அரசியல்மயமாக்கத்திலிருந்து மீட்சிபெறுமா தொழிலாளர் சமூகம்? -ஐ.வி.மகாசேனன்-.

இலங்கையில் தொழிலாளர் தினம் பற்றிய உரையாடல்கள் சமகாலத்தில் அரசியல்வாதிகளின் அரசியல் நலன்சார்ந்த வார்த்தைகளாகவே அதிகம் உரையாடப்படுகின்றது. தொழிலாளரை அவர்களது உழைப்பை கொண்டாடும்  தினமே தொழிலாளர் தினம் என்பதனையே மறந்து தான் தொழிலாளர் தினத்தை பல அரசியல்வாதிகளும் பார்க்கிறார்கள். தொழிலாளர் தின பேரணிகளும் அரசியல் கட்சிகளின் பலங்களை நிரூபிக்கும் களங்களாகவே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதனையே அண்மைக்கால தொழிலாளர் தின பேரணிகளின் செய்திகளில் தெளிவாக அவதானிக்க முடிகிறது. தொழிலாளர் தின பேரணிகளை நடாத்துவதில் முட்டி மோதி கொள்ளும் அரசியல் கட்சிகள் தொழிலாளர் தின வரலாற்று கடமையினை நிறைவேற்ற எத்தகு செயற்பாட்டு வரைபுகளை கொண்டுள்ளார்கள்? கோவிட்-19 தொற்று காலத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எத்தகு தீர்வை அடையாளப்படுத்தினார்கள்? என்பதெல்லாம் விமர்சனமான பார்வையாகவே காணப்படுகிறது.


2021ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு கட்டுரையாக உருவாக்கப்படும் இக்கட்டுரை தொழிலாளர் தின வரலாற்றையே முழுமையாய் விளக்காதுஇ தொழிலாளர் தினத்திற்கான சுருக்கமான வரலாற்று பின்னணியை தொட்டுக்கொண்டு, சமகாலத்தில் கொரோனாவும், அரசியலும் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் இடர்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தினம் வரலாற்றில்இ 1886ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடாத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தை மையப்படுத்தி கொண்டாடப்படுவதாகும். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சிக்காக்கோ கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர் தாக்கப்பட்டனர். இப்படி தாக்குதல் தொடரவே தொழிலாளர்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ்இ ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 1889 ஆண்டு பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. இதில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு மே 1 அனைத்துலக அளவில் தொழிலாளர் தினமாக நடத்திட வேண்டும் என்ற அறைக்கூவல் விடுக்கப்பட்டது. அன்றிலிருந்து உலகின் பல நாடுகளிலும் மே-1 தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் மே-1 விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டு தொழிலாளர் தினம் நடாத்தப்படுகிறது. எனிலும் தொழிலாளர் நலன்களை மையப்படுத்திய செயற்பாட்டு தளமாக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றதா? என்பது பெரும் விசனத்திற்குரியதாகும்.

தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் அரசியல் கட்சிகளின் நலனை மையப்படுத்தியே அதிகமாக நடாத்தப்படுகிறது. தொழிலாளர் தின பேரணிகள் யாவும் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சைகளாகவே அரங்கேற்றப்படுகின்றது. 2021ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தின பேரணிகள் கொரோனா பரவுகையை காரணங்காட்டி தடுத்து நிறுத்தியுள்ளமைக்கு பின்னாலும் ஆளுங்கட்சியினுள் காணப்படும் அரசியல் கட்சிகளின் பலப்போட்டி பிரச்சினையே ஆகும்.

தற்போதைய ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பானது 17 அரசியல் கட்சிகளின் கூட்டாகவே காணப்படுகிறது. இக்கூட்டமைப்பின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கை சுதந்திர கட்சி தனது பலத்தை நிரூபிப்பதற்காக கூட்டமைப்பை விடுத்து தனியான தொழிலாளர் தின பேரணி அறிவிப்பை விடுத்திருந்தது.  ஸ்ரீலங்காபொதுஜன சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மகிந்த ராஜபக்ஷா கூட்டணி கட்சிளை அழைத்து இணைந்து பேரணியை நடாத்த முயன்ற போதும்இ அது தோற்றுப்போகவே ஆளும் கட்சியின் பிளவு பொதுவெளியில் காட்சிப்படுவதை தடுக்க ஆளும் கட்சி கொரோனா பரவலை காரணங்கூறி தொழிலாளர் தின பேரணியையே தடை செய்துள்ளனர். அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து கொரோனா தொற்று பரவுகை எண்ணிக்கையையும் அதிகரித்து மக்களை பதட்டமான சூழலுக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவுகை ஆபத்தான நிலையிலுள்ளது என்பது முற்றாக மறுதலிக்கமுடியாததாயினும்இ கொரோனா பரவுகை காலத்திலேயே பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கொரோனாவை காரணங்காட்டி தடுக்கும் மறுமுனையில் வெற்றி விழாக் கொண்டாட்டங்களும் இதர பல அரசாங்க கொண்டாட்டங்கள் பலதும் கொரோனா பரவுகை காலத்திலேயே இடம்பெற்றது. தற்போதும் தொழிலாளர் தின பேரணி முடக்கப்படுகிறது. எனிலும் யாழ்ப்பாணத்தில் அரச வெசாக் விழா நிகழ்வுகள் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் உறுதிப்படுத்துகிறார். இது ஆளும் கட்சி தனது அரசியல் நலனுக்காக தொழிலாளர் தினத்தை மலினப்படுத்தும் செயலாகவே காணப்படுகிறது. இதனை ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் தொழிற்சங்கங்கள் ஏற்றிருப்பதுமே இலங்கை தொழிலாளர்களின் துயரமாகும்.

இவ்வங்குரோத்து அரசியலை பகைத்து சில கட்சிகள் தொழிலாளர் தின பேரணியை நடாத்தியே தீருவோம் என மல்லுக்கட்டி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆளும் கட்சி தனது உடைவை மறைப்பதற்காக தொழிலாளர் தின பேரணியை தடை போடுவதை ஏற்க முடியாதென சூளுரைத்துள்ளார்கள். தொழிலாளர் தின பேரணியை நடாத்தா முற்படுவோரும் அரசியல் பலத்தை நிரூபித்தல் என்பதையே பிரதான கருத்தாக கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரா தொழிலாளர் தின பேரணி தடைதொடர்பாக கருத்துரைக்கையில்இ 'ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை முதன்முறையாக மேதின நிகழ்வை நடாத்தவுள்ளது. அக்கட்சி எவ்வாறு இந்த நிகழ்வை நடத்தும் என்பது குறித்து அரசாங்கத்திற்கும் அரசாங்கத்துடன் ஒப்பந்த அரசியலில் ஈடுபட்டவர்களுக்கும் கடுமையான அச்சங்கள் எழுந்துள்ளன.' என அரசியல் பலப்பரீட்சை பிரதானமாக முன்வைத்துள்ளார்.

தொழிலாளர் தின பேரணியை நிகழ்த்துவதில் முட்டிமோதும் அரசியல் கட்சிகளுக்கு தொழிலாளர் நலன் சார்ந்து ஏதேனும் ஆரோக்கியமான பார்வை செயற்றிட்ட வரைபு காணப்படுகிறதா? என்பதை தேடுமிடத்தும் விசனமே பதிலாக கூடியதாகும்.

கொரோனா வைரஸ் தொற்று தொழிலாளர் தின பேரணிக்கு மாத்திரமின்றி தொழிலாளர்களுக்கும் பேரிடராக காணப்படுகின்றது. அன்றாட கூலி வேலை செய்யும் பலரின் வேலையை பொது முடக்ககங்களால் கொரோனா வைரஸ் தடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாடுதழுவிய முடக்கத்தின் போது ஓரளவு உதவித்திட்டங்களை அரசாங்கம் வழங்கி இருந்தது. மேலும் சமூக ஆர்வலர்களும் தேடிதேடி சென்று உதவிகளை வழங்கினார்கள். எனிலும் தற்போதைய கொரோனா பரவுகையில் அடையாளம் காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் தனித்து முடக்குவதனால் அரசாங்கத்தின் உதவி திட்டங்களும் போதியளவில் வழங்கப்படுவதில்லை. சமூக ஆர்வலர்களின் நாட்டமும் குறைவடைந்துள்ளது. இது அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடாத்தும் தொழிலாளிகளின் குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது.

மேலும் கொரோனா தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரின் வேலையை பறித்துள்ளதுடன்இ மீண்டும் 8 மணி நேர வேலை எனும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இணையத்தில் வேலை செய்வதென்பது நேரக்கட்டுப்பாடற்றதாகவே காணப்படூகிறது. இது தொழிலாளர்களிடையே உளவியல் பிரச்சனைகளையும் குடும்ப வன்முறைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா கால தொழிலாளர் இடர் என்பது புதிய ஆய்வு பரப்பாகும். தொழிலாளர் பேரணியை நடாத்தி தங்களது பலப்பரீட்சையை நிரூபிக்க முட்டி மோதும் அரசியல்வாதிகள் கொரோனா காலத்தில் தொழிலாளர் அனுபவிக்கும் துன்பங்களை அறியவும் தீர்வுகளை வழங்கவும் எவ்விதமுன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாய் அறிய முடியவில்லை.

இந்நிலைகள் மாற்றமடைய வேண்டும். தொழிற்சங்கங்கள் தங்கள் அரசியல்நலன்களுக்காக அரசியல்கட்சிகளின் பின்னால் இழுபட்டு செல்லும் நிலை முற்றாக நீங்க வேண்டும். தொழிற்சங்கள் பலமான அமுக்க குழுக்ககளாக அரசியல் கட்சிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் தங்கள் தொழிலாளர்களின் நலன்களை நிறைவேற்றக்கூடிய கட்டமைப்புக்களாக வளர்ச்சியடைய வேண்டும். தொழிலாளர் தினம் பல தொழிலாளிகளின் குருதிகளால் கட்டமைக்கப்பட்டதாகும். அதனை தனிப்பட்ட நலன்களுக்காக அரசியல்வாதிகளினதும் அரசியல்கட்சிகளினதும் சுய தேவைகளுக்காக பயன்படுத்த இடமளிக்க முடியாது. தொழிலாளர்களின் எதிர்கால கனவுகளின் கோரிக்கைகள் வெற்றி பெறவும் கொரோனா இடர்களிலிருந்து தொழிலாளர் சமூகம் மீட்சி பெறவும் நம்பிக்கை தொழிற்சங்கங்கள் புத்துயிர் பெறல் வேண்டும்

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-