ரஷ்சியா-நேட்டோ மோதலும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஏற்பட்டுவரும் மாற்றமும்! -சேனன்-

2021ஆம் ஆண்டின் இறுதியில் போருக்கான முன்முனைப்புடன் தொடங்கி 2022ஆம் ஆண்டிற்கு கடத்தப்பட்ட போருக்கான எத்தனங்களில் சர்வதேச அரசியலில் முக்கியத்துவப்படுவது ரஷ்சியா-உக்ரைன் விவகாரமாகும். 2021ஆம் ஆண்டின் இறுதியில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி யுரேசியா பகுதியில் நேட்டோவின் விரிவாக்கத்தை தடுக்கும் வகையில் வரைபு ஒப்பந்தத்தையும் வெளியிட்டிருந்தார். அதனை முன்னிறுத்தி புடின், 'ரஷ்சியா உக்ரைன் போரை விரும்பவில்லை, ஆனால் உடனடி உத்தரவாதம் தேவை' என்று வலியுறுத்தி இருந்தார். இவ்ஒப்பந்த வரைபு மற்றும் ரஷ்சிய-உக்ரைன் விவகாரம் தொடர்பிலே ஆராய ஜனவரி(2022) முதல் வாரத்தில் நேட்டோ மற்றும் ரஷ்சிய இராஜதந்திரிகளிடையே சந்திப்பு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்சியாவிற்கும் 30 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணிக்கும் இடையே நான்கு மணிநேர வெளிப்படையான மற்றும் தீவிரமான விவாதம்  நடைபெற்ற போதிலும், ரஷ்சியா இராஜதந்திரத்தையா அல்லது போரையா தேர்ந்தெடுக்க உள்ளது என்பது தொடர்பில் பதிலளிக்கப்படவில்லை. முடிவற்ற ரஷ்சிய-நேட்டோ மோதல் முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இக்கட்டுரை ரஷ்சிய-நேட்டோ மோதலால் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர்-17அன்று ரஷ்சியாவின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு முன்மொழிவின்படி, நேட்டோ மேலும் கிழக்கே விரிவடையாது மற்றும் உக்ரைனை இராணுவக் கூட்டணியில் சேர அனுமதிக்காது என்ற உறுதிமொழிகள் உட்பட அமெரிக்கா மற்றும் நேட்டோவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை புடின் கோரியிருந்தார். இந்நிலைமையில் கடந்த ஜனவரி-12(2022)அன்று பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவின் தலைமையகத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் வெண்டி ஷெர்மன், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்சிய கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர்  அலெக்சாண்டர் க்ருஷ்கோ மற்றும் ரஷ்சியாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமின் உள்ளடங்கலான நேட்டோ மற்றுமம் ரஷ்சியா இராஜதந்திரிகளிடையே சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த சந்திப்பில் அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரைன் மீதான பதட்டங்களைத் தளர்த்துவதற்கான ரஷ்சியாவின் முக்கிய பாதுகாப்புக் கோரிக்கைகளை நிராகரித்தன. ரஷ்சியாவின் முக்கிய நிலைப்பாடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் தூதுக்குழு பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறவில்லை. இது ரஷ்சிய-நேட்டோ எதிர்கால விவாதங்களுக்கு திறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்தது. எனினும் இதன் நீட்சித்தன்மை கேள்விக்குரியதாகவே காணப்படுகிறது. ரஷ்சியா-நேட்டோ இராஜதந்திர சந்திப்புக்கு பின்னர் கருத்துரைத்த நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், 'நேட்டோவிற்கும் ரஷ்சியாவிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் நீடித்தன. எங்கள் வேறுபாடுகளை எளிதாகக் குறைக்க முடியாது' என்று குறிப்பிட்டார். இக்கருத்து ரஷ்சியா-நேட்டோ இராஜதந்திர சந்திப்பின் தொடர்ச்சித்தன்மையின் ஐயப்பாட்டையையே உணர்த்துகிறது.

எனினும் நேட்டோ மற்றும் ரஷ்சிய இராஜதந்திரிகள் பொருந்தாத கோரிக்கைகளை முன்வைத்து உரையாடலை ஆரம்பித்தமையானது, அண்டை நாடுகளுடன் எல்லையில் ரஷ்சியாவின் இராணுவக் கட்டமைப்பின் மீதான மோதலுக்கு அமைதியான தீர்வைக் கண்டறிவதில் இரு தரப்புக்கும் நாட்டிமின்மையையே வெளிப்படுத்துகின்றது. மேலும், நேட்டோ-ரஷ்சிய மோதலானது, முன்னாள் சோவியத் குடியரசுகளை வைத்தே நகர்த்தப்படுகிறது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

ஒன்று, நேட்டோ ரஷ்சியாவின் கோரிக்கையை நிராகரித்தமையின் விளைவுகளை நேரடியாக சுமக்கும் நாடாக உக்ரைனே காணப்படுகிறது. ரஷ்சியா-நேட்டோ இராஜதந்திரிகள் சந்திப்பில் ரஷ்சியா உக்ரைனை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதை ரஷ்சிய அதிகாரிகள் மறுத்திருந்தனர். ஆனால் நேட்டோ ரஷ்சியாவின் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை என்றால், குறிப்பிடப்படாத இராணுவ-தொழில்நுட்ப பொறிமுறைக்கு பதிலளிக்க வேண்டி வரும் என்று புடின் எச்சரித்துள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ரஷ்சியாவின் பெருந்தொகையான இராணுவப்படை மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஆயுதங்கள் சமகாலத்தில் ரஷ்சியாவின் உக்ரைன் எல்லைப்பகுதியிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே ரஷ்சியாவின் நேட்டோவுக்கான எச்சரிக்கை உக்ரைனை களத்தில் இடம்பெறக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகிறது. மேலும், ஜெனிவாவில் நடைபெற்ற அமெரிக்க-ரஷ்சிய வெளியுறவு துணை அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பில் ரஷ்சியா உக்ரைன் மீது படை எடுக்கும் எண்ணம் இல்லை என உறுதிப்பட கூறியுள்ளது. இராஜதந்திர உரையாடல்களில் அதிகம் சொற்களுக்கு எதிராகவே செயல்கள் காணப்படுவதுண்டு. எனவே ரஷ்சியாவின் உறுதிமொழி ரஷ்சியா மீது உக்ரைன் படை எடுக்கும் எண்ணத்துடன் இருப்பதையே வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இரண்டு, முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றாகிய கஜகஸ்தானுடன் சமகாலத்தில் ரஷ்சியா ஏற்படுத்தியுள்ள தொடர்பும் நேட்டோக்கான பதில் வினையாகவே காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டு முதல் வாரத்தில் கஜகஸ்தானில் ஏற்பட்டுள்ள வெகுஜன எதிர்ப்பினை கட்டுப்படுத்த கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவின் வேண்டுகோளின் பேரில், ரஷ்சியா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு ( The Collective Security Treaty Organization-CSTO ) இராணுவ ரீதியாக தலையிட்டுள்ளது. ரஷ்சியா ஒரு சர்வதேச படையின் ஒரு பகுதியாக வசதியான மறைப்புடன் கஜகஸ்தானுக்குள் இராணுவ பிரசன்னத்தை மேற்கொண்டுள்ளது. இது வெளிப்படையாக நேட்டோவின் செயலை ஒத்ததாகவே காணப்படுகிறது. நேட்டோ ஊடகாவே அமெரிக்க படைகள் வேறு நாடுகளுக்குள் இராணுவ பிரசன்னத்தை மேற்கொண்டு வருகிறது. ரஷ்சியாவின் துணை வெளியுறவு அமைச்சர் க்ருஷ்கோ ரஷ்சியா-நேட்டோ இராஜதந்திரிகள் சந்திப்பில் குறிப்பிட்ட கருத்து இங்கு கவனிப்பது நேட்டோவை ஒத்த ரஷ்சியாவின் செயற்பாட்டை புரிந்து கொள்ள ஏதுவாக அமையும். அதாவது, 'நேட்டோ கட்டுப்படுத்தும் கொள்கைக்கு சென்றால், எங்கள் தரப்பிலிருந்து எதிர்-கட்டுப்பாட்டு கொள்கை இருக்கும். தடுப்பு இருந்தால், எதிர்-தடுப்பு இருக்கும்.' எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே நேட்டோ மாதிரியை பின்பற்றியே CSTO ஊடாக ரஷ்சியா, முன்னாள் சோவியத் குடியரசுகளில் தனது இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை ஆரம்பித்துள்ளமையை கஜகஸ்தானில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மூன்று, முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்சியா தனது பலமான இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் நேட்டோவுக்கு நெருக்கடியை வழங்க திட்டமிடுகிறது. சமீபத்திய மாதங்களில், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ரஷ்சிய துருப்புக்கள் உக்ரேனிய எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளன. இதனூடாக வன்அதிகாரத்தை பிரயோகிப்பதனூடாக சோவியத் குடியரசில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் அணுகுமுறையை உக்ரைனை களமாக கொண்டு ரஷ்சியா பரீட்சிக்கின்றது. மறுதலையாக சமீபத்திய நாட்களில், ஆயிரக்கணக்கான ரஷ்சிய துருப்புக்கள் கஜகஸ்தானுக்குள் ஏற்பட்டுவரும் எழுச்சியை நசுக்கும் முயற்சியில் எல்லையைக் கடந்துள்ளனர். இது சோவியத் குடியரசான கஜகஸ்தானை நட்புகரங்களில் வைத்திருக்க வேண்டும் என்பதன் மூலம் நிலையான எதிர்காலத்தை நோக்கி நகர திட்டமிடுவதை காணமுடிகிறது. இரு முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் ரஷ;சி இராணுவ பிரசன்னத்தை வலுப்படுத்திய போதிலும் ரஷ்சியாவின் அணுகுமுறையில் வேறுபாடுகள் உள்ளன. ரஷ்சியப் படைகள் 1989களுக்கு முற்பட்ட பனிப்போர் காலத்தில் யூரேசிய நிலப்பரப்பில் செயற்பட்டமை போல சமகாலத்திலும் செயற்பட முனைகின்றமையின் வெளிப்பாடுகளாகவே உக்ரைன் மற்றும் கஜகஸ்தான் விவகாரங்களில் ரஷ்சிய இராணுவ துருப்புக்களின் செயற்காடுகளினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அது அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோவின் யுரேசியா மீதான பனிப்போருக்கு பின்னான ஆதிக்கத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது. இது நிச்சயமாக நேட்டோவிற்கு அவசர கேள்விகளை எழுப்புகிறது. இது கிழக்கையும் மேற்கையும் மற்றொரு மோதல் போக்கில் வைப்பதாகவே  தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ரஷ்சியா-நேட்டோ இராஜதந்திரிகள் சந்திப்பின் பின்னான ஊடகவியலாளர் சந்திப்பில், 'ஐரோப்பாவில் புதிய ஆயுத மோதலுக்கு உண்மையான ஆபத்து உள்ளது. இது மாஸ்கோவிற்கு கடுமையான பொருளாதார மற்றும் பிற செலவுகளை சுமக்கும், மேலும் ரஷ்சியாவிற்கு அருகில் உள்ள உறுப்பு நாடுகளில் புதிய இராணுவ வரிசைப்படுத்தலை கொண்டு வரும்.' எனக்குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ரஷ்சியாவின் உக்ரைன் எல்லையில் இராணுவ குவிப்பு சார்ந்த ரஷ்சியாவின் மூலோபாய நோக்கமும், கஜகஸ்தான் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அங்கு ரஷ்சியா இராணுவம் சர்வதேச பாதுகாப்பு கூட்டாக சென்றுள்ள மூலோபோய நோக்கமும் பொதுவில் ஒன்றாகவே காணப்படுகிறது. அதாவது யுரேசியாவில் பனிப்போருக்கு பின்னர் விரைந்துள்ள நேட்டோ ஊடான அமெரிக்க தலைமையிலான மேற்கின் ஆதிக்கத்தை களைவதாகும். அமெரிக்கா தலைமையிலான மேற்குசார்பு நிலைப்பாட்டுக்கு எதிராக ஆக்கிரமிப்பு வடிவத்திலும், மாறாக ரஷ்சியா சார்ந்த நிலைப்பாட்டுடைய முன்னாள் சோவியத் குடியரசுகளில் பாதுகாப்பு கூட்டாகவும் ரஷ்சியா இராணுவ பிரசன்னத்தை முன்னாள் சோவியத் குடியரசுகளில் வலுப்படுத்துகிறது. இது, நேட்டோ மாதிரியில் நேட்டோவிற்கு எதிரான மோதலை சோவியத் குடியரசுகளில் ரஷ்சியா மேற்கொள்வதனையே உறுதி செய்கிறது. 


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-