சீனாவின் காலனியாகிறதா இலங்கை? -ஜ.வி.மகாசேனன்-
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய்கையில், இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியா தவிர்க்க முடியாத நிலையை பெற்று வந்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக பரிணமிக்கையில் ஆரம்பம் முதல் முடிபு வரை இந்தியா கொண்டிருந்த வகிபாகம் ஆழமானது. எனிலும் சமீபத்திய 2009இற்கு பின்னரான இலங்கை பற்றிய அரசியலை ஆராயுமிடத்து தெற்காசிய பிராந்திய அரசாகிய இந்தியாவை ஓரங்கட்டி சீனா தவிர்க்க முடியாத நிலையை பெற்றுவருகிறது. கடந்த ஏப்ரல்-28 அன்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் செய்திருந்த போது, சமூகவலைத்தளங்களில் 'சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் தனது மாநிலத்தின் பாதுகாப்பு விடயங்களை மேற்பார்வை பார்க்க வருகை தந்தார்' என கேலியான பதிவுகள் அதிகம் காணப்பட்டது. எனிலும் இலங்கையின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அவதானிக்கையில் இதனை நகைச்சுவை பதிவாக கடந்து விட முடியாது.
இலங்கை சீனாவின் காலனியாக மாறுகிறதா? என்பதே இலங்கை அரசியல் தரப்புகளிடையே இன்றைய காரசாரமான விவாதமாகவும் காணப்படுகிறது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் இலங்கை சீனாவின் காலனியாக மாறுகின்றது என்பதற்கு சான்றாக முன்வைக்கும் காரணிகளை தேடுவதாக உருவாக்ககப்பட்டுள்ளது.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் நேரடி காலனித்துவம் என்ற எண்ணக்கரு காலாவதியாகி விட்டது. எனிலும் காலனித்துவத்தின் பரிணாமமாக இன்று நிலவும் நவகாலனித்துவத்தில் ஆதிக்க அரசுகள் வலுக்குறைந்த அரசுகளுக்கு பொருளாதார உதவிகளை செய்வதூடாகவும், ஒப்பந்தங்களை மேற்கொள்வதனூடாகவும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகின்றது. அந்தவகையில் இலங்கை மீதான சீனாவின் காலனி ஆதிக்கத்தை பிரதானமான நான்கு காரணிகளூடாக அவதானிக்கலாம்.
முதலாவது, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சீனாவின் ஆதிக்கம். சீனாவின் கடன்பொறிமுறைக்குள் அகப்பட்டு 2017ஆம் ஆண்டில் மைத்திரி - ரணில் கூட்டரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கி இருந்தது. இது வர்த்தக உடன்படிக்கையாகவே அரசியல் வெளியில் உரையாடப்பட்டது. எனிலும் இலங்கையின் அனுமதியின்றி ம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்கள் தரிக்கப்படுவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல்-20 அன்று ரொட்டார்டாமிலிருந்து அணுசக்தி பொருளாகிய யுரேனியத்தை ஏற்றிக்கொண்டு சீனா சென்ற M.V. BBC Naples என்ற கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக்குள் சரியான தகவல்களை பகிராது தரிக்கப்பட்டுள்ளது. கடற்படை, சுங்க மற்றும் துறைமுக அதிகார சபை பரிசோதனை செய்கையிலேயே கப்பலில் அணுசக்தி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக துறைமுகத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டது. எனிலும் கப்பல் துறைமுகத்துக்கு வெளியே தான் தரித்து நின்றது. அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு அதிகாரம் இலங்கை கடற்படையிடமே உள்ளதாக அரசாங்கம் அறிவிக்கிறது. எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் ஆபத்தான பொருட்களுடன் வரும் கப்பல்களை வேறுநாடுகள் தமது துறைமுகத்துக்குள் அனுமதிப்பதில்லை. பாதுகாப்பு அதிகாரம் இலங்கை கடற்படையிடம் இருப்பதாயின், அணுவாயுத பொருட்களுடன் துறைமுகத்தினுள் நுழைய முன்னரே தடுத்திருக்க வேண்டும். அவ்வாறு தடுக்கமுடியவில்லை என்பதும் சீன கப்பல் அதிகாரிகள் உண்மையை கூறாது கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள்ள தரிக்க கொண்டுள்ள தைரியமும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பிலே இலங்கைக்கு உள்ள உரிமத்தை சவால்விடுவதாகவே உள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் செயற்றிட்டம் ஆரம்பிக்கையில், சீனா ஆதிக்கம் தொடர்பான எச்சரிக்கைகளை நிபுணர்கள் தெரிவித்த போதும் அன்றைய மகிந்த ராஜபக்ஷா அரசாங்கம் பாதுகாப்பானதெனவே கூறிவந்தார்கள். எனிலும் 2017ஆம் ஆண்டு கடன்பொறிமுறையால் குத்தகைக்கு செல்கையில் அதுவோர் அபத்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. இன்று சீனகப்பல்களால் சர்ச்சை நிலவுகின்ற போதும் இன்றைய ராஜபக்ஷாக்ககள் அரசாங்கம் விசாரனை செய்வதாக கூறி மூடிமறைத்து, இன்றும் பாதுகாப்பானது என்பதையே வலியுறுத்துகிறார்கள். எதிர்வரும் காலங்களில் இலங்கை சீனாவின் கொலணி என்பது உறுதிபடுத்துகையில் அதன் ஆரம்ப புள்ளி சீனாவின் அம்பாந்தோட்டை துறைமுக ஆதிக்கம் என்பது எதிர்காலத்தில் வரலாற்றில் கற்கலாம்.
இரண்டாவது, கொழும்பு துறைமுக நகரில் சீனாவின் ஆதிக்கம். சீனாவின் கொலணியாகிறது இலங்கை என்ற உரையாடலுக்கு உடனடி காரணமாக அமைவதும் கொழும்பு துறைமுக நகர் மீதானா சீனாவின் ஆதிக்கமே ஆகும். துறைமுக நகரம் வர்த்தக நகரமாகையால், வர்த்தக முதலீடுகளை இலகுவாக கவர துறைமுக நகருக்கு விசேட சலூகைகள், அதிகாரங்களை கொண்ட ஆணைக்குழுவை உருவாக்க அமைச்சரவையால்அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலமொன்று பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. துறைமுகநருக்கான ஆணைக்குழுவானது, துறைமுகநகரை இலங்கையின் எவ்வித உள்ளூராட்சி நிர்வாக அலகுகளுக்கும் உட்படாத தனி அலகாக வரையறை செய்கிறது. துறைமுக நகர் மீது பாராளுமன்ற அதிகாரத்தை வலுவிழக்க செய்கிறது. வர்த்தக நகர் என்ற போதிலும் இலங்கை மத்திய வங்கி / நிதி அமைச்சரோ துறைமுக நகர் மீது ஆதிக்கம் செலுத்த இயலாது. ஆணைக்குழுவில் இலங்கையரல்லாதவர்களையும் உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. துறைமுகநகர ஆணைக்குழு தொடர்பானன சட்டமூலத்தில் காணப்படும் இத்தகு விடயங்களே துறைமுக நகர் என்பது சீன ஈழமா? என்ற உரையாடலை அதிகரித்துள்ளது. மேலும் வலுச்சேர்க்கும் வகையில், கொழும்பு துறைமுக நகரை இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்ப்பதற்கு சீன தூதரகம் அழைப்பு விடுத்துள்ளமை அமைந்துள்ளது. இவை கொழும்பு துறைமுகநகரில் இலங்கைக்கு காணப்படும் செல்வாக்கை கேள்விக்குட்படுத்துவதுடன், சீனாவின் அதிகாரத்தைஉறுதிப்படுத்துகிறது.
மூன்றாவது, இலங்கையில் சீன மொழிப்பயன்பாடு அதிகரிப்பு. இலங்கையில் மொழிசார் அரசியலுக்கு கனதியான வரலாறு காணப்படுகிறது. இலங்கையில் பல கலவரங்களும் இலங்கையில் நீண்ட கால வரலாற்றை கொண்ட சிங்கள – தமிழ் மொழி ஆதிக்க மோதலால் ஏற்பட்டுள்ளது. எனிலும் இன்று சத்தமின்றி இலங்கையில் சீன மொழி ஆதிக்கம் பெறுகிறது. இலங்கையின் தேசிய மொழிகளான தமிழ், சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டு தனித்து சீன மொழி பெயர்ப்பலகைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன செயற்றிட்டங்களில் காணப்படுகிறது. குறிப்பாக கொழும்பு துறைமுக நகர் பெயர்ப்பலகை தனித்து சீன மொழியிலேயே இலங்கையின் தலைநகர் கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பின் சில புகையிரதநிலைய அறிவித்தல் பலகைகள் மற்றும் இலங்கையின் தொலைத்தொடர்பு வசதியின் வாடிக்கையாளர் சேவை செயலிகளிலும் இன்று சீன மொழி இணைக்கப்பட்டு வருகிறது. இதுவும் இலங்கையின் ஆதிக்கத்தை சீனா பெற்று வருவதனையே அறைகூவல் விடுகிறது.
நான்காவது, இலங்கையில் சீனர்களின் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. உத்தியோகபூர்வ கணக்கின்படி 4000ஆக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி இவ்எண்ணிக்கையை விட அதிகமான சீனர்களே இலங்கையில் இருப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. 2010-2015 ஆம் ஆண்டு அதீத அபிவிருத்தி திட்டங்கள் அம்பாந்தோட்டையில் நடந்த காலப்பகுதியில் அம்பாந்தோட்டையில் அப்பிரதேசத்துக்குரிய மக்களை விட சீனர்களே அதிகமாக காணப்பட்டதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க இராஜதந்திர திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சீன விவகாரங்களின் நிபுணரான அமெரிக்க பேராசிரியரான பட்றிக் மென்டிஸ், 'முப்பது வருடங்களுக்கு பின்னர், சீன வம்சாவளி ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலை காணப்படுகிறது.' என இலங்கை மீதான சீன ஆதிக்கத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நடப்பு அரசியல் நிழ்வுகள் யாவும், இலங்கை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாதளவில் மூழ்கி விட்டது என்பதையே உறுதிப்படுத்துகிறது. இலங்கையை மையப்படுத்திய சீன, இந்திய சதுரங்க ஆட்டத்திலும் சீனாவின் இராஜதந்திரமே வென்றுள்ளது. தமிழர்களுக்கு உரிமையை பகிருவதென்பது இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்திற்கு துணைபுரியுமென சித்தாந்தம் வகுத்து, பூர்வக்குடிகளின் உரிமையை மறுத்தவொரு சமூகம் தொடர்பற்றவனின் ஆதிக்கத்தை எதிர்க்க திராணியற்று காணப்படுகிறார்கள்.
Comments
Post a Comment