டெஸ்மாண்ட் டுட்டுவின் மறப்போம் மன்னிப்போம் சித்தாந்தம் இலங்கைக்கு பொருந்தமானதா? -ஐ.வி.மகாசேனன்-

உலக அமைதிக்கான குரலாக ஓங்கி ஒலித்த தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு அடக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனங்களுக்கு பேரிழப்பேயாகும். இனிவரும் காலங்களில் டெஸ்மாண்ட் டுட்டுவின் குரல் உரிமைக்காக போராடும் இனங்களின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ஒலிக்காவிடினும், அவரது நல்லிணக்க பயணம் எதிர்கால தலைமுறையினருக்கு படிப்பினையாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இருபத்தியோராம் நூற்றாண்டில் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் வெற்றிகரமாக செயற்பாட்டுக்கு தென்னாபிரிக்கா மாதிரி முன் உதாரணமாக சுட்டிக்காட்டப்படுவதற்கு குறித்த ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட டெஸ்மாண்ட் டுட்டுவின் பங்களிப்பு கனதியானது. இக்கட்டுரை நல்லிணக்க பொறிமுறையின் அடையாளமாக டெஸ்மாண்ட் டுட்டு திகழுவதற்கான காரணத்தை இலங்கைப்பரப்பில் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் வலிந்து உரையாடப்படும் விடயமாக நிலைமாறுகாலநீதியும் நல்லிணக்க பொறிமுறையும் காணப்படுகிறது. நல்லிணக்க பொறிமுறையின் உரையாடலோடு அதன் அடையாளமாக திகழும் டெஸ்மாண்ட் டுட்டுவின் உரையாடலும் தவிர்க்க முடியாத நிலை பெறுகிறது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதி பொறிமுறையின் பின்னரான செயற்பாடு தென்னாபிரிக்கா முன்மாதிரியை கொண்டது என்றே அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு பெப்ரவரி நடுப்பகுதியில் கிளிநொச்சியில் அடிக்கல் நடுகை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு முன்னால் தமிழ் மக்களிடம் தென்னாபிரிக்க மாதிரியில் மறப்போம் மன்னிப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இது அன்றைய காலப்பகுதியில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது.

தென்னாபிரிக்காவில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான அரச அதிகாரம் கிடைக்கப்பெற்ற பின்னர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த டெஸ்மாண்ட் டுட்டு வெளிப்படையாகப் பேசும் பண்பினால் கருப்பு மற்றும் வெள்ளை இன மக்கள் இரு தரப்பாலும் தேசத்தின் மனசாட்சியாகக் கருதப்பட்டார். இவ்வாறன பின்னணியிலேயே அவர், தென்னாபிரிக்க மக்களிடம் மறப்பதற்கான மற்றும் மன்னிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வெற்றியும் பெற்றார். எனினும் இலங்கை தென்னாபிரிக்க களச்சூழலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்கு உரிமைக்காக போராடிய தமிழர் தரப்பு தொடர்ச்சியாக உரிமையற்று நசுக்கப்படும் சூழலே காணப்படுகிறது. மேலும், இலங்கையில் நல்லிணக்கவாதி டெஸ்மாண்ட் டுட்டுகளுக்கு பதிலாக பேரினவாதிகளே நிலை கொண்டுள்ளனர். எனவே, ரணில் விக்கிரமசிங்காவின் கோரிக்கை தென்னாபிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டின் தார்ப்பரியம் அறியாமையையே உணர்த்தியது.

இலங்கை அரசாங்க தரப்பு மாத்திரமின்றி தமிழ் மக்களின் அரசியல் தரப்பும் தென்னாபிரிக்காவின் தார்ப்பரியத்தையும், நல்லிணக்கத்தில் டெஸ்மாண்ட் டுட்டுவின் வகிபாகத்தையும் இன்றுவரை புரியாதவர்களாகவே உள்ளனர். 2019இல் ரணிலின் மறப்போம் மன்னிப்போம் என்ற கோரிக்கைக்கு எவ்விதமறுப்பும் தெரிவிக்காத தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவின் இரங்கல் செய்தியிலும், அவரின் மன்னிப்புசார் செயற்பாட்டையே ஆழமாக குறிப்பிட்டுள்ளனர். 'மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை என்பதை பேராயர் டுட்டு வாழ்ந்து உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்' எனக்குறிப்பிட்டுள்ளது. இது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் இன்றும் தென் இலங்கை ஆட்சியாளர்  மீது கொண்டுள்ள விசுவாசத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.

நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் டெஸ்மாண்ட் டுட்டுவின் மன்னிப்பை மாத்திரமே இலங்கை அரசியற் தரப்பினர் கருத்திற்கொள்வது ஆரோக்கியமற்ற செயற்பாடாகும். இது டெஸ்மாண்ட் டுட்டை மலினப்படுத்தும் செயலாகவே காணப்படுகிறது. மன்னிப்பு வெற்றி பெற்றமைக்கு பின்னாலுள்ள அவரது செயற்பாடுகளையும் கருத்தியலையும் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

ஒன்று, பாதிக்கப்படும் மக்களின் எண்ணங்களை அறிதல் வேண்டுமென்பதில் டெஸ்மாண்ட் டுட்டு ஆழமான ஈடுபாட்டுடன் இருந்தார். அதனை ஈழத்தமிழர் சார்ந்ததொரு விடயத்தில் அவரின் வெளிப்பாட்டிலிருந்து அறியக்கூடியதாக காணப்படுகிறது. அதாவது, ஈழத்தமிழர்களின் உரிமைக்கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை உலக தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பை அவர் விடுத்திருந்தார். அச்செய்திக்குறிப்பில், 'இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டத்தைப் புறக்கணிப்பது, சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராகக் கூறப்படும் போர்க்குற்றங்களைத் தீர்ப்பதற்கு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க உதவும்' எனக்குறிப்பிட்டிருந்தார். அதே சமயம், புறக்கணிப்பு பற்றி தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம் என்றும் அச்செய்தி குறிப்பில் கூறியிருந்தார். இது பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணங்களை பொதுவிருப்பை அறிந்து செயலாற்ற வேண்டுமென்ற டுட்டின் நல்லிணக்கத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இரண்டு, டெஸ்மாண்ட் டுட்டு தன் சமூகத்தை தாண்டியும் பிற சமூக நலனிற்காகவும் அயராது உழைத்தார். மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த அநீதிக்கு எதிராக அவர் தனது 85 வயதில் ஆங்சாங் சுகிக்கு எழுதிய கடிதத்தின் குறிப்புக்கள் அவரது தளராத மனிதாபிமான செயற்பாட்டு எண்ணத்தை வெளிப்படுத்தியது. கடிதக்குறிப்பில், 'எனக்கு வயதாகிவிட்டது. உடல் தளர்ந்து விட்டது. முறைப்படி ஓய்வு பெற்றுவிட்டேன். பொது விவகாரங்களில் அமைதி காக்கவேண்டும் என்று சபதமும் ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது வாய் திறக்கவேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது. ஆழமான சோகம் என்னைப் பேச வைத்துவிட்டது. ஒரு நாடு தன் மண்ணில் வாழும் எல்லோருடைய உரிமைகளையும் விதிவிலக்கின்றி ஒன்றுபோல் மதிக்கவேண்டும். தன் மக்களுக்கு அமைதியான வாழ்வை அளிப்பது ஓர் அரசின் கடமை. மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அந்த நாட்டின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். அந்த வகையில், சூகி தலைமை தாங்கி வழிநடத்தும் நாட்டை இனியும் சுதந்தர நாடு என்று அழைக்க முடியாது.' எனக்குறிப்பிட்டிருந்தார். இவ்வாறே பலஸ்தீனியர்களுக்கு அதரவான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். மேலும், 2003 டிசம்பரில், ஜிம்பாவே ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் மீது மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டு இருந்த போது, தென்னாபிரிக்க அரசாங்கத்தின் ஜிம்பாவே சார்பான நிலைப்பாட்டை கண்டித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மூன்று, டெஸ்மாண்ட் டுட்டு வெள்ளை சிறுபான்மையினரின் கொடுங்கோன்மைக்கு எதிராக குரல் எழுப்பினார். அதேபோலவே பின்னாளில் புதிய ஜனநாயக அரசாங்கம் தவறிழைக்கையிலும்  கடுமையாக இருந்தார். விடுதலைப்போராட்ட காலத்திலிருந்து நெருங்கி நட்பு பாராட்டி பழகிய தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின குடியரசு தலைவர் நெல்சன் மண்டேலாவின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி ஏற்படுகையில் எதிர்த்து கேள்வி எழுப்ப தயங்கியதில்லை. புதிய ஆளும் உயரடுக்கின் சிறப்புரிமையான 'கிரேவி ரயின்'(Gravy Train) ஏறியதற்காக நெல்சன் மண்டேலாவை கடுமையாக சாடினார். மேலும், அவர் தலைமையிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வன்முறை செயல்களை நிறவெறி அரசாங்கத்தை விட மென்மையாக கையாளுமாறு தென்னாபிரிக்க அரசாங்கம் விடுத்திருந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

நான்கு, மக்களுடன் நெருக்கமான உறவை டெஸ்மாண்ட் டுட்டு பேணி இருந்தார். தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வெற்றிக்கு அவரது சமூக உறவாடலே காரணமாயுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தில் சகல சமூகத்தினரதும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சமுகத்திரனரின் நம்பிக்கையையும் திடவுறுதியையும் பெற்றுள்ள, அதியுயர் நேர்மை கொண்ட நபர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இலட்சிய ரீதியிலே, தனிப்பட்ட ஆணையாளர்களின் பண்புகளை பொறுத்த வரையில் அவர்களிடையே இருக்கும் பலங்கள் மற்றும் பலவீனங்களை சமநிலைப்படுத்த வேண்டும். இவ்நியமங்களை டெஸ்மாண்ட் டுட்டு முழுமையாக கொண்டிருந்ததுடன், பாதிக்கப்பட்டோருடன் பகிரங்க விழாக்களின் போது நெருக்கமாகவும் நேரடியுமானதுமான உறவை நிலை நாட்டினார். தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு முழுமையான பலனை அளிக்காத போதிலும் டெஸ்மாண்ட் டுட்டுவின் இயல்புகளே அதனை வெற்றி பொறிமுறையாக அடையாளப்படுத்தியுள்ளது. 

ஐந்து, டெஸ்மாண்ட் டுட்டுவின் கொள்கை இறுக்கமே அவரை மக்களிடம் நம்பிக்கைக்குரிய நல்லிணக்கவாதியாக பிணைத்தது. 2017ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின்  அப்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, நிதியமைச்சர் பிரவின் கோர்டனை தவறான அணுகுமுறையில் நீக்கியிருந்தார். இவ்ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்த டெஸ்மாண்ட் டுட்டு அரசாங்கம் அன்பளித்திருந்த தனது ஹெர்மானஸ் ஓய்வு இல்லத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு அப்போது வயது 86 மற்றும் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. எனினும் எதிர்ப்பு அவரது இரத்தத்தில் இருந்தது. அவரது பார்வையில், எந்தவொரு அரசாங்கமும் அதன் அனைத்து மக்களையும் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தாத வரை சட்டபூர்வமானது அல்ல என்பதாகும். இக்கொள்கை உறுதிப்பாட்டை இறுதிவரை அவர் பேணியிருந்தமை அவரது வரலாற்று நிகழ்வுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.

ஆறு, டெஸ்மாண்ட் டுட்டுவின் முதன்மையான கருத்தியலாக காணப்படுவது 'வானவில் தேசம்' (Rainbow State) என்பதாகும். வானவில் தேசம் என்பது பல்லின அல்லது பல கலாச்சார தன்மையை குறிப்பதாகும். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள், கறுப்பர்கள், நிறக்காரர்கள் மற்றும் இந்தியர்கள் வௌ;வேறு தோல் நிறங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு வானவில்லின் வண்ணங்களைப் போல ஒன்றுபட்ட மக்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை டெஸ்மாண்ட் டுட்டு பகிர்ந்தார். அதனடிப்படையிலேயே, 1994ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்றபோது தென்னாப்பிரிக்காவை விவரிக்க 'வானவில் தேசம்' என்ற வார்த்தையை டெஸ்மாண்ட் டுட்டு உருவாக்கினார். எனினும், தனது இறுதி ஆண்டுகளில் 'வானவில் தேசம்' என்ற தனது கனவு இன்னும் நனவாகவில்லை என்று வருந்தினார்.

இவ்வாறான இயல்புகளே டெஸ்மாண்ட் டுட்டுவை நல்லிணக்கவாதியாக அடையாளப்படுத்தியுள்ளது. இவையே டெஸ்மாண்ட் டுட்டு மறப்போம் மன்னிப்போம் என்ற கோரிக்கையை தென்னாபிரிக்க மக்களிடையே வெளிப்படுத்துகையில் மக்களின் இணக்கத்தையும் பெறக்காரணமாகியது. எனவே, தென்னாபிரிக்க முன்மாதிரியில் மறப்போம் மன்னிப்போம் என்ற கோரிக்கையை விடுவோரும், அதளை வரிந்து கட்டி ஆதரிப்போரும் டெஸ்மாண்ட் டுட்டுவின் தார்ப்பரியத்தை அறிந்து அதில் ஒரு சதவீதமாவது இலங்கை தேசத்தில் காணப்படுகிறதா என்ற பகுப்பாய்வை மேற்கொள்வுதும அவசியமானதாகும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-