அமெரிக்க-சீன மென் அதிகாரபோக்கும் தேசிய அரசுகளில் இராணுவ அணுகுமுறையும்? -ஐ.வி.மகாசேனன்-
கோவிட்-19 பெருந்தொற்று உலகை சூழ்ந்து முழுமையாக ஈராண்டை கடந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நிலையான முடிவுகளை வெளிப்படுத்தாத போதிலும், 2021இன் அரசியல்நிகழ்வுகள் கோவிட்-19க்கு பின்னரான உலக ஒழுங்கின் செல்நெறியை அடையாளப்படுத்துவதாக அரசறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலக அதிகாரத்திற்காக போட்டியிடும் அரசுகள் மென் அதிகாரத்திற்குள்(Soft Power) நகர முற்படுகையில் தேசிய அரசுகள் சுயாதீனமாக இராணுவ அதிகாரத்திற்குள்(Military Power) நகரும் போக்குகள் அவதானிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை 2021ஆம் ஆண்டின் தொகுப்பாக இக்கால சர்வதேச அரசியல் போக்கினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று உலக நாடுகளிடையே பாரபட்சமின்றி இழப்புகளை அதிகரித்து கொண்டே செல்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளாயினும் சரி, வளரும் நாடுகளாயினும் சரி, வளர்ச்சி குன்றிய நாடுகளாயினும் சரி கொரோனா வைரஸினாலும் அதன் உருமாற்று திரிபுகளாலும் தொடர்ச்சியாக அழிவுகளை சமச்சீராக எதிர்கொண்டு வருகிறன. எனினும் பாதிப்பின் தாக்கம் வளர்ச்சியடைந்த நாடுகளை விட ஏனைய நாடுகளுக்கு அதிக சுமையை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பொதுவானதாயினும் அதன் சுமை ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த நாடுகளை விட ஏனைய நாடுகளுக்கு அதிகமாகவே காணப்படுகிறது. இத்தகைய வேறுபாடுகளை அவற்றின் அரசியல் மாறுதல்களில் இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.
உலக அதிகாரத்திற்காக போட்டியிடும் அமெரிக்கா மற்றும் சீனா அதிகம் ஏனைய நாடுகளை கவர்ந்து இழுக்கும் பொறிமுறையாக மென் அதிகாரத்தை முதன்மைப்படுத்துவதனை 2021இல் அவதானிக்க கூடியதாக உள்ளது. கோவிட் பெருந்தொற்று இரு நாடுகளிலும் அதிக இழப்புக்களை ஏற்படுத்திய போதிலும் அவற்றின் பொருளாதார ஸ்திரம் வலுவிழந்த அரசுகளை ஈர்க்கும் இராஜதந்திரத்தை நகர்த்தக்கூடிய திறனை வழங்கி உள்ளது.
சீனா ஏற்கனவே தனது வெளியுறவுக்கொள்கையில் மென்அதிகாரத்தையே முதன்மைப்படுத்தி செயற்படுகிறார்கள். பட்டி மற்றும் சாலை முன்முயற்சியூடாக(Belt and Road Initiative) நாடுகளின் உட்கட்டமைப்புக்களை மையப்படுத்தி மேற்கொண்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் மென்அதிகாரம் சார்ந்ததாகவே காணப்படுகிறது. இந்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பின்னரான சூழலில் சீனா தனது மென்அதிகார வெளியுறவுக்கொள்கை செயற்பாட்டினுள் சுகாதார உதவித்திட்டங்களையும் இணைத்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை தொடர்ந்து 2021இல் ஆட்சிக்கு வந்த ஜோ பைடனும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சீனாவை குற்றம்சாட்டி சீனாவை உலகில் தனிமைப்படுத்தும் உத்திகளை மேற்கொண்டார். எனினும் சீனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அன்பளிப்பாகவும் கடனுக்கும் வழங்கி அமெரிக்காவின் விமர்சனங்களை தகர்த்திருந்தது. ஆரம்பத்தில் சீனாவின் தடுப்பூசிக்கு அமெரிக்கா நெருக்கடிகளை கொடுத்திருந்தாலும், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் சீனாவின் இருவகை தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் உறுதிப்படுத்துகிறது.
சீனாவின் துரித வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ள மென்அதிகாரம் மீது அமெரிக்க ஆட்சித்துறை கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னராக அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மென்அதிகார சிபார்சுகளை அதிகம் பரிசீலிக்க முற்பட்டுள்ளமையையே அவரது வெளியுறவுக்கொள்கையில் அவதானிக்க முடிகின்றது. 2021-ஜூன் மாதம் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட பைடன், அங்கு ஜி07 மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட B3W (Build Back Better World) திட்டம் சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் மென்அதிகார திட்டமாகவே காணப்படுகிறது. மேலும், 2021இன் இறுதியில் டிசம்பர் நடுப்பகுதியில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இந்தோனேசியாவிற்கு மிகவும் கவனிக்கத்தக்க உறுதிமொழியை அளித்துள்ளார். அதாவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க உறவுகளையும் முதலீட்டையும் மேம்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பிராந்தியத்தில் சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க உயர்மட்ட தூதர் வெளியுறவு செயலாளர் தென்கிழக்கு ஆசியாவில் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கிய நிலையில் கூறியுள்ளார். இது பிளிங்கன், இந்தோனேசியாவில், சீனாவை எதிர்ப்பதற்கு மென் அதிகாரத்தை வலியுறுத்துகின்றமையையே வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு உலக அதிகாரத்திற்காக போட்டியிடும் அரசுகள் மென் அதிகாரத்தை நோக்கி நகருகையில் மறுதளத்தில் தேசிய அரசுகளில் குறிப்பாக வலுக்குன்றிய அரசுகளில் உள்ளக வன் அதிகார போக்குகள் அதிகரிக்கும் சூழல் கவனிக்கப்படுகிறது. இவ்இருவேறுபட்ட அதிகார பொறிமுறைக்குள்ளும் ஓர் ஒழுங்கு உலக அரசியலில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.
ஒன்று, ஆப்கானிஸ்தானில் செப்டெம்பரில் மீள உயிர்ப்படைந்துள்ள தலிபான்களின் ஆட்சியானது; தேசிய அரசுகளில் அதிகரித்து வரும் உள்ளக வன்அதிகாரம் உலக அதிகார அரசுகளின் மென் அதிகாரத்துடன் இணக்கமானது என்பதற்கு வலுவாக சான்றாக அமைகிறது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் தலிபான்களின் ஆட்சிக்கு சீன மற்றும் ரஷ்சியா நேரடியாக ஆதரவினை வெளிப்படுத்தி உள்ளது. சீன தூதரக உறவை பேணுவதுடன் ரஷ்சியா தலிபான்களுக்கு அதரவாக தன் நட்பு நாடுகளின் தூதுவர்களை அழைத்து ஒரு கூட்டத்தையும் நடாத்தியுள்ளது. அதேநேரம் அமெரிக்கா தலிபான்களை நேரடியாக ஆதரிக்காத போதிலும் இதுவரை நேரடியாக நிராகரிக்காத சூழலே காணப்படுகிறது. அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறித்த திகதியில் வெளியேற்றப்பட்டமையானது அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் அதிகரிக்கும் மென் அதிகார போக்கின் விளைவினதாகவே அரசியல் பரப்பில் ஆராயப்படுகிறது. எனவே அமெரிக்கா மற்றும் சீனாவின் இணக்கத்துடனேயே ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் உள்ளக வன்அதிகார அரசியல் இடம்பெறுகின்றமை மறுக்க இயலாத விடயமாகவே காணப்படுகிறது.
இரண்டு, 2021-பெப்ரவரி 01ஆம் திகதி மியான்மர் இராணுவம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. அப்போதிலிருந்து ஜனநாயகத்துக்கு ஆதரவாக மியான்மர் முழுக்க மக்கள் போராட்டம் நடந்து வருகின்றனர். எனினும் ஆட்சி அதிகாரத்தில் தன் பிடியை அதிகரித்துக் கொள்ள மியான்மர் இராணுவம் அதிகப்படியான வன்முறையைக் கையில் எடுத்திருக்கிறது. மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு குழந்தைகள் பெரியவர்கள் என்ற பாரபட்சமின்றி 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உள்ளூர் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. மியான்மாரின் இராணுவ ஆட்சியின் நிலைமை தொடர்பில் கருத்தரைத்த மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யே ஹடுட், 'இது இனப்படுகொலை போன்றது. அவர்கள் ஒவ்வொரு நிழலையும் சுடுகிறார்கள்' எனக் கூறியதாக மியான்மர் நவ் செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. டிசம்பர்-28(2021) அன்றும் கிழக்கு மியான்மரில் கயா மாநிலத்தில் ஒரு நெடுஞ்சாலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்ட மக்களினை இராணுவ துருப்புக்கள் எரியூட்டப்பட்ட படுகொலையில், சர்வதேச மனித உரிமைகள் நிறுவனமான ளுயஎந வாந ஊhடைனசநn ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டதும் உறுதிப்படுத்தியுள்ளது. மியான்மர் இராணுவ சதியில் சீனாவின் ஆதரவு இராணுவ தரப்புக்கு நேரடியாக காணப்படுகின்றதுடன், மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்று, ஆபிரிக்க கண்டத்தில் நான்கு ஆட்சி கவிழ்ப்புகள் இராணுவ சதிப்புரட்சி மூலம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மத்திய ஆபிரிக்க நாடான சாட்டில்(Chad), ஏப்ரல்(2021)இல் ஜெனரல் மஹாமத் இட்ரிஸ் டெபி அதிகாரத்தைக் கைப்பற்றிய சில வாரங்களுக்குப் பிறகு, அவரது அரசியலமைப்பை இடைநிறுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்தார். மே மாதம்(2021), மாலி வீரர்கள் 10 மாத இடைவெளியில் இரண்டாவது சதிப்புரட்சியை நடத்தினர். சூடானின் இராணுவம் அக்டோபரில்(2021) நாட்டின் சிவிலியன் தலைவர்களை தடுத்து வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. கினியாவின் செப்டம்பர்-5(2021)அன்று அந்நாட்டின் இராணுவ தலைவர் கர்னல் மாமடி டூம்பூயா, நாட்டின் முதல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான அல்பா கொண்டேவை தடுத்து வைத்து ஆட்சியை கைப்பற்றினார். 2021இல் ஆபிரிக்க கண்டம் முழுவதும் நான்கு வெற்றிகரமான இராணுவ கையகப்படுத்தல்கள் நடைபெற்றுள்ளது. முன்னைய 2020ஆம் ஆண்டில் மூன்று இராணுவ கையகப்படுத்தல்கள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
நான்கு, நேரடி ஆட்சிக்கவிழ்ப்புகளுக்கு புறத்தே ஒரு சில நாடுகளில் இராணுவ செல்வாக்கு அதிகரித்து கொண்டு செல்கிறது. குறிப்பாக இலங்கையில் சிவில் சேவை கட்டமைப்புக்களில் முன்னாள், இந்நாள் இராணுவ உயரதிகாரிகளின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு செல்கிறது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலளார், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அஞ்சல் திணைக்கள ஆணையாளர் என சிவில் நிர்வாகத்தின் உயரடுக்குகளில் முன்னாள் இராணுவ உயரதிகாரிகளே காணப்படுகிறார்கள். அத்துடன், கோவிட்-19 சுகாதார செயலணியின் தலைவராகவும் இலங்கையில் இராணுவத்தளபதியே நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவ செல்வாக்கு அதிகரிப்பு என்பது எதிர்காலத்தில் இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடிய அபாயங்களும் காணப்படுகிறது. பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இவ்அனுபவங்களை உயரளவில் அவதானிக்கலாம். இவ்வாறாக சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவ பிரசன்ன அதிகரிப்பும் வன் அதிகார அடையாளமாகவே காணப்படுகிறது.
எனவே, கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னரான உலகில், வளர்ச்சியடைந்துவரும் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரமின்மையானது அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்குவதுடன் இராணுவம் சார்ந்த வன் அதிகார உள்ளக அரசியல் செயற்பாடுகளையும் உருவாக்கி வருகிறது. இவ்வாறாக தேசிய அரசுகளில் அதிகரிக்கும் வன் அதிகார போக்கினை ஊக்குவிக்கும் மென் அதிகார போக்கினிலேயே உலக அதிகார போட்டியில் ஈடுபடும் அமெரிக்க மற்றும் சீனா ஈடுபடுகின்றன. இராணுவ ஆட்சிகளுக்கு சீனாவின் ஆதரவு நேரடியாக காணப்படுகின்ற போதிலும், அமெரிக்காவும் மாறிவரும் புதிய உலக ஒழுங்கில் இராணுவ ஆட்சியை நிராகரிக்காத போக்கே காணப்படுகிறது. குறிப்பாக கினியாவில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். டிசம்பர் இறுதியில் அமெரிக்காவினால் ஒருங்கிணைக்கப்பட்ட ஜனநாயக மாநாடானது அமெரிக்காவின் கூட்டு உருவாக்கத்துக்கான முன்முயற்சியே அன்றி, இதயசுத்தியுடன் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சியாக அவதானிக்க இயலாத சூழலே காணப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனநாயக நெறிமுறைகள் சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாக போலியாக ஜனநாயகத்தை கட்டமைப்பது ஜனநாயகத்தை முடிவுறுத்தும் செயலாகவே அமையவாய்ப்புள்ளது.
Comments
Post a Comment