வடக்கே மே18 தடைகளும் தெற்கே வெற்றிவிழா கொண்டாட்டங்களும் -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் கொரோனாவை மையப்படுத்தி அமுல்படுத்தப்பட்ட ஊடரங்கு நீக்கப்பட்ட போதிலும் கொரோனா அபத்தத்தின் வீரியம் இலங்கையில் தளர்வின்றியே காணப்படுகின்றது. 19 மே 2020 வரையில் 569பேர் கோவிட்-19 நோய் குணமாகி வெளியேறிய போதிலும் 442 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மே11ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த இலங்கையின் அனைத்து பிரதேசங்களும் இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டிருந்தது. எனிலும் இலங்கையில் பிரதேசங்களிடையே கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டு நடைமுறை வேறுபாடுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. 2020 மே 18 மற்றும் 19ஆம் திகதிகளிலும் அதற்கு அண்மித்த ஒருவார காலப்பகுதிகளிலும் இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையின் செயற்பாடுகள் இலங்கை இரு தேசம் என்பதை கொடிய அபத்த காலத்திலும் உணர்த்துவதாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த கட்டுரை 2020ஆம் ஆண்டு நினைவுகூறப்பட்ட 11ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு மேற்கொள்ளப்பட்ட தடைகளுக்கும், வெற்றிவிழா கொண்டாட்டங்களிற்கும் பின்னுள்ள அரசியல் எதிர்காலத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் நினைவுச்சின்னங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏனைய வகையினதான சின்னங்கள் அமைத்தல், தேசிய நாட்களில் நினைவுபடுத்துதல், கடந்தகால சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் தெருக்களுக்கு மீளப்பெயரிடுதல், முன்னாள் படுகொலைக்களங்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களை அடையாளம் செய்து நினைவுபடுத்துதல் என்பன நிலைமாறுகால நீதியின் அடையாள இழப்பீடு என்ற கூறினுள் உள்ளடங்குவதாக நிலைமாறுகால நீதிக்கான சர்வதேச மையம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலும் நிலைமாறுகால நீதி சர்வதேச மேற்பார்வையில் செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே 2020ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நினைவுகூறப்பட்ட 11வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் வடக்கு கிழக்கில் பெருந்தடைகளின் மத்தியிலே நினைவு கூறப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவுகையை காரணங்காட்டி தமிழ் அரசியல் தலைவர்கள் முதல் உறவுகளை இழந்த சொந்தங்கள் வரை இழந்த தங்கள் உறவுகளை நிம்மதியாக நினைவுகூற இலங்கையின் பாதுகாப்புத்துறை அனுமதிக்கவில்லை. அது தொடர்பில் எதிர்க்குரலெழுப்ப திராணியற்ற சமூகமாகவே தமிழ் சமூகம் காணப்படுகின்றது.

மே 11ஆம் திகதி இலங்கையின் பெரும்பகுதி இயல்புநிலைக்கு திருப்பப்பட்ட போதிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை மையப்படுத்தி வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இறுக்கமான நடைமுறையை நினைவுகூறலுக்காக ஒன்று கூடுபவர்களின் மீது பிரயோகித்தனர். கொரோனா பரவுகை காலத்தில் போதைப்பொருட்பாவனை மிகவும் ஆபத்தானது என வைத்தியர் சங்கம் எச்சரித்திருந்தும், கொரோனா முழுமையாய் கட்டுக்குள் வராத சூழலிலும் மதுபானசாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு அங்கு சமூக இடைவெளியை துறந்து மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தாத இலங்கை பாதுகாப்புத்துறை கொரோனாவை காரணங்காட்டி தமிழ் மக்களின் துயரங்களை பகிர கூடும் நினைவேந்தல்களை தடுத்து நிறுத்தியமை மக்களை விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளதுடன் அச்ச நிலைப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஒரு வார காலமாக அனுஷ்டிக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மார்ச் 13ஆம் திகதி செம்மணியில் ஒழுங்கு செய்யப்பட்ட முதல் நாள் நிகழ்வுகளிலிருந்தே இலங்கையின் பாதுகாப்புத்துறை இறுக்கமான நடைமுறையையே பின்பற்றி வருகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஒழுங்மைக்கப்பட்ட நினைவேந்தலில் 10 பேர் கூடிய நினைவேந்தலை கொரோனா அபத்தத்தை சமூக இடைவெளியை காரணங்காட்டி காவல் துறையினர் தடுக்க முற்பட்டனர். அதை மீறியும் நினைவேந்தலை மேற்கொண்ட போது விபரங்கள் திரட்டப்பட்டதோடு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என எச்சரிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்தும் நவாலி, நாகர்கோயில் மற்றும் உலகத்தமிழராய்ச்சி மாநாட்டு தூபிகளில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளிலும் காவல்துறையினர் தொடர்ச்சியாக இடையூறினை மேற்கொண்டனர். நினைவேந்தலுக்கு முதல் நாள் இரவு 8மணிக்கு பின்னராக காவல்துறையின் கோரிக்கையில் நீதிமன்ற அறிவிப்பூடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் 11 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். எனிலும் பின்னர் நினைவேந்தல் அன்று மேற்கொள்ளப்பட்ட மேன்முறையினூடாக தனிமைப்படுத்தல் கட்டளை தளர்த்தப்பட்டது. இது மக்களை அச்சத்துக்குள் வைத்திருப்பதற்கான காவல்துறையின் ஏற்பாடாகவே காணப்பட்டது.

மாகாணத்தினுள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்ட போதிலும் மே 18 அன்று வடக்கில் மாவட்டங்களை விட்டு வெளியேற இறுக்கமான நடைமுறை பேணப்பட்டது. முள்ளிவாய்க்கால் செல்ல எவருமே அனுமதிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து சென்றோர் இயக்கச்சியிலும், சங்குப்பிட்டி பாளத்திலும் நிறுத்தி திருப்பியனுப்பப்பட்டனர். முன்னாள் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் சங்குப்பிட்டி பாளத்தில் நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டதுடன் செம்மணியில் நினைவேந்தலை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் காவல்துறையால் தடுக்கப்பட்டது. இறுதியில் தனது வீட்டிலேயே நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தார். அவ்வாறே தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி கிளை உறுப்பினர்கள் மாமனிதர் ரவிராஜ் இன் சிலைக்கு முன்னால் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த நிலையில் அங்கு காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில் நிகழ்வு கட்சி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் அவர் வேறு வழியாக முள்ளிவாய்க்கால் சென்றிருந்தார். ஊடகங்ளும் முள்ளிவாய்க்கால் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. யாழிலிருந்து முள்ளிவாய்க்கால் செல்லும் வழியில் 7 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் கத்திகள் கொட்டன்களுடனேயே நின்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக தமிழர் உரிமைசார் போராட்டங்களை முன்னெடுக்கும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நினைவேந்தல் நிகழ்வுகளிலும் காவல்துறையினர் இடையூறு மேற்கொண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். மே மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி காவல்துறையினரும் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். எனிலும் மாணவர் ஒன்றியம் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தூபியில் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தி இருந்தனர். அண்மைக்காலமாக பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் மீது பாதுகாப்பு தரப்பின் கெடுபிடி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாக மட்டம் செயற்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கொரோனா வைரஸ் பரவுகை, சமூக இடைவெளியை காரணங்காட்டி இலங்கை பாதுகாப்பு துறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதிலும் மே 19ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பாராளுமன்றத்திற்கு அருகில் பத்தரமுல்லை போர்வீரர்கள் நினைவிடத்தில் வெற்றி விழா கொண்டாட்டங்கள் வழமை போன்றே விமர்சையாக நடைபெற்றது. கொரோனா அபத்தத்தை காரணங்காட்டியோ சமூக இடைவெளியை வலியுறுத்தியோ எவ்வித தளர்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக யாழில் கண்ட காட்சி ஒன்று, வீதியில் கொரோனா பாதுகாப்பிற்கு நிற்கும் படையினர் வீதியில் யாராவது முகக்கவசம் அணியாது செல்லின் நிறுத்தி முகக்கவசம் வாங்கி அணிந்த பின்னரே செல்ல அனுமதிக்கின்றனர். இதனால் யாழ்ப்பாண வீதிகளில் முகக்கவச விற்பனையே அதிகமாக காணப்படுகின்றது. எனிலும் இலங்கையின் சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி விழா கொண்டாட்டத்தில் முகக்கவசம் அணியாது எவ்வித கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுமின்றியே கலந்து கொண்டார். இருக்கைகளும் சமூக இடைவெளி பேணப்படாதே போட்டிருந்தமையும் குறிப்பிடத்த்கது.
போரில் அதிக இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்கள் தங்கள் உறவை இழந்த துயரை நினைவு கூறுவதற்காக சமூக இடைவெளியுடன் ஒன்றுகூட மே18இல் அனுமதிக்கப்படாத நிலையும், போரில் வென்ற தரப்பு சிங்கள இராணுவத்தினரை வெற்றிநாயகராக கொண்டாடப்படும் வெற்றி விழா மே19 அன்று சமூக இடைவெளியற்ற வகையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் நிலையும் கொடும் பேரழிவு காலத்திலும் இலங்கையின் அரசாங்கம் தனது அரசியல் நலனுக்கே முதன்மையளிக்கும் என்பதையே உறுதி செய்கின்றது. 

2015ஆம் ஆண்டு நிலைமாறுகால நீதிக்கு இணைஅனுசரணை வழங்கிய அரசாங்க காலத்திலேயே அதனை முழு சுதந்திரத்துடன் அனுபவிக்க முடியாத போது, நிலைமாறுகாலநீதியின் இணைஅனுசரணையிலிருந்து வெளியேறியுள்ள நடப்பு அரசாங்கத்திடம் நிலைமாறுகாலநீதி அம்சத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனமேயாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான தடைகளும், வெற்றிவிழாக் கொண்டாட்டங்களும் அரசாங்கம் தமது அரசியல் நலன்சார் நிலைக்கு முழுமையாய் மாறுவதையே உணர்த்தியுள்ளது. இதில் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை வென்றிட உத்திகளை வகுத்திட வேண்டும். பாராளுமன்றத்தை கூட்டி இலங்கை சனநாயத்தை காத்திட துடிக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் தமிழர்களின் நினைவுகூறும் உரிமைக்காக நீதிமன்றம் செல்வார்களாயின் தமிழ் சமூகத்தின் நினைவு கூறும் உரிமையையாவது பெற்றுக்கொடுக்க முற்படலாம். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பில் பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தலுக்கு பணிந்து பின்வாங்கியது போல் இனிவரும் காலங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகள் தனித்து நின்று பின்வாங்கியே செல்வார்களாயின் தமிழர்களின் உரிமைகள் மேலும் நசுக்கப்படும் நிலையே காணப்படும். சிங்கள கட்சிகள் பேரினவாத நலனில் தங்களுக்குள் ஒற்றுமையாகவே உள்ளனர். பரந்த இலங்கையில் சிறுபான்மையினமான தனித்தேசிய இனமாக உள்ள தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை சீர்குலைத்திருப்பது தொடர்ச்சியாய் பின்வாங்கும் சூழலையே ஏற்படுத்த கூடியதாகும். அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி தமது உறவுகளுக்காக போராடும் காணாமல் போனோர் சங்கங்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் காணப்படும் சிவில் அமைப்புகளிடம் கூட ஒற்றுமை தன்மை இல்லை. இந்நிலையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

11 ஆண்டுகள் கடந்தும் எம் உறவுகளின் இழப்பை நினைவுகூற சரியான மூலோபாயம் கண்டுபிடிக்கவில்லையாயின் எம் எதிர்கால இருப்பு கேள்விக்குறி என்பதுவே உர்ஜிதமாகின்றது. இனியும் காலங்கடக்கவில்லை. 2020ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முடிந்த உடனேயே அதனை மறந்து விட்டு 2021ஆம் ஆண்டு மே பிறந்த பின் 12ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பற்றி உரையாடாது. 2020ஆம் ஆண்டு 11ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முடிவடைந்த தினத்திலிருந்தே இவ்வருட பிரச்சினைகளை ஆராய்ந்து எதிர்வரும் காலங்களில் எவ்வாறாக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலை ஒழுங்கமைப்பது மற்றும் அடுத்த சந்ததிக்கும் வரலாறுளை ஊடுகடத்துவது தொடர்பில் பரந்த கருத்தாடல் உருவாக்கப்பட வேண்டும். முள்ளிவாய்க்காலுக்கு மாத்தரமின்றி தமிழ் சமூகத்தின் இருப்பினை பேணுவதற்கான மூலோபாயம் தொடர்பிலும் பரந்துபட்ட  கருத்தாடல் அவசியமாகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-