பில்கேட்ஸை மையப்படுத்திய சதிக்கோட்பாடும் வைரஸ் சந்தை உருவாக்கங்களும் -ஐ.வி.மகாசேனன்-


கொரோனா வைரஸ் தொற்று பரவலானது முதன் முதலில் சீனாவில் அடையாளம் காணப்பட்டு 2020 மே மாதத்துடன் ஐந்து மாதங்கள் ஆகின்ற சூழலிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னால் உள்ள மர்மங்கள் அவிழ்க்க முடியாத முடிச்சாகவே நீள்கின்றது. கொரோனா வைரஸ் என்பது விஞ்ஞானரீதியிலான சொல்லாடல் என்ற அடிப்படையில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் உருவாக்கம் தொடர்பிலே விஞ்ஞானத்துக்கு உட்பட்ட தேடலை மேற்கொள்கின்றனர். எனிலும் கொரோனா வைரஸ் பரவுகை ஏற்படுத்தியுள்ள தாக்கம் அரசியலை குழப்பியுள்ளதால், அரசறிவியலாளர்களது தேடலாகவும் கொரோனா வைரஸ் காணப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுகையால் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதட்டம் உலகப்போருக்கான முன்னாயர்த்தமாகவும், பனிப்போர் சூழலாகவும் அரசறிவியல் கட்டுரையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேவேளை மறுபக்கம் கொரோனா உருவாக்கம் தொடர்பிலே முன்வைக்கப்பட்டுள்ள சதிக்கோட்பாடுகளை ஆய்வு செய்வதிலும் அரசறிவியல் கட்டுரையாளர்கள் மும்மரமாக நிற்கின்றனர். அதனடிப்படையில் இக்கட்டுரை கொரோனா வைரஸ் பரவுகை தொடர்பில் பில்கேட்ஸை மையப்படுத்தி சூழலும் சதிக்கோட்பாட்டை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் முதற்தர செல்வந்தர்களில் ஒருவராயும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களில் ஒருவராயும், பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைஸ்தாபகர்களில் ஒருவராயும் அடையாளம் காணப்பட்டுள்ள பில்கேட்ஸ், கொரோனா வைரஸ் சீனாவில் உயிர்கொல்லி வைரஸாக அடையாளம் காணப்பட்ட நாள் முதலாய் உலக அரங்கில் தனித்து பேசப்படும் ஓர் தனிநபராக உள்ளார். கொரோனா வைரஸ் அரசியலில் மைக்ரோசொப்ட் அரசியலாகவே பில்கேட்ஸ் மீதான சதிக்கோட்பாடு விளக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவுகைக்கு ஐந்து வருடங்கள் முன்னரே பில் கேட்ஸ், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உலகம் முழுக்க வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் கொரோனா என்ற பெயரை மட்டும்தான் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த வைரஸ் இப்போது எப்படி எல்லாம் செயல்படுகிறதோ அதை அப்படியே குறிப்பிட்டு இருந்தார். அதாவது, எபோலா வைரசில் இருந்து நாம் தப்பித்துவிட்டோம். எபோலா வந்தால் உடனே அறிகுறி தெரியும். இதனால் பல பணக்கார நாடுகள் எபோலாவில் இருந்து தப்பித்து விட்டது. ஆனால் இன்னொருமுறை நாம் இப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம். இன்னொரு முறை வேறு வைரஸ் இப்படி உருவானால், அதில் இருந்து தப்பிக்க முடியாது. அறிகுறியே இல்லாமல் உலகம் முழுக்க வைரஸ் பரவும். தங்களுக்கு வைரஸ் தாக்கியதே தெரியாமல் பலர் உலகம் முழுக்க வைரஸ்களை பரப்ப வாய்ப்பு உள்ளது என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார். அதனை மையப்படுத்தியே கொரோனா வைரஸ் பரவுகை அடையாளம் காணப்பட்டதிலிருந்து பில்கேட்ஸ் பற்றிய உரையாடலும் கொரோனா அரசியலில் முதன்மை பெற்றது.

பில்கேட்ஸூடன் தொடர்புறும் வகையில் கொரோனா சதிக்கோட்பாட்டை அமெரிக்க சனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் முன்வைத்தார். உலகம் முழுக்க கொரோனா பரவ பில் கேட்ஸ் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியூள்ளார். தி ஜோ பிஸ்கோபோ நிகழ்ச்சியில் 2020 ஏப்ரல் 13அன்று பேசிய ரோஜர் ஸ்டோன், பில் கேட்ஸ் மக்களை உலகளாவிய கண்காணிப்பு முறையை செய்வதற்காக (மைக்ரோசிப்) கொரோனா வைரஸை உருவாக்குவதிலும் பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார் என்ற கருத்து "தீவிர விவாதத்திற்கு திறந்திருக்கும்” என்றார். 'எனக்கு பழமைவாத நண்பர்கள் உள்ளனர். அவர்கள் அதை கேலிக்குரியதாகவும், முற்றிலும் பொய் சொல்வதாகவும் கூறுகிறார்கள். தொற்றுநோயை சமாளிக்க மைக்ரோசாப்ட் நிறுவனர் தடுப்பூசி ஆராய்ச்சிக்கு சுமார் 45 பில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார். எனக்குத் தெரியும். அவரும் பிற உலகவாதிகளும் கட்டாய தடுப்பூசிகள் மற்றும் உலகளாவிய கண்காணிப்பு முறையை செய்வதற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் சோதனை செய்தார்களா என்பது எங்களுக்குத் தெரியும்.” எனத் தெரிவித்தார். இது பில்கேட்ஸ் மீதான பரந்ததொரு சதிக்கோட்பாட்டுக்கு வழிகோலியது.

பில்கேட்ஸ் கோவிட் -19 ஐ ஒரு வைரஸ் தடுப்பூசியிலிருந்து லாபம் ஈட்டுவதற்கான ஒரு வழியாக அல்லது உலகளாவிய கண்காணிப்பு முறையை செயல்படுத்துவதற்கான வழிமுறையாக உருவாக்கியதாகக் கூறுகின்ற சதிக்கோட்பாட்டை மையப்படுத்தி பில்கேட்ஸை இலக்காகக் கொண்ட பலவிதமான பொய்கள் யூடியூப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் முழுவதும் ஆபத்தான விகிதத்தில் பரவி வருகின்றன. கொரோனா வைரஸ் சதி கோட்பாடுகள் மற்றும் இணையத்தில் தவறான தகவல்களின் முக்கிய இலக்காக பில் கேட்ஸ் மாறியுள்ளார் என்று தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக பகுப்பாய் நிறுவனமான ஜிக்னல் லேப்ஸால் கண்காணிக்கப்பட்ட அறிக்கையில் பில் கேட்ஸைப் பற்றிய தவறான தகவல்களே அனைத்து கொரோனா வைரஸ் பொய்களிலும் மிகவும் பரவலாக உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பகுப்பாய்வின்படி, இந்த ஆண்டு பேஸ்புக்கில் பில் கேட்ஸ் மற்றும் வைரஸ் பற்றிய பதிவூகளில் ஏறத்தாழ 900,000 தடவைகள் விரும்பப்பட்ட மற்றும் கருத்து தெரிவிக்கப்பட்ட பதிவுகளில் 16,000க்கும் மேற்பட்ட இடுகைகள் தவறான தகவல்களில் அடங்கும். யூடியூப்பில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட பில் கேட்ஸ் பற்றி பொய்களை பரப்பும் 10 மிகவும் பிரபலமான வீடியோக்கள் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் முறை பார்க்கப்பட்டன. என நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பில்கேட்ஸ் நீண்டகாலமாக தனது பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையூடாக தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் மற்றும் வழங்கும் செயற்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டு வந்துள்ளார். சமகாலத்தில் பில்கேட்ஸிற்கு எதிராக சதிக்கோட்டை பரப்புவதில் முன்னணியில் உள்பவர்களாக தடுப்பூசிகளை நிராகரிப்பவர்களே காணப்படுகின்றனர். கொரோனா பரவுகைக்கு பின்னராக 25 மில்லியன் புதிய பார்வைகளைப் பெற்ற, ஒரு தொற்று வைரஸ் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லும் என்று பில்கேட்ஸ் கணித்த 2015ஆம் ஆண்டு பேச்சையே தடுப்பூசிக்கு எதிரான அணி சதிக்கோட்பாட்டின் ஆதாரமாக கொள்கின்றது. அத்துடன் 2019 அக்டோபர் இல், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மைய பங்குதாரர்கள், உலக பொருளாதார மன்றம் என்பவற்றுடன் பில்கேட்ஸின் பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து “நிகழ்வு 201” என்ற தொற்று நோயிற்கு முகம் கொடுப்பது தொடர்பிலானதொரு பயிற்சியை நடாத்தியது. குறித்த பயிற்சியும் கொரோனா அபாயத்தை முன்னுணர்ந்த செயற்பாடு எனவும் கொரோனா உருவாக்கத்தின் பின்ணனியில் பில்கேட்ஸ் உள்ளார் என்றும் சதிக்கோட்பாட்டாளர்கள் ஆதாரங்களை ஊகிக்கிறார்கள்.
‘நிகழ்வு 201’ தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அதன் பிரதான ஒருங்கிணைப்பாளர்களான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம் 2020 சனவரி 24ஆம் திகதி தங்களது செயற்பாட்டை தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக மிகவும் கடுமையான தொற்றுநோய்கள் எழக்கூடிய சந்தர்ப்பங்களில் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு சவால்களை முன்னிலைப்படுத்த இந்த பயிற்சி உதவியது. எங்கள் பயிற்சியில் ஒரு போலி நொவல் கொரோனா வைரஸ் அடங்கியிருந்தாலும், அந்த கற்பனை வைரஸின் சாத்தியமான தாக்கத்தை மாதிரியாக்குவதற்கு நாங்கள் பயன்படுத்திய உள்ளீடுகள் கோவிட்-2019க்கு ஒத்ததாக இல்லை. என தெரிவித்துள்ளனர்.

போர்ப்ஸ் (Forbes) பத்திரிகையில் புருஸ் வை லீ என்பவர் “பில் கேட்ஸ் இப்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் சதி கோட்பாடுகளின் இலக்கு” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், கடந்த பத்தாண்டுகளில் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் தொற்று நோய் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க தயாரிப்பு மற்றும் அமைப்புகளின் பற்றாக்குறை குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கிறார். எனவும் தொற்றுநோய்க்கு மக்களை தயார்ப்படுத்த எடுக்கப்பட்ட முன்னடவடிக்கைக்காக தொற்றுநோய் பரவல் ஏற்பட்ட பின் அவரே தொற்றை உருவாக்கினார் என கூறுவது பொருத்தமானாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் செய்திகள் உண்மையில் அவர்களின் கூற்றுகளுக்குப் பின்னால் அதிக ஆதாரங்களை வழங்கவில்லை. பில்கேட்ஸ் மக்கள் தொகையை குறைக்க விரும்புகிறார் அல்லது அவரது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என குற்றம் சாட்டுபவர்கள் அதற்கான சான்றுகள் எங்கே? உலகெங்கிலும் தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் விநியோகத்தில் பில்கேட்ஸ் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்த தடுப்பூசிகள் தட்டம்மை மற்றும் போலியோ போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்கின்றன. அவை “மக்கள் தொகை குறைப்புக்கு" நேர்மாறாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தகைய தடுப்பூசிகள் இல்லாமல் இந்த தொற்று நோய்க்கிருமிகளின் பரவலை வேறு எவ்வாறு தடுக்க முடியும்? கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒரு தடுப்பூசி இல்லாமல் ஒரு தொற்று நோய்க்கிருமி பரவூம்போது என்ன நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனக்கட்டுரையை அமைத்துள்ளார்.
பில் கேட்ஸ் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளார். மொத்தம் 7 நிறுவனங்களை இதற்காக அவர் உருவாக்கி உள்ளார். கொரோனாவை தடுப்பதற்காக இந்த 7 நிறுவனங்களும் தனி தனியாக வெவ்வேறு மருந்துகளை கண்டுபிடிக்கும். இதில் 2 நிறுவனத்தின் மருந்துகள் கடைசியாக தேர்வு செய்யப்பட்டு அது மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையை விரைவுபடுத்துவதற்கு பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை உடனடியாக 20 மில்லியன் வரை செலவழிக்கும் என அறிவித்து செயற்படுகின்றது.

தொடர்ச்சியாக சமூக இடைவெளியுடன் கொரோனாவோடு வாழப்பழகுவது என்பது எளிதான காரியமல்ல. ஆதலால் கொரோனாவிற்கு எதிரான மருந்து அதிஅவசியமாகிறது. அதற்கு பொருளாதார வல்லுனர்களின் நிதி ஈட்டமும் அவசியமாகிறது. கொரோனா பரவுகைக்கு பின்னராக அதனை குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் பில் கேட்ஸ் காட்டும் தீவிரம், மற்றும் அமெரிக்காவின் உலக சுகாதாரத்திற்கான நிதி நிறுத்தியமை தொடர்பிலான பில்கேட்ஸின் விமர்சனமும் பில்கேட்ஸின் கொரோனா தொடர்பிலான தொடர்ச்சியான அவதானிப்பை காட்டுகின்றது. கொரோனா பற்றிய அவதானிப்பை பொருளாதார வல்லுனரான பில்கேட்ஸ் செலுத்துவது மகிழ்ச்சியானதாயினும் மறுபக்கத்தில் சதிக் கோட்பாட்டாளர்களின் ஊகம் நியமாகி பொருளாதார நலனோடு செயற்பட பில்கேட்ஸ் முயற்சி செய்வது உண்மையாயின் கொரோனா வைரஸ் பொருளாதாரத்தின் முதலாவது வைரஸ் உற்பத்தி பொருளாவதுடன், எதிர்காலத்தில் வைரஸ் சந்தைகளின் உருவாக்கத்திற்கும் தொடக்கப் புள்ளியாய் அமையுமென்பது துயரமானதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-