ஸ்கொட்லாந்து தனி அரசாகுமா? ; நிக்கோலா ஸ்ரேஜன் மற்றும் போரிஸ் ஜோன்சன் மோதல் -ஐ.வி.மகாசேனன்-
ஜனநாயக உரையாடல்கள் அதிகமாக இடம்பெறும் ஐரோப்பிய தேசங்களில் சமீப காலங்களில் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டு கோரிக்கைகளும் அதற்கெதிரான ஆதிக்க அரசசுகளின் செயற்பாடுகளும் அதிகமாகவே இடம்பெற்று வருகிறது. மே-6 ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற தேர்தலின் பின்னர் ஸ்கொட்லாந்து அரசியல் வெளியல் சுதந்திரம் பற்றிய உரையாடல்கள் மேலெழுந்துள்ளது. 2014ஆம் ஆண்டிலும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திர கோரிக்கையை ஸ்கொட்லாந்து முன்னெடுத்து பொதுவாக்கெடுப்பையும் நிகழ்த்தியது. எனினும் அன்று ஸ்கொட்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் ஐக்கிய இராச்சிய முடிக்குள்ளேயே வாழ்ந்திட விருப்பத்தை தெரிவித்து பொதுவாக்கெடுப்பை தோற்கடித்தனர். அதனை தொடர்ந்து ஸ்கொட்லாந்து சுதந்திர உரையாடல்களும் சிறிது மௌனித்திருந்தது. மீள தற்போது ஸ்கொட்லாந்து சுதந்திர கோரிக்கை அதிகமாகவே பொதுவெளியில் உரையாடப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்கொட்லாந்து தொடருமா என்பதே தற்போதைய உலக அரசியல் உரையாடலாக ஆரம்பித்துள்ளது. அவ்உரையாடலை மையப்படுத்தியே இக்கட்டுரையும் ஸ்கொட்லாந்து சுதந்திர கோரிக்கையை அதன் வரலாற்றிலிருந்து தேடுகிறது.
'ஸ்கொட்லாந்தின் மக்கள் முன் மீண்டும் தனிநாட்டுக்கான சுதந்திர வாக்கெடுப்பை முன்வைப்போம், தனி நாடு எமது மக்களின் கோரிக்கை! ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய ஒரே மக்கள் ஸ்கொட்லாந்தின் மக்களே, எந்த வெஸ்ட்மினிஸ்டர் (இங்கிலாந்து) அரசியல்வாதியும் எதிர்த்து நிற்க முடியாது' என ஸ்கொட்லாந்து முதல் மந்திரி நிக்கோலா ஸ்ரேஜன் (Nicola Sturgeon) ஸ்கொட்லாந்து தேர்தல் பிரச்சாரத்தில் எச்சரிக்கை விடுத்தார். எனினும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொடர்ச்சியாக ஸ்கொட்லாந்து சுதந்திர பொதுவாக்கெடுப்பை நிராகரித்தே வந்துள்ளார். போரிஸ் ஜான்சன் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகையில் ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி கருத்து தெரிவிக்கையில், 'தற்போதைய சூழலில் ஒரு வாக்கெடுப்பு பொறுப்பற்றது மற்றும் அஜாக்கிரதையானது என்று நான் நினைக்கிறேன்.' எனக் கூறியுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் சுதந்திர உரையாடலில் ஸ்கொட்லாந்தின் வரலாறு அறிதலும் அவசியமாகிறது. 'கோணிஷ்', 'வெல்ஷ்', 'ஸ்கொட்டிஷ்' இனக்குழும தேசிய அடையாளங்களின் வீழ்ச்சிகளின் துணையுடனேயே பிரித்தானியத் தேசிய அடையாளம் எழுச்சி பெற்றுள்ளது. மத்தியகால ஐரோப்பாவில் தனித்துவமான அடையாளங்களுடன் தோற்றம் பெற்ற ஸ்கொட்லாந்து, நீண்டகாலமாகத் தனியான அரசாக முடியாட்சியைக் கொண்டிருந்தது. ஆயினும், தொடர்ச்சியான நெருக்கடிகளும் பாதுகாப்பின்மையும் 1603ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் ஒரே மன்னரை முடியாகக் கொள்வதற்கு வழியேற்படுத்தியது. 1707ஆம் ஆண்டு, ஸ்கொட்லாந்து இங்கிலாந்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டிருந்தது. 'இங்கிலாந்திடம் இருந்து தங்கத்தை வாங்குவதற்காக விற்கப்பட்டவர்கள் நாங்கள்;' என ஸ்கொட்லாந்தின் பிரபல கவிஞரான ரொபெட் பேர்ன்ஸின் ஸ்கொட்லாந்து மக்களின் அவலத்தை பாடலாய் உருவாக்கியுள்ளார்.
பிரித்தானியாவுடன் இணைக்கப்பட்ட காலம் முதல், ஸ்கொட்லாந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுவதும் பின்னர் அமுங்கிப் போவது என்பதும் கடந்த முந்நூறு ஆண்டு கால வரலாறாக பதிகிறது. ஸ்கொட்லாந்தின் வடகடலில் 1970இல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய், ஸ்கொட்டிஷ் தனிநாட்டுக் கோரிக்கையை முன்தள்ளியது. இதன் விளைவாக அதிகாரப் பகிர்வைக் கோரி, 1979இல் நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 52சதவீதத்துக்கு 48சதவீதம் என்றவகையில் வெற்றி பெற்றபோதும் மொத்த வாக்காளர்களில் 40 சதவீதமானவர்கள் வாக்களிக்கவில்லை என்று காரணம் காட்டப்பட்டு ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 1994இல் மீண்டுமொருமுறை அதிகாரப் பகிர்வைக் கோருவதற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் 75 சதவீதமானவர்கள் (மொத்தத்தில் 45சதவீதம்) அதிகாரப் பகிர்வைக் கோரிவாக்களித்ததன் விளைவாக அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு பிரித்தானியா ஆளானது. 1998இல் ஸ்கொட்லாந்துக்கான தனியான நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோடு, ஸ்கொட்லாந்தின் உள்நாட்டு அலுவல்கள் மீதான முழுமையான கட்டுப்பாடும் அந்தாடாளுமன்றத்திடம் பாரப்படுத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டு தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 55சதவீதமானவர்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாவதற்கு எதிராக வாக்களித்தனர். அதனுடன் சுதந்திர கோரிக்கை சற்று மௌனித்தாலும், சுதந்திர தனி நாட்டை அடைவதை இலக்காகக் கொண்டு 1934இல் கட்டமைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தொடர்ச்சியாக தனி நாட்டு பிரிவினைக்கான நியாயப்பட்டை மக்களிடம் தெளிவுபடுத்திக் கொண்டெ இருந்தார்கள்.
தற்போது மீள ஸ்கொட்லாந்து சுதந்திர கோரிக்கை வலுப்பெற காரணமாக அமைவது 'பிரிக்ஸிட்' ஆகும். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்புக்கான பிரசாரத்தின் போது, பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஸ்கொட்லாந்து வாக்களித்தால், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் பிரிந்து செல்லநேரிடும். அவ்வாறு நிகழுமிடத்து ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரத்தை சிதைக்கும் என ஸ்கொட்டிஷ் அச்சுறுறுத்தப்பட்டார்கள். எனினும் 2016இல் நடைபெற்ற, பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிக்ஸிட் வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்தில் 62சதவீதமானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்புவதாகவும் 38சதவீதமானவர்கள் விலக விரும்புவதாகவும் வாக்களித்தனர். ஆனால் ஒட்டுமொத்த முடிவுகள், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு விரும்புவதைக் கோடுகாட்டி பிரிக்ஸிட் 2020ஆம் ஆண்டு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து மக்களின் விருப்பத்துக்கு முரணான முறையிலும் ஸ்கொட்டிஷ் நலன்களுக்கு பாதகமானதாகவும் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டுர்ஜியோன் தலைமையிலான ஸ்கொட்லாந்து தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்டது. அதனைமுன்னிறுத்தியே பிரிந்து போவதற்கான விருப்பை அறிவதற்கான இன்னொரு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமையை ஸ்கொட்லாந்து தேசிய கட்சி கோரியுள்ளது. அதனையே 2021-மே நாடாளுமன்ற தேர்தலில் முதன்மைப் பிரச்சாரமாக முன்வைத்திருந்தது.
மே-06 ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி, சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு பிரச்சாரத்தை முன்னகர்திய ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி (SNP) 129 இடங்களில் 64 இருக்கைகளை வென்றெடுத்து அறுதிப் பெரும்பான்மையை பெற தவறிய போதிலும் பெரும்பான்மையை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் அதிகாரத்தினை வென்றுள்ளது. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தனித்து அறுதிப்பெரும்பான்மையை பெற தவறிய போதிலும் சுதந்திர ஆதரவாளர்களான பசுமைவாதிகளுடனும் இணைந்து 129 இடங்களில் 72 இடங்களை சுதந்திர ஆதரவாளர்கள் கொண்டுள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் ஸ்கொட்லாந்து மக்கள் மீள சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பை நிகழ்த்த விரும்புகிறார்களா? இல்லையா? என்ற குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற தேர்தல் முறையின் கீழ் சுதந்திர சார்பு கட்சிகள் தொகுதி வாக்குகளில் 49% வாக்குகளையும், பிராந்தியபட்டியல்களில் 50.1%வாக்குகளையும் பெற்றன. இது மக்கள் உறுதியான முடிவுகளை வெளிப்படுத்தாமையையே சுட்டிநிற்கிறது.
தேர்தல் முடிவுகளின் பின் கடந்த மே-09அன்று ஸ்கொட்லாந்தின் முதல் மந்திரியாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிக்கோலா ஸ்ரேஜன், பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான தொலைபேசி உரையாடலில் ஸ்கொட்லாந்து இங்கிலாந்தில் இருந்து பிரிந்துசெல்வது குறித்த மற்றொரு வாக்கெடுப்பு இப்போது தவிர்க்கமுடியாதது என்றே தொடர்ந்தும் கூறியுள்ளார். எனினும் நிக்கோலா ஸ்ரேஜன் தனது உரையாடலில் சிறு தயக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறித்த உரையாடலில், 'நெருக்கடி முடிந்ததும் ஸ்கொட்லாந்து மக்கள் எங்கள் சொந்த எதிர்காலத்தைத் தேர்வு செய்ய முடியும். வாக்கெடுப்பு பற்றிய கேள்வி இப்போது இல்லாத போதும் ஒரு விடயமாக உள்ளது.' என பொதுவாக்கெடுப்பு விடயத்தை சற்று கிடப்பில் போட்டுள்ளமையானது நிக்கோலா ஸ்ரேஜன் தேர்தல் முடிவுகளின் பின்னர் நம்பிக்கையை இழந்துள்ளாரா? என்ற பார்வையையும் அரசியல் ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்கொட்டிஷ் சுதந்திர தனி நாட்டை அடைவதை இலக்காகக் கொண்டு போட்டியிட்ட ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி முதன் முறையாக ஆட்சிக்கு வந்தது. ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டிராத ஆளும் கட்சி என்ற வகையில் தனி நாட்டுக்கான பொது வாக்கெடுப்பைக் கோர அவர்களால் முடியவில்லை. இதனை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர்களுக்குக் கிடைத்தது. எனினும் 2011ஆம் ஆண்டு தேர்தலிலும் தனித்த அறுதிப்பெரும்பான்மையை பெறாத நிலையிலேயே, 2014ஆம் ஆண்டு தனி நாட்டுக்கான பொது வாக்கெடுப்பை நடாத்தியிருந்தார்கள். எனிலும் 2014இல் நடைபெற்ற தனிநாட்டுக்கான சுதந்திர வாக்கெடுப்பில் 55%க்கு 45% ஆக ஐக்கிய இராச்சியமாக பிரித்தானியாவுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாகவே மக்கள் வாக்களித்திருந்தார்கள். தாக்கம் சுதந்திர தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு சாதகமானதாக காணப்படுகின்ற போதிலும், சுதந்திர தனி நாட்டு கோரிக்கையை முதன்மைப் பிரச்சாரமாக மேற்கொண்ட தேர்தல் முடிவுகள் அறுதிப்பெரும்பான்மையை தராமை பொது வாக்கெடுப்பு மீள நிகழ்த்தப்படுமாயின் கூட வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
ஆதிக்கம் செலுத்தும் இரண்டு அரசியல் பிரமுகர்களுமான நிக்கோலா ஸ்ரேஜன் மற்றும் போரிஸ் ஜான்சன் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்க்கமான முடிவுகளை முரண்நகையாய் எடுத்து அதனை செயற்படுத்துவதை இலக்காக கொண்டே உரையாடல்களை முன்னகர்த்துகிறார்கள். நிக்கோலா ஸ்ரேஜன், போரிஸ் ஜோன்சனுடனான உரையாடலில் பொது வாக்கெடுப்பை தள்ளிப் போடும் வகையில் உரையாடினும், மறுமுனையில் பொது வாக்கெடுப்பு தொடர்பான காரசாரமான கருத்துக்களையே பொது வெளியில் உரையாடுகிறார். அவ்வாறே போரிஸ் ஜோன்சனும் கொரோனா நெருக்கடியை காரணங்காட்டி இது மற்றொரு பொது வாக்கெடுப்புக்கான நேரம் அல்ல என உதறித்தள்ளுகின்ற போதிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற சாதகமான பதிலளிக்காமையானது போரிஸ் ஜோன்சனும் தனது ஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கான எதிர்ப்பு கொள்கையிலேயே இறுக்கமாக உள்ளார் என்பதையே உணர்த்துகிறது. இது ஜனநாயகத்தின் தாயகத்தின் இரட்டை நிலைப்பாட்டின் சாட்சியமுமாகிறது. அரசியல் என்பது ஆச்சரியங்கள் நிறைந்ததென்பதாலேயே சுவாரசியமானது. ஏனெனில், அது வரலாற்று முடிவுகளால் தீர்மானிக்கப்படுவது.
Comments
Post a Comment