பொருளாதார நெருக்கடி பிரச்சாரத்திற்குள் புதைந்துள்ள இலங்கை அரசாங்கத்தின் அரசியல்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கொள்கைகளற்று செயற்படுகின்ற போதிலும் வருடாவருடம் இடம்பெறும் அரசாங்க கொள்கை விளக்க உரைகள் தொடர்பில் தமிழரசியல் தரப்பு ஒருவகை பிரம்மையை ஏற்படுத்துவதுடன் தமிழ் மக்களும் அதிக எதிர்பார்ப்புகளை திரட்டி காத்திருப்பாது இயல்பாகி உள்ளது. இம்முறை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயம் உரையாடப்படும் என்ற எதிர்பார்க்கை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தளத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒரு மாதத்திற்கு மேலே இடம்பெற்ற உரையாடல்கள் மற்றும் அதுதழுவி இந்தியா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மறுமுனையில் இந்தியா அரசாங்கம் இலங்கையின் கடன்சுமையை குறைக்கும் வகையில் உதவி வழங்க உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் செய்தி வெளியிட்டிருந்தார். இதனடிப்படையில், இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உரையாடப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் தமிழ் மக்களிடையே அதிகம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனினும், தமிழ் மக்களிடையே திரட்டப்பட்ட எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை சிதைத்துள்ளதாகவே கடந்த புதன்கிழமை தமிழ் பத்திரிகைகளின் முதன்மை செய்தியாகி உள்ளது. இக்கட்டுரை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் முதன்மை பெற்றுள்ள விடயங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த ஜனவரி-18அன்று காலை 10மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோத்ததபாய ராஜபக்ஷா தலைமையில் கூடியது. நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக தென்னிலங்கையிலே இலங்கையின் பொருளாதாரத்தை சீர்செய்ய கூடிய வழிமுறைறைகள் அதிக முதன்மையாக எதிர்பார்க்கப்பட்டதுடன், வடஇலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக ஜனாதிபதி கொள்கை விளக்க உரையில் விளக்குவாரெனவும் எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் எவ்வித பிரயோசனங்களுமில்லையென விமர்சித்து பாராளுமன்ற புதிய கூட்டத்தொடரின் நிறைவில் இடம்பெறும் ஜனாதிபதியின் அழைப்பிலான தேநீர் விருந்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புறக்கணித்திரந்தனர். தேநீர் விருந்துபசார புறக்கணிப்பு தொடர்பிலே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் எவ்வித உத்தியோகபூர்வ செய்தியறிக்கை விடாத போதிலும் பாராளுமன்ற செய்தி சேகரிப்பாளர்களின் கேள்விகளின் போதிலேயே தமது புறக்கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதுதொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன், 'இம்முறை ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்கவுரையானது பிரயோசனமற்ற ஒன்றாகவே கருதுகிறோம். வெறுமனே காலத்தையும் நேரத்தையும் நாசமாக்கும் ஒரு பேச்சாகவே இதனை கூட்டமைப்பு கருதுகின்றது. ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் தமக்கான கொள்கை என்ன என்பதையே விளங்கப்படுத்த முடியவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் தேசிய இனப்பிரச்சினை பற்றிய உரையாடலை உதாசீனம் செய்துள்ளமை தொடர்பில், இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ள கருத்தாக தமிழ் முற்கோக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது சமூக வலைத்தளத்தில், 'ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ' என கேலியாக தெரிவித்துள்ளதாக பகிர்ந்துள்ளார். தமிழரசியல் தரப்பு அதிகம் நம்பிக்கையை செலுத்தும் ரணில் விக்கிரமசிங்காவம் இனப்பிரச்சினையை இலங்கையின் தேசிய பிரச்சினையாக கருதாது தனித்து தமிழரின் பிரச்சினை என்ற கோணத்திலேயே சிந்திக்கிறார் என்பதுவே மனோ கணேசனுடனான ரணில் விக்கிரமசிங்காவின் உரையாடலில் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதாவது, தேசிய இனப்பிரச்சினையை 'உங்கள் இனப்பிரச்சினை' என மனோ கணேசனை பார்த்து முன்னாள் பிரதமர் விழிப்பது அவ்எண்ணப்பாட்டையே உறுதி செய்கின்றது.
மிதவாத அரசியலை வெளிப்படுத்துவதாக சித்தரிக்கும் தரப்பினரே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையாக தமிழர் பிரச்சினையாக சிந்தித்து செல்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முதன்மைப்படுத்தும் அரசியலை வெளிப்படையாக மேற்கொள்ளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் தேசிய இனப்பிரச்சினைக்கான உரையாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதனை எதிர்பார்ப்பது அறிவிலித்தனமாகவே காணப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா எந்தவொரு பிரதான உரைகளிலும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையொன்று இருப்பதாகவே வெளிப்படுத்தியதில்லை. குறிப்பாக இலங்கை தேசிய இனப்பிரச்சனை அதிகம் முன்னிறுத்தப்படும் ஐக்கிய நாடுகள் அவையிலும் கடந்த ஆண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினையை தவிர்த்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் பௌத்தத்துக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் பற்றியே உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்காலப்பகுதியிலும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை ஜனாதிபதி புறக்கணித்திருந்தாரென தமிழரசியல் தரப்பில் சிலாகிக்கப்பட்டது. இவ்வாறானதொரு சூழலில், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடல்கள் புறக்கணிக்கப்ட்டுள்ளமையை ஏமாற்றமாக தமிழரசியல் தரப்பு முதன்மைப்படுத்தவது தமிழ் மக்களை அறிவை முதன்மைப்படுத்தி தொடர்ச்சியாக சிந்திக்க விடாது, உணர்ச்சிகளுக்குள் அரசியலை நகர்த்த முற்படுவதனையே வெளிப்படுத்தி நிற்கிறது.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் போக்குகளை நுணுக்கமாக அவதானிப்பதன் மூலமே அரசாங்கத்தின் எதிர்கால உள்ளக மற்றும் வெளியக உறவுசார் கொள்கைகளை அறிந்து தமிழ்த்தரப்பு தமக்கான கொள்கையை கட்டமைக்க ஏதுவாக அமையும். பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே முதன்மையான உரையாடலாக இடம்பெற்றுள்ளது. இதனூடக இலங்கை அரசாங்கத்துக்குள்ள வாய்ப்புக்களை தெளிவாக அவதானித்தல் வேண்டும்.
ஓன்று, இலங்கையின் பொருளாதார பிரச்சினையையே முதன்மையான நெருக்கடியாக பொதுவெளியில் காட்சிப்படுத்துவதனூடாக தேசிய இனப்பிரச்சினை சார்ந்து சர்வதேசரீதியாக எழும் அழுத்தங்களை சீர்செய்ய முற்படுகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை விடயமும் பிரதான நிலைபெறக்கூடிய வாய்ப்புக்களே காணப்படுகிறது. இச்சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பெரும் அலையாக பொதுவெளியில் காட்சிப்படுத்துவதனூடாக மனித உரிமை பேரவை நெருக்கடிகளை தளர்த்தி செல்ல வாய்ப்பு ஏதுவாக உள்ளது. கடந்த ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கமும் தனது ஆட்சிக்காலப்பகுதயில் பொருளாதார சிக்கல்களை கூறியே காலநீடிப்புக்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இரு அரசாங்கத்தின் தன்மைகளும் வேறுபட்டதாயினும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மேற்கு சார்ந்த எண்ணப்பாங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மனித உரிமை பேரவை நெருக்கடியை சீர்செய்ய பொருளாதார நெருக்கடி பிரச்சாரம் பலமான வாய்ப்பாக காணப்படும்.
இரண்டு, பொதுஜன பெரமுன அரசாங்கம் பொருளாதாரத்தை சீர்செய்வதனூடாக இலங்கை தேசிய இனப்பிரச்சினையை சீர்செய்யலாம் என்ற பிரச்சாரங்களையே ஆரம்பம் முதல் அதிகம் முதன்மைப்படுத்தி வருகின்றது. பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கங்களில் முதன்மையாக ஈடுபடும் வியத்கம எனும் அமைப்பு 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார பொறிமுறையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை சந்தித்திருந்தனர். குறித்த சந்திப்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை முதன்மைப்படுத்தி உரையாடுகையில், வியத்கம நிபுணர் குழு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அடிப்படை பொருளாதாரத்தை மையப்படுத்தியதென்றும் அதனை சீர் செய்வதனூடாக இலங்கை தேசிய இனப்பிரச்சினையை கடந்து செல்லலாம் என்பதாகவே மீள மீள வலியுறுத்தியிருந்தனர். பொதுஜன பெரமுன அரசாங்க உருவாக்கத்தின் பின்னரும் தேசிய இனப்பிரச்சினையை முக்கியத்துவப்படுத்த வேண்டிய களங்களில் பொதுஜன பெரமுன அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளையே முதன்மைப்படுத்தி வருகின்றார்கள். எனவே இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையை பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்வதனூடாக தீர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணப்பாங்கிலான பிரச்சார வெளிப்பாட்டையே ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்க கொள்கை விளக்க உரையிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மூன்று, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத செல்வாக்கு நிலையை பொதுஜன பெரமுன அரசாங்கம் இழந்து வருகின்றது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கட்சிகளிடம் பாரப்படுத்துவதன் மூலம் பெரமுன அரசாங்கம் தனது வீழ்ச்சியை தவிர்க்க முற்படுவதனையும் கொள்கை விளக்க உரையில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது, 'சவால்களை சமாளிக்க பாராளுமன்றத்திலும் வெளியேயும் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொறுப்புகளை நிறைவேற்ற உங்கள் ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி என்ற முறையில் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்' எனக்குறிப்பிடுவதனூடாக ஜனாதிபதியின் அவதானிப்புகளின் உள்ளார்ந்த நிலை என்னவென்றால், தீவிரமான விகிதாச்சாரத்தில் ஒரு நெருக்கடி நிலவுகிறது. அதற்கு இனம், மதம் மற்றும் அரசியல் சார்பு பேதமின்றி அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது என்பதேயாகும். மேலும், 'பாகுபாடான அரசியலில் ஈடுபடுவதன் மூலம், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை குறிவைக்கும். ஆனால் இது ஒட்டுமொத்த அரசைப் பொறுத்தவரை எதையும் மாற்றாது. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, இந்த கட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அரசின் அதிர்ஷ்டத்தை மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு உதவுவது புத்திசாலித்தனமாக இருக்கும்.' என்றும் ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் எதிர்க்கட்சிகள் கட்சி நலன்சார்ந்து செயற்படுவதுடன், தேச விசுவாசமின்றி செயற்படுவதாக மக்களிடம் கருத்தை உருவாக்க முற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
எனவே, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஜனாதிபதியின் ஆரம்ப கொள்கை விளக்க உரையானது பொருளதார நெருக்கடியை பயன்படுத்தி சர்வதேச ரீதயாக எழும் நெருக்டிகளை சீர்செய்வதுடன், இலங்கையில் வீழ்ச்சியுற்று வரும் செல்வாக்கை சீர்செய்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பொதுஜன பெரமுனவின் முயற்சியை முறியடிப்பதாயின் தமிழரசியல் தரப்பும் இலங்கையின் எதிர்க்கட்சிகளும் தேநீர் விருந்துபசாரத்தை புறக்கணிப்பதை கடந்து வினைத்திறனான தந்திரோபாயமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதனூடகவே எதிர்க்கட்சிகள் தம்மை பலப்படுத்த கூடிய வாய்ப்பு காணப்படுவதுடன், தமிழரசியல் தரப்பு தமிழ் மக்களின் விருப்புக்களின் இருப்பை பேண வேண்டிய தேவை எழுந்துள்ளது.
Comments
Post a Comment