காணமலாக்கப்பட்டோருக்கான உறவுகளின் நீதிக்கோரிக்கை -ஐ.வி.மகாசேனன்-

 ஆகஸ்ட்-30 ஆம் திகதி உலகளவில் காணாமலாக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இலங்கையில் 1500 நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வீதியில் இறங்கி போராடி வரும் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகஸ்ட்-30 அன்று வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கான ஒழுங்குகளை செய்துள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பனவும் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் ஆகஸ்ட்-30 காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் கீழ் காணமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி வரும் போராட்டங்களின் எதிர்காலம் பற்றி தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.


காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 2010இல் இருந்து தங்கள் உறவுகளுக்கான நீதி கோருவது தொடர்பாகச்செயற்பட்டு வரினும், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்பே நீதி கோரும் செயற்பாடு நீதிக்கான போராட்டமாக பரிணமித்தது. 2017இல் இருந்து வடக்கு, கிழக்கில் சுழற்சி முறையிலான உண்ணா விரதங்களையும் நடாத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆகஸ்ட்-30 காணாமல் ஆக்கப்பட்டவர் தினத்தில் சர்வதேசத்தின் கவனத்தைத்திருப்பும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதிகோரி பாரிய அளவில் தமது சனநாயககுரலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டில் தாயகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக கனடா, இலண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் உட்பட எட்டு நாடுகளில் புலம் பெயர்ந்த உறவுகள் அந்தந்த நாடுகளில் போராட்டங்களை நடாத்தியிருந்ததோடு தமிழகத்திலும் ஆதரவான குரல்கள் ஒலித்தன. அதேபோல் இந்த வருடமும் கனடாவில் நடைபயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்தவொரு இடத்திலிருந்து கனடாவின் பாராளுமன்றம் நோக்கி அந்த நடைபயணம் இடம்பெறவுள்ளது. அது போல இலண்டனின் வெல்கன் சதுக்கத்திலும் ஆர்ப்பாட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. தாயகத்தில் வடக்கிலும், கிழக்கிலும் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாட்டை காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டுவருகின்றனர். 

வடக்கு, கிழக்கு வலிந்து காணமலாக்கப்படடோர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்தநடராஜா அவர்கள் ஆகஸ்ட்-30 போராட்டம் பற்றி கருத்துரைக்கையில், 'வடக்கு கிழக்கு இணைந்ததாக ஒரே இடத்தில் இணைவதற்கு நடைமுறை ரீதியில் பாரிய சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு என பல பிரச்சினைகள் உள்ளதால் வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மாவட்டச்செயலகம் (கச்சேரி) வரை நகர்ந்து, அங்கிருந்து ஐ.நா.விடம் மகஜர் ஒன்றைக்கையளிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்திலிருந்து காந்திப் பூங்கா வரை பேரணியாக அணிவகுத்து அங்கேயொரு மகஜரையும் கையளிக்கவுள்ளோம். இப்போராட்டத்தில் கூடியளவு மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்.' எனத்தெரிவித்துள்ளார்.


வடக்கு, கிழக்கு வலிந்து காணமலாக்கப்பட்டோர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளரின் எதிர்பார்ப்பாகிய அதிகளவு மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென்பது நிச்சயம் ஆகஸ்ட்-30இல் பூர்த்தியாகும். ஆயினும் அது ஆகஸ்ட்-30க்கான எழுச்சியாக மாத்திரமே காணப்படும். ஓர் நாள் ஏற்படும் எழுச்சிகளை தொடர்ந்து கடத்தக்கூடிய அணுகுமுறைகளை தமிழ்த்தரப்பு இதுவரை எந்தப்போராட்டத்திலும் சிந்திக்கவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான தமிழ் சமூகத்தின் போராட்டங்கள் யாவுமே நீர்க்குமிழி வடிவிலான போராட்டங்களாகவே காணப்படுகிறது. ஓர் நாளிலேயே பெரும் போராட்டமாக பரிணமித்து முடிவின்றி மறுகணமே போராட்டம் மறைந்தும் விடுகிறது. அதுவே தமிழ் சமூகத்தின் பெரும்பலவீனமாக உள்ளது. இப்பலவீனத்துடனேயே வடக்கு, கிழக்கு வலிந்து காணமலாக்கப்படடோர்களிற்கான நீதிப்போரட்டங்களும் வருடந்தோறும் ஆகஸ்ட்-30 மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலப்பகுதிகளில் ஒருநாள் கூத்தாக நிறைவுகிறது. அதன் பின்னர் வருடத்தின் மிகுதி நாட்கள் யாவும் யாரும் கவணிப்பாரற்று வடக்கு, கிழக்கில் தத்தமது அறவழிப்போராட்ட கூடாரங்களினுள்ளே வடக்கு, கிழக்கு வலிந்து காணமலாக்கப்படடோர்களின் உறவுகள் நாட்களை இலக்கமிட்டுக்கொண்டு விடிவுகளுக்காக தனித்தே காத்துள்ள அவலமே தொடர்கிறது.


இக்கவனிப்பாரற்ற நிலைமையின் பிரதிபலிப்பே வடக்கிலும், கிழக்கிலும் வலிந்து காணமலாக்கப்பட்டோர்களிற்காக போராடும் உறவுகள் தொடர்ந்து புலனாய்வாளர்களால் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர். ஆட்சி மாற்றம் அச்சுறுத்துவோருக்கு மேலும் வாய்ப்பாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறையில் உள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரால் தாக்கிச்சேதமாக்கப்பட்டுள்ளது. பெயர்ப்பலகையைப் பிய்த்து எறிந்துவிட்டு, அதற்கருகில் 'இந்த அலுவலகம் தொடர்ந்தால் உனக்கும் இதே நிலை தான் ஏற்படும் - கருணா குழு ஆதரவாளன்.' எனக்கையால் எழுதப்பட்ட பிரசுரங்களின் மூலம் அம்பாறையில் தம் உறவுகளைத்தேடி போராடும் உறவுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்அபாயத்துக்கு பிராதன காரணம் நேரடி பாதிப்பாளர்களை மாத்திரம் போராட்டத்தில் தனித்து விட்டு தமிழ் சமூகம் ஒதுங்கி இருப்பதே காரணமாகும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இனியும் தனித்துவிடுவது நிச்சயம் இனிவரும் காலங்களில் அச்சுறுத்தல்கள் கொலையாகவும் மாற்றலாம். அதன் தொடர்ச்சியாக உறவுகளிடையே மட்டுப்படுத்தப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரிற்கான போராட்டம் முழுமையாக நீர்த்துப்போகக்கூடிய சூழலே அதிகமாக காணப்படுகிறது.


வலிந்து காணமலாக்கப்பட்டோர்களிற்காக நீதிக்கோரிக்கை 11ஆண்டுகளை தொடுகின்ற போதும் இதுவரை சரியான கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பது தமிழ் சமூகத்தின் பலவீனத்தையே பறைசாற்றுகிறது. இலங்கையின் வடபுலத்தில் அதாவது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களில் 60,000 பேர் காணாமல் போயுள்ளனர் என அல் ஜசீரா (யுட துயணநநசய) ஆவணப்படம் ஒன்றின் மூலம் அதனை ஆவணமாக்கி உள்ளது. அதேவேளை இலங்கையின் ஆளுந்தரப்புகள் காணாமற்போனவர்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்துவந்துள்ளனர். குறிப்பாக கடந்த நல்லாட்சி பெயர்ப்பலகை பொறிக்கப்பட்ட மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்திலேயே ஜனாதிபதி மைத்திரி காணாமல் போனவர்கள் எவரும் இல்லை எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் 7000 எனவும் முரண்நகையான கருத்துக்களை கூறியிருந்தனர். மறுதலையாய் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பெற்ற பரணகம அறிக்கை 24000பேர் காணாமற் போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. எனிலும் இதுவரை தமிழ்த்தலைமைகளிடம் சரியான கணக்கிடல் என்பது காணாமல்போனவர்கள் தொடர்பில் இல்லை என்பதே யதார்த்தமாகும். இந்நிலையிலேயே தமிழ் சமூகம் 11ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்டோரை தேடி போராட்டத்தையும் நடாத்தி வருகிறது. ஆக போராட்டம் தீர்வை பெறக்கூடிய வழியிலின்றி சம்பிரதாயபூர்வமாகவே நடைபெற்று வருகிறது. தமிழ் தலைமைகள் உறவுகள் தனித்து தம்இயலுமைக்குள் போராடும் போராட்டத்திற்கு தீர்வை பெறக்கூடிய வகையில் நகர்த்தக்கூடிய சரியான வழிகாட்டல்களை மற்றும் உதவிகளை வழங்க தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். தங்கள் அரசியல் நலன்களுக்காக மக்கள் போராட்டங்களை பிளவுபடுத்தாது சீரான ஆலோசனையை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்று நாலரை வருடங்களின் பின்னர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரைவப்பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமாகிய கெஹலிய ரம்புக்வெல்ல காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை, அவர்கள் இறந்திருக்கலாம் என்று தாங்கள் கருதுவதாகத் தெரிவித்திருக்கின்றார். அதேவேளை 4000 இராணுவத்தினர் காணாமல் போயுள்ளமை செல்லுபடியான விடயம் என்றும், பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படுகின்ற விடுதைலப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் காணாமல் போயிருப்பது செல்லுபடியற்ற விடயம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல கூறியிருக்கின்றார். செல்லுபடியான விடயம் என்பதில் அரசாங்கம் பொறுப்பு கூறக்கடைமப்பட்டுள்ளது என்றும் செல்லுபடியற்ற விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்கைளப் பற்றி அரசாங்கம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை எனும் தொனியிலேயே அமைச்சரவை பேச்சாளரின் கருத்து அமையப்பெற்றுள்ளது. இறைமையுள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்க கட்டமைப்பினுள் ஒரு சமூக மக்களின் நீதிக்கோரிக்கையை புறந்தள்ளி செயற்படுவது ஜனநாயக மீறலாகும். அரசாங்கத்தால் பயங்கரவாதிகளாய் முத்திரை குத்தப்படுபவர்களும் இலங்கை நாட்டில் வாழும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அரசாங்கம் சிந்தித்து செயற்பட வேண்டும். அச்சிந்தனையை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் பிரதிநிதிகளே முள்ளந்தண்டுடன் செயற்பட்டு தெளிவுபடுத்த வேண்டும். ஆயினும் நடைமுறையில் அவை சாத்தியப்படாது என்பதையே சமகால நிகழ்வுகள் பறைசாற்றுகிறது. ஆக தமிழ் மக்களே போராட்டங்களின் அணுகுமுறைகளை சரியாக வகுத்து மக்கள் திரட்சியுடன் நீதிக்கோரிக்கையை முன்வைக்கையிலேயே வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர்களையும் அரசாங்கம் மக்களாகவாவது சிந்திக்க தூண்டலாம். 


காணாமல் போனோரை மீட்கும் புனிதப் போரில் உலக மக்களால் இன்று வரை போற்றப்படும் மாமனிதனாக சுவிடன் நாட்டைச் சேர்ந்த ரவுல் வாலன் பெக் (Raoul Wallenberg) இருக்கின்றார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் காணாமல் போனவர்களை மீட்பதற்காகவே அர்ப்பணித்தார். 20ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த மனிதாபிமானி என்று இன்றுவரை உலகம் கொண்டாடுகின்றது.  ரவுல் வாலன் பெக் தனது வாழ்நாளில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களை  மீட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உலக வரலாற்றிலேயே தனி ஒரு மனிதனாக காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களை மீட்டு வரலாற்றை தனதாக்கிக் கொண்ட இந்த மனிதக்கடவுளுக்கு ஒப்பாக கிடைக்காவிடினும், சாதாரண மனித நேயமுள்ள மனிதர் கூட கடந்த 11ஆண்டுகளில் தமிழ் சமூகத்திற்கு உதவிட முன்வரவில்லை என்பதே ஈழத்தமிழர்களின் துர்ப்பாக்கியமாகும்.


காணாமல் செய்யப்படுதல் என்பது ஒருவருடைய அடிப்படை உரிமையான வாழுதலுக்கான உரிமையினைப் பறித்தலாகும் என வரையறை செய்யப்படுகின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் காணாமல் செய்யப்படுதல் என்பது அந்நாட்டின் ஜனநாயகத்தின் மீது ஐயத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமையும். இந்த உண்மையை அனைத்து தமிழ் மக்களும் உணர்ந்து வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான போராட்டத்தை உறவுகளின் போராட்டம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து மாற்றி தமிழ் மக்களின் போராட்டமாக, வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதிக்கோரிக்கை தமிழ் மக்களின் நீதிக்கோரிக்கையாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்சமூகத்துக்கும் உண்டு. அதற்கான விதை ஆகஸ்ட்-30இல் தெளிவாக இடப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-