆட்சியில் மேற்கு மற்றும் இந்தியாவை புறந்தள்ளி சீனாவிடம் முழுமையாக சரணடைந்த விம்பத்தால் ஏற்பட்ட விளைவுகளால் அனுபத்தை பெற்றுள்ளனர். அதனை சீர்செய்யும் வகையிலான விம்ப உருவாக்கத்தையே தற்போதைய ஆட்சியில் செய்ய முனைகின்றனர். அத்துடன் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 2/3 ஆதரவு பலமும் மேற்கு மற்றும் இந்தியாவை ராஜபக்ஷா அரசாங்கத்துடன் வலிய ஒட்டிச்செல்ல வேண்டிய சூழலையே ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடே தேர்தலின் உறுதியான முடிவுகள் வரமுன்னரான மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தி மற்றும் வெற்றியை தொடர்ந்தான அமெரிக்க தூதுவர்களின் சந்திப்பு என்பன வெளிப்படுத்தி நிற்கிறது.


2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வெளிவிவகாரங்களுக்கான செயலாளராக விஜயம் செய்திருந்த இந்தியாவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக்கூட்டைமப்பினைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் போது, சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாதுள்ளது. ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமைமயாக அமுலாக்குவது தொடர்பில் இந்தியா ஏன் அழுத்தங்கைள பிரேயாக்காதிருக்கின்றது என்று கேள்வி எழுப்பியிருந்ததாக கூறினார். அதற்கு பதிலளித்திருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர், போர் நிறைவு உட்பட பல விடயங்கள் நிகழ்ந்து விட்டன. ஆகேவ உடனடியாக நடைமுறைச் சாத்தியமான விஷயங்களை முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக வடக்கு - கிழக்கு இணைப்பினை கைவிடுமாறு கூறவில்லை. அதே பேச்சுவார்த்தை மேசையில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்குறிப்பிட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல் வெளியிட்டிருந்தார். இந்நகர்வானது உண்மையில் இந்திய அரசு தன்சார்பான இலங்கை அரசாங்கத்தின் நலன்கொண்டு தமிழ்த்ததரப்பை இலங்கை அரசாங்கம் சார்பாக கையாண்டு சென்றுள்ளார்கள் என்பதே குறிப்பிடத்தக்கதது. ஆயினும் இன்று இந்தியா சார்பானதாய் இலங்கை அரசாங்கம் இல்லாத சூழலில் மீள இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழர்களை இந்தியா கையாள முற்படலாம். தங்கள் நலன்களை மாத்திரம் முன்னிலைப்படுத்தி சர்வதேசத்தால் கையளப்படும் பொம்மையாக தமிழர்களை தமிழ்ப்பிரதிநிதிகள் நகர்த்தாது ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான இராஜதந்திர நகர்வுக்கான கலந்துரையாடலை தமிழ் தலைமைகள் திறந்துவிட வேண்டும்.


இலங்கை அரசாங்கம் வெளியிடும் கருத்துகள் மற்றும் இலங்கை தொடர்பான சர்வதேச நிலைப்பாடுகளும் 13இன் எதிர்காலம் இன்மையையே தெளிவாக உணர்த்தி நிற்கிறது. இது தமிழ்த்தலைமைகள் தங்கள் இராஜதந்திர நகர்வுகளை சரியாக வகுக்க வேண்டிய நேரமாகும். இதுவரை காலமும் பூகோள அரசியலில் சர்வதேசம் கையாளும் ஓர் பொம்மையாகவே தமிழ்த்தலைமைகள் செயற்பட்டு வந்தனர். இருந்த சிறுவாய்ப்புகள் நழுவிச்செல்லும் இச்சந்தர்ப்பத்திலாவது சமயோசிதமாக சிந்தித்து பூகோள அரசியலில் ஈழத்தமிழர்களின் இருப்பின் முக்கியத்துவத்தை தெளிவாக அறிந்து சமூக பேரியக்கத்தை உருவாக்கி தமிழர்கள் சர்வதேசத்தை கையாளும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-