சீனா-ரஷ்சிய விரிசலைத்தூண்டிவிடும் மேற்குலகத்தின் உபாயங்கள்! -ஐ.வி.மகாசேனன்-

கோவிட்-19இற்கு பின்னரான நிலைமாறுகால உலக ஒழுங்கை தமதாக்கி உலக அதிகாரத்தை பலப்படுத்தி கொள்வதில் வல்லாதிக்க அரசுகள் கடும்பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது.  பிராந்தியரீதியில் அதிகார போட்டிகள் உக்கிரம் பெற்று வருகிறது. குறிப்பாக மத்திய ஆசியா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்சியாவின் காலூன்றலுக்கான எத்தனங்களே 2021இன் இறுதியிலிருந்து சர்வதேச அரசியல் பரப்பை நிரவி உள்ளது. எனினும் மென்அதிகாரத்தினூடாக உலக அதிகார போட்டியில் முன்னிலையிலுள்ள சீனாவின் செயற்பாடுகளையும் கவனிக்காது செல்ல இயலாது. சீனாவின் இரும்புத்திரை அரசியலுக்கு பின்னாலான நகர்வுகளை நுணுக்கமாக கவனிக்க தவறியதன் விளைவே அதன் அபரிவித சடுதியான வெளித்தோன்றல் வளர்ச்சியாகும். இந்நிலையில் இக்கட்டுரை சர்வதேச அரசியல் பரப்பில் முதன்மைபெறும் மத்திய ஆசியாவை மையப்படுத்தி இடம்பெறும் அமெரிக்க-ரஷ்சிய முரண்பாட்டில் சீனாவின் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழமான அரசியல் கூட்டாண்மை மூலம் சீனாவும் ரஷ்சியாவும் சமீபத்திய ஆண்டுகளில் நெருக்கமாக வளர்ந்து வருகின்றது. உலக அதிகாரத்திற்கான போட்டியில் ரஷ்சியா-சீனா கூட்டாண்மையும் அமெரிக்காவிற்கு பெரும் சவாலுக்குரியதாகவும் காணப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் சோவியத் குடியரசுகள் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு எண்ணங்கள் சார்ந்து இரு நாடுகளின் போட்டியிடும் நலன்கள் சில நேரங்களில் அவற்றின் உறவுகளைத் தடம் புரட்டும் காரணியாகக் சர்வதேச அரசியல் பரப்பில் கருதப்படுகின்றன. குறிப்பாக, உலக அதிகாரத்தை இலக்கு வைத்து நகரும் சீனாவிற்கு ரஷ்சியாவின் சோவியத் குடியரசு சார்ந்த எழுச்சி அச்சுறுத்தலாகக்கூடியது என்ற விமர்சனம் காணப்படுகிறது. இருதுருவ உலக ஒழுங்கில் ரஷ்சியா சோவியத் ஒன்றியமாகவே உலக அதிகாரத்தில் வல்லாதிக்க சக்தியாக மிளிர்ந்திருந்தது. அத்துடன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னால் சீனாவில் டெங் சியாவோ பிங்கால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களும் ஒரு காரணமாக கொள்ளப்படுவதுண்டு. இந்நிலையில் மீள புடின் தலைமையிலான சோவியத் ஒன்றிய மீளுருவாக்க சிந்தனை சீனாவுக்கு அச்சுறுத்தலானது என்ற பிரச்சாரம் மேற்கு ஊடகங்களில் அதிகம் உரையாடப்படுகின்றது. 

இச்சூழலிலேயே, 2021இன் இறுதியிலிருந்து அதிகரித்துவரும் சோவியத் குடியரசுகள் மீதான ரஷ்சியாவின் ஈடுபாடு சீனாவின் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சூழல் காணப்படுகின்றதா என்பதை சீனா-ரஷ்சியா உறவின் சமகால நிலைப்பாடுகளூடாக நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது. 

ஓன்று, சோவியத் குடியரசுகள் மீதான ரஷ்சியாவின் ஈடுபாடு சீனா மீதான சர்வதேச நெருக்கடியை தளர்த்த செய்துள்ளது. சீனா-தைவான் நெருக்கடி சர்வதேச பரப்பில் வலுவிழந்து செல்வதற்கு சோவியத் குடியரசுகள் மீதான ரஷ்சியாவின் ஈடுபாட்டை முதன்மைப்படுத்திய செய்திகள் காரணமாயுள்ளது. சீனா அதிகம் தனது இரும்புத்திரை அரசியல் நகர்வுகளூடாகவே தன் இருப்பை வலுப்படுத்தி வந்துள்ளது. எனினும் கோவிட்-19க்கு பின்னர் உலக அரசியல் பார்வை அதிகம் சீனா பக்கம் திரும்பியுள்ளமையால் சீனாவின் அரசியல் செயற்பாடுகளின் இரும்புத்திரை நகர்வுகளில் அதிக இடைவெளிகள் காணப்பட்டது. கொங்கொங்கை இலகுவாக தனது ஆளுகைக்குள் வலுப்படுத்திய சீனா, தைவான் விவகாரத்தில் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு பிரதான காரணம் சீனா மீது குவிந்துள்ள பார்வையேயாகும். சோவியத் குடியரசுகள் மீது அதிகரித்து வரும் ரஷ்சியாவின் அதிகாரப்பரவலினால் சர்வதேச அரசியல் பார்வை ரஷ்சியா பக்கம் திரும்பியுள்ளது. இதனால் சீனாவின் இரும்புத்திரை அரசியல் நடவடிக்கைககளுக்கான வாய்ப்பு மீள அதிகரித்துள்ளது. நிக்கேய் ஆசியா(Nமைமநi யுளயை) எனும் செய்தித்தளத்தில் ரஷ்சிய-உக்ரைன் விவகாரத்தின் சீனாவின் ஈடுபாடு பற்றி எழுதியுள்ள, 'உக்ரைன் நெருக்கடி செல்வாக்கு மண்டலங்களில் வல்லரசுகளின் சண்டையை எடுத்துக்காட்டுகிறது' எனும் தலைப்பிலான கட்டுரைக்கான அறிமுகத்தில் வழங்கப்பட்டுள்ள 'ரஷ்யாவும் அமெரிக்காவும் கிழக்கு ஐரோப்பாவில் கவனம் செலுத்துவதால், சீனா தைவானுக்கு குறிப்புகளை எடுத்து வருகிறது' எனும் கருத்தாடலே நிதர்சனமானதாகும்.

இரண்டு, ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தின் சீனாவின் கரிசணை உயரளவில் காணப்படுகிறது. சீனா-தைவான் விவகாரத்தை ஒத்த சூழலே ரஷ்சியா உக்ரைன் விவகாரத்திலும் காணப்படுகிறது. சீனா-தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தைவானுக்கு சார்பான நிலைப்பாட்டில் சீனாவின் தைவான் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றது. அவ்வாறே ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் எத்தனிப்புக்களை ரஷ்சியா முன்னெடுக்கையில் அமெரிக்கா ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு எத்தனத்துக்கு எதிராக செயலாற்றுகிறது. பல தைவானியர்கள், சீனா 'ரஷ்சியா-உக்ரைன்' விவகார முடிவை கவனமாகக் கவனித்து வருவதாக நம்புகிறார்கள். மேலும், இது அவர்களின் தீவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது தைவான் நிலப்பரப்பு சீனாவுடன் மீண்டும் ஒன்றிணைக்கும் நிலையான அச்சுறுத்தலுடன் இணைகிறது. சீனா-தைவான் உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற நியூ தைபே நகரின் தம்காங் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான அலெக்சாண்டர் சி. ஹூவாங் நடக்கும் நிகழ்வுகளைப் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஹூவாங் 2014இல் ரஷ்யா கிரிமியாவை வலுக்கட்டாயமாக இணைத்து, உக்ரைனின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்தபோது, மேற்கின் வலிமையற்ற பதிலைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். 'தைவான் மீது படையெடுக்கும் போது ரஷ்சியாவின் இராணுவ நடவடிக்கையை சீனா பின்பற்ற விரும்புகிறது என்று நான் நம்பினேன்' என ஹூவாங் குறிப்பிடுகிறார். தைவானின் தேசிய பாதுகாப்பு பணியகம் 2019இல் பாராளுமன்றத்திற்கு ஒரு அறிக்கையில் 'கிரிமியாவை இணைக்க ரஷ்யா பயன்படுத்தும் முறைகளை தைவானுக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சி நகலெடுக்கிறது' என்று ஒப்புக்கொண்டுள்ளது. எனவே ரஷ்சியா-உக்ரைன் முடிவில் சீனாவின் நலனும் ஒருங்கு சேர்ந்து இருப்பதனால் ரஷ்சியாவின் வெற்றிக்கான நகர்வுகளில் சீனாவின் ஈடுபாடும் உயரளவிவ் காணப்படவே வாய்ப்புள்ளது.

மூன்று, மத்திய ஆசியா பிராந்தியத்தில் ரஷ்சியா முக்கிய இராணுவ வழங்குனராகக் காணப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மத்திய ஆசியப் பாதுகாப்பில் சீனாவின் மெதுவான முயற்சியும் அவதானிக்கப்படுகிறது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பட்டி மற்றும் சாலை முன்முயற்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலம் அதிகரித்து வரும் செல்வாக்குடன் மத்திய ஆசியாவில் அதிகரித்து வரும் அதிகாரப்பூர்வமற்ற புறக்காவல் நிலையங்கள் மற்றும் அதிகரித்த பயிற்சி மத்திய ஆசியாவில் சீனா-ரஷ்சிய நலன்களிடையே மோதலுக்கான வாய்ப்பு தென்படுவதாக அவதானிக்கப்படுகிறது. எனினும்,  மாஸ்கோ மாநில சர்வதேச உறவுகள் நிறுவனம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான நிறுவனம் என்வற்றில் சீனாவின் உயரடுக்கு அரசியல் மற்றும் சீன-ரஷ்சிய உறவுகள் தொடர்பில் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் மூத்த அரசறிவியல் ஆராய்ச்சி நிபுணர் இகோர் டெனிசோவ் இக்கருத்தை முழுமையாக நிராகரித்துள்ளார்.  மத்திய ஆசியாவில் சீனா மற்றும் ரஷ்சியாவின் ஈடுபாட்டை பற்றி இகோர் டெனிசோவ் குறிப்பிடுகையில், 'மத்திய ஆசியாவில் மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான தொழிலாளர் பிரிவின் நிலையான தர்க்கம் ரஷ்சியா பாதுகாப்பிற்கு பொறுப்பு என்றும் சீனா பொருளாதாரத்திற்கு பொறுப்பாகும் என்றும் கூறுகிறது.' என்கின்றார். இந்த எண்ணங்களுடனேயே ரஷ்சியாவின் மத்திய ஆசிய நடவடிக்கைகளை சீனா கருத்தில் கொள்கிறது. மத்திய ஆசியாவில் சீனாவின் பொருளாதார செல்வாக்கு காணப்படுகின்ற போதிலும், பெய்ஜிங் மாஸ்கோவை விட மிகக் குறைவான அரசியல் செல்வாக்கையே கொண்டுள்ளது. 

நான்கு, மத்திய ஆசியாவில் ரஷ்சியா-சீனா கொண்டுள்ள புரிந்துணர்வின் போக்கிலேயே கஜகஸ்தான் விவகாரமும் அணுகப்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ரஷ்சியா கஜகஸ்தானில் உருவாகிய உள்ளக வன்முறையை சீர்செய்ய கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவின் அழைப்பில் இராணுவ துருப்புக்களை அனுப்பியமையானது,  சீன பொருட்கள் மற்றும் முதலீட்டில் கஜகஸ்தானின் ஆர்வத்தை குறைக்காது. வன்முறையாளர்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதில் பங்கேற்பது மற்றும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு உதவுவது போன்றவற்றில் பெய்ஜிங் ஒரு நல்ல முதலீட்டாளராக தனது வடிவத்தை கஜகஸ்தானில் மேம்படுத்திக் கொள்ள முடியும். சீனாவும் ரஷ்யாவும் தங்கள் பரஸ்பர அண்டை நாடான கஜகஸ்தானில் வன்முறை அமைதியின்மையைக் கையாண்டுள்ள முறைமையானது, இரு நாடுகளையும் இன்னும் நெருக்கமாக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேகமாக நகரும் மற்றும் அதிக பங்கு நெருக்கடியின் போது இரு சக்திகளும் ஒருவருக்கொருவர் இடமளிக்க விரும்பும் நீளத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. வார்சாவில் உள்ள கிழக்கு ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் ஜக்குப் ஜகோபோவ்ஸ்கி கஜகஸ்தான் விவகாரத்தில் ரஷ்சியா மற்றும் சீனா மேற்கொண்ட நடவடிக்கை பற்றி குறிப்பிடுகையில், 'மத்திய ஆசியாவில் சீனாவிற்கும் ரஷ்சியாவிற்கும் இடையிலான உறவு மிகவும் நிலையானது என்பதை கஜகஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடி நிரூபித்துள்ளது' என்று கூறியுள்ளார்.

எனவே, மேற்கு ஊடகங்கள் சீனா-ரஷ்சியாவிடையே விரிசல்களை எற்படுத்தும் உரையாடல்களை பொதுவெளியில் உருவாக்குகின்ற போதிலும், களத்தில் சீனா மற்றும் ரஷ்சிய தங்களிடையே பகிரப்பட்டுள்ள இடைவெளியை சீராக கையாண்டு பயணிக்கின்றமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதனூடாக சீனா-ரஷ்சியா கூட்டு ஆசிய மற்றும் ஐரோப்பியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சக்திகளாக செயற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-