ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் ஜேர்மனி ரஷ்சியா பக்கம் சாருகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
சர்வதேச அரசியல் ரஷ்சிய-உக்ரைன் நெருக்கடியிலேயே முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ரஷ்சியா கிழக்கு ஐரோப்பாவில் மீள தன் பலத்தை கட்டியெழுப்பும் எண்ணத்துக்கான முன்முயற்சியாகவே உக்ரைன் விவகாரம் அவதானிக்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்சியாவின் கிழக்கு ஐரோப்பா மீதான கரிசணையை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை அமெரிக்காவும் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்சியாவிற்கு எதிராக ஐரோப்பிய அணிதிரட்டும் களச்செயற்பாடுகளில் இறங்கி உள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பலமான சக்தியாக உள்ள ஜேர்மனி ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடுகளுக்கு உடன்படாத போக்கு காணப்படுகிறது. இக்கட்டுரை ரஷ்சிய-உக்ரைன் விவகாரத்தில் ஜேர்மனியின் அரசியல் நிலைப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்சியா-உக்ரைன் பதட்டத்தில் ஜேர்மனியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தேடல்களுக்கு ஆரம்பப்புள்ளியாக ஜேர்மன் கடற்படைத் தளபதியின் கருத்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி-21(2022) அன்று இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜேர்மனிய கடற்படைத் தளபதி கே-அச்சிம் ஷொன்பாக், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான மனோகர் பாரிக்கர் நிறுவனத்தில் நிகழ்த்திய உரையில், ரஷ்சியா உக்ரைனில் அணிவகுத்துச் செல்லப் போகிறது என்று நினைப்பது முட்டாள்தனம் என்றும் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியாதைக்குரியவர் என்றும் கூறியிருந்தார். மேலும், 'ஒருவருக்கு மரியாதை அளிப்பது குறைந்த விலை, செலவு கூட இல்லை. அவர் உண்மையிலேயே கோரும் மரியாதையை அவருக்கு வழங்குவது எளிது. மேலும் தகுதியுடையது' என்று ஷான்பாக் கூறினார். ரஷ்சியா தொடர்பான ஜேர்மனிய கடற்படை தளபதியின் கருத்தாடல் ஜேர்மனியின் வெளியுறவுச்செயற்பாடுகளில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜேர்மன் அரசாங்கம் அதன் கடற்படைத் தளபதியிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டது. தொடர்ந்து சனிக்கிழமையன்று(22.01.2022) கடற்படை தளபதி இராஜினாமா செய்தார்.
ஆனால், ஜேர்மன்-உக்ரைன் உறவில் சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஜேர்மனியை பகிரங்கமாக திட்டினார். ஜேர்மனிக்கான உக்ரேனிய தூதர் அன்ட்ரிஜ் மெல்னிக்கை வரவழைத்து, உக்ரேனைத் தாக்க புடினை ஊக்குவிப்பதாக ஜேர்மனி மீது குற்றம் சாட்டினார். ஜனவரி-23(2022)அன்று ஜேர்மனியில் இயங்கும் டை வெல்ட் செய்தித்தாளில் உக்ரேனிய தூதர் அன்ட்ரிஜ் மெல்னிக், 'உக்ரைனியர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவம் ஜேர்மனியின் சர்வதேச நம்பகத்தன்மையை பெருமளவில் கேள்விக்குள்ளாக்குகிறது. இது உக்ரேனிய கண்ணோட்டத்தில் மட்டுமல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நெருக்கடி கடந்த மாதம் ஏஞ்சலா மேர்க்கலிடமிருந்து பதவியேற்ற ஸ்கோல்ஸுக்கு முதல் பெரிய சோதனையாகும். ஸ்கோல்ஸுன் கூட்டணி அரசாங்க பங்காளிகளான மத்திய-இடது சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் வணிக சார்பு சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகியன ரஷ்சியாவுடன் உரையாடல் மற்றும் கடினத்தன்மை என்று உறுதியளித்துள்ளது. ஆனால் உள் பிளவுகளை சமாளிக்கவும், தைரியமான மாஸ்கோவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒரு ஒருங்கிணைந்த பதிலை உருவாக்கவும் ஜேர்மன் அரசாங்கம் போராடி வருகிறது. ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் ஜேர்மனின் முடிவுகளை தீர்மானிக்கக்கூடிய விடயங்களை நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.
ஒன்று, முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் தூண்டுதலாக ஜேர்மனி அதன் கடந்த காலத்தில் கொண்டுள்ள அதிர்ச்சியால் பாரம்பரியமாக இராணுவ மோதலில் ஈடுபட தயங்குகிறது. மற்றும் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது பதட்டங்களைத் தூண்டிவிடும் என்ற ஸ்கோல்ஸுன் அரசாங்க எண்ணங்களாலும் ஜேர்மனி உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்ப மறுத்து வருகின்றது. இந்த முடிவு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பால்டிக் நாடுகளுடன் முரண்படுகிறது. இது ஜேர்மனிக்கும் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விவாதமாகவும் வளர்ந்து வருகிறது. மேலும் பல தரப்புக்களாலும் ஜேர்மனி அரசாங்கம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்பது தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் குலேபா, ஜேர்மனியின் எச்சரிக்கையான நிலைப்பாடு தற்போதைய பாதுகாப்பு நிலைமைக்கு பொருந்தவில்லை என்றும், கியேவின் நட்பு நாடுகளிடையே ஒற்றுமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டுமெனவும் பெர்லினை வலியுறுத்தி வருகிறார். இதேநேரம், ஜேர்மனியில் கூட, சிலர் மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த மத்திய-வலது கிறிஸ்தவ ஜனநாயன ஒன்றிய சட்டமியற்றுபவரான கென்னிங் ஒற்றே பிளிட் நாளிதழிடம், 'சாத்தியமான தாக்குதலைத் தடுக்க உக்ரைன் ஆயுதங்களைக் கேட்டால், இந்த கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கக் கூடாது' என்று கூறினார்.
மேலும், அமெரிக்காவும் தொடர்ச்சியாக ஜேர்மனியுடன் இராஜதந்திர உரையாடல்களை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஜனவரி-20(2022) அன்று ஜேர்மனுக்கு விஜயம் செய்து ஜேர்மனிய அரச தவைர்களுடன் உக்ரைன் விவகாரம் தொடர்பில் இராஜதந்திர உரையாடல்களை பரவலாக முன்னெடுத்தார். அதனை தொடர்ந்து வார இறுதியில் ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுன் Süddeutsche Zeitung எனும் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், எந்தவொரு இராணுவ ஆக்கிரமிப்பும் கொண்டு வரும் அதிக செலவுகளுக்கு எதிராக ரஷ்யாவை எச்சரித்தார். அவ்வாறே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சி.என்.என் செய்தித்தளத்தில் ஜனவரி-23(2022)அன்று ரஷ்யாவிற்கு எதிராக நிற்கும் ஜேர்மனியின் உறுதியின் மீது தனக்கு சந்தேகமில்லை என்று கூறினார்.
அமெரிக்காவின் இராஜதந்திர முன்னெடுப்புக்கள் ஜேர்மனை மீள உக்ரைனுக்கு ஆதரவான அமெரிக்கா கூட்டுடன் இணைத்துள்ளதாக விம்பத்தை காட்டியுள்ள போதிலும், ஜேர்மனியின் நகர்வுகள் நுணுக்கமான தந்திரோபாய நகர்வுகளாகவே காணப்படுகின்றது. ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் ஜனவரி-24(2022)அன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் உக்ரைன் விவகாரம் தொடர்பிலான இராஜதந்திர புயலை அமைதிப்படுத்தும் ஜேர்மனியின் தந்திரோபாய நகர்வின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது. பொருளாதார ஸ்திரப்படுத்தல் என்பது ஜேர்மனி வழங்கக்கூடிய ஆதரவின் தீர்மானமான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று வாதிட்டார். அதாவது, 'உக்ரைனின் பொருளாதார நிலைமையை நாம் குறிப்பாக மனதில் வைத்திருப்பது முக்கியம். நிதி மற்றும் பொருளாதார ஆதரவின் அடிப்படையில் நாங்கள் உக்ரைனின் பக்கத்தில் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.' என்று அன்னலெனா பேர்பாக் கூறினார். எவ்வாறாயினும், பண உதவி பற்றிய எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பெர்லின் கியேவின் பக்கத்தில் மிக நெருக்கமாக நிற்கிறது. ஆனால் ஆயுத ஏற்றுமதியில் நிலையை மாற்றாது என்று அழுத்தமாக கூறுகிறது. இது முழுமையாக தந்திரோபாய உரையாடலாகவே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இரண்டு, ஜேர்மன் ரஷ்சியாவுடன் கொண்டுள்ள பொருளாதார இணக்கங்களும் ரஷ்சிய-உக்ரைன் விவகாரத்தில் ஜேர்மனி விலகி செல்வதற்கு பலமான காரணமாகவே உள்ளது. ஜனவரி-18(2022)அன்று, ஜேர்மனியின் ஹான்டெல்ஸ்ப்ளாற்( Handelsblatt ) செய்தித்தாள் ஜேர்மனிய அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி மேற்கத்திய அரசாங்கங்கள் இனி ரஷ்ய வங்கிகளை SWIFT(The Society for Worldwide Interbank Financial Telecommunication) உலகளாவிய கொடுப்பனவு அமைப்பிலிருந்து துண்டிப்பதை கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தது. ஐரோப்பியா பெர்லினில் உள்ள சைபீரிய வாயுவை அதிகம் சார்ந்திருப்பதால், வெளிப்படையாக ரஷ்சியாவுடன் பொருளாதார மற்றும் நிதி உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. ஜேர்மன் சான்சலர் ஸ்கோல்ஸுன் Süddeutsche Zeitung எனும் செய்தித்தாளில் உக்ரைன் மீதான ரஷ்சியா போர் முனைப்புக்களுக்கு எச்சரிக்கை செய்த போதும், ரஷ்சியா மீதான சாத்தியமான பொருளாதார தடைகளை செய்தியாளர் வினாவும் மெய்யறிவுக்கு (wisdom) அழைைப்பு விடுப்பதன் மூலம் அவர் தனது கருத்தை சமநிலைப்படுத்தினார். ரஷ்சியா மீதான பொருளாதார தடைகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும் எச்சரித்திருந்தார். மேலும் நார்ட் ஸ்ட்ரீம் 2( Nord Stream 2 ) பைப்லைன் உக்ரைன் நெருக்கடியில் மற்றொரு சர்ச்சைக்குரிய புள்ளியாக காணப்படுகிறது. தற்போது ஜேர்மன் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருக்கும் முடிக்கப்பட்ட குழாய், ஜேர்மனிக்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தை இரட்டிப்பாக்க உள்ளது. இக்குழாய் விவகாரம் ஜேர்மன் அமைச்சரவையை பிளவுபடுத்தியுள்ள போதிலும் முந்தைய மேர்க்கெல் தலைமையிலான அரசாங்கம் குழாய்த்திட்டம் முற்றிலும் வணிகத் திட்டம் எனக்குறிப்பிட்டதை பின்பற்றியே தற்போதைய சான்சலர் ஸ்கோல்ஸும் குழாய் திட்டம் 'தனியார் துறை திட்டம்' என எதிரொலித்து வருகிறார். இவ்வகையில் ரஷ்சியா சார்ந்துள்ள ஜேர்மனியின் பொருளாதார நலன் ஜேர்மனி அரசாங்கத்தை ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் நிதானித்து பயணிக்கவே தூண்டக்கூடியதாகும்.
எனவே, ரஷ்சிய-உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு மேற்கின் பாதுகாப்பு கூட்டு என்பது ஜேர்மனியின் ஒத்துழைப்பு இன்மையால் நெருக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலையே அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நேட்டோ தவிர்க்கப்பட்டு புதியதொரு பாதுகாப்பு கூட்டு பற்றிய உரையாடல்கள் மேலெழும் சமகாலத்தில், ஜேர்மன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் எண்ணங்களை புறந்தள்ளி செயற்படுவது நேட்டோவை பலவீனப்படுத்துவதாகவே அவதானிக்கப்படுகிறது. இதனூடாக ஜேர்மன் தனது தந்திரேபாய நகர்வுகளூடாக அமெரிக்காவின் இராஜதந்திர முன்னெடுப்புக்களை ஐரோப்பாவுக்குள் பலவீனப்படுத்தியுள்ளமையையே புலப்படுகிறது.
Comments
Post a Comment