சுதந்திரமற்ற சூழலில் ஊடக சுதந்திர தினம்! -ஐ.வி.மகாசேனன்-
உலகம் மே-03ஆம் திகதியை ஊடக சுதந்திர தினமாக (World Press Freedom Day) சிறப்பிக்கிறது. ஜனநாயக வெளியில் ஊடகத்தின் வகிபாகம் கனதியான நிலையை பெறுகிறது. ஜனநாயக இருப்பில் ஊடகம் பெறும் முக்கியத்துவத்தினாலேயே ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும் ஊடகம் சிறப்பிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க முற்படும் இலங்கை அரசியல் பரப்பில் பத்திரிகை ஊடகங்களின் சுதந்திரம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது என்பது துயரமான பதிவாகவே காணப்படுகிறது. இந்நிலையிலேயே இக்கட்டுரை ஊடக சுதந்திரம் பற்றிய உரையாடல் காலப்பகுதியில், இலங்கை அரசியலில் ஊடக சுதந்திரத்துக்கு காணப்படும் அச்சுறுத்தலை தேடுவதாக இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான
உலக ஊடக சுதந்திர தினத்தின் மையக்ககருத்தாக 'ஒரு பொது நன்மையாக தகவல்' (Information as a Public
God) என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தகவல்களை
ஒரு பொது நன்மையாக மதிப்பிடுவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான அழைப்பாகவும்,
பத்திரிகையை வலுப்படுத்த உள்ளடக்கத்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் வரவேற்பு ஆகியவற்றில்
என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்கும், யாரையும் பின்னால் விடாமல் வெளிப்படைத்தன்மை
மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் இது உதவுகிறதென யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
ஊடக சுதந்திரத்திற்கான
உரையாடல்கள் சர்வதேச வெளியில் ஆழமாக காணப்படுகின்ற போதிலும், மறுபுறம் உள்ளக மோதல்கள்
மற்றும் வன்முறைகளை காரணங்காட்டி ஊடக சுதந்திரம் பறிபோகும் நிலையும் சர்வதேச அரங்கில்
ஊடக சுதந்திரத்தின் அவலமாக காணப்படுகிறது.
இலங்கை கடந்த 30ஆண்டுகளில்
உள்நாட்டு போரை காரணங்காட்டி பல ஊடகவியாலாளர்களை இழந்துள்ளது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு
ஒரு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்றுவரை அவ்இழப்புகளுக்கு நீதியை பெற முடியவில்லை.
இதுவே இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் நிலையை மதிப்பிட வலுவான சான்றாகிறது.
இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கான
அச்சுறுத்தல் இன்றும் தொடர்கிறது. சமீபத்திலும் ஊடகங்களுக்கு ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலை
இலங்கையின் ஜனாதிபதியே வழங்கி இருந்தார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நுவரெலியா மாவட்டத்தின்
வாலாபேன் பிரதேச செயலக பிரிவில் உள்ள யொம்புவெல்டென்னா கிராமத்தில் மார்ச் 20ஆம் திகதி
நடைபெற்ற 'கிராமத்துடனான கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் பங்கேற்று ஊடகவியலாளர் குறித்து
அளித்த அறிக்கை, அச்சுறுத்தும் தொனியில் ஊடக
சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தான சமிக்ஞையை அளிக்கிறது.
'இது ஒரு மாஃபியா,
நம் நாட்டில் மன்னர்கள் இல்லை, மகாராஜாக்கள் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தனர். சில ஊடக உரிமையாளர்கள் நாட்டை அவர்கள் விரும்பும்
வழியில் இயக்க விரும்புகிறார்கள். அது என்னுடன்
சாத்தியமில்லை. அவர்கள் கற்பிக்கப்பட வேண்டுமானால்
ஒரு பாடத்தை எவ்வாறு கற்பிப்பது என்பது எனக்குத் தெரியும். ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். நான் ஊடகங்களில் எந்த செல்வாக்கையும் செலுத்தவில்லை. அவை தவறாகப் பயன்படுத்தினால், சட்டரீதியான தீர்வுகள்
உள்ளன. அவர்கள் மட்டுமல்ல, ஒரு தேசிய சித்தாந்தம்
கொண்டவர்களும் கூட தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். போரின் போது எங்களுக்கு எதிராக பணியாற்றியவர்கள்
மீண்டும் தோன்றியுள்ளனர், அவர்கள் அவற்றில் இருக்கிறார்கள்.' என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இவ்அறிக்கை
இராணுவ பாணியிலாக ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுவதாகவே அமைந்துள்ளது. ஜனநாயக வழிமுறையில்
ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஆட்சி தலைவர் இராணுவ தொனியில் ஜனநாயகத்தின் தூணாக உள்ள ஊடகங்களை
முடக்கும் வகையில் கருத்துரைப்பது இலங்கையில் ஜனநாயகம் தோற்றுப்போகிறதையே பறைசாற்றக்
கூடியதாகும்.
கடந்த காலங்களிலும்
இன்றைய ஆட்சியாளர்களின் அன்றைய ஆட்சிக்காலப்பகுதியில் ஊடகங்களின் சுதந்திரம் என்பது
கேள்விக்குறியாகவே காணப்பட்டது. 2005-2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலக ஊடக சுதந்திர
குறிகாட்டியில் இலங்கை 160-170க்கு இடைப்பட்ட இடத்தையே தொடர்ச்சியாக பெற்று வந்தது.
குறித்த காலப்பகுதியில் இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது,
இலங்கை பத்திரிகை சுதந்திரத்திற்கான 'இருண்ட தசாப்தம்' என்று அழைக்கப்பட்டது, அரசாங்கத்திற்கு
அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கடத்தப்பட்டனர் அல்லது
கொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை ராஜபக்ஷ
சகோதரர்கள் பலமுறை நிராகரித்துள்ளனர். அவ்இறுக்கமான நிலைமை மீளவும் தற்போது உருவாக்கம்
பெற்றுள்ளமையையே ஜனாதிபதியின் அண்மைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
மக்களிடம் இருந்து உண்மையை அரசு மறைத்தால், அந்த உண்மையை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டியது, பத்திரிகையாளனின் கடமை என்று ஹிந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் கூறியுள்ளார். ஊடகவியலாளனின் இக்கடமை நிறைவேற்ற ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உறுதிப்பபடுத்தல்களும் அவசியமாகிறது. ஊடக சுதந்திர தினத்திற்கு ஊடக சுதந்திரத்தை வாயாற புகழ்ந்துரைக்கும் அரசியல் தலைமைகள் ஊடகங்கள் மீது செலுத்தும் அச்சுறுத்தல்களை நீக்குவார்களாயினாலே ஊடக சுதந்திரம் பாதுகாக்க கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment