இஸ்ரேல் - பலஸ்தீன போர் நிறுத்த அறிப்பு நிரந்தரமாகுமா? -ஐ.வி.மகாசேனன்-
உலகம் கொரோனா அழிவு மற்றும் மீழ்ச்சி பற்றி உரையாடலை முன்னிலைப்படுத்துகையில், மேற்காசியா என்பது போர் வலயம் என்பதை மீளவும் நிரூபித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசாவில் உள்ள ஹாமாஸ் அமைப்பினருக்கு இடையில் கடந்த மே-12ஆம் திகதி பெரும் அழிவுப்போர் ஆரம்பிக்கப்பட்டது. இவ்அழிவுப்போரை மையப்படுத்தி உலக நாடுகளும் இருதுருவங்களாக ஆதரவு, எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. சில நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஹாமாஸ் அமைப்புக்கு இராணுவ, ஆயுத உதவிகளையும் மேற்கொண்டிருந்தனர். அரசியல் ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உயிரிழப்பின் போக்குகளை அவதானித்து கவலைகளை தெரிவித்து கொண்டனர். உலக சமாதானத்துக்காக நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பொதுச்செயலாளரும் கவலையை தெரிப்பதுடன் கடந்து சென்றார். இரண்டாவது வாரமாக தொடர்ந்த இஸ்ரேல் - பலஸ்தீன கொடும் போர் கடந்த மே-21 அன்று அதிகாலை அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தால் நிறைவுக்கு வந்தது. போர் நிறைவுற்ற பின்னர் இஸ்ரேல், பலஸ்தீனிய இருதரப்பு அரசியல் தலைமைகளும் போரில் தாமே வெற்றி பெற்றதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எதிர்த்தரப்புக்களை சீண்டும் கருத்தாடல்களுக்கும் முதன்மையளிக்கிறார்கள். இந்நிலையிலேயே இக்கட்டுரை இஸ்ரேல் - பலஸ்தீன யுத்த நிறுத்தம் சமகால போரை நிறைவு செய்யும் வல்லமையுடையதா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜெரூசலத்தில் மே மாத முற்பகுதியில் ஏற்பட்ட பதற்ற சூழலை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட மோதல் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் பலஸ்தீனிய ஹாமாஸ் போராட்ட குழுவிற்கும் இடையே போராக வெடித்து பெரும் உயிரிழப்புக்களையும், பொருட்சேதங்களையும், இடப்பெயர்வுகளையும் எற்படுத்தி இருந்தது. மே-21ஆம் திகதி வரையிலான 11 நாட்களில் காசாவில் 65 சிறுவர்கள் அடங்கலாக 232 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு, இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் அங்கு மேலும் 1,900 பேர் காயமடைந்துள்ளனர் என காசா பகுதியின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசாவில் தாம் 160 போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியபோதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை. பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் மே-21 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் அமுலுக்கு வந்தது. 'நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஒன்றுக்கான எகிப்தின் முயற்சியை பாதுகாப்பு அமைச்சரவை வியாழக்கிழமை பின்னேரத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் திரைக்குப் பின்னால் நடைபெற்று வருவதால், அதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் திரண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 'ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்றது' என்று காசா பகுதியின் பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் கூறப்பட்டது. கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜர்ராஹ் பகுதியில் பலஸ்தீன கொடிகளை அசைத்தபடி கார் வண்டிகளில் சென்ற பலஸ்தீனர்கள் ஹோர்னை ஒலிக்கச் செய்து வெற்றியை கொண்டாடினர். குறிப்பாக நோன்பு காலத்தில் புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் நுழைந்தது மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதல் சம்பவங்கள் காரணமாக காசாவின் பெரும்பாலான மக்களுக்கு நோன்புப் பெருநாளைக் கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் பிற்போடப்பட்ட நோன்புப் பெருநாள் உணவு காசா எங்கும் நேற்று பகிரப்பட்டது. இஸ்ரேல் வானொலிகள் வழக்கத்திற்கு திரும்பியதோடு அதன் மணித்தியால செய்திகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மீண்டும் ஒலிபரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் போர் நிறுத்தம் நிலைக்குமா? என்பது தொடர்பிலே பல முரணான வாதங்கள் காணப்படுகின்றது. போர் நிறுத்தம் அறிவித்தல் வெளியிடப்பட்ட அதிகாலை 2.00 மணி வரையிலேயே, பலஸ்தீன ரொக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து வீசப்பட்டதோடு இஸ்ரேல் ஒரு வான் தாக்குதலையும் நடத்தியது. அதேரேம் அடுத்த தரப்பினால் மீறப்படும் போர் நிறுத்தத்திற்கு பதில் கொடுக்க தயாராக இருப்பதாக இரு தரப்பும் சீண்டும் வகையில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.
காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு, 'இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் வலுவான எதிரியுடன் வெற்றிகரமாக போராடியதாக' குறிப்பிட்டுள்ளது. மேலும், 'இன்று போர் முடிகிறது என்பது உண்மையே, ஆனால் போருக்கு நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் இந்தப் போராட்டத்திறனை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம் என்பதை நெதன்யாகு மற்றும் முழு உலகமும் அறிந்துகொள்ள வேண்டும்' என்று ஹமாஸ் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவரான இஸத் எல் ரெஷிக் தெரிவித்துள்ளார். டோஹாவில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர், 'ஜெரூசலத்தில் அல் அக்ஸா பள்ளிவாசல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கிழக்கு ஜெரூசலத்தில் பலஸ்தீனர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, இவை ஒரு சிவப்பு கோடு' என்றும் குறிப்பிட்டார்.
மறுதலையாய், இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை சமாதானத்திற்கு நகர்த்தும் வகையில் இணக்கமான கருத்தாடல்களை தொடர தவறியுள்ளது. இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு மாத்திரமே போர் நிறுத்தத்திற்கு இணக்கம் எட்டப்பட்டதாகவும் இது ஒரு 'பரஸ்பரம் நிபந்தனையற்ற போர்நிறுத்தம்' என்று போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேல் விபரித்துள்ளது.
மேலும், போர் நிறுத்தம் போருக்கான காரணங்களை கண்டறிந்த களைவது தொடர்பாக ஆராயப்பட்டிருக்கவில்லை. அல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் அத்துமீறல் மற்றும் கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜர்ராஹ் பகுதியில் பலஸ்தீன குடும்பங்கள் அவர்களின் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பது போன்ற காரணங்களே இந்த குறித்த மோதலைத் துண்டிய நேரடி காரணங்களாகும். நீண்டகால இஸ்ரேல் - பலஸ்தீன முரண்பாட்டை நீக்கக்கூடிய வகையில் போர் நீறுத்தம் உருவாக்கப்படாவிடினும், உடனடிக் காரணங்களையாவது நீக்கக்கூடியதாக காணப்பட வேண்டும். எனினும் போர்நிறுத்தம் அவ்வாறான அம்சங்களை கொண்டிருக்கவில்லை என்பதுவே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்கள் அமைதியை நிலைநிறுத்துவதற்கு அப்பால் சென்று மோதல் ஏற்படுவதற்கான காரணிகள் பற்றி தீவிர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், போர் நிறுத்தத்ததை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன முன்னணி இராஜதந்திரியான ரியாத் அல் மலிக்கி, வன்முறை வெடித்ததற்கான முக்கிய காரணிகள் பற்றி பேசப்படாத நிலையில் அது போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். டெல் அவிவில் வசிக்கும் 30 வயதான மென்பொருள் பொறியியலாளர் ஈவ் இசேவ், 'மோதல் முடிவுக்கு வந்தது நல்லது. ஆனால் துரதிருஷ்ட வசமாக அடுத்த மோதலுக்கு அதிக காலம் எடுக்காது என்று எமக்குத் தோன்றுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தாடல்கள் இஸ்ரேல் பலஸ்தீன போர் தணியாததையே வெளிப்படுத்தி நிற்கிறது.
சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோதலை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தினார் என்பதோடு எகிப்து, கட்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டியது.
நிலையான சமாதானத்தை நிலைநாட்டாத அழுத்தத்தில் பிறப்பிக்கப்பட்ட போர் நிறுத்த அறிவிப்பையே இஸ்ரேல், பலஸ்தீன பிரதேசங்களில் வெற்றி கொண்டாட்டங்களாக கொண்டாடப்படுகின்றது. எனினும் மக்களின் வெற்றி கொண்டாட்டங்களிலும் ஓர் ஆழமான செய்தி அரசியல் தலைமைகளுக்கு விடப்பட்டுள்ளது. போர்நிறுத்த அறிவிப்பின் பின்னரான மக்களின் கொண்டாட்டங்களை ஊடக செய்திகள் வெற்றி கொண்டாட்டங்களாக அறிவித்துள்ள போதிலும் மக்கள் மனங்களில் போர் ஓய்ந்தது என்ற மகிழ்வில் ஏற்பட்ட வெற்றியையே கொண்டாடி தீர்த்துள்ளார்கள் என்பது மக்களின் கொண்டாட்ட காணொளிகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதிக உயிரிழப்புக்களை எதிர்கொண்ட பலஸ்தீனியர்கள் மாத்திரம் அச்சத்தில் 11 நாட்களை அச்சத்தில் கழிக்கவில்லை. இஸ்ரேலியர்களும் கடும் அச்சத்துடனேயே நாட்களை கழித்தார்கள். ஹாமாஸ் அமைப்பின் ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலியர்கள் தூக்கத்தை இழந்து அச்சத்தில் இரவை கழிக்கச் செய்தது. அடிக்கடி ஒலிக்கும் சைரன் ஒலியால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆரம்ப காலங்களில் இஸ்ரேலிய மக்கள் சியோனிசம் என்ற ஒற்றை வார்த்தைக்காக உயிர்களை பறிகொடுக்கவும், காவுகொள்ளவும் துணிந்து செயற்பட்டுள்ளனர். எனினும் இன்றைய தலைமுறை இஸ்ரேலிய இளையோரிடம் நாகரீகம் மாற்றமுற்று வருகின்றன. போரை விரும்பாத சமூகமாயும், பலஸ்தீனத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பு தங்களது இருப்புக்கும் அச்சுறுத்தல் எனும் வகையில் சிந்திப்பவர்களாகவும் வளர்ந்து வருகின்றனர். அரசியல் மற்றும் இனம் குறித்த அவர்களின் முற்போக்கான கருத்துக்களை இஸ்ரேலின் நடவடிக்கைகளுடன் சரிசெய்ய போராடுகையில், 'எங்களுக்கு ஒரு பாதுகாப்பான தாயகம் ஏன் இன்னொருவரை அடிபணியச் செய்வது என்று அர்த்தமா?' என்று கேட்கிறது. இம்மாற்றங்களை அரசியல் தலைமைகளும் சரியாக மதிப்பீடு செய்தல் வேண்டம். மதிப்பீடு செய்ய தவறியதன் விளைவே இஸ்ரேலின் 75 ஆண்டுகால போர் வரலாற்றில் முதல்முறையக வெற்றியை பெற முடியாது போர் நிறுத்தத்திற்குள் இஸ்ரேல் சென்றுள்ளது.
இஸ்ரேல் - பலஸ்தீன போர் நிறுத்த அறிவிப்பிற்கு பின்னரான அரசியல் நிகழ்வுகள் இஸ்ரேல் - பலஸ்தீன போர் மேகங்கள் நீக்கம் பெறாமையை பறைசாற்றியுள்ளது. எகிப்திய மத்தியஸ்த போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் இஸ்ரேலின் 11 நாள் குண்டுவெடிப்பு பிரச்சாரத்தில் 'எந்த இராணுவமும் இதுவரை அடையாத ஒரு சாதனை' என்று பாராட்டினார். அதே நேரத்தில், 4,300இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கண்மூடித்தனமாக இஸ்ரேலுக்குள் வீசிய பாலஸ்தீனிய போராளிக்குழு ஹமாஸ், 'வெற்றியின் பரவசத்தை' பிரதிபலித்தது. இது அரசியல் தலைமைகளின் போர் வெறியையே பறைசாற்றியது. எனினும் மக்களின் செயற்பாடுகள் எதிர்கால இஸ்ரேல் - பலஸ்தீன அமைதியையே வெளிப்படுத்துகின்றது. அரசியல் தலைமைகள் அரசியல் அதிகார நலனுக்காக ஆட்சியை நடாத்தாது மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஆட்சியை நடாத்த முன்வருவார்களாயின் இஸ்ரேல் - பலஸ்தீன அமைதியை நிகழ்காலத்திலேயே அவதானிக்கக்கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment