அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்க வேண்டும்! ட்ரம்பின் ஆலோசனை சாத்தியமானதா?? -ஐ.வி.மகாசேனன்-

 உலக வல்லரசான அமெரிக்காவிற்கு 2020ஆம் ஆண்டு ஓர் இருண்ட காலமாகவே காணப்படுகிறது.  உலக நாடுகள் பலதும் கொரோனாவோடு வாழப்பழகி இயல்பு நிலைக்கு திரும்பக் கூடிய சூழல் காணப்படுகின்றபோதிலும், அமெரிக்காவில் 2020இன் ஆரம்பத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவால் முடியவில்லை. அரையாண்டு கடந்தும்  அமெரிக்காவால் அதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதுதான் ஆச்சரியப்படத்தக்க விடயம் எனலாம். 


இந்நிலையில் 2020 நவம்பர் அமெரிக்காவின் 59வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அரசியலும் சூடு பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமான சமூக இடைவெளியை மையப்படுத்தி மின்னஞ்சலூடாகத் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்னஞ்சல் முறைமையானது, அமெரிக்காவின் உயர் ஜனநாயகத்தை பாதிக்குமெனவும், அதில் சர்வதேசத் தலையீடுகள் அதிகம் காணப்படலாமெனவும் காரணங்கூறி அமெரிக்கத் தேர்தலை பிற்போட வேண்டுமென்ற கோரிக்கையை அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார். எனவே அமெரிக்க ஜனாதிபதிக்கு தேர்தலை பிற்போடக்கூடிய அதிகாரம் காணப்படுகிறதா? இல்லையா! என்பதைத் தேடுவதாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் கடந்த காலங்களில் பலதடவை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும் ஒருமுறையாவது ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. 2001ஆம் ஆண்டில், செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப்பிறகு, நியூயார்க் நகரில் மேயர் முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மிக சமீபத்தில், சில மாநிலங்கள் தொற்றுநோய் காரணமாக தங்கள் மாநில முதன்மை தேர்தல்களை ஒத்திவைத்தன. எவ்வாறாயினும், அமெரிக்க தேசத்தின் 244 ஆண்டுகால வரலாற்றில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் கூடத் தாமதமாகவில்லை. 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் வெடித்த போதும் சரி, அமெரிக்க உள்நாட்டுப் போர் நடைபெற்ற (1861 - 1865) காலப்பகுதியிலும் சரி,  இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்திலும் சரி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலதாமதப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் இல்லை. இதனை உறுதிப்படுத்துவதாக 'அமெரிக்க வரலாற்றில் ஒருபோதும் ஜனாதிபதிக்கான தேர்தலை தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் மைக்கேல் பெஷ்லோஸ் அவர்களின் கூற்று அமைகிறது. மேலும் அத்தகைய நடவடிக்கை 'அமெரிக்க சட்டத்தை மீறும்' செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையிலேயே, கடந்த ஜூலை-30ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டரில், நவம்பர் பொதுத்தேர்தலை தாமதப்படுத்தும் வாய்ப்பை உயர்த்தி ட்வீட் செய்து அரசியல் புயலை ஒன்றை உருவாக்கியுள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப். அவர் தனது தொடர்ச்சியான ட்வீட்டுகளில், 'அப்படி அஞ்சல் வாக்களிப்பு நடைபெறுமானால் அது நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலை வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடிமிக்க தேர்தலாக மாற்றும்' என்றும் 'அமெரிக்காவிற்கு பெரும் சங்கடம்' என்றும் பதிவிட்டுவருகிறார். 'ஜனநாயகவாதிகள், வாக்களிப்பதில் வெளிநாட்டு தலையீடுபற்றிப் பேசுகிறார்கள், மின்னஞ்சல் வாக்களிப்பு முறைமை உள்ள நாடுகளில் வாக்களிப்பு முறைமையில் வெளிநாடுகள் உள்நாட்டு  விவகாரங்களில்   நுழைவதற்கு ஒரு சுலபமான வழி என்பதை அவர்கள் அறிவார்கள்' அதன்படி வாக்களிப்பின்போது வெளிநாட்டு குறுக்கீட்டால் அமெரிக்க ஜனநாயகம் பாதிக்கப்படக்கூடியது சந்தர்ப்பம் உண்டு என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் ட்டுவிட்டில் பரிந்துரைத்திருக்கிறார்.


எனினும் அமெரிக்க ஜனாதிபதிக்குத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் உண்டா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகிறது. 1845ஆம் ஆண்டிற்கு முந்தைய சட்டத்தின் கீழ், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளது.. அதன் பிரகாரம் 59வது ஜனாதிபதி தேர்தல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றும் அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் காணப்படவில்லை. காங்கிரஸின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபை ஆகிய இரு சபைகளும் இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றினாலேயே ஜனாதிபதித்தேர்தல் திகதியில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.


தற்போதைய அமெரிக்க காங்கிரஸில் செனட் சபையில் ட்ரம்பின் குடியரசுக்கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் காணப்படுகிற போதிலும் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எந்தவொரு சமயத்திலும்; இரு கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துத் தேர்தலை பிற்போடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்புச் சாத்தியமில்லை. அதேநேரம் தேர்தலைத் தாமதப்படுத்தும் கருத்துக்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து மாத்திரமின்றி,  குடியரசு கட்சி சார்பிலும் எதிரான கருத்துக்களே காணப்படுகிறது. செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல் மற்றும் பிரதிநிதிகள் சபை சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி உட்பட ஏராளமான குடியரசுக் கட்சியினரும் தேர்தலைப் பிற்போடும்  யோசனையை நிராகரித்துள்ளனர். 


தென் கரோலினா குடியரசுக் கட்சியின் செனட்டரும், ட்ரம்ப் கூட்டாளியுமான செனட் நீதித்துறைத் தலைவர் லிண்ட்சே கிரஹாம் அவர்களிடம் தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்த யோசனை குறித்து சி.என்.என் பத்திரிகையாளர் கேட்டபோது. 'இது ஒரு நல்ல யோசனை என்று நான் நினைக்கவில்லை. ட்ரம்பின் மின்னஞ்சல்-இல் வாக்களிப்பதிலுள்ள குறைபாடுகள் குறித்த கவலைகள் சரியானவை என்று நான் நம்புகிறேன். அதற்காகத் தேர்தலை தாமதப்படுத்துவது சரியான விடயம் அல்ல.'  எனவும் கிரஹாம் கூறியுள்ளார்.


உட்டாவவைச்சேர்ந்த குடியரசுக்கட்சியின் காங்கிரஸ் பிரதிநிதி கிறிஸ் ஸ்டீவர்ட், தேர்தலை தாமதப்படுத்துவதைத் தான் ஆதரிக்கவில்லை என்றாலும், ட்ரம்ப் மின்னஞ்சல்; வாக்களிப்பு கண்காணிக்கக் கடினமானதாக இருப்பதைப்பற்றி ஒரு நியாயமான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்று தான் விளங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். 


'மின்னஞ்சலில் வாக்களிப்பின் துல்லியத்தை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா?' என்று பிபிசி செய்தி சேவை அவரிடம் கேட்டதற்கு,  'இப்போது சில மாநிலங்களில் இந்த முறை நடைமுறையிலுள்ளது. உட்டாவவில் உள்ள எனது மாநிலத்தில், நாங்கள் சிறிது காலமாக இதைச்செய்து வருகிறோம், ஆனால் நாங்கள் ஒரு சிறிய மாநிலமாக இருக்கிறோம். மக்கள் தொகையும் குறைவாக இருப்பதனால் அங்கு அது சாத்தியப்படுகிறது. இருந்தாலும் தேசிய அளவில் இதைச் செய்வது கடினம்.' என்று அவர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


எவ்வாறாயினும், வாக்களிக்கும் நாள் மாற்றப்பட்டாலும் கூட, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் 'ஒரு ஜனாதிபதியின் நிர்வாகம் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடிக்க வேண்டும்.' என்று ஆணையிடுகிறத. 'இருபதாம் திருத்தத்தின் கீழ், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதி நண்பகலில் முடிவடைகிறது. ஒரு தேசிய அவசரநிலை ஏற்பட்டால் கூட, ஒரு புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அங்கீகரிக்காது, இந்த தேதிக்குப் பின்னர் ஒரு ஜனாதிபதி பதவியில் இருக்க அனுமதிக்கும் விதிகள் எதுவும் சட்டத்தில் காணப்படவில்லை.' எனவே, ட்ரம்ப் மீண்டும் ஒரு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், 2021 ஜனவரி 20 அன்று பதவியை விட்டு வெளியேறவே சட்டத்தால் அறிவுறுத்தப்படுகிறார் இந்த விதிக்கு விதிவிலக்குகள் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்பின் முதல் பதவிக்காலம் 2021 ஜனவரி 20ஆம் தேதி நண்பகலில் காலாவதியாகும். இது மாற்றமுடியாத சிக்கலில் உள்ளதெனலாம். 


திட்டமிடப்பட்டபடி பதவியேற்பு நாளுக்கு முன்னர் ஒரு தேர்தல் நடைபெறவில்லை என்றால், ஜனாதிபதி என்ற பதவி நிலைக்கு வருவதற்குரியவர் அடுத்தடுத்த வரிசையில் யாராவது உள்ளனரா? என்றால்...  இரண்டாவதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் காணப்படுகிறார். ஆயினும் அவரது பதவிக் காலமும் அந்த நாளில் முடிவடைகிறது. அவர் ஜனாதிபதியின் அதே படகில் இருக்கிறார். அடுத்ததாகச் சபையின் சபாநாயகர். தற்போது ஜனநாயகக் கட்சி உறுப்பினர் நான்சி பெலோசி உள்ளார். ஆனால் அவரது இரண்டு ஆண்டு காலம் டிசம்பர் இறுதியில் உள்ளது. இத்தகையதொரு  அபத்தச்சூழ்நிலையில் அடுத்த ஜனாதிபதிப் பதவிக்குத் தகுதியான மூத்த அதிகாரியாக 86 வயதான குடியரசுக் கட்சியின் சக் கிராஸ்லி காணப்படுகிறார்;.  செனட்டில் 100 இடங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் கால அவகாசம் காரணமாகப் பதவியை விட்டுச் சென்ற பின்னரும் இன்னும் அவர்கள் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று கருத முடிகிறது. மொத்தத்தில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் என்ற விடயம் அரசியல் யதார்த்தத்தை விட அரசியல் சஸ்பென்ஸ் என்ற நிலையை  ஒத்ததாகவே மாறக்கூடியதாக நிலை காணப்படுகிறது. ஆகவே திகதியிடப்பட்ட நாளில் தேர்தலை நடாத்தி ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டியது அரசியலமைப்பின் பிரகாரம் அவசியமானதே. 


ட்ரம்ப் தேர்தல் தாமதப்படுத்தும் கருத்தினைக் கூற முதல் தனது சொந்த குடியரசுக்கட்சியினரின் ஆதரவைக்கூட பெறத்தவறியமையாலேயே இன்று தனது கருத்தில் பின்வாங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார். செய்தியாளர் மாநாடு ஒன்றில் தேர்தல் தாமதமாக வேண்டும் என்ற அவரது ட்வீட் பதிவு குறித்து டிரம்ப் - இடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் தாமதிக்க விரும்பவில்லை, நான் தேர்தலை நடத்த விரும்புகிறேன். மின்னஞ்சல் முறை மூலம் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பின் நான் மூன்று மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை. அதன் பின்னர் வாக்குச்சீட்டுகளைக் காணவில்லை, தேர்தல் எதையும் முடிவுகளை பெறமுடியவில்லை என்ற குறைகள் வரும்போது அதற்குரிய காரணங்கள் என்ன என்பதையும் கண்டுபிடிக்க விரும்பவில்லை.' என்று தான் மின்னஞ்சல் வாக்குமுறையின் பலவீனத்தை சுட்டிக்காட்டியதான சாரப்படவே அந்தப் பதிவினை இட்டதாக அவர் கூறியிருக்கிறார்.


உண்மையில், ட்ரம்பின் தேர்தல் தொடர்பான அச்சமே தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான டுவிட்டின் பின்னுள்ள அரசியல் என்பதே பல அரசியல் விமர்சகரது கருத்தாகக் காணப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள ட்ரம்ப் ஜனநாயகக் கட்சி வேட்பாளர், முன்னாள் துணைத் தலைவர் ஜோ பிடனிடமிருந்தும் ஒரு கடுமையான சவாலை எதிர்கொள்கிறார். அத்துடன் முக்கிய தேசிய கருத்துக் கணிப்புகளின்படி, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி ட்ரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர், ஜோ பிடன் இரட்டை இலக்க முன்னிலை வகிக்கிறார். இது ட்ரம்புக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோசமான இரண்டாம் காலாண்டுப் பொருளாதார எண்களிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற பார்வையும் அரசியல் விமர்சகர்களிடம் உண்டு. ட்ரம்ப் தற்போதைய தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு நிதி மாற்றத்தை நம்பியுள்ளார். அவரது இந்த எதிர்பார்ப்பிற்குப் பதிலாகக் கிடைக்கும் எதிர்வினைகள் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. இதனைத் திசைதிருப்பவே தேர்தல் காலதாமதம் பற்றிய டுவிட் அமைவதாகவும் கருதப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், தேர்தல் தாமதம் குறித்து ட்வீட் செய்வது வெற்றியின் நம்பிக்கையுடன் ஒரு வேட்பாளரின் நடவடிக்கை அல்ல. இது வரவிருக்கும் அவநம்பிக்கையான நகர்வுகளின் அடையாளமாகவே காணப்படுகிறது.


அமெரிக்காவின் திகில் அரசியல் நாவல் நிகழ்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 3இற்கு பின்னரே அறியக்கூடியதாக இருக்கும். அமெரிக்க வரலாற்றின் வெளியக தொடர்புகளில் பல மாற்றங்களினை ஏற்படுத்திய ட்ரம்ப், அரசியலமைப்பிலும் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்களுடன் தனது வெற்றியை தொடர்வாரா? அல்லது வழமையான அமெரிக்கத் தேர்தல் சட்டவிதிகளின் இயல்புகளுடன் ஒத்துழைத்து அதனைக்  கடந்து செல்வாரா? பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம் இது. ஏனெனில் இது அமெரிக்க விடயம் அல்லவா..!!!

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-