இஸ்ரேல் - ஐக்கிய அரபுடனான உடன்பாடு; அமெரிக்க - இஸ்ரேல் தரப்பின் கூட்டு உபாயமா? -ஐ.வி.மகாசேனன்-

 இஸ்ரேல் மேற்காசிய பிராந்தியத்தில் முளைத்த நாள் முதலாகவே பிராந்திய நாடுகளை அச்சுறுத்தி தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியே வருகிறது. இடையிடேயே தனது இருப்பை பாதுகாக்கும் வகையில் பிராந்திய நாடுகளுடன் சமாதான முன்னெடுப்புக்களையும் நகர்த்தியுள்ளது. அவ்வகையிலேயே ஈரான், லெபனானுடன் அச்சுறுத்தும் உறவை பேணிக்கொண்டே, ஐக்கிய அரபு எமிரேட்சுடன் (யு.எ.ஈ) கடந்த 13.08.2020 அன்று அமெரிக்காவின் நடுவாண்மையுடன் இஸ்ரேல் ஒரு சமாதான ஒப்பந்த நகர்வை முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில் இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு  இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் அரசியல் உள்ளடகத்தை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலும், ஐக்கிய அரபும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான  வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 13.08.2020 அன்று தெரிவித்தார். இது தொடர்பாக ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, அபுதாபிபட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், 'இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்தியகிழக்கில் அமைதியை மேம்படுத்தும்' என்று கூறியுள்ளனர். 'இந்த உடன்பாட்டின் விளைவாக, ஆக்கிரமிப்பு மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை இஸ்ரேல் இடைநிறுத்தும்' என்றும் அந்ததலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபிறகு இஸ்ரேல் - அரபுநாடுகள் இடையே மேற்கொள்ளப்படும் மூன்றாவது உடன்பாடு இதுவாகும். இஸ்ரேல் சுதந்திரத்துக்குப் பிறகு1979ஆம் ஆண்டில் எகிப்துடனும், அதன் பிறகு 1994ஆம் ஆண்டில் ஜோர்டானுடனும் இஸ்ரேல் இது போன்ற அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதுநாள்வரை நடுவண் ஆசியாவில் பாரசீகவளை குடாவினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய் வளமிக்க முடியாட்சிகளான சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கத்தார், பக்ரைன் மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா அரபு நாடுகளுடன் ராஜீய ரீதியிலான உறவை இஸ்ரேல் வளர்த்துக் கொண்டதில்லை. பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் முயற்சிக்கு வளைகுடா அரபு நாடுகள் எப்போதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தே வந்தன. ஐக்கிய அரபுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சமாதான ஒப்பந்தமே முதன்முறையாக வளைகுடா அரபு நாடு ஒன்றுடன் இஸ்ரேல் மேற்கொண்ட உறவாகும்.


வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபும்; இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. 1971ஆம் ஆண்டு ஐக்கிய அரபின் முதல் அதிபரான ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் இஸ்ரேலை 'எதிரி' என்று குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு தடைவிதித்திருந்தது. இஸ்ரேல் - ஐக்கியஅரபு இடையே நேரடி விமானப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உட்பட எந்தவித உறவுகளும் இல்லாமல் இருந்தது. இந்த உறவில் மேலும் விரிசல் அடையும் விதமாக 2010ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ அமைப்பின் துணை தலைவரான முஹ்மது அல் மெக்ஹ் என்பவர் ஐக்கியஅரபின் தலைநகரான துபாயில் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் காரணம் என ஐக்கிய அரபு குற்றஞ்சாட்டியது. இதனால் இரு நாட்டு உறவில் மோதல் முற்றியிருந்தது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. எவையும் வெற்றி பெற்றிருக்கவில்லை.


இந்நிலையிலேயே, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் ஈரான் எதிர்ப்பு எனும் பொதுமையப்புள்ளியில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு சமாதான ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்னகர்த்தியது. வளைகுடாவில் ஈரான் நாட்டின் கை ஓங்கி வருவது அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. இதனால் ஈரானை தனிமைப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நேசநாடுகளிடையே ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு தூதர் யூசுஃப் அல் ஓடைபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இது ராஜீயத்துக்கும் பிராந்தியத்துக்குமான வெற்றி' என்று கூறியுள்ளார். மேலும், அரபு-இஸ்ரேலிய உறவுகள் மேம்பாட்டில் இது குறிப்பிடத்தக்கது என்றும், பிராந்திய பதற்றங்களை குறைத்து, சாதகமான மாற்றத்துக்கான புதிய சக்தியை இந்த உடன்பாடு உருவாக்கும் என்றும் யூசுஃப் அல் ஒடைபா தெரிவித்துள்ளார்.


எனிலும் இவ்சமாதான நடவடிக்கைகள் தற்காலிகமானதாகவே அமைகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசாங்க தலைவருக்கான தேர்தலுக்கான உத்தியாகவே இவ்சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோ என்ற பார்வையே அரசியல் ஆய்வாளர்களிடையே காணப்படுகிறது.


அமெரிக்காவினை பொறுத்தவரை நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்கத்தேர்தல் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்க்கு அதிகளவு நெருக்கடியை கொடுக்கும் தேர்தலாக காணப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வல்லாதிக்க அரசியல் பாணியில் சர்வதேச வல்லாதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய தலைவர் ட்ரம்ப் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கவே ட்ரம்ப்-இன் நடுவாண்மையில் இஸ்ரேல் - ஐக்கிய அரபு சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அண்மைக்காலத்தில் அமெரிக்காவிற்கு மிகநெருக்கடியை கொடுக்கும் மேற்காசிய நாடாகிய ஈரானின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இச்சமாதான நடவடிக்கை முற்றுமுழுதாக அமெரிக்க நலன்சார்ந்த சர்வதேச நகர்வாக தேர்தல் பிரச்சார உத்தியாகவே ட்ரம்பால் மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுதேர்தலை நாடுகையில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய வெளியுறவுக் கொள்கை வெற்றியை வழங்கியது மற்றும் மாறி வரும் மத்திய கிழக்கைப்பிரதிபலித்தது, இதில் ஈரான் பற்றிய முக்கியத்துவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது.


இஸ்ரேலினை பொறுத்தவரை குறுகிய ஒரு வருட காலப்பகுதியில் மூன்று முறை தேர்தல் நடாத்தப்பட்டும் உறுதியான அரசாங்கம் உருவாக்கப்பட முடியாத சூழலில் மீளவொரு தேர்தலுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இம்முறைதேர்தலிலும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவிற்கு நெருக்கடியான சூழலே காணப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நெதன்யாகுவின் மீது பெரும் சுமையாக காணப்படுகிறது. அதனைசீர்செய்யும் வகையிலேயே கடந்த தேர்தல் காலத்தில் அமெரிக்காவின் உதவியுடன் சமாதான திட்டம் என்ற பெயரில் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டவரைபை முன்னகர்த்தினார். எனிலும் அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கொரோனா தாண்டவம் மற்றும் ட்ரம்பின் தேர்தல் நெருக்கடி என்பன இணைப்பு திட்டத்தை காலதாமதப்படுத்தியது. இந்நிலையிலேயே இஸ்ரேல் தனது எதிரி நாடான ஈரானை கட்டுப்படுத்த ஐக்கிய அரபுடன் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேலும் தேர்தல் பிரச்சார உத்தியாகவே ஐக்கிய அரபுடனான சமாதானத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


அமெரிக்க தரகு இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய ஒப்பந்தத்தில் பாலஸ்தீனியர்கள் கோரிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நிலத்தை இணைப்பதற்கான இஸ்ரேல் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதே ஐக்கிய அரபின் பிரதான கோரிக்கையாய் அமைந்தது. அதில் இணக்கம் கூறியே இஸ்ரேலும் ஒப்பந்தத்துக்கு உடன்பட்டு இருந்தது. எனிலும் இஸ்ரேலின் உடன்பாடு என்பது தற்காலிகமானது என்பதை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவே உறுதிப்படுத்தியுள்ளார். 


ஐக்கிய அரபுடனான உறவுகள் தொடர்பான ஒப்பந்தத்துடன் முன்னேற இஸ்ரேல் தனது மேற்குக் கரை இணைக்கும் திட்டங்களை நிறுத்திவைக்குமாறு ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் மேற்குக்கரையின் சில பகுதிகளை இணைப்பதற்கான தனது திட்டங்களில் 'எந்தமாற்றமும் இல்லை' என்றும், திட்டங்கள் 'தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன' என்றும், இணைப்பை செயல்படுத்துவது அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் செய்யப்படும் என்றும் நெதன்யாகு கடந்த 13.08.2020 அன்றே ஒப்பந்தம் தொடர்பான தேசிய ஒளிபரப்பில் கூறினார்.


ஐக்கிய அரபு உயர் அதிகாரி அன்வர் கர்காஷ் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைரீதியாக விவரிக்கையில், ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய நடவடிக்கைக்கு அவர்கள் மரண அடியை கையாண்டதாகவும், இணைப்புத்திட்டத்தை மறுவடிவமைக்க உதவுவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார். மேலும் 'நாங்கள் எங்கள் அரசியல் சந்தர்ப்பங்களை சரியாகப்பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன்.' எனத்தெரிவித்துள்ளார். கலாச்சாரம் மற்றும் பொது இராஜதந்திர உதவி மந்திரி உமர் கோபாஷ் தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், 'எதுவும் கல்லில் எழுதப்பட்டதாக நான் நினைக்கவில்லை, நாங்கள் ஒரு கதவைத்திறக்கிறோம், இஸ்ரேலியர்கள் இந்த நடவடிக்கையின் பலன்களைக் காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இது மிகவும் சிக்கலானஅரசியல் சமூகத்திற்குள் அரசியல் சூழ்ச்சி என்று நான் கருதுகிறேன்.' எனக்கூறியுள்ளார். ஆக இஸ்ரேல் இணைப்புத்திட்டத்திலிருந்து கீழிறங்க வேண்டும் என்பதில் ஐக்கிய அரபு உறுதியாக உள்ளது என்பதையே அதிகாரிகளின் கருத்துக்கள் புலப்படுத்துகிறது.


எனவே அமெரிக்க தரகிலான இஸ்ரேல் - ஐக்கிய அரபு சமாதான திட்டத்தின் மையமாகிய இஸ்ரேலிய இணைப்புத்திட்டத்தில் இஸ்ரேலும், ஐக்கிய அரபும் முரண்படுவது என்பது ஒப்பந்தம் தற்காலிகமானது என்பதையே உறுதி செய்கிறது. அத்துடன் அமெரிக்கா தரகிலான இஸ்ரேல் - ஐக்கிய அரபு சமாதானத்திட்டம் என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆளுந்தரப்பின் தேர்தல் பிரச்சாரத்துக்கான திட்டமிட்ட உத்தியாகவே அமைகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து மேற்காசியாவை அச்சுறுத்துவதனூடாவே தங்கள் தேசியவாதத்தை முன்னிறுத்தும் ஒழுங்கையே கடைப்பிடித்துவரும் யதார்த்தத்தையே அமெரிக்கா தரகிலான இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிக சமாதான திட்டமும் தொடர்ச்சியாக பேணுகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-