புலம்பெயர் தமிழர் அரசியல் செல்வாக்கை ஒருங்கிணைக்க தவறுகிறது இலங்கை தமிழர் தரப்பு? -ஐ.வி.மகாசேனன்-
தமிழர் உரிமைசார் அரசியல் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் ஓர் யுகசந்தியாகும். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழர் உரிமைசார் போராட்டமும் பரந்த அடிப்படையில் விரிவடைந்து விட்டது. அதன் செயற்பாட்டாளர்கள் இலங்கைக்குள் தனித்து மட்டுப்படாது வெளியேயும் பரந்த பரப்பில் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை ஒருங்குசேரத்து தமிழர் உரிமை போராட்டத்தை வலுப்படுத்தி நகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கையில் செயற்படும் செயற்பாட்டாளர்களிடமே காணப்படுகிறது. புலம்பெயர் பரப்பில் தமிழர்களின் செயற்பாடு ஆரோக்கியமான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது. அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி உடைக்கப்பட்டமைக்கு எதிராக எழுந்த ஆதரவுக்குரல்கள், யாழ்ப்பாண நகர மேயர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக எழுந்த கண்டனங்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் திடலில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தூபி உடைக்கப்பட்டமையை கண்டித்து புலத்தே எழுந்த ஆதரவு குரல்கள் என்பன புலத்தில் வீரியம் பெறும் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. எனினும் இலங்கையில் தமிழ் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் அரசியல் தரப்பினர் தமது ஆதரவு தளத்தை பலப்படுத்தகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் புலம்பெயர் தரப்பில் வலுப்பெறும் தமிழர் உரிமைசார் போராட்ட ஆதரவும், அதனை இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் சிவில் சமூகங்களும் கையாளும் முறைமையையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று சர்வதேசப் பரப்பில் புலம்பெயர் தமிழர்கள் பலமான கட்டமைப்பாக உருவாகி வருகிறார்கள். இஸ்ரேல் எனும் யூத தேச உருவாகத்தின் பின்னால் மேற்கு நாடுகளின் அரசியல் கட்டமைப்புக்களில் யூதர்களின் செல்வாக்கு இருந்தது போன்றதொரு சூழல் இன்று புலம்பெயர் தமிழர்களிடமும் காணப்படுகின்றது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பரவலாக மேற்கு நாடுகளில் அரசியல் ஆதிக்கத்தை இன்று புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கொண்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களின் பல கலாசார நிகழ்வுகளின் விருந்தினர்களாக அரசாங்கத்தின் முதன்மை நிலை தலைவர்களே கலந்து கொள்ளும் நிலைகள் காணப்படுகிறது. அதன் சமீபத்திய வெற்றிகளில் ஒன்றே, 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம்' என்ற சட்டம் கனடாவின் ஒன்ரறியோ (Ontario) மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்ரறியோ மாகாண சட்டசபை உறுப்பினர் புலம்பெயர் இலங்கை தமிழர் விஜய் தணிகாசலம் என்பவரால் பிரேரித்திருந்த சட்ட வரைபு ஒன்ரறியோ மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டமாக அங்கீகரிக்கப்படுவதை தடுப்பதற்கான முனைப்புக்களை இலங்கை அரசு பல முனைகளில் மேற்கொண்ட போதிலும், அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை. மே-12 அன்று ஒன்ரறியோ மாகாண துணைநிலை ஆளுநர் Elizabeth Dowdeswell அவர்களால் கையெழுத்திடப்பட்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.
மேலும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக கனடாவின் ஒன்ரறியோ மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண சட்டசபையிலும் உரையாடப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்றத்தின் உறுப்பினரான டாக்டர் ஹக் மெக்டெர்மொட், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் ஒன்ராறியோவின் முன்னணியைப் பின்பற்றவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இனப்படுகொலை குற்றவாளிகளைக் குறிப்பிடுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ச்சியான தனது உரையில், மேற்கு சிட்னியில் உள்ள தமிழ் சமூகத்திற்கும் மெக்டெர்மொட் நன்றி தெரிவித்தார்;. 'எனது குடும்பமும் நானும் தமிழ் சமூகத்திற்குள் பல தமிழ் நண்பர்களை உருவாக்குவது நம்பமுடியாத அதிர்ஷ்டம். அவர்களின் மீள்திறன், தயவு, கடின உழைப்பு இயல்பு ஆகியவற்றால் நான் ஈர்க்கப்பட்டேன்'. எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ரறியோ மாகாண செயற்பாடு ஆட்சி பொறுப்பில் புலம்பெயர் தமிழர்களின் நேரடி ஈடுபாட்டையும், நியூ சவுத்வேல்ஸ் செயற்பாடு அ10ட்சியாளர்களின் வெற்றியில் தமிழர்களின் பங்கையும் புலப்படுத்துகின்றது. இதனடிப்படையில், மேற்குறித்த இரு சம்பவங்கள் இரண்டு விதமாக புலம்பெயர் தமிழர்களின் அரசியல் அதிகாரம் மேற்குலக நாடுகளில் செறிந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறான அதிகார செல்வாக்கு மேற்குலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. பிரான்ஸ் முழுவதிலுமிருந்து இருபத்தியொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு சபை பரிந்துரை செய்ய பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இவ்வாறாக மேற்குலகின் அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் ஆரோக்கியமான முன்னேற்றமாக காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் களத்தில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் தமிழ் தேசிய அரசியல் தரப்புக்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஆரோக்கியமான எதிர் விளைவுகளை காட்டுகிறார்களா? ஆதரவு தளத்தை ஒருங்கிணைக்கின்றார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
புலம்பெயர் தமிழர் மற்றும் உரிமை போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்களை ஒருங்கிணைப்பதில் தமிழ்ப்பரப்பு நழுவ விடும் பலவீனங்களை பிரதானமாக நான்கு காரணிகளூடாக அவதானிக்கலாம்.
முதலாவது, தமிழர் உரிமைசார் போராட்டத்தை பொறுத்தவரை இலங்கையில் களத்தில் பலமான தலைமை ஒன்று தற்போது இல்லை. புலம்பெயர் தமிழர்களின் மேற்குலக அரசியல் செல்வாக்கை, உரிமை போராட்டத்தில் இணைப்பதாயின் இலங்கையில் தமிழர்களின் நிலைமைகளை சரியாக புலத்துக்கு வெளிப்படுத்தும் செயற்பாடு இலங்கை தமிழ்ப்பரப்பில் காணப்பட வேண்டும். எனினும் தமிழ்ப்பரப்பில் அவ்வாறானதொரு நம்பிக்கைமிக்க தலைமை அரசியல் தரப்பிலினாலும் சரி, சிவில் சமூக செயற்பாட்டிலும் சரி கடந்த 12 ஆண்டுகளில் உருவாக்கப்பட முடியவில்லை. தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைசார் போராட்டங்களில் இறுக்கமான பிணைப்புடன் செயற்படும் பாடலாசிரியர் யுகபாரதி ஓர் கருத்தரங்கில் ஈழத்தமிழ் சமூகத்திடம் இன்று வெற்றிடமாக காணப்படும் தலைமைத்துவத்தால் ஈழத்தமிருக்கும் தமிழக தமிழருக்குமான உறவுப் பிணைப்பில் விரிசல் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். ஈழத்தமிழர்களின் அரசியலை நகர்த்தும் ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் ஒரு விடயத்தை பற்றி வௌ;வேறு கருத்து நிலைகளை கூறுவதனால் எது ஈழத்தமிழர் நலன் சார்ந்தது என மதிப்பிட்டு ஆதரவளிப்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலைமை இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் சரியான தேவைப்பாட்டை வெளியே ஆதரவளிப்போருக்கு வெளிப்படுத்துவதில் காணப்படும் குறைபாடாகவே உள்ளது.
இரண்டாவது, இலங்கையில் தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகளிடையே கொள்கை மற்றும் செயற்பாட்டுவழி சார்ந்து ஒற்றுமையின்மை. தமிழினப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை எனும் விடயத்திலேயே தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளிடையே போதிய இணக்கப்பாடுகள் காணப்படுவதில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக முன்னைய ரணில் - மைத்திரி ஆட்சியின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாகவே சர்வதேச விசாரணை முடிந்து விட்டது. இனி அதனைப்பற்றி உரையாடுவது முட்டாள்தனமெனக்கூறி முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை தீர்மானத்தையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கருத்தையும் நிராகரித்து வந்தனர். எனினும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 46வது மனித உரிமைகள் கூட்டத்தொடரிற்கு சிவில் சமூகங்களின் அழுத்தத்தால் தமிழ்த்தேசிய கூட்டடமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து சர்வதேச விசாரணையை கோரியிருந்தனர். பின்னர் தனித்து தத்தமது கட்சி விருப்புக்களையும் அனுப்பியுள்ளனர். இது தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகள் ஒருமித்து கருத்தை செயற்பட முடியாத தொடர் அவலத்தையே பறைசாற்றுகிறது.
மூன்றாவது, புலம்பெயர் தரப்பில் திரட்டப்படும் கருத்துக்களுக்கு மறுதலையான கருத்துக்களை இலங்கையில் நகர்த்துதலும் தமிழ் அரசியல் தரப்பின் பலவீனமான செயற்பாடாக காணப்படுகிறது. குறிப்பாக இனப்படுகொலை விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதான அரசியல் பிரதிநிதி ஒருவரின் கருத்து புலம்பெயர் தரப்பில் திரட்டப்படும் கருத்துக்களுக்கு முற்றிலும் முரண்நகையாய் காணப்படுகிறது. சர்வதேச பரப்பில் பல அரசியல் தலைவர்களும், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என்ற விடயத்தில் உறுதியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனிலும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பின் தமிழர்களுக்கான ஏக பிரதிநிதித்தவத்தை வழங்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதானமான அரசியல் பிரதிநிதி ஒருவர், இனப்படுகொலைக்கு இலங்கையில் போதியமான சாட்சிகள் இல்லை எனவும், அதனால் இனப்படுகொலை என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்த கூடாதெனவும் புறக்கணித்து கருத்தரைக்கின்றார். இது ஆதரவு தரப்பினை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகவே காணப்படுகிறது. இச்செயல் தமிழர்களுக்கு புலம்பெயர் தரப்பில் கிடைக்கும் ஆதரவு தளத்தை காலப்போக்கில் மழுங்கடிக்க செய்யும் தமிழ் விரோத செயற்பாடாகவே காணப்படுகிறது.
நான்காவது, புலம்பெயர் தரப்பிலிருந்து கிடைக்கப்பெறும் ஆதரவுகளுக்கு சரியான எதிர்வினைகளை தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் செய்வதில்லை. கனடா ஒன்ராறியோ மாகாண சபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை சுட்டிக்காட்டி அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண சட்டசபையில் உரையாடப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரடியாக நன்றி பாராட்டியோ அல்லது மே-18அன்று நடந்த இலங்கை பாராளுமன்ற கூட்டத் தொடரில் இலங்கையின் பிரதமர் போர் வெற்றி குறித்து உரையாடுகையில் அதனை பகிரமங்க எதிர்த்து ஏனைய நாடுகளில் கிடைக்கப்பெற்ற ஆதரவு தளத்துக்கு நன்றி பாராட்டியோ கருத்துக்களை தெரிவித்திருக்கவில்லை. களத்திலிருந்து சீரான நாட்டத்தை எதிர்வினையாற்றத போது புலம்பெயர் தரப்பு செயற்பாடுகள் மங்கி போகும் நிலை இயல்பானதாகும்.
புலம்பெயர் தரப்பு அரசியல் செல்வாக்கில் ஆரோக்கியமான முன்னேற்றத்தை காண்பிக்கின்ற போதிலும், அதனை தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் ஒருங்கிணைக்கும் இராஜதந்திர செயற்பாடு களத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களிடம் இன்னும் வளர்ச்சியுறவில்லை. இவ்அவலம் நீளுமாயின் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செல்வாக்கும், இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் செயற்பாடுகளின் விளைவுகளும் மதிப்பீட்டில் பலனற்றதாகவே செல்லக்கூடியதாகும்.
Comments
Post a Comment