வடக்கில் போலி ஜனநாயகம்? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் கடந்த ஆகஸ்ட்-05ஆம் திகதி கொரோனா பீதிகளுக்கு மத்தியிலும் கொரோனா சுகாதார நடைமுறைக்குள் இலங்கையின் 9வது பாராளுமன்ற தேர்தல் இனிதே நடைபெற்று முடிந்தது. அவ்வாறே வாக்கு எண்ணிக்கையும் மறுநாள் ஆகஸ்ட்-06 காலை ஆரம்பிக்கப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களில் நள்ளிரவுக்கு முன்னரே மக்கள் தங்கள் பிரதிநிதிகளை அறிந்து கொண்டனர். எனிலும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்கள் மாத்திரம் தூக்கத்தை துறந்து காத்திருந்து மறுநாள் ஆகஸ்ட்-07ஆம் திகதி அதிகாலை 3மணியளவிலேயே தங்கள் பிரதிநிதிகளை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அதன் பின்னால் வந்த பல சர்ச்சைகளும் இன்றுவரை(8.8.2020) உரிய தரப்புக்களால் நிவர்த்தி செய்ய முடியாமலேயே உள்ளது. அதனடிப்படையே இக்கட்டுரையும் வடக்கு தேர்தலில் எழுந்துள்ள சர்ச்சையும் அது சொல்லும் செய்தியை தேடுவதாகவுமே உருவாக்கப்பட்டுள்ளது.
முதலில் வடக்கு தேர்தலுக்கு பின்னாலான சர்ச்சையை தெளிவாக மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையில் கொழும்பு, கம்பஹா போன்ற வாக்காளர் தொகை கூடிய தேர்தல் மாவட்டங்களிலெல்லாம் தேர்தல் முடிவுகள் விரைவாக வந்த போதிலும் நான்கு லட்சத்துக்கும் உட்பட்டவர்களே வாக்களித்த யாழ்ப்பாணம்; - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முடிவுகள் தாமதப்படுத்தப்பட்டதன் பின்னணியிலேயே சர்ச்சைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன. ஆகஸ்ட்-06ஆம் திகதி காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அன்றைய தினம் இரவு 9.30மணியளவில் விருப்பு வாக்கு எண்ணிக்கைகளும் கணிக்கப்பட்டு வாக்கு எண்ணும் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளது. எனிலும் முடிவுகள் விருப்பு வாக்கு முடிவுகள் மறுநாள் ஆகஸ்ட்-07ஆம் திகதி அதிகாலை 3 மணியளவிலேயே தெரிவத்தாட்சி அதிகார பணியாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. சாதரணமாக ஏற்கனவே கணிக்கப்ட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கையை திரட்டி அறிவிப்பதற்கு ஏறத்தாழ 6 மணித்தியாலங்கள் செலவிடுகையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சி ஆதரவாளர்களிடையே விருப்பு வாக்கில் குழறுபடி இடம்பெறுவதாக சர்ச்சை எழுந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான ரவிராஜ் சசிகலா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் விருப்பு வாக்குகளில் மோசடி மேற்கௌ;ளப்பட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களினை விருப்பு வாக்கு எண்ணிக்கை தரப்படுத்தலில் முன்கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ரவிராஜ் சசிகலா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஆதரவாளர்கள் குழப்பமான செய்திகளை ஊடுகடத்தி குழப்பமடைந்து கொண்டு இருந்தார்கள். அந்த சர்சையின் உச்சமாகவே நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நிலையத்துக்கு கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வருகையில் குழப்பம் மேலும் உச்சத்துக்கு சென்று ஆதரவாளர்களிடையே மோதுகை நிலை உருவாகியது. அதனை அடக்க உள்நுழைந்த அதிரடிப்படையினரால் குழப்பம் கலவரமாக மாற்றமடைந்தது. கலவரத்தில் கட்சி பேதமற்று தமிழ் இளையோர், ஊடகவியலாளர்கள், மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டும் இருந்தனர்.
இக்குறித்த குழப்பம் மற்றும் கலவரத்தின் பின்னணியில் இரு பிரதான உண்மைகள் தோலுருத்து காட்டப்பட்டிருந்தது. குழப்பத்தின் பின்னணியில் இலங்கையின் போலி ஜனநாயகமும், கலவரத்தின் பின்னணியில் ஒரு சிலரின் போலித்தேசியவாதமும் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ் மக்கள் ஆழமாக புரிந்து செயற்பட வேண்டியோராய் உள்ளனர்.
ஜனநாயத்தின் முதன்மையான பண்பு வெளிப்படைத்தன்மையாகும். ஆயினும் தேர்தல் முடிவுகள் அறிவுக்கும் இடத்தில் அவ்வெளிப்படைத்தன்மை என்பது இறந்து போனதையே அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஏற்கனவே கணக்கிடப்பட்ட விருப்புவாக்குகளை திரட்டி மொத்த எண்ணிக்கையை கணக்கிட 6 மணித்தியாலங்களை எடுக்கையில் மக்கள் குழப்பமடையவே செய்வார்கள். ஆக மக்கள் குழப்பமடைந்து ஒரு எதிர்ப்பை சமிக்ஞையாக காட்டும் போது வெளிப்படைத்தன்மையுடன் தாமதத்துக்கான காரணத்தை விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அன்றைய தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் கடமைக்கு பொறுப்பான யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் உண்டு. எனினும் அரசாங்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கையில் கூட மக்களின் குழப்பத்தை தீர்க்க வேண்டிய தனது தார்மீக பொறுப்பை உணர்ந்து செயற்பட்டிருக்கவில்லை. இவ்வெளிப்படைத்தன்மையற்ற தன்மை போலியான ஜனநாயகத்தையே பறைசாற்றுகிறது.
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் இடத்தில் அதிகளவில் பாரபட்ச தன்மை காணப்பட்டது. இதுவும் போலி ஜனநாயகத்தையே உறுதி செய்கின்றது. விருப்பு வாக்கு தரவு முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதத்தியமையால் ஆதரவாளர்கள் குழப்பமடைய வேட்பாளர்கள் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் தாமதத்;துக்கான காரணத்தை வினவ சென்ற போது வேட்பாளர்களுக்கு சரியான பதிலை தெரிவத்தாட்சி அதிகாரி அளித்திருக்கவில்லை. அதேநேரம் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தின் உள்ளே செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தும் உடனடியாக அனுமதிக்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ரவிராஜ் சசிகலா மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தின் உள்ளே செல்ல உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமன்றி உள்ளே செல்ல எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமற்ற வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சயந்தன் அவர்களும் எவ்வித தடையுமின்றி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்துக்குள் சென்றார்கள். இது வடக்கு தேர்தல் களத்தில் நிகழ்ந்த பாரபட்சமான தன்மையை தோலுரித்து காட்டுகிறது. இப்பபாரபட்சமான தேர்தல் களமும் போலியான ஜனநாயகத்தையே பறைசாற்றுகிறது.
குழப்பத்தை கலவரமாக்கியது பொலிஸார் மற்றும் அதிரடிப்படையின் செயற்பாடாவே காணப்படுகிறது. தேர்தல் என்பது அமைதியாக நடாத்தப்பட வேண்டியதாகும். குழப்பம் ஏற்பட்டதற்கு பிரதான காரணம் அதிகமானோர் வாக்கு எண்ணும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தமேயே ஆகும். இதனை அனுமதித்தது பொலிஸாரே ஆகும். ஆரம்பத்தில் மதியம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நூற்றுக்கும் மேற்பட் ஆதரவாளர்களுடன் உள்நுழைகையில் அனுமதிச்சீட்டு இல்லாதோரை உள்நுழைய அனுமதித்தது பொலிஸாரின் தவறாகும். அவ்வாறே நள்ளிரவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தனது பெருந்திரளான ஆதரவாளர்களுடன் உள்நுழைகையிலும் மீள அனுமதிச்சீட்டு இல்லாதோரை உள்நுழைய அனுமதித்தது பொலிஸாரின் தவறாகும். இவ்பொலிஸாரின் அஜாக்கிரதை செயலே தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலைய சூழலில் குழப்பம் ஏற்பட காரணமாகியது. அக்குழப்பத்தை ஏற்படுத்த ஆயுதத்துடன் அதிரடிப்படையினரை உள்அழைத்து அங்கு நின்றோரை பொலிஸாரும் அதிரடிப்படையும் மூர்க்கத்தனமாக தாக்குகையிலேயே அச்சூழல் கலவரமாகியது. தேர்தல் களத்தில் அதிரடிப்படையினரை ஆயுதத்துடன் அழைத்து மூர்க்கத்தனமான தாக்குதலை நடாத்தியமை தேர்தலின் வெளிப்பாடான ஜனநாயகதத்தின் போலியையே பகிரங்கப்படுத்துகிறது.
பொலிஸார் மற்றும் அதிரடிப்படையின் மூர்க்கத்தனமாக தாக்குதலால் கலவரமாகிய சூழலில் அரசியல்வாதி ஒருவரின் போலித்தமிழ்த்தேசியமும் தோலுரிக்கப்பட்டது. பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரால் தமிழ் இளையோர் மூர்க்கத்தனமாக தாக்கப்படுகையில் தன்னை அதிகளவில் தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்தும் தமிழ் அரசியல்வாதி ஒருவர் கதிரையில் சொகுசாக தன் பரிபாகங்களுடன் இருந்து கொண்டு பார்வையாளராய் அவ்வன்முறையை பார்த்துக்கொண்டு இருந்தார். எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. குறித்த மூர்க்கத்தனான தாக்குதலை காணொளியில் பார்ப்பவர்களுக்கே சினமும் இரக்கும் வருகையில், ஒரு தமிழ் அரசியல்வாதியாய் தலைமையாய் சினம் வராவிடிலும் ஒரு மனிதராய் இரக்க உணர்வு கூட வராதவர்களையே இன்று தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதியாய் மீள தெரிவு செய்துள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும். தேர்தல் மேடைகளில் தான் இவ்வாறான போலி தமிழ்த்தேசியவாதிகள் இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராக பொங்குவார்கள். நேரில் கண்முன்னே நிகழுகையில் தங்களை பாதுகாத்து கொண்டு பார்வையாளராகவே கடந்து செல்வார்கள் என்ற உண்மை அச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தப்பட்டது. தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரையும் தாக்கிய பொலிஸார் மற்றும் அதிரடிப்படை போலி தமிழ்த்தேசியவாதி அரசியல்வாதியையும் சகாக்களையும் நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 9வது பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் களமும் களச்சூழலும் ஜனநாயகத்தை புதைத்துள்ளமையே உண்மையாகும். மேற்குறிப்பிட்ட சான்றுகளுக்கு அப்பால் தற்போதுவரை சான்றுபயிர்க்கமுடியாத விடயங்களூடாகவும் ஜனநாயகம் புதைக்கப்பட்ட நிலேயே காணப்படுகிறது. கட்சி என்பதற்கு அப்பால் மக்கள் நலனை முதன்மைப்பத்தி சிலர் செயற்படுவார்களாயின் விலைபேசப்பட்ட ஜனாநாயகத்துக்கான சான்றுகளும் கிடைக்கக்கூடியதாக காணப்படும். ஜனநாயக போர்வையில் ஜனநாயகத்தை விலைபேசும் பலரின் அகராதியில், வெறும் 'புலியெதிர்ப்பும்', 'தமிழ்த் தேசிய நீக்கமும்' மட்டுமே, 'ஜனநாயகம்' என காணப்படுகிறது. அத்துடன் பல தமிழரசியல்வாதிகள் தமிழ்த்தேசிய பற்றுதலும் தேர்தல் பிரச்சார மேடைகளில் மட்டுமே காணப்படுகிறது. தேர்தலில் மக்கள் வாக்கு அளித்த மறுகணமே தமிழ்த்தேசியம் என்பதையே மறந்து விடுகிறார்கள் என்பதையே யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் களமும் களச்சூழலும் புலப்படுத்தியது. தமிழ் மக்கள் அரசியல் விழிப்பு பெறாதவரை ஜனநாயகத்தின் பேரிலும் தமிழ்த்தேசியவாதத்தின் பேரிலும் போலியான தோற்றத்தை வெளிப்படுத்துவோரையும் ஒழிக்க முடியாது.
Comments
Post a Comment