விளாடிமிர் புட்டின் தலைமையில் ரஷ்சியா சோவியத் யூனியனாக மீளமைக்கப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட 30வது ஆண்டு நிறைவை அண்டிய காலப்பகுதியில், ரஷ்சியா உக்ரைனுடனான தனது எல்லையில் துருப்புக்களை குவித்து, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அதன் படைகளை சோவியத் குடியரசுகளுக்குள் விரிவுபடுத்துவதை தடுக்கும் வகையில் வரைவு ஒப்பந்தங்களை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாய், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் மாஸ்கோவுடன் ஜெனீவாவில் ஜனவரி-9(2022) முதல் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு முதல் வாரத்தில் கஜகஸ்தானில் ஏற்பட்டுள்ள வெகுஜன எதிர்ப்பினை கட்டுப்படுத்த கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவின் வேண்டுகோளின் பேரில்  ரஷ்சியா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு ( CSTO ) இராணுவ ரீதியாக தலையிட்டது. இக்கட்டுரை மத்திய ஆசியாக்குடியரசுகளில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளுக்கு பின்னாலுள்ள ரஷ்சியா-அமெரிக்க அதிகார மோதுகையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மாதங்களில், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ரஷ்சிய துருப்புக்கள் உக்ரேனிய எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் சமீபத்திய நாட்களில், ஆயிரக்கணக்கான ரஷ்சிய துருப்புக்கள் கஜகஸ்தானுக்குள் ஏற்பட்டுவரும் எழுச்சியை நசுக்கும் முயற்சியில் எல்லையைக் கடந்துள்ளனர். இந்த இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் ரஷ்சியாவின் அணுகுமுறையில் வேறுபாடுகள் உள்ளன.

ஒன்று,2014 இல், ரஷ்சியா கிரிமியாவைக் கைப்பற்றி உக்ரைனின் டான்பாஸ் பகுதிக்கு நகர்ந்தது. இதன் தொடர்ச்சி தன்மை தற்போது வரை நீள்கிறது. தற்போதும் ரஷ்சியா உக்ரைன் எல்லைகளில் துருப்புக்களை குவித்து உள்ளது. இதன் முழுமையான சர்வதேச அரசியல் பக்கம் கடந்த இதழ்களில் இப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்சியாவின் மூலோபாய நோக்கம் வெளிப்படையானது. ரஷ்சியா உக்ரைனின் அமெரிக்கா தலைமையிலான மேற்குசார்பு நிலைப்பாட்டுக்கு எதிராகவே இக்ஆக்கிரமிப்பு முனைப்புக்களை முன்னெடுக்கிறது.

இரண்டு, 2022ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் சோவியத் குடியரசான கஜகஸ்தானில் அரசியல் நெருக்கடியொன்று உருவாகியுள்ளது. கஜகஸ்தானின் மேற்குநகரமான ஜானோசென்னில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அணிதிரண்ட சிலநாட்களுக்குள் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குறைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு பிறநகரங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் வேகமாகச் சென்றன. இறுதியாக, எதிர்ப்பாளர்கள் கஜகஸ்தான் அரசியல் அமைப்பு ஊழல் நிறைந்துள்ளதாகவும் அதனை நிறுத்தக்கோரி போராட்டத்தை நகர்த்தினார்கள். கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று சில முன்னகர்வுகள் மேற்கொண்ட போதிலும், எதிர்ப்புகள் விரைவில் வன்முறையாக மாறியது. கலவரக்காரர்கள் கடைகள், காவல் நிலையங்கள் உள்ளூர் நிர்வாகக் கட்டிடங்களைத் தாக்கினார்கள். இச்சீர்குலைவை சீர்செய்ய டோக்காயேவ் பாதுகாப்புப் படைகளுக்கு எச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். அத்துடன் கஜகஸ்தான் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பானது ரஷ்சியா தலைமையிலான இராணுவக் கூட்டணியை மூலோபாய பொருட்களைப் பாதுகாக்க கஜகஸ்தானுக்கு அனுப்பியது. ரஷ்சியா ஒரு சர்வதேச படையின் ஒரு பகுதியாக படையெடுத்து, வசதியான மறைப்பை வழங்கியது. ஆனால் மீண்டும் ரஷ்சியாவின் மூலோபாய நோக்கம் வெளிப்படையானது. சோவியத் குடியரசான கஜகஸ்தானை நட்புகரங்களில் வைத்திருக்க வேண்டும் என்பதன் மூலம் நிலையான எதிர்காலத்தை நோக்கி நகர திட்டமிடுவதை காணமுடிகிறது. 

இவற்றினடிப்படையில், ரஷ்சிய ஜனாதிபதி புடின் பனிப்போருக்குப் பிந்தைய இயல்பை மாற்றி, தனது சுற்றுப்புறத்தைக் மீளவும் ரஷ்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பிரஜத்தனத்தை மேற்கொண்டு வருகின்றார் என்பதே தெளிவாகிறது. மேலும், ரஷ்சியப் படைகள் 1989களுக்கு முற்பட்ட பனிப்போர் காலத்தில் யூரேசிய நிலப்பரப்பில் செயற்பட்டமை போல சமகாலத்திலும் செயற்பட முனைகின்றமையின் வெளிப்பாடுகளாகவே உக்ரைன் மற்றும் கஜகஸ்தான் விவகாரங்களில் ரஷ்சிய இராணுவ துருப்புக்களின் செயற்காடுகளினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அது அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோவின் யுரேசியா மீதான பனிப்போருக்கு பின்னான ஆதிக்கத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது. இது நிச்சயமாக நேட்டோவிற்கு அவசர கேள்விகளை எழுப்புகிறது. இது கிழக்கையும் மேற்கையும் மற்றொரு மோதல் போக்கில் வைப்பதாகத் தெரிகிறது. இப்போக்கை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, கஜகஸ்தானின் உள்ளக பாதுகாப்பிற்கு ரஷ்சியாவின் ஆதரவை கோரியமையை அமெரிக்க வெளியுறவுச்செயலகம் கடுமையாக சாடியுள்ளது. அமெரிக்க வெளியுறவுச்செயலளார் அண்டனி பிளிங்டன் ஜனவரி-07(அன்று) செய்தியாளர்களிடம் கஜகஸ்தானில் நிலவும் சமீபத்திய அமைதியின்மை பற்றி கூறினார். அதாவது, 'கஜகஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்பதற்கு மிகவும் குறிப்பிட்ட இயக்கிகள் உள்ளனர். அங்கு என்ன நடக்கிறது என்பது உக்ரைனின் எல்லையில் நடப்பதிலிருந்து வேறுபட்டது. சமீபத்திய வரலாற்றில் ஒரு பாடம் என்று நான் நினைக்கிறேன். ரஷ்சியர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அவர்களை வெளியேற வைப்பது சில நேரங்களில் மிகவும் கடினம்' எனக்குறிப்பிட்டார். இக்கருத்துக்கு எதிர்வினையாற்றி உள்ள ரஷ்சிய வெளியுறவு அமைச்சகம் தமது டெலிகிராம் தளத்தில், 'ஆன்டனி பிளிங்கன் வரலாற்றுப் பாடங்களை மிகவும் நேசிக்கிறார் என்றால், அவர் பின்வருவனவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்கர்கள் உங்கள் வீட்டில் இருக்கும்போது, உயிருடன் இருப்பது கடினம் மற்றும் கொள்ளையடிக்கப்படவோ அல்லது கற்பழிக்கப்படவோ கூடாது' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இது அமெரிக்காவின் சமீபத்திய கடந்த காலத்தால் கற்பிக்கப்பட்டது அல்ல. மாறாக, அமெரிக்காவின் 300 ஆண்டுகால அரசால் இது கற்பிக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் ரஷ்சிய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து மோதல்க்ள மத்திய ஆசியா சார்ந்து இரு நாடுகளுக்கும் எழுந்துள்ள நெருக்கீட்டையே வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது, ரஷ்சியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு முனைப்புக்கள், அமெரிக்கா மத்திய ஆசியாவில் ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு எண்ணங்கள் சார்ந்து பரந்த அளவில் எதிர்வினையான பிரச்சாரத்தை மேற்கொள்ள ஏதுவாகியது. எனினும் கஜகஸ்தானில் அவ்அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ரஷ்சியா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை மத்திய ஆசியாவில் ர.சியா தொடர்பான அமெரிக்காவின் எதிர்வினையான பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கி உள்ளது. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ் தினத்தன்று திடீரென கலவரம் நிறைந்த கஜகஸ்தானில் விரைவான தலையீட்டின் மூலம் ரஷ்சியா தனது உடனடி சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு வழங்குநராகவும், ஒழுங்குமுறையை செயல்படுத்துபவராகவும் செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் சார்பு ஏற்பாட்டின் கீழ் சுமார் 2,000 பராட்ரூப்பர்கள் மட்டுமே விமானத்தில் அனுப்பப்பட்டனர். ஆனால் ரஷ்சிய வான்வழி துருப்புக்களின் அனுபவமிக்க தளபதியான ஜெனரல் ஆண்ட்ரி செர்டியுகோவ், நடவடிக்கையின் கட்டளை அதிகாரியாக வியத்தகு வலுவூட்டல்களைச் செய்துள்ளார். இதன்விளைவாக, எதிர்ப்பு அதிகமான அல்மாட்டியில் பதட்டமான ஸ்திரத்தன்மை ரஷ்சியா இராணுவ துருப்புக்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது, சீனாவின் எழுச்சி ஒருவகையில் ரஷ்சியாவுக்கும் அச்சுறுத்தலாக கருதப்படுகின்ற நிலையிலும் மத்திய ஆசியாவில் இரு நாடுகளின் தேசிய நலன்களும் பொதுமைப்படுவதனை அவதானிக்க முடிகிறது. பாதுகாப்பு அடிப்படையில், மத்திய ஆசியாவில் ரஷ்சியாவின் மேலாதிக்கத்தை ஏற்க சீனா தயாராக உள்ளது. ரஷ்சியா துருப்புக்களை அனுப்புவது மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கின் பொதுவான நலனில் உள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கி அப்பிராந்தியத்தை ஒதுக்கிவிட்டதால், தங்களின் மூலோபாய இலக்குகளுக்கு ஏற்றவாறு சூழ்நிலையை கையாளும் திறன் மத்திய ஆசிய அரசுகளுக்கு குறைவாகவே உள்ளது. ரஷ்சியா, சீனா மற்றும் மத்திய ஆசிய அரசாங்கங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு முதன்மையாக பாதுகாப்பு சார்ந்தது. மூவரும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுதல், வன்முறை மதத்தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஜனநாயகமயமாக்கல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு போன்ற வடிவங்களில் மேற்கத்திய தலையீட்டை எதிர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். பங்காளிகளுக்கிடையேயான நோக்கங்கள் வேறுபடுகின்றன. ஆனால் மேற்கத்தைய தலையீட்டை எதிர்த்தல் என்ற நோக்கத்தில் அதிக அளவு ஒத்துழைப்பு உள்ளது.

நான்காவது, கஜகஸ்தானுக்கு ரஷ்சியா நட்புகரம் வழங்கியுள்ள போதிலும் ஆதிக்க மனப்பாங்கும் ஒருங்கே காணப்படவே செய்கின்றது. கஜகஸ்தானுடன் எல்லைகளை மறுசீரமைக்க ரஷ்சியா இப்போது தனது இராணுவ இருப்பை சுரண்டிக்கொள்ளுமா என்பது நிச்சயமற்றதாயினும், சாத்தியப்பாடுகள் காணப்படவே செய்கின்றது. கஜகஸ்தான் மத்திய ஆசியாவில் மிகப்பெரியது மற்றும் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியாளராக உள்ளது. இது உலகில் பன்னிரண்டாவது பெரிய நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது. மேலும், அதன் பொருளாதாரம் ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரண்டிற்கும் ஹைட்ரோகார்பன்களை விற்பதை பெரிதும் சார்ந்துள்ளது. இப்பொருளாதார நன்மைகள் மற்றும் சோவியத் குடியரசு என்ற அடிப்படையில் ரஷ்சியாவின் நாட்டம் தவிர்க்க இயலாததாகவே காணப்படுகிறது. ரஷ்சியாவின் முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின், கஜகஸ்தானுடனான தனது எல்லைகளை மாற்றுவதற்கு ரஷ;சியாவிற்கு உரிமை உள்ளது என்று எச்சரித்துள்ளார். மேலும், 'எப்படியும் சோவியத் வீழ்ச்சிக்கு முன்னர் கசாக்கியர்களுக்கு ஒருபோதும் அரசு அந்தஸ்து இல்லை' என்று புடின் கூறுகிறார். இவ்வாறான கருத்துக்கள் கஜகஸ்தான் மீதான ரஷ்சியாவின் நாட்டத்துக்கு சான்றுபயிர்ப்பதாகவே அமைகிறது.

எனவே, மத்திய ஆசியாவின் சமீபத்திய அரசியல்களில் புடின் மீள சோவியத் ஒன்றியத்தை கட்டியெழுப்புவதில் முழுவீச்சாக உள்ளார் என்பதையே உறுதி செய்கிறது. 2021இன் இறுதிப்பகுதிக்கு முன்னர் ரஷ்சியாவின் ஆட்சியில் தனது இருப்பை பலப்படுத்துவதற்கான நகர்வுகளை புடின் முன்னெடுத்திருந்தார். அதனை உறுதிப்படுத்தியதற்கு பின்னர், சோவியத் ஒன்றியம் பிளவுற்ற முப்பதாண்டு நினைவு காலத்தில் மீள சோவியத் ஒன்றித்தை கட்டமைக்கும் நகர்வுகளுக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அமெரிக்கா மத்திய ஆசியாவில் ரஷ்சியாவுடன் கருத்துக்களில் மோதல் களத்தை உருவாக்குகின்ற போதிலும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவினால் ஏற்பட்டுள்ள நெருக்கீடுகளை சீர்செய்வதில் முழுமையாக ஈடுபட்டுள்ளமையால், மத்திய ஆசியாவில் ரஷ்சியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த இயலாத நிலையில் உள்ளமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-