சிதைவடைந்துள்ள தமிழ் தேசியம் -ஐ.வி.மகாசேனன்-
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில், இலங்கை மக்கள் 70 வீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்து, தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள். வடக்கு, கிழக்கிலும் கணிசமான அளவில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையில் வாக்களிப்பு சிங்கள – பௌத்த பேரினவாத அலைக்குள் சிறிலங்கா nபொதுஜன பெரமுனா வசம் குவிந்துள்ளது. மாறாக வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு சிதறிப்போயுள்ளது. தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் சிதறிப்போயுள்ளது. இது தமிழ் சமூகத்தின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் பலவீனமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இக்கட்டுரையானது தேர்தலுக்குப் பின்னரான தமிழ் சமூகத்தின் நிலைப்பாட்டை ஆராய்வதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் தெரிவுசார் சிந்தனை இல்லாத போதும், சிறிலங்கா பொதுஜன பெரமுன அணியை நிராகரித்து தங்கள் நிராகரிப்பை சரியாக அடையாளங்காட்டி தமிழ் தேசியம் மீதான பற்றுதலை உறுதிப்படுத்தி இருந்தார்கள். ஆயினும் குறுகிய கால இடைவெளியில் 10 மாதங்களின் பின்னர் நடைபெற்றுள்ள பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் பெரும் குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதாவது நிராகரிக்கப்படவேண்டியவர்கள் தொடர்பிலும், தமது சரியான பிரதிநிதிகளை அடையாளப்படுத்துவது தொடர்பிலும் குழப்பகரமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதன் வெளிப்பாடே இன்று தமிழ் சமூகம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் திண்டாடுகிறது.
தென்னிலங்கை கட்சியின் தமிழ் முகவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றும் அணுகுமுறையை கையாண்டு அதில் வெற்றியும் கையாண்டுள்ளனர். 'ஜனாதிபதி தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்டால், பொதுத்தேர்தலில் எமது அணிக்கு ஓர் ஆசனம் கூட கிடைத்திருக்காது. எனவே, வியூகம் வகுக்கப்பட்டது மாற்று வழி குறித்து மதிநுட்பத்தோடு சிந்தித்தோம்.' என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச சூளுரைப்பதன் மூலம் தமிழர்களை வென்றிட அரசாங்கம் செயற்பட்டுள்ளமையை அறிய முடிகிறது. இதில் அரசாங்கம் வெற்றியே பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கில் மொத்தமாக 5 தமிழ் பிரதிநிதிகளை நேரடியாக தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக வெற்றி பெறச்செய்துள்ளது. அத்துடன் முன்னாள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்கியதன் 6 வடக்கு, கிழக்கு தமிழ் சமூக பிரதிநிதிகளை அரசாங்கத்தில் இணைத்துள்ளது.
அரசாங்கம் ஆறு பேரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிகளாக இணைத்துள்ளமையால், இதனை தமிழர் உரிமை அரசியலை முடக்கும் தமது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்க தரப்பு முயற்சி எடுப்பதை அவதானிக்க முடிகிறது. இனிவரும் காலங்களில் தமிழர்களின் பிரச்சினைகளை உரையாடும் தமிழர் தரப்பாக தமது முகவர்களை பயன்படுத்த முற்பட்டுள்ளது. குறிப்பாக புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ள தினேஷ் குணவர்தன அவர்கள், 'தமிழ் கூட்டமைப்புடன் இனிப்பேச மாட்டோம்! அரசுடன் இணைந்துள்ள தமிழ் உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்' என தெரிவித்துள்ளமையிலிருந்து அரசாங்கத்தின் எதிர்கால தமிழர்சார் நிலைப்பாட்டை அறிய கூடியதாக உள்ளது. அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளை முழுமையாக விலகிச்செயற்படுபவர்களாவார்கள். அவர்கள் உரிமையை ஒதுக்கி அபிவிருத்தி பற்றிய உரையாடலையே தமிழ் மக்களின் பிரச்சினையாக முதன்மைப்படுத்தப்படக்கூடியவர்களாவார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வழமைக்கு மாறாக தென்னிலங்கை முகவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்துள்ளமையானது அரசாங்கம் தமிழ் மக்கள் தங்களை ஏற்றுள்ளதாக சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல வழிவகுக்கிறது. கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஜெனிவாவின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், இலங்கை அரசாங்கத்து ஆதரவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் செயற்பட்டது போன்று, எதிர்வருங்காலங்களில் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவாக தமிழ் மக்கள் உள்ளமையை வெளிப்படுத்தும்முகமாக தற்போதைய அரசாங்கத்தின் தமிழ் பிரதிநிதிகள் ஜெனிவா செல்ல வாய்ப்புண்டு. இது தமிழ் மக்கள் கோரிவரும் இனஅழிப்புக்கான அனைத்துலக விசாரணை மற்றும் இனப்பிரச்சினை தீர்வுக்கான பொதுவாக்கெடுப்பு என்பதை சர்வதேசரீதியாக நீர்த்துப்போகச்செய்ய வழிசமைப்பதாகும்.
2ஃ3 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் தமக்கு கிடைத்துள்ள தமிழ் முகவர்களையும் தமது நலனை பொருட்டு கறிவேப்பிலையாகவே பயன்படுத்த முற்படுகின்றமையே அரசாங்கத்தின் வெற்றிக்கு பின்னரான சில செயற்பாடுகளில் அறிய முடிகிறது. யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அமைச்சுப்பதவி பெற்றிட வேண்டும் என்ற கனவுடன் இலாபகரமாக செயற்பட்ட அங்கயன் இராமநாதன் அவர்களை அரசாங்கம் அமைச்சுப்பதவி வழங்குதலில் ஏமாற்றமே செய்துள்ளது. சிறிலங்கா சுதந்திர கட்சி யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனாவுடன் கூட்டுச்சேர்ந்து அதன் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட்டுள்ளது. குறிப்பாக சிறிலங்க சுதந்திரகட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனாவும் பொலநறுவை தேர்தல் மாவட்டத்தில் மொட்டு சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். கடந்த ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் பொதுஜனபெரமுனாவை நிராகரித்தமையால், அங்கயன் இராமநாதன் அவர்கள் தனது வெற்றிக்காக தமிழ் மக்களை ஏமாற்றும்முகமாக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.
வேலைவாய்ப்பு பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படுகிறது. 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பின்றி உள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சிறிலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் தான் வெற்றி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்பட்சத்தில் அமைச்சுப்பதவி பெற்று தமிழ் இளையோரின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பிரச்சாரம் செய்திருந்தார். கடந்த காலங்களில் பிரதி அமைச்சுப்பதவியூடாக செய்த செயற்பாடுகளையும் தனது தேர்தல் பிரச்சாரமாக கொண்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் வாக்குறிகளை வழங்கி அங்கயன் இராமநாதன் அவர்கள் அதிகமான விருப்பு வாக்குகளை யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் பெற்றுள்ளார். இது தமிழர்களின் உரிமைப்போராட்டை நீர்த்துப்போகச்செய்ய அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடியதாகும். எனிலும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியோ அல்லது ராஜாங்க அமைச்சரவை பதவியோ அங்கயன் இராமநாதன் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இது தென்னிலங்கை தமிழ் முகவர்களின் வாக்குகளை அரசாங்கம் தன் தேவைக்கு மாத்திரமே பயன்படுத்த தீர்மானித்துள்ளமையையே பறைசாற்றுகிறது.
இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில் வென்று இலங்கை பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் பிரதிநிதிகளுக்கு பாரிய பொறுப்பு காணப்படுகிறது. தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் பிளவு தமிழ்த்தேசியத்துக்கான பிரதிநிதித்துவத்தை குறைத்துள்ளது. உதாரணமாக வன்னி தேர்தல் தொகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி 11,310 வாக்குகளுடன் ஓர் ஆசனத்தை பெற்றுள்ளது. மறுதலையாய் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி என்பன பிரிந்து நின்று முறையே 8,789 மற்றும் 8,232 வாக்குகளை பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ்த்தேசியம் சார்ந்து இணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் வன்னித்தேர்தல் தொகுதியில் தமிழ்த்தேசியத்துக்கு வெளியே சென்ற ஒரு ஆசனத்தை தமிழ்த்தேசியத்துக்குள் உள்ளீர்த்திருக்கலாம். கடந்த முறை தமிழ் தேசியத்திற்கு 16 ஆசனங்கள் வடக்கு, கிழக்கில் கிடைக்கப்பெற்ற நிலையில், இம்முறை 13 ஆசனங்கள் மாத்திரமே மூன்று அணிகளாக வடக்கு, கிழக்கில் கிடைக்கப்பெற்றுள்ளது. இம்முறை பாராளுமன்றம் சென்று உள்ள தமிழ் தேசிய பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பது என்பதையும் தாண்டி தமிழ் மக்களின் தேசிய இருப்பை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பை பெற்றுள்ளனர். அத்துடன் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையை தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டிய கடமையும் இம்முறை பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் பிரதிநிதிகளுக்கு உண்டு.
சிங்கள – பௌத்த பெரும்பான்மை இனமே தமது அரசியல் பிரதிநிதிகளை பொதுஜன பெரமுன அல்லது ஐக்கிய மக்கள் சக்தி என இரு கட்சிக்குள் பயணிக்கையில் பரப்பில் குறைவான தனித்தேசிய இனமான தமிழினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், சிறிலங்கா சுதந்திர கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுனா என பலதரப்பட்ட கட்சிகளூடாக பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி உள்ளமை துயரமான பதிவாகும். இதற்கு பிரதான காரணம் தமிழ்த்தேசிய பாசறைக்குள் உள்ள தமிழ்த்தேசிய நீக்க முகவர்களால் ஏற்பட்ட தமிழ்த்தேசிய பாசறையின் பிளவே ஆகும். அரசாங்கம் தமிழ் முகவர்களை கையாண்டு தமிழ் மக்களின் பிரச்சினையை திசைதிருப்ப முற்படும் இவ்ஆபத்தான கட்டத்தில், கட்சிபேதமின்றி தமிழ்த்தேசியம் மீதான பற்றுக்கொண்ட தமிழரசியல் பிரதிநிகள் தமிழ்த்தேசியம் என்ற ஒற்றைக்குடையின் கீழ் ஒன்றிணைந்து தமிழ்த்தேசிய இருப்பை பாதுகாக்க ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
Comments
Post a Comment