பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உள்முரண்பாடு தேசிய அரசாங்க உருவாக்கத்திற்கு வழிவகுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலின் சமீபத்திய போக்கு சமகால அரசாங்கம் குழப்பங்களின் கூடாரமாக பரிணமித்துள்ளது. பொருட்களின் விலைகளின் உயர்வும், தட்டுப்பாடும் மக்களுக்கு நெருக்கீட்டையும், தரமாக வாழ இயலாத நாடு இலங்கை என்ற எண்ணப்பாட்டையும் உருவாக்கியுள்ளது. இதற்கு சமாந்தரமாக இலங்கை அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகள் அரசாங்கத்தின் ஸ்திர தன்மை தொடர்பிலும் கொள்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை உருவாக்கி வருகிறது. நாளடைவில் அதிகரித்துக்கொண்டே செல்லும் அரசாங்கத்தின் உள்ளக முரண்பாட்டின் உச்சக்கட்டமாகவே கல்வி இராஜாங்க அமைச்சராக காணப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப்பதவி நீக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுங்கட்சிக்குள் உள்ள ஏனைய சிறுகட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. எனினும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் தலைமைகள் தமது முடிவில் உறுதியாக உள்ளனர். இதனை மையப்படுத்தி ஆளுங்கட்சியில் காணப்படும் சிறுகட்சிகள் வெளியேறி புதிய கூட்டுக்குள் பரணமிக்க வாய்ப்புள்ளதா என்ற தேடல் இலங்கை அரசியல் ஆய்வு பரப்பில் முதன்மையான விடயமாக காணப்படுகிறது.  இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி-03(2022)அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்கு குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்ட நிலையில், ஜனவரி-04(2022)அன்று சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. சுசில் பிரேமஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரமுகராக காணப்படுகின்ற போதிலும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் கொண்டிருந்த நெருக்கத்தின் காரணமாக பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார். எனினும் சமீப காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் அவர் ஒரு சமிக்ஞை பதவியாக இருக்க விரும்பவில்லை என்றும் வேறு இடங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்காக கைகளை உயர்த்த விரும்பவில்லை என்றும் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். மேலும், நாடு எதிர்கொண்ட உரம் பிரச்சினை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பொலவில் சந்தையில் அவர் அளித்த பதிலே அவரது பதவி நீக்கப்படுவதற்கான காரணமாகவும் அனுமானிக்கப்படுகிறது. பிரேமஜயந்த தனது பதிலில் விவசாய அமைச்சர் தோல்வியடைந்து விட்டதாகவும், விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே காரணம் எனவும் தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கமானது, அரசாங்கத்தினுள் இருந்து கொண்டு அரசாங்க செயற்பாடுகளை விமர்சிக்கும் ஏனையவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அவதானிப்படுகிறது. இந்நிலையில், பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் காணப்படும் பிற கட்சிகள் சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பில் தமது எதிர்க்கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இது பொதுஜன பெரமுனாவினுள் காணப்படும் சிறுகட்சிகள் புது கூட்டு உருவாக்கத்துக்கான நேரமாக அமையுமா என்பது தொடர்பிலும் இலங்கை அரசியல் பரப்பில் உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஆழமாக அவதானித்தல் அவசியமாகிறது.

ஓன்று, பொதுஜன பெரமுன அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்துக்கு கிட்டிய ஆதரவுடன் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கம் உருவாக்கப்பட்ட தினத்திலிருந்தே அரசாங்கத்தினுள் காணப்படும் பிறகட்சிகளை உதாசீனம் செய்வதாக முரண்பாடு தொடர்ச்சியாக நிலைபெற்றே வருகிறது. எனினும் அரசாங்கத்தின் அதிமுக்கிய சட்டமூலங்கள் மற்றும் வரவுசெலத்திட்ட வாக்கெடுப்புக்களிற்கு அரசாங்கத்தினுள் உள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ச்சியான ஆதரவை அளித்தே வருகின்றனர். குறிப்பாக 20ஆம் திருத்த சட்டத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்களின் அரசியல் பிரவேசத்தை அனுமதிக்கும் ஏற்பாடு, நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷhவை நியமித்தல் மற்றும் அமெரிக்காவுடனான யுகதனி மின்நிலைய ஒப்பந்தம் என்பவை தொடர்பிலே பொதுஜன பெரமுன அரசாங்கத்தினுள் காணப்படும் பிறகட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய போதிலும் பொதுஜன பெரமுன அவற்றை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்த போது எதிர்ப்பை வெளிப்படுத்திய கட்சிகளும் தமது ஆதரவை வழங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு, சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கத்தின் பின்னர் புதிய கூட்டணி உருவாக்கம் தொடர்பில் அதிகம் உரையாடும் அரசாங்க கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காணப்படுகின்றது. ஜனவரி-11(2022)அன்று மத்திய கொழும்பில் நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றுகையிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மைத்திரிபால சிறிசேனா, 'ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் எதிர்காலத்தில் ஆட்சி மலரும்' எனக்குறிப்பிட்டிருந்தார். மேலும் தேசிய அரசாங்க உருவாக்கம் தொடர்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களிடமிருந்து பொதுவெளியில் கருத்துக்கள் உரையாடப்படுகிறது. எனினும் அக்கருத்துக்கள் நம்பிக்கையீனமுடையதாகவே காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பிலான செய்திகள் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்க உருவாக்கப்பட்டதிலிருந்தே உரையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர்கள் நியமனத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனா புறக்கணிக்கப்பட்டிருந்தார். கூட்டணியில் காணப்படுமோர் கட்சி என்பதற்கு அப்பால் இலங்கையின் வரலாற்றில் தனித்துவமான கட்சியாக திகழும் கட்சியின் தலைமைக்கு அரசாங்க உருவாக்கத்தின் போது அமைச்சர் பதவியேதும் வழங்காத போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ச்சியாக பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பது அதன் பலவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே தற்போது உரையாடப்படும் புதிய கூட்டணி உருவாக்கங்களும் நம்பிக்கையீனமுடையவையாகவே காணப்படுகிறது.  

மூன்றாவது, தேசிய அரசாங்கம் பற்றிய உரையாடலை முன்வைக்கும் மற்றொரு தரப்பாக ஐக்கிய தேசிய கட்சி காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, 'நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக' தெரிவித்துள்ளார். கடந்த 2015-2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த தேசிய அரசாங்கம் தோல்வியடைந்தமையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியினை கட்டுப்படுத்த முற்பட்டமை என்ற குற்றச்சாட்டுக்களும் காணப்படுகிறது. அத்துடன் தற்போதைய பாராளுமன்றத்தில் ஒரு தேசிய பட்டியல் அசனங்கனை மாத்திரம் வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தின் பிரதமர் பற்றிய உரையாடலை முன்வைப்பது கருத்தியலுக்கு அப்பால் அரசியல் பிரச்சார உரையாடலாக மாத்திரமே காணப்படுகிறது.

நான்காவது, பொருளாதார நெருக்கடியால் பொதுஜன பெரமுன வீழ்ச்சியுற்றுவிட்டது என்பது நிராகரிக்க இயலாத வாதமாக அமைகின்ற போதிலும், அக்காரணமொன்று மாத்திரம் அவ்அரசாங்கத்தை அகற்ற போதுமானதாக கருத இயலாது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு பற்றாக்குறை, மின்சாரம் தடை மற்றும் டாலர் நெருக்கடிக்கு மத்தியில் பல பிரச்சினைகள் அரசாங்கத்தின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் பொதுஜன பெரமுனாவின் உருவாக்கம் யுத்த வெற்றி வாதத்தை மையப்படுத்தியது. அதற்கு நிகரானவொரு பெருந்தேசியவாத உருவாக்கம் சாத்தியமாகாத வரையில் பொதுஜன பெரமுனவிற்கான வாய்ப்புக்கள் காணப்படவே செய்கின்றது. பொதுஜன பெரமுன அரசாங்கத்தினுள் உள்ள சிறுகட்சிகளை பொதுஜன பெரமுன தலைமைகள் நிராகரிக்கின்ற போதிலும், சிறு கட்சிகள் எதிர்க்கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற போதிலும், புதிய கூட்டணி பற்றிய எண்ணங்களை தவிர்த்து செல்வதற்கான பிரதான காரணமாக அமைவது பொதுஜன பெரமுனாவிற்கு பின்னாலுள்ள பெருந்தேசியவாத ஆதரவேயாகும்.

ஐந்தாவது, இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார மற்றும் உணவு நெருக்கடி பிரச்சினைகளை பொதுவெளியில் பூதாகரமான உரையாடலாக்கி தலைமை தாங்கும் ஆளுமை அற்றவர்களாகவே எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆட்சியமைத்து இரண்டு வருட காலப்பகுதியில் மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிகளவில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சமூக ஊடகங்களில் கோபமான எதிர்ப்புகள் மற்றும் மன்னிப்பு கேட்காத கேலிக்கூத்துகள் இலங்கையின் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதிக்கு எதிராகவே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியிலிறங்கி போராடுகிறார்கள். அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ்ச்சமுகமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எனும் பாரிய மக்கள் எழுச்சி பேரணியை அரசாங்கத்திற்கு எதிராக ஒழுங்கமைத்துள்ளது. எனினும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மக்களிடம் அரசாங்கம் தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்புக்களை ஒன்றுதிரட்டி மக்கள் ஆதரவை திரட்டும் வினைத்திறனற்றவர்களாக காணப்படுகிறார்கள். பொதுஜன பெரமுன அரசாங்கமானது கடந்த தேசிய அரசாங்கத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு எதிராக மக்களிடமிருந்த அதிருப்தியை ஒன்றுதிரட்டி தாம் ஆட்சியமைப்பதனூடாக அதனை சீர்செய்ய முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதன் மூலமே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி கொண்டார்கள். எனினும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கையீனமாக உள்ளவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் தரப்பபாக செயற்படும் ஆளுமையற்றவர்களாக காணப்படுகிறார்கள்.

ஆறாவது, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனத்தால் தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பு (ஜே.வி.பி.-ஜாதிக ஜன பலவேகய) மற்றும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியவற்றுடன் மாற்று வழிகளை நோக்கி ஊடகங்கள் சாய்ந்து கொண்டிருக்கின்றன. ஜேவிபி தலைமையிலான கூட்டணி, 'தற்போதைய சவால்களை முறியடிக்க விரைவான பதில்' என்ற தலைப்பில் ஒரு வகையான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. பொதுமக்களிடமும் இலங்கையை மீட்சிக்கான நிலையான பாதையை அமைப்பதற்கான ஒரு மூலோபாயமாக கொள்கை மாற்று வழிகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் தன்மை அடையாளப்படுத்தப்படுகிறது. அநுரகுமார திஸாநாயக்கவின் பலம் எப்போதுமே ஊழல் மற்றும் அரசாங்கத்தின் அத்துமீறல்கள் பற்றிய தெளிவான, துல்லியமான மற்றும் வண்ணமயமான வெளிப்பாடு ஆகும். எனினும் 2004ஆம் ஆண்டு சுதந்திர முன்னணி அரசாங்கம் மற்றும் 2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷாவின் வேட்புமனுவிற்கு முட்டுக்கொடுத்தமை என்பவை ஜேவிபி ஒரு காலத்தில் அரசியல் மாற்றத்திற்குரியவர்களாக (King Maker) காணப்பட்ட வரலாறுகளை நினைவூட்டுகிறது. இதனால், அநுரகுமார திஸாநாயக்கவினை தாண்டி மக்கள் மத்தியில் ஜே.வி.பி நம்பிக்கையை கட்டமைப்து சிரமமாக உள்ளது.

எனவே, சுசில் பிரமேஜயந்த பதவி நீக்கத்தை தொடர்ந்து எழுந்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தினுள் காணப்படும் கருத்து மோதல்களானது கருத்து மோதல்களுடனேயே தனியக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகிறது. அரசாங்கம் மீதெழும் அதிருப்திகளை ஒன்றுதிரட்டக்கூடிய வகையில் நிழல் அரசாங்கமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி செயற்படாத வரையில் பொதுஜன பெரமுன அரசாங்கம் மீதான எதிர்ப்புக்கள் நீண்ட காலத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத குறுங்கால நெருக்கடிகளாவே அமையக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் புதிய அரசாங்கமோ அல்லது தேசிய அரசாங்கமோ அமைய வேண்டுமாயின் பிராந்திய மேற்குலக வல்லரசு நாடுகளின் அணுகுமுறையையும் பொறுத்ததாகவே அமைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.  

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-