உலக வல்லரசுகளின் போட்டி அரசியலுக்குள் எதியோப்பிய உள்ளக மோதல் மாறுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

சர்வதேச அரசியலானது, யதார்த்தவாதம் சார்ந்த கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. அதன் நவீன வடிவத்தை அரசறிவியலாளர் கெனத் வொய்ஸ் வழங்கியுள்ளார். அவர் அரசியலை எழுமாத்திரமாகவும் வெறும் மனித உணர்வுகளுக்குள் பார்க்காமல் இராணுவ மற்றும் சமூக கட்டமைப்பு யதார்த்தத்தினூடாக பார்க்க வேண்டுமென குறிப்பிட்டார். இன்று பெரும்பாலான தேசிய அரசுகளிலும் அதன் இணைப்பாக சர்வதேச அரசியலையும் கட்டமைப்பு யதார்த்தவாத சிந்தனைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக கொரோனா அரசியல் நகர்த்தும் உலக ஒழுங்குக்கான மாற்றத்துக்கான நிலைமாறுகால பகுதியில் உலக அரசியல் தேசிய அரசுகளை நிரப்பியுள்ள போர்களையே அதிகமாக உரையாடுகிறது. இக்கட்டுரையும் எதியோப்பியாவில் 2021ஆம் ஆண்டு முழுமையாக தொடர்ந்த உள்நாட்டுப்போரின் 2022ஆம் ஆண்டுக்கான போக்கினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர்-04, 2020அன்று, எதியோப்பிய இராணுவத்தின் வடக்குக் கட்டளையின் இராணுவத் தளங்களை டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி(TPLF) கிளர்ச்சிப்படை தாக்கிய பின்னர், அதற்கு எதிராக இராணுவ பதிலடிக்கு எதியோப்பிய பிரதமர் அபி அஹ்மட் உத்தரவிட்டதை தொடர்ந்து உள்ளக மோதல் தொடங்கியது. தற்போதைய அபி அஹ்மட் தலைமையிலான அரசாங்கத்திற்கும் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே பல மாதங்களாக அதிகரித்த பதற்றத்தைத் தொடர்ந்தே போர் வெடித்திருந்தது. டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி எத்தியோப்பியாவை முன்னர் ஆட்சி செய்த மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணியில் ஆதிக்கம் செலுத்தி கட்சியாகும். இது 1991ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அடக்குமுறை சர்வாதிகார அரசாங்கத்தை வழிநடத்தியது. 2018ஆம் ஆண்டு அபி அஹ்மட்டின் தலைமையில் மக்களின் பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி ஆட்சி வீழ்த்தப்பட்டது. 

அபி அஹ்மட் 2018இல் எதியோப்பியா பிரதமராக பதவியேற்றதும் எரித்திரியாவுடனான தனது நாட்டின் 20ஆண்டு கால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இதனைத் தொடர்ந்து எதியோப்பிய இராணுவத்தில் ஆதிக்கம் செலுத்தும் எரித்தியாவுடன் எல்லையை பகிரும் எதியோப்பியாவின் டிக்ரே பிரதேசத்தின் டிக்ரேயன் இனக்குழுமத்தின் செறிவை குறைக்கும் வகையில் இராணுவத்தின் உயர் பதவிகளுக்கு இன வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கான நகர்வுகளை மேற்கொண்டார். இது டிக்ரே மக்கள் விடுதலை முன்னணியை ஆத்திரமூட்டும் செயல்களாக அமைந்தது.

எதியோப்பாவின் டிக்ரே பிரதேசத்தில் ஆரம்பத்தில் எதியோப்பிய இராணுவம் ஒரு விரைவான தாக்குதலை நடாத்தியது. இது 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிளர்ச்சியை முறியடித்ததாகத் தோன்றியது. ஆனால் டிக்ரேயன் படைகள் கோடையில் தங்கள் பிராந்திய தலைநகரான மெக்கெலை மீண்டும் கைப்பற்றி மேலும் முன்னேற்றங்களைச் செய்தன. இது எதியோப்பியாவின் முன்னாள் எதிரியான எரித்திரியாவில் இருந்து துருப்புக்கள் பிரசன்னத்தை உள்ளடக்கிய ஒரு நீடித்த மோதலாக மாற்றியது. போரில் அனைத்து தரப்பினரும் அட்டூழியங்களைச் செய்ததாக ஐக்கியநாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. மோதல் தொடங்கியதில் இருந்து 1மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிக்ரேயில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் டிக்ரேயில் 6மில்லியன் மக்கள் தொகையில் 5.2மில்லியன் பேர் பசியை எதிர்கொள்கின்றனர் என்று சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.

நவம்பர் 2020இல் தொடங்கிய எதியோப்பியாவின் உள்நாட்டுப் போர், 2021 முழுவதும் தீவிரமடைந்து பல திருப்பங்களை எடுத்தது. 2021-நவம்பர் காலப்பகுதியில் எதியோப்பியாவின் அரசாங்கம் தோல்வியின் விளிம்பில் இருப்பதான தோற்றப்பாடு காணப்பட்டது. டிக்ரே மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவை நோக்கி முன்னேறியதுடன், மற்ற பிரிவினைவாத குழுக்களான ஒரோமோ லிபரேஷன் படையுடன் கூட்டணியை அறிவித்து அரசாங்கத்தை அச்சுறுத்தியது. மேலும், அரசாங்கம் அறிவித்த தீர்க்கமான போர்க்கள வெற்றிகள் மீதான எதியோப்பியாவின் பெரும் பின்னடைவுக்கு மத்தியில் பிரதமர் அபி அஹ்மட் தனிப்பட்ட முறையில் இராணுவத்தை வழிநடத்த முன்னோக்கிச் சென்றார். டிசம்பரில் அரசாங்க படைகள் பல முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றின. அதைத்தொடர்ந்து டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி தன் படைகள் பின்வாங்கி தங்கள் சொந்த பகுதிக்கு திரும்பியுள்ளதாக டிசம்பர்-19அன்று அறிவித்தார். அந்த அறிக்கையில் பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பையும் உள்ளடக்கியிருந்தது. டிக்ரேயன் கிளர்ச்சியாளர்கள் பின்வாங்குவதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு வடக்கே உள்ள மூலோபாய நகரங்களை அரசாங்கம் மீட்டெடுத்ததை தொடர்ந்து, எதியோப்பியாவின் மத்திய அரசு அதன் படைகள் வடக்கு டிக்ரே பகுதிக்குள் முன்னேறாது என்று கூறியது.

ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெற்று ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய தேவையற்ற உள்நாட்டுப் போரின் போக்கில் டிசம்பர் இறுதியில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது. அமைதியான தீர்வுக்கான வாய்ப்பு அரசியல் வெளியில் அவதானிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ சமாதானப் பேச்சுக்கள் எதுவும் தொடங்கவில்லை என்றாலும், சமீபத்திய இருதரப்பு அறிவிப்புக்கள் சாத்தியமான போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று மனிதாபிமான அமைப்புகள் நம்புகின்றன. எனினும் சர்வதேச ஏகாதிபத்திய அரசுகளின் நலன்கள் எதியோப்பியாவின் சமாதானத்தை உறுதிப்படுத்தக்கூடியனவா என நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.

ஒன்று, சீனா எதியோப்பிய அரசாங்கத்துக்கான ஆதரவு தளத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டிசம்பர்-1அன்று எதியோப்பியாவுக்குச் சென்று எதியோப்பியா வெளியுறவு அமைச்சர் டெமேக் மெகோனனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில், எதியோப்பியாவின் உள் விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் சீனா நிராகரிப்பதாக வாங் வலியுறுத்தினார்.  எதியோப்பிய உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்புற அரசியல் நலன்களைத் திணிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் சீனா தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், எதியோப்பிய அரசாங்கம் மற்றும் பிரதமர் அபி அஹ்மட் ஆகியோருக்கு அதன் தீவிர ஆதரவையும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

இரண்டு, டிசம்பர்-05அன்று எதியோப்பியாவின் தலைநகரில் வடக்கு டைக்ரே பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் நடைபெற்ற அரசாங்க சார்பு பேரணியில் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி குழுவைக் கண்டித்தனர். உள்ளூர் ஒளிபரப்பாளரான FANA,  ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் என செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவான குறித்த பேரணியில் எதியோப்பியாவின் உள்விவகாரங்களில் மேற்கத்திய தலையிடுதலை கண்டிக்கும் பலகைகளையும், கோஷங்களையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். மற்றும் டிக்ரேயன்களும் டிக்ரே மக்கள் வடுதலை முன்னணியும் ஒன்றல்ல'; 'எத்தியோப்பியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையில் சமரசம் இல்லை' ஆகிய இரண்டு முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இது அரசாங்கத்தின் மேற்கத்தேய எதிர்ப்பு நிலையையே உறுதி செய்கிறது.

மூன்று, தற்போதைய எதியோப்பியாவின் கிளர்ச்சிப்படையின் முன்னை ஆட்சிக்காலப்பகுதியில் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி அமெரிக்காவின் தீவிர விசுவாசியாகவும், ஆபிரிக்க கொம்பு நாடுகளில் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கும் சக்தியாகவுமே இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போதைய எதியோப்பிய உள்நாட்டு போரிலும் அமெரிக்க தலைமையிலான மேற்கு சக்திகள் எதியோப்பிய அரசாங்கத்திலேயே போருக்கான குற்றச்சாட்டுக்களை அதிகம் முன்வைக்கின்றது. குறிப்பாக, எதியோப்பியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே, ஐரோப்பிய பிரஸ்ஸல்ஸ் கூட்டமைப்பு, அம்னஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் என அனைவரும் எதியோப்பிய உள்நாட்டு போரை 'இன அழிப்புப் போர்' என்றே கூறினார்கள். மேலும், 'டிக்ரே மக்கள் பசியில் வாடுகின்றனர், அவர்களுக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது, பெரிய பஞ்சம் வரப்போகிறது, எதியோப்பியாவின் அருகில் உள்ள எரித்திரிய படைகளால் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர்' என அடுக்கடுக்கான அறிக்கைகளின் மூலம் எரித்திரியாவையும் எதியோப்பியாவையும் கண்டித்தனர். எதியோப்பியாவிற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் வழங்குவதில் அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்மூலம், பொதுவெளியில் அபி அஹ்மட்டின் அரசாங்கம் மற்றும் எரித்திரிய அரசாங்கத்தை குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சிப்பதன் மூலம் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணியை நியாயப்படுத்துகின்றனர்.

நான்கு, எதியோப்பிய உள்ளக மோதலின் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கான சமிக்ஞையை 2020இன் டிசம்பரில் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அரசாங்கம் 2022-ஜனவரியில் எதியோப்பிய அரசாங்கம் மீது பொருளாதார தடையை அதிகரித்துள்ளது. டிக்ராயன் கிளர்ச்சியாளர்களுடனான ஆண்டுகாலப்போரில் மொத்த மீறல்களை சுட்டிக்காட்டி எத்தியோப்பியாவை ஆபிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புச் சட்டத்தில்(AGOA) இருந்து புத்தாண்டு(2022, ஜனவரி-01) அகற்றுவதாக நவம்பர்-2அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்தார்.  ஆபிரிக்காவில் உள்ள செனட் மற்றும் ஹவுஸ் துணைக்குழுக்களின் தலைவர்கள் இருவரும் பிடனை திடீர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒரு கடிதத்தில் வலியுறுத்தினர், சமீபத்திய கிளர்ச்சி பின்வாங்கல் இராஜதந்திரத்திற்கு ஒரு திறப்பை வழங்கியது என்று கூறினார். பிடனின் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களான செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் மற்றும் பிரதிநிதி கரேன் பாஸ் ஆகியோரும், 'ஆபிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புச் சட்டத்தின் நன்மைகளை இடைநிறுத்துவதன் எதிர்விளைவு மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய எதியோப்பியர்களுக்கு விகிதாசாரமாக தீங்கு விளைவிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்' என்று எழுதினார்கள். எனினும் அமெரிக்க அரசாங்கம் தடையை ஜனவரியில் உறுதி செய்துள்ளது. ஜனவரி-01(2022)அன்று ஒரு அறிக்கையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஆபிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புச் சட்டத்தில் இருந்து எதியோப்பியா, மாலி மற்றும் கினியா ஆகிய நாடுகளை நிறுத்தியதாகக் கூறினார்.

எனவே, எதியோப்பியாவின் உள்க மோதலில் சர்வதேச அரசுகளின் ஈடுபாடு மாறிவரும் உலக ஒழுங்கின் நடத்தையையே வெளிப்படுத்துகின்றது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கொன்றில் அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் குறிப்பிடும் போது கொவிட்19இற்கு பின்னான உலக ஒழுங்கில் சீனா அரச இறைமையுடன் இணைந்து பயணிக்கக் கூடிய சூழல் அவதானிக்கப்படுவதுடன், அமெரிக்க தலைமையிலான மேற்கு சக்திகள் அரசுக்கு எதிராக செயற்படும் தேசிய இனங்களை கையாளும் பொறிமுறையில் நகருவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டெனக் குறிப்பிட்டார். அவ்விடயத்தை மெய்ப்பிக்கும் போக்குகளே நடைமுறையில் எதியோப்பியாவிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எதியோப்பியாவின் உள்ளூர் மோதல் சர்வதேச பரிமாணத்தை பெற்றுள்ள நிலையில் எதிபோப்பியாவின் உள்ளக மோதலானது, மோதலின் இரு தரப்புக்களின் இணக்கங்களை தாண்டி சர்வதேச அதிகார போட்டி அரசுகளின் எண்ணங்களிலேயே பயணிக்கிறது. எதியோப்பியாவின் அமைதி 2022இலாவது உறுதி செய்யப்படுவது வல்லாதிக்க போட்டி அரசுகளின் எண்ணங்களை சார்ந்ததாக அமைகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-