கொரோனா பரவுகையை கட்டுப்படுத்த மக்களே விழிப்படைதல் வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் தற்போது தினசரி செய்தித்தாள்களில் வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கைகளும், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கைகளும் நாம் மிகவும் ஆபத்தான சூழலிலே வாழ்கிறோம் என்ற செய்தியையே புலப்படுத்துகிறது. இலங்கை செய்தித்தாள்களில் 90%மான செய்திகள் கொரோனா பற்றிய உரையாடல்களாகவே காணப்படுகிறது. எனிலும் சற்றே வீதிகளில் இறங்கி பார்க்கையில் மக்களின் செயற்பாடுகளில் கொரோனா வைரஸ் அபாயம் சார்ந்த எவ்வித பாதுகாப்பும் எச்சரிக்கை உணர்வும் காணப்படவில்லை. மக்களோடு உரையாடுகையில் அரசாங்கம் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் அச்சத்தை காட்டி தமது நலன்களை பூர்த்தி செய்தது போன்ற செயற்பாடாகவே தற்போதைய கொரோனா வைரஸ் செய்திகளையும் அவதானிக்கின்றார்கள். இதுவோர் அபத்தமான எண்ணமாகும்.
இந்நிலையில் இலங்கையின் தற்போதைய கொரோனா ரைஸ் சூழ்நிலையை விபரமாக தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் மீண்டும் உருவெடுத்த கொரோனா வைரஸ் தொற்று அலை தற்போது தீவிரமான பரவல் நிலைமையில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் நாளாந்தம் நூறுகளாக இருந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையானது, கடந்த வாரங்களில் ஆயிரங்களாக அதிகரித்து செல்கின்றது. கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பையே காட்டுகின்றது. அரசாங்க தகவல்களின் படி கடந்த வருடம் 8 மாதங்களிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் 100 மரணங்கள் ஏற்பட்டிருந்தது. எனிலும் மே மாத முதல் வாரத்தில் 8 நாட்களில் 100 பேர் மரணித்துள்ளனர். இலங்கையின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 130, 000ஐ தாண்டியுள்ளது.
எந்த அரசாங்கங்களும் எந்த ஆபத்திலும் தமக்குரிய நலன்களை ஈடேற்றி கொள்வதிலேயே அதிக கவனத்தை கொண்டிருப்பார்கள். அவ்வகையிலேயே தற்போதைய அரசாங்கமும் கொரோனா வைரஸை கையாண்டிருந்தது. தமது செயற்பாடுகளுக்கு எதிராக எழும் மக்கள் போராட்டங்களை முடக்குவதற்கு, கொரோனா வைரஸ் அபத்தம் நெருக்குவாரம் இல்லாத காலப்பகுதியிலும் கொரோனா வைரஸை காரணங்காட்டி மக்கள் போராட்டங்களை முடக்கி வந்தது. தனிமைப்படுத்தல் என்பதை மக்கள் போராட்டங்களுக்கு தண்டனையாகவே நீதிமன்றங்களும் வழங்கியது. இந்நிலைமைகளே இன்று கொரோனா வைரஸ் தீவிரம் பெற்றுள்ள போதிலும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட தவறுகிறார்கள். ஆரசாங்க தகவல்களை அதிக அசண்டையுடனேயே கடந்து செல்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள், சிறுவர் நன்னெறிக்கதை ஒன்றான புலி வருது புலி வருது என சிறுவன் மக்களை ஏமாற்றி வருகையில், ஒருமுறை நிஜமாக புலி வந்த போது சிறுவன் எவ்வளவு கத்தியும் மக்கள் காப்பாற்ற வரவில்லை போன்றதாகவே காணப்படுகிறது. எனிலும் அக்கதையில் பொய் கூறிய சிறுவனே பாதிக்கப்படுகிறான். எனிலும் இலங்கையில் அரசாங்கத்தின் சிறுபிள்ளைத்தனமான ஏமாற்று விளையாட்டால் பாதிக்கப்படுவது ஏமாந்;த மக்களாகவே உள்ளனர். அரசாங்க அறிவித்தல் வெறுப்பு சார்ந்த மாயையிலிருந்து மக்கள் வெளிவருவார்களாயினெயே யதார்த்த நிலையை புரிந்து கொள்ளுவார்கள்.
மக்களுக்கு அரசாங்க தகவல்களில் நம்பிக்கை இல்லாவிடினும், அரசாங்க தகவல்களுக்கு அப்பால் எம் பிராந்திய நாடுகளின் இழப்பை சற்று அவதானிக்க வேண்டும். சித்திரை புத்தாண்டை தொடர்ந்து அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவுகை இலங்கையில் மாத்திரமின்றி தென்னாசிய பிராந்தியம் முழுவதும் பரலாக இழப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வைத்தியசாலைகளில் இடவசதி இல்லாது மக்கள் தெருக்களிலேயே இறக்கும் அவலமும் தொடர்கிறது. உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. தென்னாசிய நாடுகளில் பாகிஸ்தானிலும் கொரோனா பரவுகையின் தாக்கம் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. தென்னாசிய பிராந்தியம் தற்போது கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் பிராந்தியமாக காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுகையால் உயிரிழப்புக்களை சந்திக்க போவது மக்களே ஆகும். ஆதலால் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா வைரஸ் பரவுகையை தடுப்பதற்காக அறிவுறுத்தப்படும் அறிவித்தல்களை பின்தொடருவது கட்டாயமானதாகும். கொரோனா வைரஸ் தொற்றை தவிர்த்துக் கொள்வதற்கான அடிப்படை பாதுகாப்பு பழக்கவழக்கங்களான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், கைகளின் சுத்தம் பேணுதல் போன்றவற்றைக் கூட பலர் அலட்சியம் செய்கின்றனர். முகக்கவசம் அணிவது என்பது கொரோனா வைரஸ் பிறரிடமிருந்து எமக்கு பரவுவதையும், எம்மிடமிருந்து பிறருக்கு பரவுவதையும் தடுப்பதற்கே ஆகும். எனிலும் எம்மஎக்கள் மத்தியில் முகக்கவசம் அணியாவிடின் காவல்துறை கைது செய்யும் மற்றும் சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் எச்சரிப்பார்கள் என்ற பயத்திலேயே முகக்கவசம் அணிகிறார்கள். கட்டாயத்தின் பேரில் மக்களை வற்புறுத்தி சுகாதாரப்பழக்கங்களை கடைப்பிடிக்குமாறு கோருவதென்பது பலனளிக்கப் போவதுமில்லை. முகக்கவச பயன்பாட்டின் அடிப்படை கரணத்தை அறிந்து மக்கள் யாருடைய பணித்தலுமின்றி முகக்கவசம் அணிதல் வேண்டும்.
கடந்த வாரங்களில் இலங்கையின் பல மாவட்டங்களில் முகக்கவசம் அணியாது மற்றும் முகக்கவத்தை சரியான முறையில் அணியாதும் தெருக்களில் திரிந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கி சென்றார்கள். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் காவல்துறையினரின் செயற்பாட்டை கண்டித்தனர். நிச்சயம் காவல்துறையின் செயற்பாடு கண்டிக்கத்தக்கதே ஆகும். கைது செய்வதற்கான சட்டம் காணப்படுகிறதாயின் அதற்கான முறைமையிலேயே கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனினும் காவல்துறையினரின் கைது முறைமையை விமர்சனப்பார்வையில் நோக்கும் மக்;கள், காவல்துறையினர் அவ்வாறானதொரு நடடிவடிக்கை செய்ய காரணமாக அமைந்தோர் சட்டத்தை மீறி முகக்கவசம் அணியாது வீதிகளில் திரிந்தோர் என்பதை தமக்கு சாதகமாக மறந்து விடுகிறார்கள். காவல்துறையினர் கைது செய்ய சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் மக்கள் அனைவரும் முகக்கவசத்தை அணிந்து தெருக்களிற்கு செல்வார்களாயின் கைதும் இடம்பெறாது. கொரோனா பரவுகையும் கட்டுப்படுத்த கூடியதாக காணப்படும்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள இடங்களென அடையாளம் காணப்பட்டுள்ள பல பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 100இற்கு மேற்பட்ட கிராம அலுவலக பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையும் கடந்த மே-10அன்று ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்தவதற்கான உச்சகட்ட முடக்கங்களாகவும் இவையே காணப்படுகிறது. எதிர்க்கட்சிகள் பொதுமுடக்கத்தை வலியுறுத்துகின்ற போதிலும், அரசாங்கத்தின் தகவல்களின் படி பொது முடக்கத்துக்கான வாய்ப்பு இருக்காது என்பதே தற்போதைய நிலைமையாக காணப்படுகிறது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போதும் இலங்கையின் பிரதமர் பொது முடக்கத்தை தவிர்த்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே ஆலோசனை நடாத்தி இருந்தார். நாட்டை முற்றாக முடக்குவது நாட்டின் பொருளாதாரத்திற்கு மீண்டும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதே அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கின்றது. அரசாங்கம் பொருளாதார பாதிப்பினையே பிரதானமாக கருதி செயற்படுவதால் மக்கள் தம்மை சுயமாக பாதுகாத்து கொள்ள வேண்டியதே இலங்கையின் இன்றைய யதார்த்தமாகும்.
கொரோனா வைரஸ் பரவுகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் காணப்படலாம். எனினும் இலங்கையின் இன்றைய கொரோனா பரவுகை நிலைமையில் மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றத்தை சாட்டி ஒதுங்கி கொள்வதென்பது சரியான முடிவல்ல. காரணம் யார் தவறிழைப்பினும் இழப்பு மக்களுக்கே ஆகும். ஆதலால் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளல் அவசியமானதாகும். இயன்றளவு தேவையற்ற விதத்தில் கூட்டம் கூடுவதையும், களியாட்ட ஆடம்பங்களையும் மக்கள் இன்று தவிர்த்து கொள்வதே, கொரோனா வைரஸற்ற வாழ்வை நாளையாவது வாழ வழி ஏற்படும்.
கொரோனா பரவுவதை நிரந்தரமாக உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது. ஏனெனில் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து முற்றாக விடுபடுவதற்கு இன்னும் ஓரிரு வருடங்கள் செல்லக் கூடும் என்பதே உலகின் பிரபல மருத்துவ அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கின்றது. தடுப்பூசி ஏற்றுவதால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பது தவறானது என்பது சீஷெல்ஸ் தீவில் நிரூபணமாகியுள்ளது. அங்குள்ள 60சதவீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு மக்களிடையே கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்த போதிலும், அங்கு மீண்டும் கொரோனா தொற்று அவதானிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கு பின்னர் சிகிச்சை முறைகளை மேற்கொள்வதைக்காட்டிலும், வருமுன் காப்பதே சிறந்ததாகும்.
மக்கள் ஒவ்வொருவரும் சுயமான சுகாதார பாதுகாப்பு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதுடன், தமக்கு நெருக்கமான மற்றையோரை பாதுகாத்து கொள்வதிலும் போதிய கவனம் எடுத்து கொண்டால் மாத்திரமே இத்தொற்று பரவுகின்ற தீவிரத்தன்மையை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொள்வார்களானால் கொவிட் பயங்கரத்தில் இருந்து விடுபடுவதென்பது முடியாத காரியமாகிப் போய் விடலாம். நாட்டின் அனைத்து இடங்களிலும் மக்கள் அவதானமாக நடந்து கொள்கின்றனரா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பதென்பது இலகுவானகாரியமல்ல. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அதிகாரிகள் சென்று சோதனை செய்வதென்பதும் இயலுமானதல்ல. ஆபத்தை எதிர்கொள்ளும் மக்களே ஆபத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியவர்களாவர்.

Comments
Post a Comment