சுயமதிப்பீட்டுக்கு உட்படுமா கூட்டமைப்பு? -ஐ.வி.மகாசேனன்-

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய வாக்குகளின் சரிவில்,  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளே பிரதான காரணமாகும். அதன் விளைவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அனுபவித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றிருந்த கூட்டமைப்பினர், 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 10 ஆசனங்களையே பெற்றிருந்தனர். இச்சரிவு 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளிலேயே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அதனை சீராக பகுப்பாய்வு செய்ய தவறியதன் விளைவையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற தேர்தலில் அனுபவித்திருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்கள் சரிவுக்கான காரண காரியங்களை தற்போதும் சரியான பகுப்பாய்வை மேற்கொள்ள தவறியுள்ளார்களோ என்ற எண்ணத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சில செயற்பாடுகள் ஏற்படுத்துகிறது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தொடரும் பலவீனங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.


தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சரிவை ஒர் அரசியல் கட்சியின் சரிவாய் மக்கள் மாற்று அரசியலை நாடுகின்றார்கள் என புறந்தள்ளி தமிழ்த்தேசிய அரசியலை நேசிப்பவர்களால் விலகி செல்ல முடியாது. 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிகூடிய பெரும்பான்மை விருப்பு வாக்குகளை பெற்றவராக தேசிய கட்சியாகியாகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளாரே காணப்படுகின்றார். இது மாற்று அரசியல் என்று எண்ணும் கூட்டம் ஒன்று உண்டு. இதனை மாற்று அரசியலாக கருத முடியாது. இம்முடிவை பேரினவாத தரப்பு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை புறக்கணித்து இலங்கை தேசியத்துக்குள்  வந்துள்ளதாகவே பிரச்சாரங்களை முன்னெடுப்பர். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சாவை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்குகளை அளித்திருந்தனர். கூட்டமைப்பும் அதனையே வழிகாட்டியிருந்தது. அது ஒரு முட்டாள் தனமான அரசியல். 2021ஆம் ஆண்டு மே-19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் சரத் பொன்சேகா யுத்தத்திலிருந்து தமிழ் மக்களை தான் காப்பாற்றியதாலேயே வடக்கு – கிழக்கு மக்கள் அதிகளவில் தனக்கு வாக்களித்ததாகா மார்தட்டுகின்றார். இதனூடாக இராணுவத்தின் போர்க்குற்றங்களையும் மறைக்கின்றார். 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளில் தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளருக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளையும் எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகவே திசைதிருப்பக்கூடியதாகும். 

தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிள் ஏக பிரதிநிதித்துவம் சிதைக்கப்பட்டு, தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் தமிழ்த்தேசிய மக்ககள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் ஆரோக்கியமானவையே ஆகும். தமிழ்த்தேசிய அரசியலுக்குள் போட்டி அரசியல் தமிழ்த்தேசியத்துக்கும் ஆரோக்கியமான விளைவையே ஏற்படுத்த முனைகிறது. தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் தமிழ்த்தேசியத்துக்கான முன்னெடுப்புக்களில் இயன்றளவு ஒற்றுமையாகவே நகர்த்துகிறார்கள். 

எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் ஏற்பட்டுள்ள வாக்கு சரிவுக்கான காரணங்களை சுயமதிப்பீடு செய்து பலவீனங்களை களைய எவ்வித வினைத்திறனான நடவடிக்கைகளையும் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்து 10 மாதங்களாகியும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதையே அண்மைய செய்திகள் சில புலப்படுத்துகிறது.

முதலாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்  யாழ்-கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான கடந்த கால கருத்துக்கள் பல தமிழ் மக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக திசை திருப்பியது. சிலரை அபிவிருத்தியை மையப்படுத்தி தேசிய கட்சிகளின் பின்னால் நகர்த்தியது. பொதுத்தேர்தலின் பின்னர், தமிழரசுக்கட்சியின் பொதுக்குழுவில் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக கடிதங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் எம்.ஏ.சுமந்திரனிற்கு கடிவாளம் போட தவறியுள்ளது. மீளவும் சுமந்திரன் சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் உரையாட ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இனப்படுகொலை சார்ந்து சுமந்திரன் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மேற்குலக அரசியல் தலைவர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தது இனப்படுகொலை என்பதை சுட்டிக்காட்டி வரும் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சர்வதேச ரீதியான இராஜதந்திர தொடர்புகளை பேணும் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இனப்படுகொலைக்கு போதுமான சாட்சியங்கள் இல்லையெனவும் அதனால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறியதை இனப்படுகொலையென கூற முடியாதென புறக்கணிப்பது தமிழர்களை ஆத்திரமடையச் செய்ததுடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து மேலும் விலக்கும் செயற்பாடாகவே காணப்படுகிறது. அத்தகைய இனப்'படுகொலைக்கான சாட்சியங்களை தேட வேண்டி கட்சியும் சுமந்திரன் கூறுவதை மௌனமாக கேட்டுக் கொண்டு இருபட்பது வேடிக்கையானதாக உள்ளது.  

இரண்டாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் மென்வலு அரசியல். இது தமிழ் மக்களினை அழிக்கும் அரசாங்கத்துக்கு துணைபோகும்  செயலாக தமிழ் மக்கள் அச்சம் கொள்கின்றனர். கடந்த ரணில் – மைத்திரி அரசாங்காத்துடன் மேற்கொள்ளப்பட்ட இதயபூர்வமான ஒப்பந்தத்தூடாக மென்வலு அரசியலை நகர்த்திய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை முன்னகர்த்தவில்லை என்ற விமர்சனப்பார்வை தமிழ் மக்களிடையே காணப்படுகிறது. அதன் விளைவே கூட்டமைப்புக்கு ஏற்பட்ட வாக்குசரிவு ஆகும். இந்நிலையில், கடந்த பட்ஜெட் விவாகரத்தில் எதிர்த்து கருத்துரைத்த போதும் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமை. மற்றும் மே-18 (2021) அன்று கறுப்புடையுடன் பாராளுமன்றம் சென்ற போதும், பாராளுமன்றில் மே-18இற்கான நீதிக்கோரிக்கைகளை கடுந்தொனியில் வெளிப்படுத்த தவறியுள்ளமை என்பன தற்போதைய ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கும் கூட்டமைப்பினர் மென்போக்கை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்ற விமர்சனமே தமிழ் மக்களிடம் எழுந்துள்ளது. 

மூன்றாவது, தொடரும் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரதான மூன்று பங்காளி கட்சிகளின் சேர்க்கை ஆகும். இன்று தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் யாவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் இருந்து தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்தால் பிளவுற்று வெளியேறிய கட்சிகளாகவே காணப்படுகிறது. பொதுத்தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை பங்காளி கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனிலும் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்தை வலியுறுத்தப்படுவதால் ஏற்பட்ட பூசலால் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியும் வறிதாகி காணப்படுகிறது.

நான்காவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையிலான உட்கட்சி மோதல். பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் விருப்பு வாக்குகளை மையப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் உட்கட்சி மோதல் செறிந்து காணப்பட்டது. ஒரே கட்சியினுள்ளேயே ஒரு வேட்பாளர் தொடர்பிலேயே மற்றைய வேட்பாளர் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தனர். அவர்களது ஆதரவாளர்களும் தரக்குறைவான முறையில் சமூக வலைத்தளங்களில் முட்டி மோதிக்கொண்டு உள்துர்நாற்றங்களை வெளியே தூறு வாரினார்கள். பொதுத்தேர்தல் முடிவுற்ற பின்னரும் இன்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே பூசல்கள் மிதமிஞ்சி காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியினுள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சில உறுப்பினர்கள் வெளிப்படையிலேயே முட்டி மோதுகின்றார்கள். யாழ்ப்பாண மாநகர சபையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளமையும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடையேயான ஆதிக்க மோதுகையையே காரணமாகும். 

ஐந்தாவது, பலவீனமான தலைமையாகும்.  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தோல்வி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படாமைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரதான கட்சியாகிய தமிழரசுக்கட்சிகளின் தலைமைகளின் பலவீனங்களே காரணமாகும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முதுமையின் காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் நாட்கள் குறைவாக காணப்படுகின்றது. ஏறத்தாழ மூன்று மாதங்களாக இரா.சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு செல்லவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை தீர்மானம் எடுக்காது இரா.சம்பந்தன் அவர்களே காலத்தை தாழ்த்தி வருகின்றார். பலமான தலைமை உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே நிலவும் பூசலை தவிர்க்க முடியாமையும் தலைமையின் பலவீனத்திலேயே காணப்படுகிறது. இவ்வாறே தமிழரசுக்கட்சி தலைமையும் உறுதியான முடிவுகளை எடுக்கதிராணியற்ற தலைமையாக காணப்படுகிறது.

மேற்குறித்த, பதிவுகளின் தொகுப்பு 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஏற்பட்ட சரிவுகளின் பின்னரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தன்னை சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்தி பலவீனங்களை களைய விருப்பற்று செயற்படுவதையே பறைசாற்றுகிறது. இதன் விளைவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அஸ்தமனப்படுத்துவதுடன் தமிழ்த்தேசிய கருத்தியலையும் சிதைக்கக்கூடிய வாய்ப்பே காணப்படுகிறது. 

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-