கன்னி உரையில், தமிழ்மக்களது ஆணையை முன்னிறுத்தியோர்; இணைந்து மக்கள் ஆணையை வெல்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் இமாலய வெற்றியோடு, கடந்த 6ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் நேரடிதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 பேரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர். மேலதிகமான 29 தேசியப்பட்டியலில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலா ஒரு ஆசனங்களை தவிர, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட 223ஆசனங்களுடன் 9வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு உத்தியோகபூர்வமாக கடந்த ஆகஸ்ட்-20அன்று இடம்பெற்றது. அதனடிப்படையில் தமிழ் அரசியல் தலைமைகளின் கன்னி உரைகளையும் அதுசார்ந்த தமிழர்களின் எதிர்கால எதிர்பார்ப்பை தேடுவதாக இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்றம் மற்றும் ஈழத்தமிழரின் அரசியல்தீர்வு என்பது வரலாற்றில் முரணான தொடர்புகளையே பேணி வந்துள்ளது. இம்முறை பாராளுமன்றமும் அதற்கு விதிவிலக்கானதல்ல என்பதையே கன்னி அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா ஆற்றிய சிம்மாசன உரை தெளிவுபடுத்துகிறது. பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, 'பௌத்த மதத்தை பேணிப் பாதுகாப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்துள்ளேன்' என .சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்த ஐனாதிபதிபதி அவர்கள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக எதனையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை பாராளுமன்றினூடாக தமிழர்களிற்கான அரசியல்தீர்வு கிடைக்கப்பெறும் என்பது தொடர்பாக ஈழத்தமிழரும் நம்பிக்கையற்றவர்களாகவே பாராளுமன்ற தேர்தலில் தமது வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். தமிழர்கள் தமது விருப்புக்களும் உரிமைசார் கோரிக்கைகளும் இலங்கை பாராளுமன்றில் ஒலிக்கட்டும் என்ற ஒரு விருப்புடனேயே சிதறிய வாக்குளால் பிரதிநிதிகளையும் கட்சிகள் சிதறி தெரிவு செய்துள்ளனர்.
தமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றை எவ்வகையில் கையாள்கின்றனர் என்பது தொடர்பில் மு.திருச்செல்வம் அவர்கள் 70களிலேயே தெளிவாக விளக்கியுள்ளார், முற்றவெளியில் அரசியலமைப்பை எரித்தது பற்றியும், தந்தை செல்வா பதவியைத் துறந்து மீண்டும் போட்டியிட்டுத் தமிழ் மக்கள் அரசியலமைப்பை ஏற்கவில்லை என்று நிறுவியதையும் எடுத்து வைத்து வாதாடிய ஒரு பதிவில், 'தமிழரசுக்கட்சியினர் ஒப்புக்காக உறுதியுரை கூறிக்கையெழுத்திட்டார்கள். தேசிய அரசுப்பேரவையைத் தமது அரசியல் மேடையாகப்பயன்படுத்தும் நோக்குடன் கையெழுத்திட்டார்கள். அவ்வளவுதான்.' எனக்குறிப்பிட்டுள்ளார். இதுவே இன்றும் யதார்த்தமான உண்மை. ஆயினும் இவ்யதார்த்தத்தை புரிந்துகொள்ளாது உறுதிமொழி தொடர்பிலேயே பல விமர்சனப்போக்குடன் உலாவுவது தமிழினத்தின் துயரேயாகும்.
இலங்கைப்பாராளுமன்றம் என்பது தமிழரசியலை பொறுத்தவரை ஒரு அரசியல் மேடை என்பதே உண்மையாகும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களின் அரசியல் உரிமைகளின் தேவைப்பாடு தொடர்பிலே ஓங்கி ஒலிக்க செய்வதே ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் உயர்ந்தபட்ச பராளுமன்ற அரசியலாகும். அதனை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், முன்னாள் வடக்கு மாகாணசபை முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இலங்கையின் 9வது பாராளுமன்றின் கன்னி அமர்வின் முதல் உரையில் செவ்வன செய்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.
ஒரு நீதியரசர் தன்னுடைய பணிக்காலத்திற்குப்பின், மிகவும் துடிப்புமிக்க ஒரு தேசிய விடுதலைப்போராட்டத்தில் தம்மை முன்னரங்கில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பது ஆசியாவில் இதுவே முதல் முறை என தமிழ்நாடு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழ் மக்களும் அவ்உயர் எண்ணத்திலேயே தம் அரசியல் பிரதிநிதியாய் அவரை தெரிவுசெய்துள்ளனர். அந்தவகையில் ஈழத்தமிழர் அரசியல் உரிமை கோரிக்கைகளை நீதியரசர் என்ற தளத்தில் முன்னைய தமிழரசியல்வாதிகளை விட வேறுபட்ட கோணத்தில் கொண்டு நகர்த்த வேண்டிய பொறுப்பு விக்னேஸ்வரன் அவர்களிடம் குவிகிறது.
அதனடிப்படையில் பாராட்டத்தக்க நகர்வாகவே கன்னி அமர்வில் விக்னேஸ்வரன் அவர்களின் முதல் உரை காணப்படுகிறது. குறிப்பாக ஆரம்பத்திலேயே, 'உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியிலும் ஆரம்பித்து பின்னர் எல்லா மக்களையும் இணைக்கும் மொழியிலும் எனது வாழ்த்தினை கூறுகின்றேன்.' எனக்கூறி சிங்கள பெருந்தேசியவாதம் அண்மைக்காலமாக தொல்லியல்ரீதியாக சிங்களமே இலங்கையின் ஆதிக்குடிஃ பூர்வீகக்குடி எனக்கூறி வரும் கருத்திற்கான தனது எதிர்ப்பை அறிவுபூர்வமாக காட்டியிருந்தார்.
மேலும், தனது முதல் உரையிலேயே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றி அழுத்தம் திருத்தமாக விக்னேஸ்வரன் அவர்கள் வலியுறுத்தினார். 'குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்' என்றும் கூறினார்.
அத்துடன், சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் நீதியரசர் தனது உரையில் திட்டவட்டமாக குறிப்பிட்டார். 'பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. ஏனென்றால், சிங்கள கிராமத்தவர்கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு தெரியும். அதாவது, (கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது.' என்று கூறினார்.
மும்மொழி ஆளுமையுடன் தமிழர்களிற்கான ஆளுமையாக பாராளுமன்றில் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முதல் உரையாற்றியிருந்தார் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தமாகும். ஆயினும் மாகாணசபை காலப்பகுதி நிர்வாக குறைபாடுசார்ந்த விமர்சனங்களையும் ஆழமாக பகுப்பாய்வு செய்வாராகிலேயே பாராளுமன்ற ஐந்தாண்டு நிர்வாகத்தை வினைத்திறனுடன் செயலாற்றவும் முடியும். தமிழர்களின் எதிர்பார்க்கைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
தமிழர்களின் மாற்று தலைமையாக தம்மை அடையாளப்படுத்திய மற்றொரு அணியான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் 9வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் முதல் உரையில் வாக்களித்த மக்களுக்கு கொள்கை சார்ந்து சரியான மாற்று என்பதை அடையாளப்படுத்தியுள்ளார். குறிப்பாக மக்கள் ஆணையை முக்கியத்துவப்படுத்தி உரையாற்றியுள்ளார். கடந்த காலங்களில் தமிழரசியல் பிரதிநிகளின் தவறாக மக்களது ஆணையை மறந்து அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்தமையே காணப்படுகிறது. அதிலிருந்து மாற்று மாறுபட்டு மக்ககள் ஆணையை ஆழமாக முன்னிறுத்தி செயற்படுகின்றனர்.
'முன்னெப்போதும் இல்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட பாராளுமன்றாக இந்த 9வது பாராளுமன்றம் விளங்குகிறது. இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட பாராளுமன்றில் மறுபக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் எமக்கு மக்கள் அளித்துள்ள ஜனநாயக ஆணைக்குரிய மதிப்பையும் கௌரவத்தையும் கொடுத்து எமது மக்களின் ஜனநாயக ஆணை தொடர்பிலான நேர்மையான கலந்துரையாடல்களுக்கும் இடம் வழங்குகின்ற ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் உங்களை கேட்டுக்கொள்கிறேன்' என முதல் உரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் ஆணையை வலியுறுத்தினார்.
எனிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நுணுக்கமாக அரசியலை கையாள முயல வேண்டும். பாராளுமன்றில்மும்மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும் வசதிகள் உண்டு. இலங்கையில் பல இடங்களிலும் திட்டமிட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழலில் பாராளுமன்றிலாவது அவ்எதிர்ப்பை காட்டி தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தமிழிலும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க முயலல் வேண்டும். அதுவுமோர் நுணுக்கமான அடையாள அறிவுசார் அரசியலேயாகும்.
இதைத்தாண்டி தேசியப்பட்டியல் சிக்கல்பட்டு பிரதிநிதித்துவம் இழக்கப்பட்ட இடத்துக்காக வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தில் பாராளுமன்றம் சென்ற பிரதிநிதி ஒருவர் கன்னி அமர்விலேயே அயர்ந்து தூங்கிய துயரும் தமிழரின் சாபக்கேடாகவே அமைகிறது.
ஈழத்தமிழர்கள் மாற்றாக தெரிவு செய்து அனுப்பியுள்ள தலைமைகள் கொள்கைவழி ஆழமான நேரிய மக்கள் நலன்சார்ந்தே ஆரம்ப உரையினை நிகழ்த்தியுள்ளமை பாராட்டுக்குரியதாகும். எதிர்வரும் ஐந்தாண்டுகளுமே இவ்சிந்தனையில் மாற்றறங்கள் ஏற்படாதும் இருக்க வேண்டும். மேலும் குறிப்பாக தமிழர் நலனில், தமிழ் மக்கள் ஆணையை செயற்படுத்தும் சிந்தனையில் ஒற்றுமைப்படும் தலைமைகள் செயற்பாட்டிலும் ஒற்றுமைப்படுவார்களாயின் தமிழர்கள் நீண்ட காலத்திற்கு பின் சரியானதொரு அரசியல் பாதையில் பயணிக்க வாய்ப்புண்டு. நான், நீ முன்செல்வது என்பதற்கு அப்பால் தமிழர் நலன்சார்ந்து நாமாக முன்செல்ல மாற்று தலைமைகள் முன்வரவேண்டும்.
Comments
Post a Comment