சந்திரிகா-சிராணி கூட்டின் பொது எதிரணி உருவாக்கம் சாத்தியமாகுமா? -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கை அரசியலில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான உரையாடல்களே முதன்மையாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களிடையே அரசாங்கம் தொடர்பில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் ஆளும் ஸ்ரீரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியிடையே பிளவுகள்சார் உரையாடல்கள் அதிகரித்து வருகின்றது. அவ்வாறே எதிரணி கூட்டணிக்குள்ளும் தலைமைத்துவ போட்டிகள் நீடிக்கிறது. இந்நிலையிலேயே தென்னிலங்கை சிவில் சமூக தரப்பினரிடையே புதியதொரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி புதிய கூட்டணிக்கான உரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். புதிய கூட்டணிக்கான பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அடையாளப்படுத்துவதாக செய்திகள் முதன்மைப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் சந்திரிக்கா-சிராணி-தென்னிலங்கை சிவில் சமூக கூட்டு இணைந்து அடையாளப்படுத்தும் புதிய கூட்டணியின் வாய்ப்புக்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி அதுசார்ந்து மக்களிடம் அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையை சாதகமாக பயன்படுத்தி கொள்ள, எதிரணியிடையே மும்மரமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுன்ற உறுப்பினர்  பாடலி சம்பிக்க ரணவக்க 43ஆம் படையணி எனும் அமைப்பை முன்னிறுத்தி தனது தலைமைத்துவத்தை அடையாளப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வாறே இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இதுவரையான அரசியல் கலாசாரத்திலிருந்து மாறுபட்ட வடிவத்தில் கட்சியாக அபிவிருத்தி பணிகளை முன்னிறுத்தி பிரச்சாரங்களை வேகப்படுத்தி வருகின்றார்.  எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள இத்தலைமைத்துவப் போட்டி குழப்பபங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சம்பிக்க ரணவக்கவின் 43ஆம் படையணியின் மாநாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்ற அறிவித்தலை சஜித் பிரேமதாசா வழங்கியதாக செய்திகள் வந்தன. எனினும் ஒருமுனையில்  எதிரணியிடையே  நிலவும் இவ்முரண்பாட்டை சீர்செய்ய எதிரணி உறுப்பினர்கள் சிலர் முயன்றும் வருகின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், 'ராஜபக்ஷாக்களின் காட்டாட்சியை வீழ்த்த சஜித்-சம்பிக்க கரம் கோர்க்க வேண்டும்' என்ற அழைப்பை விடுத்துள்ளார்.

ஆளுங்கட்சி அரசாங்கம் பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன், ஆளுங்கட்சிக்குள் நிலவும் கூட்டணி முரண்பாடுகளாலும் கடும் நெருக்கடிகளையே எதிர்கொண்டு வருகிறது. எனினும் ஆளுங்கட்சிக்குள் உள்ள கூட்டணி முரண்பாடுகளில் கூட்டணி கட்சிகளின் பலவீனங்கள் இவ்அரசியல் பகுதியில் முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் பங்காளிகளில் பிரதான பொதுஜன பெரமுன கட்சியை அடுத்து இரண்டாவது நிலையில் பதினான்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை கொண்ட கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே காணப்படுகின்றது. ஆயினும் சுதந்திர கட்சியின் தலைமைத்துவ பலவீனத்தால் அது தனித்து இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் தாய்க்கட்சி சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் சுதந்திர கட்சி வலுவான தலைமையை அடையாளப்படுத்துமாயின் ராஜபக்ஷாக்கள் மீதுள்ள மக்கள் விமர்சனங்களிடமிருந்து தங்களை சுதாகரித்துக்கொள்ள பல பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் சுதந்திர கட்சிக்கு மீளத்தாவும் வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அவ்வாறான முன்னெடுப்புக்கள் எதனையும் செய்வதான தோற்றங்கள் பொதுவெளியில் காணப்படவில்லை.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடேயே நிலவும் இவ்வாறான குழப்பங்களில் மத்தியிலேயே தென்னிலங்கை அரசியலில் மீள இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவினை பற்றிய உரையாடல் முதன்மை பெறலாயிற்று. குடும்ப ஆட்சி, பரம்பரை ஆட்சி ஜனநாயக ஆட்சிக்கு விரோதமானதென பொதுவெளியில் உரையாடப்பட்டாலும் தென்னாசிய பரப்பில் குடும்ப ஆட்சி, பரம்பரை ஆட்சியை மக்கள் மனங்கள் ஆதரிக்கும் நிலையே காணப்படுகிறது. இவ்வாறான மக்கள் உளவியல் அடிப்படையிலேயே ஓய்வுபெற்ற நிலையிலும் மீள ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழும் சந்தர்ப்பங்களில் சந்திரிக்க குமாரதுங்கா பற்றிய உரையாடல்கள் முதன்மை பெறுகிறது. குறிப்பாக  ஆட்சி மாற்றம் பற்றிய ஆரம்ப உரையாடல்களில் 2021ஆம் அண்டின் நடுப்பகுதியில், நீண்ட அரசியல் பாரம்பரியத்தை கொண்ட பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து சந்திரிக்கா குமாரதுங்காவின் மகன் விமுக்தி குமாரதுங்க இலங்கை அரசியலில் பிரவேசிக்கப்போவதாக செய்திகள் வந்தன. எனினும் விமுக்தி குமாரதுங்க ஆகஸ்ட்-2021 முதல் வாரத்தில், 'இலங்கை அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், இலங்கை அரசியல்வாதியாக வேண்டும் என்ற தனது அபிலாஷைகளைக் கூறும் எந்தவொரு அறிக்கையையும் புறக்கணிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக' ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். எனினும் ஆட்சி மாற்றம் பற்றிய உரையாடலில் சந்திரிக்க குமரதுங்கா முன்னணி உரையாடலிலேயே நீடித்து வந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலே அண்மையில் சந்திரிக்க குமாரதுங்காவின் ஜனாதிபதி பதவி காலத்தை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா கலந்து கொண்டமை பொதுவேட்பாளர் பற்றிய புதிய அரசியல் உரையாடலை ஆரம்பித்துள்ளது. சந்திரிக்கா-சிராணி கூட்டுக்கு தென்னிலங்கை அரசியல் பரப்பில் காணப்படும் வாய்ப்புக்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

முதலாவது, சந்திரிக்கா குமாரதுங்காவின் அடையாளப்படுத்தல் புதிய கூட்டணி உருவாக்கத்திற்கு சமகாலத்தில் பெரிய வாய்ப்பாக உள்ளது. பொருளாதார நெருக்கடி சார்ந்து ராஜபக்ஷாக்களிற்கு மக்கள் மத்தியில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், ராஜபக்ஷாக்களின் யுத்த வெற்றிவாதம் அதுசார்ந்து காணப்படும் பாதுகாப்பு நம்பிக்கைகள் சமகாலத்திலுள்ள எதிரணி உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் ராஜபக்ஷாக்களுக்கு சாதகமான வாய்ப்பையே வழங்குகின்றது. எனவே ராஜபக்ஷாக்களினை வீழ்த்துவதாயின் அதற்கு ஒப்பான பெருந்தோற்றத்தை எதிரணி வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அத்தோற்றம் நிச்சயம் சந்திரிக்கா குமாரதுங்காவிடம் காணப்படுகின்றது என்hது மறுக்க இயலாத வாதமாகும். இலங்கையின் நீண்ட அரசியல் பாரம்பரியத்தை கொண்ட குடும்பமாக மக்கள் மத்தியில் மிகப்பழக்கப்பட்டதொரு விம்பம் சந்திரிக்காவிடம் காணப்படுகின்றது. அத்துடன் ராஜபக்ஷாக்கள் மீதுள்ள மக்கள் விமர்சனங்களிடமிருந்து தங்ளை சுதாகரித்து கொள்ள எண்ணும் பொதுஜன பெரமுனவில் உள்ள சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சந்திரிக்காவின் தலைமையில் ஒன்றுசேர வாய்ப்புள்ளது. இது சந்திரிக்கா தலைமையிலான பொது எதிரணிக்கு சாதகமான களத்தை அடையாளப்படுத்துகிறது.

இரண்டாவது, சந்திரிக்கா தலைமையிலான பொது எதிரணியில் பொதுவேட்பாளராக உரையாடப்படும் சிராணி பண்டாரநாயக்கா முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசராக காணப்படுகின்ற போதிலும் அரசியலுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒருவராகவே காணப்படுகின்றார். 2013ஆம் ஆண்டுஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவால் பதவி நீக்கப்பட்டார். இது அரசியல் பழிவாங்கலாக உரையாடப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிராணி பண்டாரநாயக்கா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நீக்கி மீள பிரதம நீதியரசராக நியமித்திருந்தார். சிராணி தான் குற்றமற்றவர் என்பதை அடையாளப்படுத்தவே பிரதம நீதியரசர் பொறுப்பை மீள ஏற்றுக்கொண்டதாக கூறி ஒரு நாளிலேயே இராஜினாமாவும் செய்திருந்தார். இந்நிகழ்வுகளூடாக சிராணி பண்டாரநாயக்கா பிரதம நீதியரசர் என்பதை கடந்து அரசியல் அடையாளத்தை பெற்றுள்ளார். புதிய வேட்பாளர் என்பதைக்கடந்து முன்னாள் நீதியரசராக காணப்படுவதுடன் அரசியல் அடையாளம் பெற்றிருப்பது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிரமத்தன்மை காணப்படாது. 

மூன்றாவது, இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் காலங்களில் தென்னிலங்கை ஒருமித்து நின்று ஆட்சி மாற்றங்களை நிகழ்த்துவதுண்டு. கட்சிகளை கடந்து இலங்கைத்தேசியம் என்ற எண்ணப்பாங்கில் தென்னிலங்கை மக்களும் தென்னிலங்கை கட்சிகளும் ஒன்று சேருவதுண்டு. சிராணி பண்டாரநாயக்காவை முன்னிறுத்துவதனூடாக தென்னிலங்கையில் அத்தகைய ஒற்றுமையை உருவாக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜெனிவாவில் மீள சர்வதேசரீதியாக இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்து வருகின்றது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் போர்க்குற்ற விசாரணைகள் இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையை கடந்த சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் நகரும் போக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தென்னிலங்கை மக்களிடையே இலங்கைக்கு ஏற்பட்ட அவமானகரமாகவே பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவரை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதனூடாக அவரது விம்பத்தினூடாக சர்வதேச பரப்பில் இலங்கை மீதுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்களை முழுமையாக இல்லாது செய்யலாம் என்ற எண்ணப்பாங்கில் தென்னிலங்கைகை ஒருமைப்பட அல்லது ஒருமைப்பப்படுத்த அதீத வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

மேற்குறித்த வாய்ப்புக்களுக்கு அப்பால் சந்திரிக்கா-சிராணி கூட்டிற்கு பலவீனமானதாக எதிரணியின் அதிகார வேட்கை போட்டி காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் ஆளுங்கட்சியினுள் காணப்படும் முரண்பாடுகளால் மக்களிடம் ஆளும்கட்சி முழுமையாக ஆதரவிழந்துள்ளதாகவும் இது எதிரணிக்கு சாதகமானது என்ற எண்ணப்பாங்கில் எதிரணியிடையே தலைமைத்துவ போட்டியே பெரும் பூதாகரமாகி உள்ளது. மாறாக எதிரணி பொதுவேட்பாளரை முன்னிறுத்தும் எவ்வித எண்ணப்பாங்குகளும் காணப்படவில்லை என்பதே அவர்களின் செயற்பாடு வெளிப்படுத்தகிறது. மேலும், 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது சிவில் சமூகத்தின் செயற்பாடு என்ற அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுமே தமக்கென தனித்துவமான சிவில் சமூகங்களை உருவாக்கி அதனூடாக கட்சி பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேராசிரியர்கள், இராணுவ உயர்நிலை உத்தியோகத்தர்கள், கல்வியியலாளர்கள், பௌத்த மதகுருமார்களை உள்ளடக்கிய வியத்கம என்ற அமைப்பை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றது. அவ்வாறே ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களுக்காக புத்திஜீவிகள் ஒன்றியம் என்ற அமைப்பை முன்னிலைப்படுத்துகிறது. சம்பிக்க ரணவக்கவும் 43ஆம் படையணி என்ற பெயரில் சிவில் சமூக செயற்பாட்டுகளூடாகவே பிரச்சார நடவடிக்கைகளை முதன்மைப்படுத்துகின்றார். இவ்வாறாக சிவில் சமூகங்களும் பிளவுபடுத்தப்பட்டிருப்பது பொது எதிரணி அதுசார்ந்து பொதுவேட்பாளர் என்ற பிரச்சார நடவடிக்கைகளை உத்வேகமாக செயற்படுத்துவதில் தடங்கலை ஏற்படுத்தக்கூடியதாகவே காணப்படுகிறது.

எனவே, பொதுஎதிரணிக்கு தலைமையாக உரையாடப்படும் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவும், அவரது பொதுவேட்பாளராக உரையாடப்படும் சிராணி பண்டாரநாயக்காவும் ஆளுமைகளாக தென்னிலங்கையின் எண்ணங்களை பூர்த்தி செய்யக்கூடியவர்களாக வாய்ப்புக்களை நிறைவாக கொண்டுள்ள போதிலும், எதிரணிக்குள் உள்ள முரண்பாடுகள் பொது எதிரணியை ஊக்கப்படுத்துவதில் பெருந்தடையாக உள்ளமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் பொது எதிரணிக்கான உருவாக்க பணிகளும் களத்தில் பெருவீச்சாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக தென்னிலங்கையின் முன்னணி சிவில் அமைப்பின் ஸ்தாகர்களில் ஒருவர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாண சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே சந்திரிக்கா-சிராணி கூட்டு பொது எதிரணி தொடர்பான உரையாடல்களை மேற்கொண்டுள்ளார். சம்பிக்க ரணவக்க, சஜித் வரிசையில் பொது எதிரணி செயற்பாட்டாளர்களும் யாழ்ப்பாணத்தில் நாடி பிடித்து பார்க்கும் விஜயமாகவே தெரிகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-