மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராக ஆளுநர் செயற்படுவாரா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அரச உயர் அதிகாரிகள், அரச முகவர்கள் எனப் பலரும் தங்கள் பதவி உயர்வுகளுக்காகவும், சுகபோக வாழ்வுக்காகவும் தம் சமூகத்தினை மலினப்படுத்துவதனூடாக ஆளுந்தரப்பைக் குளிர்விப்பதென்பது காலம் காலமாக நடந்தேறிவரும் விடயமாகவே காணப்படுகின்றது. குறிப்பாகத் தமிழ் சமூகத்தில் அது அதிகளவிலேயே நிறைந்துள்ளது. அண்மையில் தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்றுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அளித்த நேர்காணலில், அதிகளவில் வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே கேள்வி எழுப்பப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதில், வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ள கருத்துக்கள் வடக்கின் நிர்வாகங்களுக்கு பொறுப்புடமையாக உள்ள ஆளுமையின் வினைத்திறனான கருத்தாடலா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவது, சிவில் நிர்வாகத்தில் அதிகளவு அனுபவத்தை கொண்டு இன்று வடமாகாணத்தின் ஆளுநராக, ஜனாதிபதியின் வடமாகாணத்திற்குரிய நேரடிப்பிரதிநிதியாக உயர்ந்துள்ள ஆளுமையான பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். எனினும் நேர்காணலில் வடக்கு மாகாண இளைஞர்களுக்கு வேலை செய்ய போதுமான கல்வித் தகுதிகள் இல்லை என அளித்துள்ள கருத்தானது, வடக்கு மாகாண இளைஞர்களையும் கல்வியாளர்களையும் தரங்குறைப்பதாகவே விமர்சிக்கப்படுகிறது. இனத்துவ ஒடுக்குமுறைக்கு ஆளான மரபைக் கொண்ட தமிழ் சமூகத்தின் சொத்தாக 'புலமை' இருந்து வந்திருக்கிறது. பேராசிரியர் சிவத்தம்பி, 'ஒரு சமூகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளர்களால் வெளிக்கொணரப்படுகின்றன' என்பார். தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கண்டு, பல்கலைக்கழகங்களுக்குத் தமிழ் மாணவர்கள் செல்லும் எண்ணிக்கையை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே கல்வித் தரப்படுத்தல் கொள்கை ஆகும். கல்வித் தரப்படுத்தல் கொள்கையால் ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதுவே பின்னாளில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடவும் காரணமாகியது. மேலும், தொடர்ந்து இடம்பெற்ற 30ஆண்டு கால போரினால் ஏனைய மாகாணங்களுக்குக் கிடைக்கப்பெற்ற வளங்களைத் தமிழ் சமூக மாணவர்களால் பெற முடியாது போயிற்று. எனினும் கிடைக்கும் வளங்களைக் கொண்டு இயலுமைக்கேற்ற சிறந்த பெறுபேகளையே தமிழ் சமூகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இளைஞர்களுக்குப் போதுமான கல்வித் தகுதிகள் இல்லை என்ற வடக்கு மாகாண ஆளுநரின் கருத்தை எவ்வாறாகப் புரிந்து கொள்வது என்பது சர்ச்சையாகவே உள்ளது.
மாறாக ஆளுநரின் கருத்தப்படி வடக்கு மாகாண இளைஞர்களுக்கு போதுமான கல்வித் தகுதிகள் இல்லை என்பதாயின், அதனைச் சீர்செய்து வடக்கு மாகாண இளைஞர்களின் கல்வித் தகுதிகளை உயர்த்துவதற்கு வடக்கு மாகாணத்தின் நிர்வாக அலகுகளிற்கு பொறுப்புடமையாக உள்ள ஆளுநர் அவர்கள் எத்தகு திட்டங்களை வடக்கு மாகாணத்தில் அமுல்படுத்தியுள்ளார்? வடக்கு மாகாண குறைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு யாருடையது?
இரண்டாவது, இலங்கையில் போருக்கு முன்னர் காணப்பட்ட தொழிற்சாலைகள் பற்றிய கருத்தாடலில் புலி எதிர்ப்பு கருத்தையே ஆழமாக அவதானிக்க முடிந்தது. சரியான வரலாற்று தகவல்களோடு தொழிற்சாலைகள் இயங்க முடியாது போனமைக்கான காரணத்தை ஆளுநர் தென்னிலங்கை ஊடகத்துக்கு தெரிவிக்க தயக்கம் காட்டுவது தமிழ் அரச உயர் அதிகாரிகளின் அரசாங்க விஸ்வாசத்தை ஆளுநர் தொடர்வதனையே வெளிப்படுத்துகிறது. மேலும் தொழிற்சாலைகள் மீள் நிர்மாணம் தொடர்பான கருத்தில், செயலிழந்த தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்க்கிறோம் எனக்குறிப்பிடுவது வினைத்திறனான கருத்தாக காணமுடியாதுள்ளது. ஒரு தசாப்தம் கடந்தும் எதிர்பார்ப்புடனேயே இருப்பதென்பது இயலாமையையே வெளிப்படுத்துகிறது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தம் கடந்து விட்டது. இன்றும் அதனையே காரணமாக கூறிக்கொண்டிருப்பது தங்களது இயலாமையை வெளிப்படுத்தவதுடன், தமிழர்களை முட்டாளாக்கும் செயற்;பாடாகவே அமைகிறது. ஆளுமையுள்ள தலைமை காரணத்தைத் தேட முற்படாது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் கடலுக்குள் ஓரு நகரத்தையே உருவாக்க கூடிய வல்லமை பொருந்திய இலங்கை அரசாங்கத்திற்கு வடக்கு மாகாணத்தில் சிதைக்கப்பட்டுள்ள நிலையிலுள்ள தொழிற்சாலைகளை புனரமைப்பது சிரமமானது இல்லை. அவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளாமைக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியாதவராக ஆளுநர் இருகிறார் என்பது துயரமானதே. ஆக அது தொடர்பில் சரியான திட்டங்களை நெறிப்படுத்தத் தவறி இருப்பது வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் முகவராக செயற்படுபவர்களின் தவறாகவே எண்ணலாம்.
மூன்றாவது, மாகாணங்களுக்கான அதிகரப்பகிர்வை நிராகரித்து கருத்துரைத்துள்ளமை தமிழ் மக்களின எண்ணங்களுக்கு விரோதமான கருத்தாகவே நோக்கப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர் மாகாணங்களுக்கான அதிகரப்பகிர்வை நிராகரிப்பது என்பது அவர் மக்களுடன் தொடர்புபட்டு செயற்படவில்லை என்பதையே உணர்த்துகின்றது. ஆளுநரது கருத்து அவரது உத்தியோகத்திற்கு உட்பட்டதாகவே காணப்படுகிறது. ஆளுநரது கடமை ஒற்றையாட்சி அலகின் ஓர் அம்சமே ஆகும். அவ்வாறிருக்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி நிச்சயம் மறுதலித்த பதில் வருவதே இயல்பானதாகும். ஆனால் மக்களுடன் நெருக்கமான உறவை கொண்டவராகவும், ஆளுநர் பதவியை உத்தியோகமாக அல்லது சேவையாக பார்க்கும் ஆளுமை இந்த இடத்தில் தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தியிருந்திருப்பார். ஆனால் வடமாகாண ஆளுநர் அதனை தவறவிட்டுவிட்டார். அவர் அரசாங்க பிரதிநிதியாக அரசாங்;கத்தின் விருப்புக்கள் எண்ணங்களையே வடக்கு மாகாண ஆளுநர் என்ற அடையாளத்துடன் கருத்துரைத்துள்ளார்.
நான்காவது, தேசிய கட்சிகளின் செல்வாக்கு வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வருகின்;றமையை ஆரோக்கியமான முன்னேற்றமாக ஆளுநர் கருத்துரைத்துள்ளமையானது, தனது அரசியல் எண்ணங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தவதாகவே அமைகின்றது. தேசிய கட்சிகள் மீது அதீத நலன் கொண்ட ஆளுநர் நிச்சயம் தேசிய அரசியல் கட்சிகளுக்கு விசுவாசம் உடையவராகவும் அதன் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் பக்கசார்பான செயற்பாடுகளை முன்னெடுக்க முனைவார் என்ற விமர்சனமே தமிழ் சமூகத்தில் இன்று எழும்பியுள்ளது. தமிழ்த் தேசியம் தனித்துவமான இயல்புகளுடன் பயணிப்பதொன்றாகும். தமிழ்த் தேசத்தின் ஆள்புலத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ள உயர்நிர்வாக மட்ட ஆளுமை இவ்வாறு தமிழ்த்தேசியத்திற்கு விரோதமாக செயற்படும் மனப்பாங்குடையவராக இருப்பின் தமிழ் மக்கள் அபிலாசைகள் நிச்சயம் சரியான பார்வையில் அவதானிக்க முடியாத நிலையே காணப்படும்.
வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள், அரசாங்க முகவராகவே குறித்த நேர்காணலில் முழுமையாக கலந்து கொண்டுள்ளார் என்பதையே அவரது கருத்துக்கள் வெளிப்படுத்துகிறது. ஆக தென்னிலங்கை ஆங்கில ஊடகத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் அளித்த நேர்காணல் இலங்கை அரசாங்கத்தின் வடக்கு மாகாண முகவரின் கருத்தாக மட்டுமே அவதானிக்கக் கூடியதாகும். வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை அவர்களுடைய எண்ணங்களுடன் வாழ்ந்து முழுமையாகப் பிரதிபலித்தது எனக்கருத முடியாததாகும். வடக்கின் அதிஉயர் அதிகாரபீடத்தை சேர்ந்த பொறுப்புடமை உடைய ஆளுநர் தென்னிலங்கை ஊடகத்தில் வடக்கு மக்களை, அவர்களின் விருப்புக்களை மலினப்படுத்தி கருத்துரைத்திருப்பது தமிழ் மக்கள் மத்தியில் ஆளுநர் மீதான வெறுப்;பையே அதிகரித்துள்ளது. அரசாங்க முகவர் என்ற நிலையைத் தாண்டி மக்களின் எண்ணங்களைப் புரிந்து செயற்படுத்தும் பிரதிபலிக்கும் ஆளுமையாக ஆளுநர் செயற்பட வேண்டும் என்பதே தமிழர்களின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments
Post a Comment