நஜீப் மற்றும் அவரது ஊழல் கூட்டாளிகளை மலேசிய அரசு பாதுகாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
2020ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து கொரோனா தாக்குதலும் அதனை மீறிய அரசியல் பிணக்குகளும் மலேசியாவை சர்வதேச செய்திகளில் முதன்மைக்கு கொண்டு சென்றுள்ளது. 2020 மார்ச் மாத காலப்பகுதியில் ஆளும் கூட்டணியில் மறுசீரமைப்பு மற்றும் அரசாங்கத்தின் மாற்றம்; என்று தொடர்ச்சியான செய்திகளில் மலேசியாவின் அரசியல் இழுபறிக்குள் சிக்கி திணறியது. பின்னர் கொரோனாவின் வீரியம் மலேசிய அரசியல் சர்ச்சைகளை மறைத்து பூதாகார செய்தியாக உலாவியது. இன்று '1எம்டிபி' ஊழல் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, மீண்டும் மலேசியாவின் மீது சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனடிப்படையில், மலேசிய ஊழல் வழக்கு விவகாரத்தை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் (28 ஜூலை 2020) மலேசிய நீதிமன்றம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் 2009இல் ஆரம்பித்த '1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாத்' ('1எம்டிபி' ) எனும் அரசு நிறுவனத்தில் ஊழல் செய்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதல் தலைவர் இவர்தான். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேலும் பண மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியதற்கான 6 வழக்குகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் 60 கூடுதல் ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன. நஜிப் ரசாக் தரப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருப்பதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
மலேசிய அரசியலில் அசைக்க முடியாத, செல்வாக்கு மிகுந்த தலைவராக நஜிப் ரசாக் காணப்பட்டார். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான அப்துல் ரஸாக் ஹூசைனின் மூத்த மகனான இவர், இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார். மலேசியாவில் 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த 'அம்னோ' கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் இவருக்குக் கிடைத்தன. பல துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 2004இல் துணைப் பிரதமராகவும் இருந்துள்ளார். 2008இல் நிதியமைச்சராக நஜிப் ரசாக் பொறுப்பேற்ற சமயத்தில், கடுமையான பொருளாதார மந்தநிலையை மலேசியா எதிர்கொண்டது. அப்போது இவர் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் நல்ல பலன் தந்தன. அதேசமயம், அம்னோ கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசின் பிற செயல்பாடுகளால், மக்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், 2008 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான இடங்களில் வென்றிருந்தன. இதையடுத்து நெருக்கடிக்குள்ளான அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமது பதாவி, நஜீபை அடுத்த பிரதமராக்க விரும்பினார். தனது தனிப்பட்ட செல்வாக்கால் போட்டியின்றி அந்தப் பதவிக்குத் தேர்வானார் நஜிப் ரசாக். 2009 ஏப்ரல் 3இல் பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
நஜீப் மலேசியப் பிரதமரானபோது, இனக்குழுக்களுக்கு இடையிலான பதற்றத்தைத் தணித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் சீர்திருத்தவாதியாக இருப்பார் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில் இவரது செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கவே செய்தன. எதிர்க்கட்சிகள் நடத்திவந்த இரண்டு நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவித்தார். பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் கொண்டுவந்தார்.
இவரது பதவியேற்பின் ஆரம்பத்தில் இவரது வெளியகத்தொடர்பானது, 'பல தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போலவே' என்று ஆராய்ச்சியாளர் ஆரோன் கான்னெல்லி எழுதினார். அதாவது இது நீண்டகாலமாக வாஷிங்டனுக்கும், குறைந்த முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணுகின்ற ஒரு கவனமான போக்கையும், அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான பெய்ஜிங்கையும் பட்டியலிட்டுள்ளது. எனிலும் நஜிப் தனது அமெரிக்க சகாக்களுடன் நெருக்கமான தனிப்பட்ட உறவை உருவாக்க கடுமையாக உழைத்தார். தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒபாமா, ட்ரம்ப் இருவரின் அபிமானத்தையும் நட்பையும் பெற்றவர் நஜீப். 'எனது விருப்பத்துக்குரிய பிரதமர் நஜீப்' என்று ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.
நஜீப் ஆட்சிக்காலத்தின்போதுதான், '1எம்டிபி' தொடங்கப்பட்டது. அதன் ஆலோசனைக் குழுவின் தலைவராக நஜீப்தான் இருந்தார். ஆரம்பத்திலேயே அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை தொடர்பாகக் கேள்விகள் எழுந்தன. அந்த நிறுவனத்துக்கு வணிக முகவரியும், கணக்காய்வாளரும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். வழக்கம்போல, வெளிநாட்டினருடன் இணைந்து நடக்கும் உள்நாட்டு சதி என்றெல்லாம் தற்காப்புத் தாக்குதல்களை நஜீப் அரசு நடத்தியது. நஜீப் தலைமையிலான அரசின் ஊழல்கள் குறித்துப் பேசிய பலர் கைது செய்யப்பட்டார்கள். பாலியல் குற்றச்சாட்டில் அன்வர் இப்ராஹிம் சிறையிலடைக்கப்பட்டதும் நஜீபின் ஆட்சிக்காலத்தில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'1எம்டிபி' ஊழல் தொடர்பான முக்கியத் தகவல்களை வெளியிட்டவர் லண்டனைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரான கிளேர் ரிகாஸ்ட்ல் பிரவுன். கொஞ்சம்கூட எதிலும் சமரசம் செய்துகொள்ளாத துணிச்சலுக்குப் பெயர் போன இவர், 'சரவாக் ரிப்போர்ட்' (Sarawak Report) எனும் இணைய இதழ் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2015இல் '1எம்டிபி' ஊழல் தொடர்பாக, கிளேர் வெளியிட்ட தகவல்கள், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியாகியது. இதையடுத்து மலேசியாவில் அவரது இணைய இதழ் முடக்கப்பட்டது. அவருக்குக் கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. அரசு ஒரு பக்கம் இது தொடர்பாக விசாரணை நடத்தினாலும், நஜீபைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
2016 ஜனவரியில், நஜீப் ரஸாக் எவ்விதத்திலும் சட்டத்தை மீறியதற்கான ஆதாரம் இல்லை என அது பற்றி விசாரித்த நாட்டின் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார். 2013ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நஜீப் ரசாக் கணக்கில் கிட்டத்தட்ட எழுநூறு மில்லியன் டாலர்கள் பணம் விழுந்திருந்தது. அது சௌதி மன்னர் குடும்பம் கொடுத்த நன்கொடை என விசாரணை முடிவு தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற அரசியல் அழுத்தங்களை உருவாக்கியிருந்தது. இதையடுத்து மீண்டும் விசாரணை தீவிரமடைந்தது.
2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்னோ கட்சியின் தோல்வியில் நஜிப்-இன் ஊழல் கடுமையான தாக்கத்தை செலுத்தியிருந்தது. 'அடிமட்டத்தில் அன்றாட திறமையின்மை மற்றும் ஒட்டுதல்' இவை அனைத்தும் தேர்தலில் நஜிப்பையும் அவரது கட்சியையும் காயப்படுத்தின என்று பத்திரிகையாளர் பெட்ஸி ஜோல்ஸ் எழுதினார். பிரதமர் நஜிப்-இன் தோல்வி என்பது, 60 ஆண்டுகளில் நாட்டின் முதன் முறையாக ஆட்சியில் கட்சி மாற்றம் ஏற்பட்டது. ஓய்விலிருந்த நஜிப் ரசாக்கின் முன்னோடி 92 வயதான முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹமட், நஜிப் ரசாக்கிற்கு எதிரான எதிர்ப்பை வழிநடத்த ஓய்வுபெற்றதிலிருந்து வெளியே வந்தார். 2018இல் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விசாரணையை இறுக்கப்படுத்தினார்.
2020 மார்ச் ஆட்சி குழப்பத்தில் மகாதீர் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற அம்னா-வின் பங்காளிக்கட்சிகளின் ஆட்சியிலேயே அம்னாவின் முன்னணி தலைவர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக கிடைக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு அரசியல் ஆய்வாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாகக்கருத்து தெரிவித்திருக்கும் நஜிப்-இன் ஊழலை பகிரங்கப்படுத்திய க்ளேர், 'இந்தத் தீர்ப்பால் எனக்கு மகிழ்ச்சியோ வருத்தமோ இல்லை' என்று கூறியிருக்கிறார். இது நஜீபைப் பெரிய அளவில் பாதிக்காது என்று அவர் கருதுகிறார். இதுதான் நஜீப் சம்பந்தப்பட்ட முதல் விசாரணை. இன்னும் 4 விசாரணைகள் மிச்சமிருக்கின்றன. எனினும், இவற்றால் இவருக்குப் பெரிய அளவில் பாதகம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. தற்போதைய பிரதமர் முஹ்யிதின் யாசின் தலைமையிலான அரசுக்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கிறார்கள். எனவே, அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது மலேசியாவில் வழக்கமான அரசியல் போல நஜிப் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பாதுகாக்க அம்னோ முடிவு செய்கிறதா? அல்லது நீதிமன்றங்களை நீதிக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடர அனுமதிக்கிறதா? என்பதும் அந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் காலமே பதில் சொல்லும். இந்தத் தீர்ப்பு தொடர்பாக 'தி கார்டியன்' இதழ் எழுதியுள்ள தலையங்கமான, 'அரசியல் தலைவர்கள், அரசின் பொக்கிஷங்களைத் தங்கள் தனிப்பட்ட உண்டியலாகச் சேமிக்கக்கூடாது யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல' என்பதே நிதர்சனமாகும்.
Comments
Post a Comment