அரசியல் தலைமைகளின் தவறால்; இந்தியாவில் கோர தாண்டவமாடும் கொரோனா! -ஐ.வி.மகாசேனன்-
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சீனா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தேசங்களில் உயிர் வேட்டையை ஆரம்பித்த கொரோனா மெல்ல மெல்ல ஆசிய, ஆபிரிக்காவென முழு நாடுகளையும் வியாபித்தது. 2020ஆம் ஆண்டின் பெருவாரியான காலம் முழு உலகத்தையும் முடக்கியது. உலகம் கொரோனாவோடு வாழப்பழக தயாராகியது. தடுப்பூசி தயாரிப்புக்களையும் பல நாடுகள் மேற்கொண்டது. மறுமுனையில் கொரோனா வைரஸிம் தன்னுள் பரிணமித்துள்ளது. இரண்டாம் கட்டம் உலகை முடக்க தயாராகி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பொது முடக்க அறிவித்தல்கள் விடப்பட்டுள்ளது. இம்முறை ஆசியாவில் இந்தியாவில் கொரோனாவின் தாண்டவம் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் இழப்போடு வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆஹ்சிசன் தட்டுப்பாடுகளாலும் இந்தியா திணறி வருகிறது. உலகளவில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பல்தேசிய நிறுவன தலைவர்களும் இந்தியாவின் துயர் நீங்க பிரார்த்தனை செய்தி விட்டுள்ளதுடன், உதவி திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் இவ்சொல்லேணா துயர நிலைமையில் இந்திய அரசியல் தலைமையின் நடவடிக்கைகளை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் உலகின் மிக மோசமான கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு சொந்தமான நாடாக இந்தியா நிலைபெறுகிறது. கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 17.6 மில்லியனுக்கும் அதிகமாக தொற்றாளர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை, அரை பில்லியனுக்கும் அதிகமானதாக இருக்குமென வல்லுநர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.
'கடந்த ஆண்டு சுமார் 30 நோய்த்தொற்றுகளில் ஒன்று மட்டுமே பரிசோதனையால் பிடிக்கப்படுவதாக நாங்கள் மதிப்பிட்டோம், எனவே அறிக்கையிடப்பட்ட வழக்குகள் உண்மையான தொற்றுநோய்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். இந்த நேரத்தில், இறப்பு புள்ளிவிவரங்கள் மிகக் குறைவான மதிப்பீடுகளாக இருக்கலாம், மேலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட, இன்னும் பல மரணங்கள் தான் நாங்கள் தரையில் காண்கிறோம்.' என்று புதுதில்லியில் உள்ள நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தின் இயக்குனர் ரமணன் லக்ஷ்மிநாராயண் கூறினார். 27.04.2021 நிலவரப்படி, இந்தியா கிட்டத்தட்ட 198,000 கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முகர்ஜி கோவிட் இறப்புகளை இரண்டு முதல் ஐந்து வரையிலான காரணிகளால் இந்தியாவில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. உண்மையான இறப்பு எண்ணிக்கை 990,000க்கு அருகில் இருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறப்பது இல்லை. வீட்டிலோ அல்லது பிற இடங்களிலோ இறக்கின்றனர். எனவே இறப்புக்கான காரணத்தை நிர்ணயிக்க மருத்துவர்கள் வழக்கமாக வருவதில்லை. இது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆழமடைந்துள்ள ஒரு பிரச்சினை. மருத்துவமனைகள் இடமில்லாமல் உள்ளன. எங்கும் செல்ல முடியாத நிலையில், கோவிட் நோயாளிகள் இப்போது அதிகளவில் வீட்டிலும், செயலற்ற ஆம்புலன்ஸிலும், காத்திருப்பு அறைகளிலும், அதிகப்படியான கிளினிக்குகளிலும் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்தியாவின் கொரோனா இழப்பு சார்ந்து என்றுமே சீரான பதிவு கிடைத்ததில்லை.
இந்தியாவின் இன்றைய கொரொனா இழப்புக்கு மோசமான உள்கட்டமைப்பு, மனித பிழை, அரசியல் தலைமைகளின் அசண்டை மற்றும் குறைந்த சோதனை நிலைகள், உள்ளிட்ட பல காரணங்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இது சார்ந்த எச்சரிக்கைகளை இந்திய சுகாதார நிறுவனங்களும் விடுத்துள்ளது. எனினும் இந்திய அரசியல் தலைமைகள் காரணங்களை பகுப்பாய்வு செல்லாது உதறி தள்ளுவதே கொரோனாவின் கோர தாண்டவத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த இயலாமைக்கு காரணமாகிறது.
பிரதமர் நரேந்திர மோடி குறைந்த எண்ணிக்கையை 'மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக' கொண்டாடினார். மேலும் 'கோவிட்-19க்கு எதிரான போரில் முழு நாடும் வெற்றிபெறும்' என்று கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார். இது இந்தியாவின் அரசியல் தலைமை தங்கள் இயலாமையை சீராக கணிக்க தவறியுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது. தற்புகழ்ச்சி இந்தியா மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமன்றி தாங்கள் புதிய யோசனைகளை தவிர்ப்பதற்கும் இந்திய அரசியல் தலைமை பயன்படுத்தி வந்துள்ளது.
கொரோனா பரவுகையில் இந்திய பிரதமர் மோடியின் அசண்டையை சர்வதேச ஊடகங்களும் கடுமையாக சாடியுள்ளன. குறிப்பாக 'த டைம்ஸ்' (The Times) இணையத்தளத்தில் அந்த ஊடகத்தின் ஆசிய செய்தியாளர் பிலிப்ஸ் செர்வெல்லால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில், 'நான் இவ்வாறான கூட்டத்தைப் பார்த்ததில்லை' என மேற்கு வங்கத் தேர்தலில் தனக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நரேந்திர மோடியின் கருத்திலிருந்து தொடங்குகிறது. தேர்தல் பிரச்சார நேரங்களில் மக்கள் பாதுகாப்பை புறக்கணித்து தமது வெற்றியை இலக்கு வைத்து இந்திய பிரதமர் மோடி செயற்பட்டதாகவும், கொரோனா விடயத்தை மோடி அரசு முறையாகக் கையாளவில்லை என்று சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. மேலும், இந்தக் கட்டுரையை அவுஸ்ரேலிய ஊடகமான 'த அவுஸ்ரேலியன்' (The Australian) மறு ஆக்கம் செய்திருந்தது. த அவுஸ்ரேலியன் ஊடகம், 'மோடி இந்தியாவை ஒரு வைரஸ் பேரழிவுக்கு இட்டுச் சென்றுவிட்டார்.' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தது. இந்தக் கட்டுரையின் இணைப்பைத் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'ஆணவம், தேசிய வெறி மற்றும் அதிகாரத்துவ இயலாமை ஆகியவை இணைந்து இந்தியாவின் இந்த நிலையை உருவாக்கியுள்ளன' எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து அவுஸ்ரேலிய தூதரகத்துக்குக் கடிதம் எழுதியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், 'அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக்கொண்டு கீழ்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகவும், கொரோனாவைக் கட்டுப்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா செய்திருக்கிறது' என அந்த மறுப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுதலையாய் இந்த சந்தர்ப்பத்திலும் இந்திய மத்திய அரசு தங்கள் சுயபரிசோதனையை செய்ய தவறி தங்கள் புகழ்ச்சியை பேணவே முயலுகின்றனர். உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா செய்திருக்கிறதாக தம்பட்டம் அடிக்கும் மத்திய அரசு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்ஸிசன் பற்றாக்குறை ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவு தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டமையை அவதானிக்க வேண்டும். இது இந்தியாவின் நீண்டகால தம்பட்டமாகவே காணப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.147.81 கோடி (இந்தியா மதிப்பில்) நிதியுதவியில் 297 அம்புலன்ஸ் வாகனங்கனை இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது. அதேநேரம் அன்றைய காலப்பகுதியில் இந்தியாவில் வைத்தியசாலை மற்றும் அம்புலன்ஸ் வசதியற்று ஒருவர் தனது மனைவியை நீண்ட தூரம் வைத்திய தேவைக்காக தூக்கி சென்று இறந்தார் என்ற செய்தியும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியது.
கொரோனா பரவலின் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளமைக்கு இந்திய அதிகார மையமே காரணமென இந்திய நீதித்துறையும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், 'தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தகும். கொரோனா இந்தளவு பரவியதற்கு தேர்தல் ஆணையம்தான் காரணம். சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும்' என கண்டித்தது. தேர்தல் காலங்களில் பிரச்சார கூட்டங்களில் சீரான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் அதனை தேர்தல் ஆணையமும் சீராக கண்காணிக்கவில்லையெனவும் அதுவும் இந்தியாவில் கொரோனாவின் இன்றைய நிலைப்பாட்டுக்கு ஒரு காரணமென நீதிமன்றம் சாடியுள்ளது.
கொரோனா இழப்புகளால், மாநிலங்களும் உள்ளூர் அதிகாரிகளும் மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளில் இருந்து உதவி வரும் என்று தீவிரமாக காத்திருக்கும் நிலை ஆசிய வல்லாதிக்க கனவுடன் இருக்கும் அரசாகிய இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்பது துயரான பதிவே ஆகும். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் எல்லை பகைமை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவை உதவிகளை வழங்குவதற்கும், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மிகவும் தேவையான மருத்துவ உபகரணங்களை அனுப்புவதற்கும் முன்வந்துள்ளன. கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு பின்னராவது இந்திய தன்னை நடுநிலைமையாக சுயபரிசோதனைக்கு உட்படுத்த முயல வேண்டும். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க காட்டும் வேகத்தை சுயமதிப்பீட்டிற்கு பயன்படுத்தினாலேயே அகண்ட பாரதம் தொடர்ச்சியாக அகண்ட தேசமாகவே இருக்கக்கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment