சீனா வெளியுறவு அமைச்சரின் இந்துசமுத்திரத்திற்கான சுற்றுப்பயணம் பாரம்பரியத்தை உருவாக்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய அரசியல் போட்டிகளே இன்று சர்வதேச அரசியலின் முதன்மை செய்திகளாக உள்ளன. சீனாவின் இந்து சமுத்திரம் மீதான அதீத ஈடுபாடு மற்றும் அதற்கு எதிராக அமெரிக்க-இந்திய-மேற்கு கூட்டுகளின் மூலோபாய தந்திரோபாய நடவடிக்கைகளென இந்து சமுத்திரம் தொடர்ச்சியாக கொதிநிலையிலேயே காணப்படுகிறது. இக்கொதிநிலையை அதிகரிக்கும் வகையிலேயே 2022ஆம் ஆண்டு தொடக்கத்துக்கான சீன வெளியுறவு அமைச்சரின் இந்து சமுத்திரத்திலுள்ள தீவு நாடுகளை பிரதானப்படுத்திய பயணமும் அமைகிறது. இக்கட்டுரை சீன வெளியுறவு அமைச்சரின் இந்து சமுத்திர நாடுகளை மையப்படுத்திய அரசியல் பயணத்தின் அரசியல் தாக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள ஐந்து கரையோர அரசுகளுக்கு ஜனவரி(2022) முதல் வாரம் விஜயம் செய்து புத்தாண்டைத் தொடங்கி உள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் ஜனவரி 4 முதல் 7 வரை எரித்திரியா, கென்யா மற்றும் கொமோரோஸ் ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்றிருந்தார். தொடர்ச்சியாக, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பயணங்களை மேற்கொண்டுள்ளார். சீனா ஆபிரிக்க நாடுகளை கவரத் தொடங்கியதிலிருந்து, சீனத் தலைவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் ஆபிரிக்காவை முதல் சுற்றுப்பயணமாக மாற்றுவது ஒரு பாரம்பரியமாகிவிட்டது. இம்முறை வருட ஆரம்ப சுற்றுப்பயணத்தில் ஆபிரிக்காவின் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளையும் தென்னாசிய நாடுகளையும் தேர்வு செய்து இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான விஜயம் எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளார். இதுவே இதன் அரசியல் கனதியையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவும் சீனாவும் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கினை பேண போட்டியிடுகின்றன. இந்தியா இந்து சமுத்திர பிராந்திய நாடாக காணப்படுகின்ற போதிலும் சீனாவின் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தில் இந்தியாவை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் கடற்பிராந்திய நாடுகளுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகை இந்தியாவிற்கே நேரடியாக அதிக நெருக்கடியை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவுடன் நிலத்தொடர்ச்சி எல்லையை பகிரும் சீனாவானது, இந்திய-சீன எல்லைப்பகுதியான கால்வன் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானப் பணிகளை அண்மையில் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் மீது பாலம் கட்டும் சீன டிராகன், அக்சாய் சின் பகுதி முழுவதும் இந்தியாவுக்கு எதிரான தனது கோட்டைகளை முழுவதுமாக பலப்படுத்தி வருகிறது. இவ்வாறான சூழலில் இந்தியாவின் கடற்பிராந்தியத்திலும் சீனாவின் பிரசன்ன அதிகரிப்பு இந்தியாவிற்கு கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்கும் தந்திரேபாயமாகவே காணப்படுகிறது. இந்தியாவின் எதிர்வினைகள் அதனை உறுதி செய்கின்றன.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகையை இந்திய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்பதுவே இந்திய ஊடகங்களில் ஜனவரி முதல் வாரங்களில் முதன்மை செய்தியாக காணப்படுகின்றது. அதில், சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யீ மேற்கு இந்து சமுத்திரத்தில் உள்ள மூலோபாய கொமொரோஸ் பகுதிக்கு வருகைக்கு பதிலளிக்கும் விதமாக அவரது வருகை இடம்பெற்ற ஜனவரி-06 அன்று  இந்திய கடற்படைக் கப்பல் ஒன்றும் அதே கொமொரோஸில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, இந்திய கடற்படை கப்பல் (lNS) கேசரி இந்தியாவின் மிஷன் சாகரின்(Mission SAGAR) ஒரு பகுதியாக பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் மொசாம்பிக்கிற்கு சென்ற ஐ.என்.எஸ் கேசரி ஜனவரி-06 அன்று கொமொரோஸ் பகுதியில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா இந்து சமுத்திரம் மீது தனக்குள்ள செல்வாக்கை வெளிப்படுத்தும் செய்தியாக அமைகிறது. எனினும் இதன் இந்திய சார்பு விளைவு சந்தேகத்திற்குரியதாகவே காணப்படுகிறது. இந்தியா கண்காணிப்புடனேயே காணப்பட சீன செயல்களில் உச்சத்திற்கு நகர்ந்துள்ளது என்பதே சமகால அரசியல் நிகழ்வுகளின் அவதானிப்பாக காணப்படுகிறது. 

இந்திய-சீன அதிகார போட்டியின் முன்முயற்சிகளை(Initiative) தாண்டி இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் பாதுகாப்புப் பங்குகளை அடிக்கோடிட்டும் நிகழ்வாக சீன வெளியுறவு அமைச்சரின் விஜயம் அமைகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

ஒன்று, சீனா வெளியுறவு அமைச்சரின் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான விஜயம் குறித்து கருத்துரைத்த சீன செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுடனான வரலாற்று உறவை சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, 'ஆபிரிக்காவில் உள்ள மூன்று நாடுகளுக்காக வரவிருக்கும் விஜயம், ஒவ்வொரு ஆண்டும் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆப்பிரிக்காவைத் தேர்ந்தெடுக்கும் சீன வெளியுறவு அமைச்சர்களின் 32 ஆண்டுகால பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. மேலும், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயம் சீன-மாலைதீவு இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவிலும், சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவிலும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவிலும் வருகிறது' என்று கூறியுள்ளார். இவ்வரலாற்று தொடர்புகளை சுட்டிக்காட்டுவது சீனா இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுடன் நீண்ட உறவை பேணி வருகின்றமையை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.

இரண்டு, சீனாவிள் வெளியுறவு அமைச்சரின் பயணத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட நாடுகளில் தீவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமைமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆபிரிக்க பாரம்பரிய வருட தொடக்க சுற்றுப்பயணத்தில் இவ்வாண்டு கொமரோஸ் தீவிற்கு பயணம் செய்துள்ளதுடன், கடந்த ஆண்டு(2020) சீஷெல்ஸ் தீவுக்கு வாங் சென்றுள்ளார். இது ஆபிரிக்காவின் இந்து சமுத்திர அரசுகளுக்கு சீனா கொடுக்கும் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது. மேலும் ஆபிரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தொடர்ச்சியாக மேற்கொண்ட தென்னாசிய சுற்றுப்பயணத்திலும் புவிசார் அரசியல் மூலோபாய செறிவுமிக்க மாலைதீவு மற்றும் இலங்கை தீவிற்கே பயணம் செய்துள்ளார். சுற்றுப்பயணத்தில் ஐந்து நாடுகளில் மூன்று தீவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது சீனா இந்து சமுத்திரத்தை அதன் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் நலன்களில் ஒன்றாகக் கருதுகின்றமையை வெளிப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் மியான்மர் வழியாக புதிய நிலப்பரப்பு வர்த்தக வழிகளைத் திறப்பதன் மூலமும் இந்த சமுத்திரத்துடனான சீனாவின் கப்பல் போக்குவரத்து நேரத்தை வாரக்கணக்கில் குறைக்கும் நடவடிக்கையாகவே காணப்படுகிறது.

மூன்று, சீனாவின் வெளியுறவு அமைச்சரின் சுற்றுப்பயணத்தின் நாடுகளின் தெரிவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிரான செய்திகளும் காணப்படுகிறது. இந்த ஆண்டு ஆபிரிக்க பயணத்திற்கு மூன்று நாடுகளும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை சீன வெளியுறவு அமைச்சகம் விவரிக்கவில்லை என்றாலும், சீன செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடந்த வாரம் எத்தியோப்பியாவில் உள்ள மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கு எதிராக பின்னுக்குத் தள்ளுவது வாங்கின் சுற்றுப்பயணத்தின் போது ஒரு முக்கிய கருப்பொருளாக வெளிப்படும் என்று சுட்டிக்காட்டினார். 'சக வளரும் நாடுகளாக சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இறையாண்மையைப் பாதுகாப்பது, மேலாதிக்கத்தை எதிர்ப்பது மற்றும் வளர்ச்சியை அடைவது போன்ற பொதுவான பணியை எதிர்கொள்கின்றன' என்று வியாழன் பெய்ஜிங்கில் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் ஜாவோ கூறினார். தொடர்ந்து, எதியோப்பியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்கத் தடைகள் பற்றிய அதிகாரப்பூர்வ சீன விமர்சனமாக, 'மேலதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் தோழமைகளாக இருக்கிறோம்.' என ஒரெ சொற்பிரயோகங்களையே  பயன்படுத்தினார். இது வாங் ஆபிரிக்க சுற்றுப்பயண கலந்துரையாடல்களில் இருதரப்பு பிரச்சினைகள் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் சுற்றுப்பயணத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, சீன வெளியுறவு அமைச்சரின் ஆபிரிக்க சுற்றுப்பயண பாரம்பரியம் இவ்வாண்டு இந்து சமுத்திர பிராந்திய சுற்றுப்பயணமாக பரிணாமித்துள்ளமையானது, சீனாவின் பாரம்பரிய உறவினுள் இந்து சமுத்திரம் உள்வாங்கப்பட்டுள்ளமையையே வெளிப்படுத்துகின்றது. மேலும், அதிகாரப்போட்டிகளை கடந்து இந்து சமுத்திரத்தில் தனக்கு உள்ள ஆழமான பண்பாட்டு, பொருளாதார, பாதுகாப்பு விடயங்களையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் வெளியுறவு அமைச்சரின் சுற்றுப்பயணத்தை சீனா வடிவமைத்துள்ளது. இப்பாரம்பரிய உறவின் வெளிப்பாடானது இந்து சமுத்திர நாடுகளுடன் சீனா பிரிக்க இயலாத பிணைப்பை வலுப்படுத்தி உள்ளது என்பதையே உறுதி செய்கிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-