அரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆளநேரிடும் - பிளோட்டோ -ஐ.வி.மகாசேனன்-

ஆகஸ்ட்-05இல் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களிடையே குழப்பகரமான முடிவுகளே காணப்படுகிறது. தேர்தலுக்கான நாட்கள் ஒற்றை எண்ணிலேயே மீதமுள்ள போதிலும் தமிழ் மக்கள் கடந்தகால அரசியல் அனுபவங்களால் அரசியல் சார்ந்ததொரு விரக்தி நிலையிலே தமது அரசியல் பிரதிநிதிகளை இன்னும் உறுதியாக தெரிவு செய்யாத நிலையையே காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலே தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்கையில் சிறந்ததொரு பிரதிநிதியை தெரிவு செய்ய எவ்வகையில் சிந்திக்க வேண்டும் என்பதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களிடையே அரசியல் சார்ந்து காணப்படும் விரக்தி களையப்படவேண்டியதாக காணப்படுகிறது. அரசறியவில் தத்துவஞானி பிளேட்டோ கூறிய, 'அரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆளநேரிடும்.' என்ற கருத்தையே இன்றைய சூழலில் தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. தமிழ் மக்களுக்கு இன்று தெரிவுகள் அதிகமாக உள்ளது. கடந்த கால அரசியல் அனுபவங்கள் ஏமாற்றங்களாய் காணப்படினின் அவர்களுக்கான மாற்றீட்டை தெரிவு செய்ய இன்று தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் மாற்று சக்திகள் அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. அதைவிடுத்து அரசியலை தவிர்ப்பது என்பது, தமிழ் மக்களால் தவிர்க்கப்பட வேண்டியவர்களை மீள அரசியல் பிரதிகளாய் உருவாக்கும் சூழல் அமைந்துவிடும் என்பதை தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்கையில் தமிழ் மக்கள் பிரதானமாக ஐந்து விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். 

முதலாவது, கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனஅழிப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளன என்பதை ஆராய்தல் வேண்டும். உலக நாடுகள் பலவற்றிலும் ஒடுக்கப்பட்ட இனங்கள் பலதும் தங்களுக்கான இனஅழிப்பை உறுதிப்படுத்தியதன் மூலமே சர்வதேச அளவில் தங்களது சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளன. கடந்த 2009ஆம் முள்ளிவாய்க்கால் பேரவலத்திலும், அதற்கு முன்பும், அதற்கு பின்பும் இலங்கை அரசாங்கங்களால் திட்டமிட்டு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் இனஅழிப்பை ஏற்போராகவும் சாட்சியங்களை திரட்டி தமிழ் மக்களுக்கான நியாயத்தை பெற்றுத்தரக்கூடியவர்களையே தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும். இனஅழிப்பு என்பதே இன்று தமிழ் மக்களின் அரசியலாகும். அதுவே பலமான ஆயுதம் அதனை ஏற்று சரியாக கையாளக்கூடியவர்களே தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தலைமைகளுமாவார்கள்.

இரண்டாவது, தமிழ் மக்கள் சுதந்திர இலங்கையிலிருந்தே ஏழு தசாப்தங்களாக கோரி வரும் இனப்பிரச்சினைக்கான தீர்வில்; அரசியல் கட்சிகள் எவ்வகையான உத்தியை கொண்டுள்ளது என்பதை ஆராய வேண்டியுள்ளது. கடந்த கால அரசியல் பிரதிநிதிகள், இறுதி வெற்றி பெறாத இடைக்கால அறிக்கையினை தயாரித்தமையே தமது வெற்றியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இங்கு மக்கள் தெளிவு பெற வேண்டும். அரசியலமைப்பு மாற்றம் என்பது தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்த்து விடாது. அரசியலமைப்பில் காணப்படும் உள்ளடக்கங்களை தமிழ் மக்கள் ஆராய வேண்டும். உள்ளடக்கமானது, தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதுடன், இலங்கையின் வடக்கு கிழக்கை அவர்களின் மரபுவழி தாயகமாக ஏற்று, பராதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவற்றின் அடிப்படையில்  இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்தமட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் வலியுறுத்துவதே என்றும் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வாக அமையும். கடந்த காலங்களில் அரசாங்க தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களே கிழித்தெறிந்து தமிழர்களின் அரசியல் தீர்வு விடயங்கள் நிராகரிக்கப்பட்ட இலங்கையின் சிங்கள - பௌத்த அரசாங்க கட்டமைப்புக்குள் தெளிவற்ற வகையில் உள்ளடக்கங்களை கொண்டிருப்பதை ஏற்க முடியாது. மற்றும் இலங்கையில் பௌத்தம், சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்கள் பிரதானமாக இருக்கையில் குறித்த இடைக்கால அறிக்கையில் தெளிவாகவே பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய இடைக்கால அறிக்கையாக தமிழ் மக்கள் ஏற்க முடியும் என்பதை தமிழ் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அரசியலமைப்பு மாற்றம் என்பது இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது அதன் உள்ளடக்கம் தெளிவாக தமிழர்களின் தேசம், மரபுவழித்தாயகம், சுயநிர்ணயஉரிமை என்பன அங்கீகரிப்பட்டு சமஷ்டி அடிப்படையில் அமைதல் வேண்டும். அதனை எவ்அரசியல் கட்சிகள் வலியுறுத்தகின்றன என்பதை சிந்தித்தே தமிழ் மக்களின் தெரிவு அமைதல் ஆரோக்கியமானதாகும்.

மூன்றாவது, அரசியல் கட்சிகளின் பிராந்திய மற்றும் சர்வதேச கையாள்கை சார்ந்த வெளியுறவுக்கொள்கையை தமிழ் மக்கள் ஆராய வேண்டும். தமிழ் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களின் சுதந்திர இலங்கையின் அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இலங்கையினுள்ளே இலங்கை சட்டமன்றத்தினூடாக சுயவிருப்பில் என்றும் கிடைக்கப்போவதில்லை என்ற உண்மையை புரிதல் வேண்டும். பூகோளரீதியில் இலங்கையின் முக்கியத்துவம் தமிழர்களுக்கு வாய்ப்பான களமாகும். அதனை இராஜதந்திரமாக கையாள்கையிலே தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பிராந்திய, சர்வதேச மேற்பார்வையில் பெறக்கூடியதாக காணப்படும். அவ்வாறானதொரு தீர்வு முயற்சியே இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13வது சீர்திருத்தம் ஆகும். அதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இராஜதந்திரம் இந்தியாவை தமிழர்களுக்கு எதிராக திருப்பியமையில் வெற்றி பெற்றிருந்தது. அத்துடன் இதுவரை காலமும் பிராந்திய அரசுகளும் சர்வதேச அரசுகளும் தமிழர்களை தங்கள் நலனுக்கு ஏற்ப கையாண்டுள்ளார்களே தமிழ் அரசியல் தரப்பு சர்வதேச, பிராந்திய அரசியலை கையாள முற்படவில்லை. சர்வதேச, பிராந்திய வல்லரசுகளுடன் சரணாகதி அரசியலும் ஏற்க முடியாது மாறாக பகைமை அரசியலும் தமிழர் நலனுக்கு எதிரானதாகும். சர்வதேச, பிராந்திய அரசியலை தமிழர் நலன்களுக்கு ஏற்ப வளைந்;து கொடுக்கக்கூடியதும் பூகோள அரசியல் வியூகங்களை ஆழமாக புரிந்து கொள்ளக் கூடிய  தரப்பினை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வது தொடர்பிலேயே தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

நான்காவது, உரிமை அரசியலுக்கு சமாந்தரமாக தமிழர்களின் பொருளாதார அபிவிருத்தி அரசியலையும் வழிநடத்தக்கூடிய ஆளுமையை தெரிவு செய்தல் வேண்டும். ஆயுதப்போராட்ட மௌனிப்புக்கு பின்னரான கடந்த 10ஆண்டுகளில் பொருளாதார ரீதியிலும் தமிழ் சமூகம் மிகவும் நலிவுற்று கொண்டு செல்கின்றது. கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அளவு அதிகரிப்பு மற்றும் காணமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் அதிகரிப்பு என்பன பல தமிழ்க்குடும்பங்களை பொருளாதார நிலையில் மிகவும் பின்தள்ளியுள்ளது. சமூகத்தின் அடிப்படை அலகாகிய குடும்ப அலகின் பொருளாதார மந்த நிலை அதனடிப்படையில் வேறுபட்ட சமூக கலாசார சிதைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சமூகத்தின் கலாசார சிதைவுகளுக்கு அடிப்படையாகவே பொருளாதார அபிவிருத்தியின்மையே தாக்கம் செலுத்துகிறதாயின் அதனை சீர்செய்யாமை கடந்த 10ஆண்டுகளாக தமிழர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கிய அரசியல் தலைமைகளின் தவறாகவே காணப்படுகிறது. கடந்த ஆட்சியாளர்களுக்கு ஆலய வீதிகளை காப்பேற் வீதிகளாய் மறுசீரமைத்து நால்வர் இணைந்து நாடா வெட்டுவது தான் உயர்ந்தபட்ச அபிவிருத்தியாக பார்க்ப்படுகிறது. நிலையான அபிவிருத்தி என்பது தொழிற்சாலைகளை, கைத்தொழில்பேட்டைகளை உருவாக்குவதிலும் மற்றும் எமது தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்துவிடுவதிலுமே தங்கியுள்ளது. கடந்த கால அனுபவங்களை கொண்டு அத்தகு முன்னேற்றகரமான அபிவிருத்தி சாரந்து மாற்று செயற்பாடுகளை முன்னிறுத்தும் தலைமைகளை தெரிவு செய்வது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதாகும். உரிமை அரசியலை கைவிடாது அதனை முதன்மைப்படுத்துவதுடன் சமாந்தரமாக பொருளாதார அபிவிருத்தி அரசியலை முதன்மைப்படுத்தும் அரசியல் தலைமையே தமிழர்களுக்கு இன்று தேவைப்படும் தலைமையாகும்.

ஐந்தாவதும் முதன்மையானதும், மேற்கூறிய அரசியல் விழுமியங்களை அடையாளங்காண முடியாது விடினும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்கும் தரப்பை அகற்ற வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருத்தல் வேண்டும். தமிழ் மக்களால் தவிர்க்கப்பட வேண்டியவர்களாய் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்கும் தரப்பே காணப்படுகிறது. ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பின்னரான விரக்திநிலை தமிழ்த்தேசியம் தவிர்க்கப்பட்டு, இலங்கை தேசியம் பேசுவது யதார்த்த அரசியலாக பார்வைக்கு தோன்றினும், சிறிது காலங்களின் பின் மீள 1956ஆம் ஆண்டுக்கு ஒத்த சூழல் இலங்கையில் உருவாகுகையிலே மீள தமிழ்த்தேசியத்தின் இருப்பின் சிந்தனை அவசியம் உணரப்படும். எனிலும் அதற்கு நீண்ட காலம் தேவைப்படப்போவதுமில்லை. இன்றைய அரசாங்கத்தின் இயல்புகள் 1956ஆம் ஆண்டு கால இலங்கை அரசியலை ஒத்ததாகவே காணப்படுகிறது. ஆயினும் 1956ஆம் ஆண்டில் ஒரு செல்வநாயம், 1970களில் ஒரு பிரபாகரன் வந்தது போன்று தமிழ்த்தேசியத்தை கட்டமைத்து பலப்படுத்த ஆளுமைகள் உருவாகுமா? என்பது ஐயப்பாடே ஆகும். தமிழர் அரசியல் விரக்தி போக்கு காணப்படுகிற போதிலும் தமிழ்த்தேசிய சிந்தனையுடனேயே காணப்படுகிறார்கள் என்பதற்கான நிகழ்கால சாட்சியமே ஜனாதிபதி தேர்தலில் சிங்கள - பௌத்த பேரினவாத கட்சியை நிராகரிப்பு அமைந்திருந்தது. இன்று தமிழ் மக்களிடம் சுயமாக உள்ள தேசியத்தை ஒருங்குசேர்த்து பலப்படுத்த கூடிய ஆளுமையை அடையாளங்காண முடியவில்லையாயினும் அதனை சிதைக்கும் வகையில் தேசியத்தை நிராகரிக்கும், தேசியத்தை கட்டமைத்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் புல்லுருவிகளின் தமிழ்த்தேசிய போர்வையை அகற்ற வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் சமூகத்திற்கு உண்டு என்பதை மறவாது ஆழமாக சிந்தித்து தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

அலைஸ் வாக்கர் என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் அதிகாரம் பற்றி குறிப்பிடுகையில், 'தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாக தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்' எனக் குறிப்பிடுகின்றார். இன்று தமிழ் மக்களிடம் உள்ள அரசியல்சார் விரக்திக்கும் அரசியல் பிரதிதிநிதிகள் தொடர்ச்சியாக தங்களை ஏமாற்றுகின்ற போதிலும் அவர்களை தங்களால் ஒன்றும் செய்ய இயலாத அதிகாரமற்ற தரப்பாக தாங்கள் உள்ளதாக எண்ணுவதே காரணமாகும். இதனாலேயே தங்கள் மேலான அதிகாரத்தையும் இழக்க எண்ணுகிறார்கள். ஜனநாயக அரசியலிலே பிரதிகளின் துரோகத்துக்கு தக்கபாடம் புகட்ட கூடிய சந்தர்ப்பம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வரும் தேர்தலிலே தான் கிடைக்கப்பெறுகிறது. தேர்தல் காலங்களிலேயே மக்கள் தான் எசமானர்கள், அரசியல்வாதிகள் அவர்களின் சேவகர்கள் என்ற உண்மை பல அரசியல்வாதிகளுக்கு புரிகிறது. அந்தவகையிலேயே எதிர்வரும் ஆகஸ்ட்-05ஆம் திகதி நடைபெறும் இலங்கை பாராளுமன்ற தேர்தலை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெறும் காகித குப்பைகளாயினும் அக்குப்பைகளில் கூட தமிழர்களின் உரிமை அரசியலை ஆழமாக விபரிக்காதோரும் உள்ளனர் தேர்தல் விஞ்ஞாபனங்களையும், கடந்தகால செயற்பாடுகளையும் பகுப்பாய்வு செய்து சரியான பிரதிநிதியை தெரிவு செய்வதனூடாக தமிழ் மக்கள் தங்கள் அதிகாரத்தையும் உறுதிசெய்யலாம்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-