'ஸ்பூட்னிக் V' இன்னொரு பனிப்போருக்கான ஆரம்ப குறிகாட்டியா? -ஐ.வி.மகாசேனன்-


2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல் முதலில் அறிமுகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 2.16 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 7.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 11, செவ்வாயன்று, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'ஸ்பூட்னிக் வி' என்ற பெயரில் உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். புடினின் அறிவிப்பு, பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி நிபுணர்களிடமிருந்து பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. அதனடிப்படையில் ரஷ்சியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியும் அதனுடன் முட்டிமோதும் அரசியலை தேடுவதாகவும் குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகளவில் பரவ தொடங்கிய நாள்முதலாய் கொரோனா அரசியல் சர்வதேச அரசியலில் பிரதான புள்ளியாக காணப்படுகிறது. சீனா எதிர் அமெரிக்கா என்ற புதிய உலக ஒழுங்கிற்குள் உலகை மாற்றுமோர் போக்கை கொரோனா அரசியல் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கொரோனாவின் பாதிப்பு என்பது முழு உலகையும் பாதிக்க தொடங்குகையில், கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நாடே உலக ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய நிலை பெறும் என்ற பார்வை சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே ஏற்பட்டிருந்தது. உலக ஆதிக்கத்திற்குரிய நிலை பெறவும், பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தியும் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ஆர்வமாக செயற்பட்டிருந்தனர். அச்சூழலில் உலகின் முன்னிலை செல்வந்தரான மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்காக அதிகளவு நிதியையும் வழங்கியிருந்தார். அதனை மையப்படுத்தி பில்கேட்ஸ் அவர்கள் மீதும் பல சதிக்கோட்பாடுகள் சர்வதேச அரசியலில் உலா வரத்தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய போட்டிகள் நிறைந்த சூழலிலேயே கடந்த ஆகஸ்ட் 11 அன்று ரஷ்சிய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள், உலகத்தில் முதலாவதாக மாஸ்கோவை தளமாகக் கொண்ட தொற்றுநோய்களுக்கும் மற்றும் நுண் உயிரியலுக்குமான புயஅயடநலயஅமைப்பினால் உருவாக்கிய தடுப்பூசியை தனது அரசாங்கம் பதிவுசெய்ததை அறிவித்தார். புடின் தனது மகள்களில் ஒருவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி, 'இது மிகவும் திறம்பட செயல்படுகிறது, வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன், தேவையான அனைத்து சோதனைகளையும் அது கடந்துவிட்டது' என்று அதிகாரிகளின் வீடியோ சேகரிப்பில் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்குள் முதல் தடுப்பூசியை நாடு வெளியிடத் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறினார்.
சர்வதேச விஞ்ஞான சமூகத்தின் இடஒதுக்கீடு எவ்வளவு ஆழமாக இருந்தாலும், சில நெருங்கிய அமெரிக்க கூட்டாளிகள் கூட ஆர்வத்தை அடையாளம் காட்டினர். இஸ்ரேலின் சுகாதார மந்திரி ரஷ்ய குடியேற்ற யூலி எடெல்ஸ்டீன் செவ்வாயன்று மாஸ்கோவுடன் அதன் தடுப்பூசி குறித்து ஆரம்ப விவாதங்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார். புடினின் அச்சுப்பொறியில் வலுவான தலைவரான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே, தனது நாட்டை மருத்துவ பரிசோதனைகளுக்கான இடமாக வழங்கியது மட்டுமல்லாமல், தன்னையே பங்கேற்க முன்வந்தார்.

மாஸ்கோவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி, அதன் விநியோகஸ்தரான ரஷ்ய வணிக நிறுவனமான சிஸ்டெமா கருத்துப்படி, ஆண்டு இறுதிக்குள் வெகுஜன உற்பத்தியில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது வேறு எந்த சர்வதேச விஞ்ஞான அல்லது மருத்துவ அமைப்புகளுக்கும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த எந்த தகவலையும் வழங்க ரஷ்சிய அரசாங்கம் தவறிவிட்டது என்ற விமர்சனமும், தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறான முறையில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை உள்ளடக்கிய மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு முன்பே, ரஷ்சிய அரசாங்கம் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற விமர்சனமும் அதிகமாக மேலெழுகிறது. மனித சோதனைகளின் மூன்றாம் கட்டம், ஒரு தடுப்பு மருந்து பாதுகாப்பானதும் செயற்திறன் மிக்கதும் என்பதை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. WHO புதன்கிழமை மருத்துவ பரிசோதனைகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளது.

டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் தொற்று நோய்களில் இணை பேராசிரியரான எஸ்கில்ட் பீட்டர்சன், 'அது சரியாக இருக்கலாம் - அவர்கள் பயன்படுத்தும் கட்டுமானம் மிகவும் பிரபலமானது' என ரஷ்சிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு ஆதரவான கருத்தை கூறிய போதிலும், 'ஆனால் அவர்கள் சோதனைகளைத் தவிர்த்துவிட்டார்கள். எனவே எங்களுக்குத் தெரியாது.' என்ற முரணான கருத்தையும் முன்வைத்துள்ளார்.
'இந்த வைரஸின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு பதில் குறித்து கூறப்படும் கூற்றுக்கள் உண்மையா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது' என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவரான பீட்டர் ட்ரோபாக் அல் ஜசீராவிடம் தெரிவித்தார். 'புவிசார் அரசியல் வெற்றியைக் கோருவது என்பது பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மூலைகளையும் குறைக்க மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும், அது அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்' என்றும் அவர் கூறினார்.

வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய அரசியல் மற்றும் உலகளாவிய பொது சுகாதாரத்தை கற்பிக்கும் ட்விக், 'இது புடினின் ஒரு பெரிய சூதாட்டத்தையும்' குறிக்கிறது எனக்கூறியுள்ளார். அத்துடன் மேற்குசார் ஊடகங்களும் ரஷ்சியாவின் கொரோனா தொற்றுநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றன. புடின் தனது உள்நாட்டு அரசியல் செல்வத்தை உயர்த்துவதற்கான ஒரு தெளிவான நடவடிக்கை என்றும், அதே நேரத்தில் ரஷ்யாவின் உலகளாவிய கௌரவத்தை எரிக்கின்ற செயலெனவும் கடுமையாக சாடிவருகின்றனர்.
ஒரு தடுப்பூசி தயாரிப்பதற்கான புட்டினின் அவசரத்தின் பின்னால் பூகோள அரசியல், வணிக மற்றும் உள்நாட்டு அரசியல் நோக்கங்கள் உள்ளன. தடுப்பூசி இலாபங்களுக்கான சர்வதேச போட்டியாளர்களிடமிருந்து தன்னகப்படுத்திக்கொள்வதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும். முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து தன்னகப்படுத்திக் கொள்வதற்கானதாகும். என ரஷ்யாவின் தடுப்பூசி திட்டத்தை இழிவுபடுத்துவதற்காக வாஷிங்டன் புனைகதை பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்னரே, அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் கனேடிய புலனாய்வு அமைப்புகளின் கூட்டு அறிக்கையின் அடிப்படையில் ஒரு தொடர் போலியான கட்டுரைகளை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டது. இதில் மாஸ்கோ, அமெரிக்க தடுப்பூசி ஆராய்ச்சியை களவாடுவதாக முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ரஷ்யா ஹேக்கர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவில் ஆராய்ச்சி தளங்களை மீற முயன்றனர் என்ற குற்றச்சாட்டை மாஸ்கோவும் கடுமையாக மறுத்திருந்தது.

உலக அழிவுகளின் மத்தியிலும் அரச தலைவர்களின் வல்லாதிக்க போட்டி மனப்பாங்கே ரஷ்சியாவின் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு எதிரான விமர்சனத்துக்கு பிரதான காரணமாகிறது. ரஷ்சியாவும் சர்வதேச அரசியல் வல்லாதிக்க போட்டியை, தனது கண்டுபிடிப்பான தடுப்பு மருந்தின் பெயரிடலேயே ஆழமாக கோடிட்டு காட்டியுள்ளது. கொரோனா பரவுகை ஆரம்ப கால ஏகாதிபத்திய போட்டியில் அமெரிக்க – சீனா என்பதே முதன்மையை பெற்றிருந்தன. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான பனிப்போர் கால சூழலில் வல்லாதிக்க போட்டியில் முதன்மையிலிருந்த ரஷ்சிய அவ்வரிசையில் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையிலேயே ரஷ்சியா இன்றும் வல்லாதிக்க போட்டியில் தானுமோர் முதன்மையான பங்காளி என்பதை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துக்கு 'ஸ்பூட்னிக் வி' எனப்பெயரிட்டுள்ளது.

உலகெங்கிலும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த வைரஸிற்கான முதல் தடுப்பூசியை உருவாக்குவதற்கான தீவிரமான சர்வதேச போட்டியின் பின்னணியில், 'ஸ்பூட்னிக் வி' எனும் பெயர் தனியொரு அரசியல் வரலாற்றை மீள்நினைவூட்டுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான அமெரிக்காவிற்கும்;, சோவியத் யூனியனிற்குமிடையிலான பனிப்போரின் ஆரம்பமும் 'ஸ்பூட்னிக்' என்ற பெயரில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பட்ட செயற்கைக்கோளிலிருந்தே ஆரம்பமாகியது. சோவியத் செயற்கைக்கோள் 1957ஆம் ஆண்டு மேற்கு நாடுகளை வியப்பில் ஆழ்த்தியதோடு, சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் 'விண்வெளி பந்தயத்தை' தூண்டியது 1969ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிலவு தரையிறக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைந்த முயற்சியை மேம்படுத்தியது. கொரோனா வைரஸ் வருகைக்கு பின்னர் மீள பனிப்போர் பற்றிய உரையாடல் மேலெழுகையில், ரஷ்சியா பனிப்போருக்கு தூண்டிய ஸ்பூட்னிக் பெயரிலேயே மீள தடுப்பு மருந்துக்கு பெயரிட்டுள்ளமை, இம்முறை பனிப்போர் 'உயிரியல் தடுப்புமருந்து பந்தயத்தால்' உருவாக்கப்படும் என்ற சமிக்ஞை வழங்கப்படுகின்றதா? என்ற தேடலை ஆய்வாளர்களிடையே உருவாக்கியுள்ளது. இப்போட்டியிலேயே அமெரிக்காவும் அமெரிக்காசார் மேற்குலகும் முதன்மையான ரஷ்சியாவின் தடுப்புமருந்து தொடர்பிலே விமர்சனங்களை விளாசுகின்றன.

ரஷ்சிய கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்குமாயின், ஒற்றைமைய அரசியலில் அமெரிக்கா உலகிற்கு காட்டி வந்த இரட்சகன் என்ற தோற்றம் தகர்க்கப்பட்டுவிடும் என்பதுவும் அமெரிக்கா ரஷ்சியாவின் தடுப்புமருந்து தொடர்பின் அதிகளவிலான எதிர்ப்பை முன்வைக்க காரணமாகிறது.  வாஷிங்டனில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் உலகளாவிய சுகாதார கொள்கை மையத்தின் மூத்த உறுப்பினரான ஜூடி ட்விக் ரஷ்சியாவின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தொடர்பாக கூறியுள்ள, 'புடின் ரஷ்யாவை ஒரு இரட்சகராக நிலைநிறுத்த இது ஒரு வாய்ப்பு' எனும் கருத்தும் அமெரிக்காவின் எதிர்ப்புக்கான காரணத்தையே தெளிவுபடுத்துகின்றது.

இம்மோதுகை நிலையானது, தேசிய அடித்தளத்திலான போட்டிக் குழுக்களின் நிதிய மற்றும் பூகோள அரசியல் நலன்களுக்கு மருத்துவ விஞ்ஞானத்தையும் மற்றும் தொழில்நுட்பத்தினையும் விபரீதமான மற்றும் அழிவுகரமாக அடிபணியச்செய்தலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வல்லாதிக்க நலனுக்காக ஒரு தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்த, மோதுவது, ஒரு சர்வதேசரீதியிலான மக்கள் சுகாதார பேரழிவின் மத்தியில் ஒரு உயிர்காக்கும் மருந்தின் பகுத்தறிவான மற்றும் திறமையான அபிவிருத்திக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது.
எனவே ரஷ்சியாவின் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பும் அதற்கான  பெயரிடலும் அதனை மையப்படுத்தி அமெரிக்கா மற்றும் மேற்குலகு ஊடகங்கள் தொடுக்கும் அழுத்தம் என்பன 'உயிரியல் தடுப்புமருந்து பந்தயத்தால்' மூளவுள்ள பனிப்போரையே கோடிட்டு காட்டுகின்றது. அதற்கான சரியான உறுதியான தலைமையை ரஷ்சிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் வழங்கியுள்ளது. அமெரிக்காவும் சரியான உறுதியான தலைமையை வழங்குமா? என்பதை நவம்பர்-3 அமெரிக்க மக்கள் ஒரு விரல் புரட்சி மூலமே தெரிவிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-