ஐ.நாவின் போர்நிறுத்த அறிவிப்பு உலகப் பாதுகாப்பை உறுதி செய்யுமா? -ஐ.வி.மகாசேனன்-

ஐ.நா சபையின் சர்வதேச போர்நிறுத்த அறிவிப்பும் உலக போக்கும்!
உலகில் சகல மக்களும் கொரோனா பீதியில் திளைக்கையில், ஓர் பக்கம் அரசாங்கங்களும் போராட்டக்குழுக்களும் தங்கள் இருப்பை பலப்படுத்துவதற்காக போர் நடவடிக்கைகளை தொடர்ச்சியாய்க் கையாண்டு வருகின்றனர். உளவியல் நிபுணர்கள் பலரும் கொரோனா பரவுகையை விழிப்பதற்காக பயன்படுத்தும் ‘போர்' என்ற சொல்லாடலின் பயன்பாட்டையே எதிர்க்கின்றார்கள். கொரோனாவை போரென விழிப்பது மக்களை உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கின்றது என்றும், ‘ஒரு தொற்றுநோய் ஒரு தொற்றுநோய். ஒரு போர் ஒரு போர்’ என்ற கருத்தை ஆழமாக முன்வைக்கின்றனர். சொல்லாடலே பெரும் அபத்தங்களை ஏற்படுத்துகின்ற சூழலில், உலகில் கொரோனா காலத்தில் நிறைந்துள்ள போர்கள் மக்களை அரசாங்கங்களும் போராட்டக்குழுக்களும் உணர்வற்ற ஜடங்களாகவே பாHக்கின்றார்கள் என்ற யதார்த்த பார்வையையே வெளிக்காட்டுகின்றது. அதனடடிப்படையிலேயே குறித்த கட்டுரை கொரோனா காலத்திலும் தொடரும் போர் அவலங்களைத் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுகை உலக நாடுகள் யாவற்றிலும் ஏற்பட்டுள்ள நிலையில், நாடுகளிடையேயும் நாடுகளுக்குள்ளேயும் நடைபெறும் போர்களை நிறுத்துமாறு 2020 மார்ச் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் அறைகூவல்விடுத்தார்.  “நம் உலகம் ஒரு பொதுவான எதிரியை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் தேசியம் அல்லது இனம், பிரிவு அல்லது நம்பிக்கை பற்றி கவலைப்படுவதில்லை. இது அனைவரையும் இடைவிடாமல் தாக்குகிறது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில், சுகாதார அமைப்புகள் சரிந்துவிட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சுகாதார வல்லுநர்கள், ஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர், பெரும்பாலும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மோதலால் இடம்பெயர்ந்த அகதிகள் மற்றும் பிறர் இரட்டிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள். வைரஸின் கோபம் போரின் முட்டாள்தனத்தை விளக்குகிறது. அதனால் தான் இன்று, உலகின் அனைத்து மூலைகளிலும் உடனடி உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றேன். விரோதங்களிலிருந்து பின்வாங்கவும். அவநம்பிக்கையையும் பகைமையையும் ஒதுக்கி வைக்கவும். துப்பாக்கிகளை அமைதிப்படுத்துங்கள்; பீரங்கியை நிறுத்துங்கள்; வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். கோவிட்-19க்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துதல். போரின் நோயை முடிவுக்குக் கொண்டு வந்து, நம் உலகத்தை அழிக்கும் நோயை எதிர்த்துப் போராடுங்கள். எல்லா இடங்களிலும் சண்டையை நிறுத்துவதன் மூலம் இது தொடங்குகிறது.” என்று கூறியிருந்தார்.


1945ஆம் ஆண்டு ஐ.நாவின் தோற்றத்திற்கு பின்புலமாக உள்ள காரணியும் நாடுகளில் போர்கள் ஏற்படாமல் தடுத்து சமாதானத்தை நிலைநாட்டுவதே ஆகும். எனிலும் கடந்த 75 வருடங்களாய் ஐ.நாவால் அதன் இலக்கை நிறைவேற்ற முடியவில்லை. அதேநிலைமையே கொரோனா காலத்திலும் காணப்படுகின்றது. ஐ.நா பொதுச்செயலாளரின் அறிவிப்பை துச்சமாக நினைத்து ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கம்; வகிக்கும் நாடுகளே போரின் மீது அதிக மும்மரமாக உள்ளன. சுவிடனில் அமைந்துள்ள போர் பதற்றம் மற்றும் அமைதிக்காக பணியாற்றும் ஸ்பெரி என்ற அமைப்பானது மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் சமகாலத்தில் 27நாடுகளில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சிறுசிறு ஆயுதக்குழுக்களினால் அமைதிக்குலைவுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக 68மில்லியன் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. கூடாரங்களில் உள்ள அகதிகளின் முகாம்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட பல தரப்பட்டவர்களும் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2020 மே மாதம் வரையில், 59 யுத்தங்கள் உலகளாவிய யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவாக பிரெஞ்சு அரசாங்கம் தலைமையிலான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் அரசுகள் மற்றும் அரசு சாராத ஆயுதக் குழுக்கள் 70 உலகளாவிய யுத்த நிறுத்த அழைப்புக்கு ஒருவிதத்தில் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் இது ஆதரவு சொல்லாட்சியைத் தாண்டி நடைமுறையில் செல்ல வேண்டும். ஐ.நாவும் தொடர்ச்சியாய் இறுக்கமான மதிப்பிட்டை பேண வேண்டும். ஆயினும் நடைமுறையில் அது குறைவாகவே காணப்படுகின்றது.

2020 ஏப்ரல் 3ஆம் திகதி தனது வேண்டுகோளின் தாக்கம் குறித்து பத்திரிகைகளுக்கு விளக்கமளித்த குட்டெரெஸின் பெரும்பகுதி தமக்கு கிடைத்த ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தவதாகவே அமைந்ததே தவிர தொடர்ச்சியாய் யுத்தங்களை நிகழ்த்துபவர்களுக்கு எதிரான இறுக்கமான நடவடிக்கைகள் ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பெரும் விசனமாக காணப்படுகின்றது. ஆப்பிரிக்காவில், கேமஷருன், மத்திய ஆபிரிக்க குடியரசு, லிபியா, தென் சூடான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் மோதலுக்கான கட்சிகள் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டன என்றார். எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க மக்கள் விடுதலை இயக்கத்தின் ஆயுதப் பிரிவான தெற்கு கேமஷருன்ஸ் பாதுகாப்புப் படைகள் 2020 மார்ச் 25 அன்று தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தன. என சுட்டிக்காட்டியிருந்தார். எனிலும் கேமஷருனில் முழுமையான போர்நிறுத்தம் சாத்தியம் ஆகவில்லை. கேமஷருனின் மற்ற பிரிவினைவாத குழுக்களில் குறைந்தது 15 குழுக்கள் போர் நிறுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம் அரசாங்கத் துருப்புக்கள் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிக்குள் போட்டியின்றி அணிவகுத்துச் செல்வதற்கான வழியைத் திறக்கும் என்று மிகப்பெரிய குழுக்களில் ஒன்றான அம்பாசோனியா நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

ஏமனில் போர் மற்றும் கொரோனா வைரஸின் கொடிய கலவை இடம்பெற்று கொண்டுள்ளது. சவுதி-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமையிலான இராணுவக் கூட்டணி, தலைநகர் உட்பட நாட்டின் பெரும் பகுதிகளை கட்டுப்படுத்தும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தலையிட்டபோதுஇ மார்ச் 2015 இல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்க சார்பு துருப்புக்களுக்கும் இடையே ஏமனின் போர் அதிகரித்தது. பிரிவினைவாத தெற்கு இடைக்கால சபை (The separatist Southern Transitional Council - S.T.C) 2020 ஏப்ரல் 26இல் தெற்கில் அவசரகால ஆட்சியை அறிவித்தது, இது அரசாங்கத்துடன் மோதலை புதுப்பிக்க அச்சுறுத்துகிறது. மறுபக்கம் கொரோனா வைரஸில் இருந்து ஏமன் தனது முதல் இரண்டு மரணங்களை 2020 ஏப்ரல் 29 அன்று அறிவித்திருந்தது. மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தை எதிர்கொள்ளும் மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு நாட்டில் இந்த நோய் கண்டறியப்படாமல் பரவக்கூடும் என்று அஞ்சுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘ஏமனில் மோதல் தொடர்ந்தால், கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது, இது அதிக அழிவையும் பேரழிவையும் தரும்.’ என ஏமன் நாட்டை சேர்ந்த சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் மே 2020ஆக்ஸ்பாம் ப்ரீஃபிங் பத்திரிகையில் (OXFAM BRIEFING PAPER MAY 2020) குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில், பிப்ரவரி 29 அன்று அமெரிக்கா தலிபானுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து யுத்தம் நாட்டின் கவனத்தை ஈர்க்காமல் நாட்டின் கிராமப்புறங்களில் குவிந்துள்ளது. கொரோனா அபத்தத்தோடு இணைந்து தலிபான்களின் தாக்குதலும் ஆப்கான் மக்களை சிதைக்கின்றது. “தலிபான் முதன்மையாக மோதல் சார்ந்த அமைப்பாக உள்ளது" என்று நெருக்கடி குழுமத்தின் ஆப்கானிஸ்தானின் மூத்த ஆய்வாளர் ஆண்ட்ஷரு வாட்கின்ஸ் கூறியூள்ளார். தி டிப்ளோமற் (The Diplomat) பத்திரிகையில் கொரோனா காலத்து ஆப்கானிஸ்தான் போர் பற்றிய கட்டுரையில், “இது ஒரு போர் மண்டலம்; எனவே கொரோனா வைரஸ் இங்கு வரவில்லை. அது வரும்போது நாங்கள் அதை பீரங்கி அடிப்போம்" என்று கஸ்னியில் பணியாற்றும் ஆப்கானிஸ்தான் படைவீரர் ஒருவர் கேலி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 மே 14 தரவுகளின் படி ஆப்கானிஸ்தானில் 5226 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 132 பேர் உயிரிழந்துள்ளனர். யுத்த நிறுத்தத்தை அறிவிக்க தலிபான் மறுத்துவிட்டது. ஆனால் வைரஸ் மக்களை பாதித்த பகுதிகளில் சண்டையிடுவதை நிறுத்தப்போவதாகக் கூறியது. இந்நிலையில் கொரோனா பரவுகையானது ஆப்கான் நாட்டில் சகோதரர்களைக் கொல்வதை நிறுத்துவதற்கும், வைரஸிற்கு எதிராக ஒன்றாகப் போராடுவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. இதனை சுதாகரித்து தரகரற்று ஆப்கான் அரசாங்கமும் தலிபான்களும் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான நிலைக்கு வரவேண்டும் என்பதே பல தரப்பின் கோரிக்கையாய் உள்ளது.

ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளே கொரோனா அபத்த காலத்திலும் போர்ப்பதற்றத்தையும் ஒருங்கே ஏற்படுத்தி வருகின்றன. 2020 பெப்ரவரி 10ஆம் திகதி சீன குண்டு விமானங்கள் சீன-தாய்வான் கடல் எல்லையை தாண்டி பறந்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பி52 குண்டு வீச்சு விமானங்கள் தாய்வானின் கிழக்கு கடற்கரை பிராந்தியத்தில் பறந்தன. 2020 மார்ச்16ஆம் திகதி சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் போர்ப்பயிற்சியை மேற்கொண்டது. அமெரிக்க முன்னாள் சனாதிபதிகள் தாய்வானுக்கு விற்பனை செய்ய தயங்கிய எப்16 போர் விமானங்களில் அறுபத்தாறை டொனால்ட் ட்ரம்ப் தாய்வானுக்கு எட்டு பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தார். அத்துடன் தென்சீனக்கடலிலும் சீன மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏப்ரலில் போர் முழக்கம் ஏற்பட்டு தணிந்துள்ளது. இது கொரோனா அபத்த காலத்திலும் ஐ.நா செயலாளரின் அறிவிப்பை வல்லரசு நாடுகள் முன்மாதியாக உதாசீனம் செய்து செயற்படுவதை வெளிப்படுத்துகின்றது.

கொரோனா நச்சுக்கிருமியின் தாக்கம் ஆட்சி முறைமை மற்றும் பொருளாதாரத்தில் மாத்திரமின்றி படைத்துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. முகாம்களில் இருக்கும் உலகின் பல்வேறு நாடுகளின் படையினரும் போராட்டக்குழுவும் தொற்று நோய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு முகாமில் ஒருவருக்கு வந்தாலே அது அந்த முகாமையே முடக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடும். இது போருக்கு உகந்த காலம் இல்லை. இக்காலத்திலாவது அரசாங்கங்களும் போராட்டக்குழுக்களும் அமைதி நிலைக்கு வருவதே மக்கள் நலனை பாதுகாக்க கூடிய செயற்பாடாகும். ஐ.நாவும் கொரோனா அனர்த்த சூழலிலாவது தற்துணிவான முடிவினை எடுத்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-