இந்திய தேர்தல் வியூக நிபுணர் குழு; தேர்தல் ஜனநாயகத்தை சிதைக்கின்றனவா? -ஐ.வி.மகாசேனன்-
02.05.2021 அன்று இந்தியாவின் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. இந்தியாவில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு உட்பட்ட தேர்தல்கள் அரசியல் கட்சிகள், தொண்டர்களை நம்பியிருந்த நிலை மாறி, தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அரசியல் ஆலோசனை கூறுவோரை நம்பும் நிலை உருவாகி உள்ளது. ஒரு தலைவரை, நல்லவராக மக்களிடம் உருவகப்படுத்துவதும், கெட்டவராக மாற்றுவதும், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் எளிதாகிறது. இந்நிலை மக்களாட்சி எனப்படும் தேர்தல் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் அவலமாகும்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் தேர்தல் வியூக நிபுணத்துவம் என்ற போர்வையில் இடம்பெறும் ஜனநாயக படுகொலையை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களுக்கு அப்பால் அதிகமாக உரையாடப்பட்டதாக தேர்தல் வியூகங்களை மேற்கொண்ட நிபுணத்துவர்களையும் அவர்களது நிறுவனங்களை பற்றிய உரையாடல்களே அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பிரசாந்த் கிசோர் மற்றும் அவருடைய நிறுவனமான ஐ-பக்(I-PAC) பற்றிய உரையாடல் தேர்தல் காலப்பகுதியில் அதிகமாகவே காணப்பட்டது.
ஐ.நா.வில் மேற்கு ஆபிரிக்காவின் பொது சுகாதார மேற்பார்வையாளராக கடமையாற்றி வந்த பிரசாந்த் கிசோர் 2007ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்புகையில், இந்தியாவின் பொதுநல அபிவிருத்தியின்மையை கண்டார். அதனை சீர் செய்ய அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸின் இளநிலைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு திட்டங்களை சமர்ப்பித்தார். எனிலும் அது நிராகரிக்கப்படவே குஜராத் முதலமைச்சர் மோடியை நாடி சென்றார். இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தினுள் நுழைய ஈடுபாடு கொண்ட பிரசாந்த் கிசோர் நரேந்திர மோடியின் குஜராத் முதலமைச்சர் தேர்தலில் முதல்முறையாக தேர்தல் வியூகத்தை கட்டமைத்து மோடியை மூன்றாவது முறையாக குஜராத்தின் முதலமைச்சராக்கினார். 2013ஆம் ஆண்டு தேர்தல் வியூகத்தை ஒரு நிறுவனக்கட்டமைப்பாக்கி சி.ஐ.ஜி எனும் நிறுவனத்தையும் நிறுவினார். இதனூடாகவே, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்கான தேர்தல் வியூக செயற்பாடுகளை முன்னெடுத்தார். தேர்தல் முடிவின் பின் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிசோர், 'பி.ஜே.பி-இன் இந்த மாபெரும் வெற்றிக்கு சூத்திரதாரியாக இருந்ததே நான்தான்' என்று அறிவித்தார். சி.ஐ.ஜி-யை அரசாங்க ஆலோசனைக்குழுவாய் நிறுவும் நோக்கில் I-PAC (Indian Political Action) என பெயரும் மாற்றி கொண்டார். எனினும் பி.ஜே.பி தலைமைகள் இதனை நிராகரித்து, பிரசாந்த் கிசோர்-பிஜே.பி உறவு தனித்த தொழில்முறை சார்ந்ததென அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஐ-பக் கட்சிகள், கொள்கைகள் பேதமின்றி முழுநேராக கார்ப்பரேட்டாக மாற்றி கொண்டது. இதனூடாக பணம் தரும் தரப்பினை தேர்தலில் மக்களிடம் நல்லவராக தோற்றப்படுத்தி வெற்றி பெறச்செய்யும் செயற்பாட்டை முன்னெடுத்தது. பீஹாரில் நிதிஸ் குமார், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வெற்றிகளுக்கு பின்னால் பிரசாந்த் கிசோர் எனும் நிறுவனத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. 2014இல் பாஜக மற்றும் நரேந்திர மோடியின் மகத்தான வெற்றியில் தனது பங்கைக் கொண்டு தேசிய முக்கியத்துவத்திற்கு உயர்ந்த பிரசாந்த் கிசோர், தற்போது அதே கட்சி ஆழ்ந்த ஆசை கொண்ட மேற்கு வங்கம் மாநிலத்தில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தை தோற்கடிக்க உதவியுள்ளார். இது இதுவரை அரசியல்வாதிகளை மட்டுமே நம்பி அரசியல் செய்து பழக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுக்கு, நிறுவன அரசியல் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்துகின்றது. இது தேர்தல் ஜனநாயகத்தை தேர்தல் வணிபமாக உருமாற்றவே வழகோலுகிறது.
பிரசாந்த் கிசோரின் ஐ-பக் நிறுவனம் சமீபத்திய இந்திய மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் வியூகங்களை அமைக்க உள்ளாரெனும் அறிவித்தலை, தமிழகத்தின் பழம்பெரும் கட்சியும் நாடளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமையாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார். இச்செயல் தி.மு.க கட்சியின் பெருமையயை விட ஐ-பக் பெரிதாக அடையாளப்படுத்துவதாகவே காணப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை பணம் செலுத்தி நிறுவனரீதியான தேர்தல் வியூகங்களை கட்டமைப்பதென்பது கடந்த கால தேர்தல்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகத்துக்கான தேர்தல் வியூகங்களை வகுத்ததாக ஓ.எம்.ஜி நிறுவனமே காணப்படுகிறது. ஓ.எம்.ஜி நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு சுனில் என்பவர் வந்தபிறகு நமக்கு நாமே பயணம், மக்கள் சந்திப்பு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு என்று புதிய யுக்திகளை தி.மு.க-வுக்குள் கொண்டுவந்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலையை தமிழகத்தில் ஏற்படுத்தியதில் தி.மு.க-வின் ஐ.டி விங் பங்கு மிகமுக்கியமானது. அதற்கு மூளையாகச் செயல்பட்டவர், சுனில். இதன் காரணமாக, சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், சுனில் வகுத்து தந்த பாதையில் செயல்பட்ட காரணத்தால் லோக்சபா தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கான வியூகங்களை கட்டமைத்தவராகவும் சுனிலே உள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை அவரது ஆலோசனைப்படியே தகவல் தொழில்நுட்ப அணியை மாற்றி அமைத்தது. அந்த அணியினர் 2016ஆம் சட்டசபை தேர்தலில் யாருடைய ஆலோசனையும் இல்லாமல் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்தனர். எனினும் சமீபத்திய தேர்தல் வியூக மோக அதிகரிப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் பிரசாந்த் கிசோரை தேர்தல் வியூக நிபுணராக நியமித்துள்ளமை எனும் அழுத்தங்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் தேர்தல் வியூகங்களுக்கு அதுசார் வளர்ந்து வரும் நிறுவன கட்டமைப்பை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்தகாலங்களிலும் தேர்தல் வியூக நிபுணர்கள் தமிழக அரசியலில் தாக்கம் செலுத்திய போதிலும், அத்தாக்கங்கங்கள் தரவுகளை அளித்து வியூகங்களை ஆலோசனை கூறும் பொறிமுறையாக மாத்திரமே காணப்பட்டுள்ளது. எனினும், இன்று தேர்தல் வியூக பொறிமுறையில் ஆதிக்கம் செலுத்தும் ஐ-பக் நிறுவனம் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தெரிவு செய்வதிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இதுசார்ந்து தி.மு.க நிர்வாகிகளிடையேயே பெரிய குழப்பங்கள் நிலவியது. எனிலும் ஐ-பக்கின் ஆதிக்கமே இறுதியில் உச்சம் பெறுவதாக காணப்பட்டது. இது தேர்தல் வியூக நிபுணர் குழுவின் வளர்ச்சியை குறித்து காட்டுகிறது. ஏதிர்காலங்களில் இதன் வளர்ச்சி கட்சி ஆதிக்கத்திலும் அதிகரிக்கலாம்.
தேர்தல் வியூகங்களூடாக மக்களின் எண்ணங்களை மாற்றும் செயல்முறை இந்தியாவிற்கு முதலே அமெரிக்காவில் நீண்ட காலமாகவே செயற்பட்டு வருகிறது. தேர்தல் வியூக நிபுணர் குழு பற்றிய உரையாடலை தமிழ் சமுகத்திற்கு அறிமுகப்படுத்தியது தமிழக தேர்தலாயினும், அமெரிக்காவில் இதன் ஆதீக்கம் நீண்ட காலமாகவே காணப்படுகிறது. எனினும் அமெரிக்க போன்ற உயர் அரசியல் கலாசாரமுடைய நாடுகளில் மக்கள் இலகுவில் தொழில்நுட்ப மாயைகளுக்குள் தமது அரசியல் விருப்பை மாற்றிக்கொள்ள போவதில்லை. அவ்வாறு மாற்றி கொண்டாலும், தங்கள் விருப்புக்களை ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்றுகிறார்களா? என்ற அவதானமும் அதிகளவு காணப்படும். ஆட்சியாளர்கள் தவறிழைக்கும்பட்சத்தில் சரியான பாடத்தையும் புகட்ட தவறியதில்லை. இதனை ட்ரம்ப் மறுதேர்தலில் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ட்ரம்ப் தகவல் தொழில்நுட்ப உதவிகளை அதிகம் பயன்படுத்தி 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போதிலும் சரியான ஆளுமையாக ஆட்சிக்காலப்பகுதியல் செயற்படாமையால் மறுதேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தார். இந்தியா போன்ற அரசியல் கலாசாரம் வளர்ச்சியுறாத தேசங்களில் தேர்தல் வியூக நிபுணர் குழுவின் செயற்பாடானது மக்களின் விருப்புக்களை புறந்தள்ளுவதோடு, ஜனநாயகத்தை புதைத்து பணநாயகத்தை வளரவே செய்கிறது.
அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி, மக்களின் மனங்களை மாற்றி தேர்தல் வெற்றிகளை பெற்று ஆட்சியை உருவாக்குதற்கு தேர்தல் வியூக நிபுணர் குழுக்களை/ நிறுவனங்களை நாடுவதென்பது ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளும் செயலாகும். மக்களால் மக்களுக்காக மக்கள் பங்கேற்புடன் கொண்டு செல்லப்படும் ஆட்சியே ஜனநாயம் ஆகும். ஜனநாயக ஆட்சியில் மக்களது தேவைகளின் அடிப்படையில் அரசு ஆளப்படும். மேலும், மக்களின் தேவைகளையும் விருப்பத்தையும் கண்டறிவதற்காக பயன்படுத்தப்படுகின்ற முக்கியமான சாதனமாக தேர்தல்கள் காணப்படுகின்றன. எனிலும் இங்கு தேர்தலூடாக மக்கள் தேவைகள் விருப்பங்கள் அறியப்படாது, மக்களுக்கு எது தேவை மற்றும் விருப்பம் எனும் தோற்றப்பாட்டை தொழில்நுட்ப வல்லமைகளை பயன்படுத்தி தேர்தல் வியூக நிபுணர் குழு உருவாக்குகிறது. மக்கள் எந்த கேள்விகளை கேட்பார்கள் என விடுத்து இந்த கேள்வியை தான் மக்கள் கேட்க வேண்டும் என சூழ்நிலையை மாற்றி அமைத்து, மக்களின் உளவியலை அறிந்து அதே நீரோட்டத்தில் சென்று அவர்களையே மாற்றும் வல்லமையை தேர்தல் வியூக நிபுணர் குழுக்கள் பயன்படுத்துகிறது.
ஒரு வெற்றிகரமான பிரச்சாரம் அதிக பணத்தை செலுத்தும் ஒன்றல்ல. வேட்பாளர் அவரது வாக்காளர்கள் தன்னைத் தேர்ந்தெடுப்பதற்கு தனது வாக்காளர்களை எவ்வளவு பாதிக்கிறார் என்பதன் மூலம் ஒரு வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரம் தீர்மானிக்கப்படுகிறது. எனிலும் தேர்தல் வியூக நிபுணர் குழுவின் செயற்பாடானது அதிக பணத்தை செலவழிக்கும் தரப்பிற்கு வெற்றி வாய்ப்பை உருவாக்குகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் வியூக செயற்பாட்டிற்காக ஐ.பக் நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாவிற்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாக தமிழக செய்திப்பரப்பு குறிப்பிடுகின்றது. அதிகளவு நிதியை செலவு செய்து ஆட்சி அதிகாரத்திற்கு வருகையில், செலவு செய்த பணத்தை முதலீடாகவும் ஆட்சி அதிகாரத்தை நிறுவனமாகவும் நினைத்து இலாபத்தை சம்பாதிக்கவே ஆட்சியாளர்கள் எண்ணுவார்கள். இது தேர்தல் ஜனநாயகத்தை புதைத்து ஊழல் அரசாங்கத்தையே உருவாக்க வழிகோலுகிறது.
வளர்முக நாடுகள் பலவற்றிலேயே இன்றும் வாக்குச்சீட்டை பயன்படுத்துகையில், இந்தியா வாக்குச்சீட்டில் புள்ளடி இடுவதற்கு பதிலாக இயந்திர வாக்களிப்பு முறைமை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்முறைமையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வல்லமைகள் பொருந்திய தேர்தல் வியூக நிபுணர்கள் குழுவை அதிக பணச்செலவில் அரசியல்வாதிகள் பயன்படுத்துகையில் இயந்திரங்களை ஊடுருவி (ர்யஉம) முறையற்ற விதத்தில், மக்களால் புறக்கப்பட்டவரை வெற்றி பெறச்செய்யக்கூடியதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகிறது. இதுசார்ந்த விமர்சனமும் இந்தியாவில் ஒவ்வொரு தேர்தல் காலத்திலுமே முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆலோசகர் நெறிமுறைகள் தொடர்பான வாஷிங்டன் போஸ்ட் இதழில் ஆய்வில் 40மூ ஆலோசகர்கள், 'போதுமான பணம் தரப்படின், பலவீனமான வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வாக்காளர்களை மாற்ற முடியும்' என உறுதிபட கூறுகிறார்கள். இது மக்களுக்கான ஆட்சி எனும் ஜனநாயக கோட்பாட்டை தேர்தல் வியூக நிபுணர் நிறுவன கலாசாரம் சிதைக்கின்றது என்பதனையே வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் தேர்தல் ஜனநாயக அரசியல் கலாசாரத்தையே முழுமையாக பின்றபற்றாத இந்தியாவில் வியாபித்துள்ள தேர்தல் வியூக நிபுணர் கலாசாரமானது, இந்தியாவில் தேர்தல்களில் மாத்திரமாவது வெளிப்பட்டு நின்ற ஜனநாயகத்தை முழுமையாய் அழிக்க வல்லதாகவே காணப்படுகிறது. தமிழகத்தேர்தலில் வியாபித்த தேர்தல் ஜனநாயகத்தை நிர்மூலமாக்கும் தேர்தல் வியூக நிபுணர் நிறுவன கலாசார வாடை நிச்சயம் விரைவில் இலங்கையின் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. அதிக உரையாடல்களை திறந்து விழித்து கொள்வோம்.
Comments
Post a Comment