உலக நாடுகளின் கொரோனா கால தேர்தல் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா? ஐ.வி.மகாசேனன்


கொரோனா உலகம் பூரா நாடுகள் இடையேயும் நாடுகளுக்குள்ளேயும் அரசியல் பிணக்குகளை விதைத்து வருகின்றது. சனநாயகத்தை மையப்படுத்திய தேர்தல்களை நடாத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பிலும் நாடுகளுள்ளே கொரோனா வைரஸ் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. நாடுகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று வருகின்றனர். இலங்கையிலும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலே ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலே பிணக்குகள் நீண்டு கொண்டே செல்கின்றது. அதனடிப்படையில் உலக நாடுகளின் உதாரணங்களை கொண்டு இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பான சர்ச்சைக்கு விடை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் உலக நாடுகள் கண்ணுக்கு புலப்படாத மற்றும் முடிவு தெரியாத ஒரு  தீநுண்மத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர். குறித்த கொரோனா தீநுண்மத்திற்கு எதிரான போரில் அரசாங்கங்கள் அவசரகால அரசாங்கங்களாய்; பிரகடனப்படுத்தி செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே நிரல்படுத்தப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான சனநாயகத்தை மையப்படுத்திய தேர்களை நடாத்துவது என்பது அரசியல் ரீதியிலான சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது. உலகளவில் நாடுகள் மூன்று விதமாக தேர்தல் மற்றும் அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வினை காண முற்பட்டுள்ளனர். தேர்தலை நடாத்துதல், தேர்தலை ஒத்திவைத்தல் மற்றும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குதல் என்பனவே அவ்வழிமுறைகளாகும்.

உலகில் கொரோனா அபத்த காலத்தில் தென்கொரியாவில் மாத்திரமே நிரல்படுத்தப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவ ஆரம்பிக்கப்பட்ட பெப்ரவரி மாத காலப்பகுதியில் கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகவே காணப்பட்டது. எனிலும் மார்ச் மாத நடுப்பகுதியில் பரவல் வேகம் குறைவடைந்தது. தற்போது (ஏப்ரல், மே காலப்பகுதியில்) ஒற்றை எண்களிலேயே பரவல் எண்ணிக்கை காணப்படுகின்றது. ஏப்ரல்15 அன்று மில்லியன் கணக்கான மக்கள், முகமூடி அணிந்து, குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று, உலகளாவிய வெடிப்பு தொடங்கியதிலிருந்து நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் ஒன்றில் வாக்குச் சாவடிகளில் குழாய் நாடா வரிகளுக்கு இடையில் மெதுவாக நகர்ந்து சென்று வாக்களித்தனர். வாக்களிப்பதற்கு முன்பு அவர்கள் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைகளை சுத்திகரித்து, களைந்துவிடும் பிளாஸ்டிக் கையுறைகளை அணிந்தனர். தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு கவசங்களோடு வெப்பநிலை சோதனையில் ஈடுபட்டனர். வெப்பநிலை பரிசோதனையில் தோல்வியுற்றவர்கள் அல்லது முகமூடி அணியாதவர்கள் பிரிக்கப்பட்ட விசேட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டனர். வாக்களித்த பின்னர் அவ்விசேட வாக்குசாவடிகளை சுத்தம் செய்தனர். வைரஸ் காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்ட 13,000 பேருக்கும் வாக்கெடுப்புகள் முடிந்த உடனேயே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மிகவும் கடுமையான பாதுகாப்பு நடைமுறையுடனேயே தென்கொரியா தேர்தல் ஒழுங்கமைக்கப்பட்டது. 1992 முதல் தென்கொரியாவில் நடைபெற்ற எந்தவொரு நாடாளுமன்றத் தேர்தலையும் விட அதிகமான வாக்குப்பதிவு (66.2%) கொரோனா அபத்த கால வாக்குப்பதிவில் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா அபத்த காலத்தில் பெரும்பாலான நாடுகளில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் சம்மதத்துடன் நிரல்படுத்தப்பட்ட தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டே உள்ளன. குறிப்பாக பொலிவியாவின் இடைக்கால அரசாங்கம் மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதாகவும், தேசம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால் 14 நாட்களுக்கு கட்டாயமாக நாடு தழுவிய தனிமைப்படுத்தலை நிறுவுவதாகவும் மார்ச் மாதம் அறிவித்திருந்தது. எட்டு ஜனாதிபதி வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தேர்தலை ஒத்திவைக்க பரிந்துரைத்தனர். தனிமைப்படுத்தலுடன் பொருந்துமாறு “தேர்தல் நாட்காட்டியை 14 நாட்களுக்கு நிறுத்திவைப்போம்" என்று நாட்டின் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் கூறியது. ஆனால் வாக்களிக்க புதிய தேதியை நிர்ணயிக்கவில்லை. தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் என்று தீர்ப்பாயம் கூறியிருந்தது. பல வாரங்கள் நிச்சயமற்ற நிலையில், பொலிவியாவின் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பாராளுமன்றம் ஏப்ரல்27 அன்று எதிர்வரும் 90 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் அனெஸ் இந்த நடவடிக்கையை கண்டித்து, பொலிவியர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியதாக எதிர்ப்பைக்காட்டியுள்ளார். 

மார்ச்13 2020 அன்று, 7மே 2020 அன்று நடைபெறவிருந்த ஐக்கிய இராச்சிய உள்ளாட்சித் தேர்தல்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையைப் பின்பற்றி தொழிற்கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2021 மே6ஆம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளார். அத்துடன் பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, சிரியா, ஸ்பெயின், சிரியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளிலும் ஏற்கனவே நிரல்படுத்தப்பட்டிருந்த சனாதிபதித் தேர்தல்கள், பராளுமன்ற தேர்தல்கள், உள்ளூராட்சி தேர்தல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் கொரோனா வைரஸின் அழிவு அதிகரித்து கொண்டே செல்லும் சூழலில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சனாதிபதி தேர்தலை பிற்போடுவது தொடர்பான வாதம் ஊடகங்களில் எழுகின்ற போதிலும் அதிபர் ட்ரம்ப் சமகாலத்தில் அது தேவையற்ற உரையாடல் என்ன தட்டி கழித்து செல்கின்றார்.

மேலும் சில நாடுகளில் அரசியல் கட்சிகளிடையே நிலவிய நீண்டகால பகைமை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு தேசிய நலன் கருதி தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அவசரகார நிலைமையை வெற்றிகரமாக கையாண்டு வருகின்றனர். உலகில் கொரோனா அபத்தம் காணப்பட்ட போதிலும் இஸ்ரேலில் அதன் வீரியம் காணப்படாத சூழலிலேயே இஸ்ரேலின் பொதுத்தேர்தல் மார்ச்02ஆம் திகதி நடைபெற்றது. இஸ்ரேலில் ஒருவருடத்தினுள் இடம்பெற்ற மூன்றாவது தேர்தலாக அது அமைந்தது. தேர்தல் தொடர்பில் சோவியத்தின் முன்னைய தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவ் ஒருமுறை குறிப்பிட்டார், “சுதந்திர தேர்தல்களின் சிக்கல், யார் வெல்லப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது." ஆனால் இஸ்ரேலிய தேர்தல்களின் சிக்கல் என்னவென்றால், யார் வென்றது என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. இதுவே இஸ்ரேலில் உறுதியான அரசாங்கம் அமைப்பதில் நிலவும் நீண்ட இழுபறிக்கு காரணமாகி உள்ளது. பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் இராணுவ தலைமை தளபதி பென்னி காண்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் வையிட் கட்சிக்குமிடையிலேயே போட்டி பலமாக காணப்பட்டது. நடைபெற்ற மூன்று தேர்தல்களிலுமே பிரதான இரு கட்சிகளும் அறுதிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. ஒரு வருடத்திற்குள் மூன்றாவது தேர்தல் இடம்பெறவும் அதுவே காரணமாகியது. நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து காண்ட்ஸ் நெதன்யாகுவுடன் ஆட்சியை பகிர தொடர்ச்சியாக மறுத்து வந்தார். எனிலும் நாட்டில் சமகாலத்தில் நிலவும் கொரோனா அபாயத்தை அடுத்து நெதன்யாகுவும் காண்ட்ஸிம் ஒப்பந்தம் மேற்கொண்டு ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இது இஸ்ரேலின் நாகரீக அரசியலலை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கையில் கொரோனா அபத்த காலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய கருத்துக்களே கொரோனா அபத்தத்தையும் தாண்டி இலங்கை அரசியல் கட்சிகளிடம் ஒலித்தவாறு காணப்படுகின்றது. இலங்கையில் பாராளுமன்றம் உலகளவில் கொரோனா அபத்தம் வீரியம் பெற்று கொண்டிருந்த காலப்பகுதியிலேயே மார்ச்2 அன்று கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. எனிலும் மார்ச் நடுப்பகுதியில் இலங்கையருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீள ஜீன்20ஆம் திகதி தேர்தல் திகதியாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனிலும் இலங்கையில் கொரோனா அபத்தத்தின் வீரியம் ஏப்ரல் இறுதிக்கு பின்னரே சடுதியாக அதிகரித்து வருகின்றமையும் பரிசீலிக்க வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. இலங்கை சர்வதேச அனுபவத்தையும் உள்வாங்க வேண்டியது அவசியமாகும். உலகளவில் தென்கொரியாவை தவிர்த்து பல நாடுகளும் தேர்தலை பிற்போட்டே உள்ளன. தென்கொரியா அனுபவத்தை உள்வாங்குவதாயினும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவுகை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரே தேர்தல் நடைபெற்றது. அத்துடன் பெரும் பாதுகாப்புடனேயே நடைபெற்றது. ஏற்கனவே சமூக முடக்கத்தால் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் இலங்கை அத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளக்கூடிய செலவையும் கருத்திற்கொள்ள வேண்டி உள்ளது. இலங்கை அரசியல்கட்சிகள் இஸ்ரேலின் நடைமுறையை முன்மாதிரியாக கொள்வது தேசிய நலன் சார்ந்து சாலப்பொருத்தமாக காணப்படும். இலங்கைக்கு தேசிய அரசாங்க உருவாக்கம் புதுமையானது அல்ல. தங்கள் நலன்சார்ந்து யுத்தக்குற்றங்களிலிருந்து விலக்கு பெற தேசிய அரசாங்கத்தை உருவாக்கிய இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தேசிய நலனை மையப்படுத்தி தேசிய அரசாங்கத்தை உருவாக்க முயலாது கட்சிகளிடையே மோதுவது நாகரீமற்ற அரசியல் ஒழுங்கையே வெளிப்படுத்துகின்றது. கொரோனா அபத்த காலத்திலும் எதிர்க்கட்சி என்றால் யாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்றும், ஆளுங்கட்சி என்றால் தனது விருப்புக்கு செயற்படலாம் என்ற எண்ணங்களுடன் அரசியல் கட்சிகள் செயற்படுவதன் விளைவு இலங்கை மக்களையே பாதிக்க கூடியது ஆகும்.

இலங்கை அரசியல் கட்சிகள் அரசியல் நலன்களை புறந்தள்ளி கொரோனா அபத்த காலத்திலாவது மக்கள் மீது கரிசணை கொண்டு செயற்பட வேண்டும். தவறும் பட்சத்தில் விளைவுகள் ஆபத்தானதாக முடியும். இலங்கையின் ஆளும்கட்சி கருதுவது போன்று கொரோனா வைரஸ் பரவுகைக்கு எதிரான போர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை ஒத்ததும் இல்லை. மற்றும் கோவிட்-19 நோய் டெங்குக்குக்கு சமனான நோயும் இல்லை. இங்கு எதிரி கண்ணுக்கு புலப்படாதவனும் தொடுகை மற்றும் காற்றூடாக தாக்க கூடியவன் மேலும் அழிக்க கூடிய ஆயுதமும் அற்றவன் என்பதை இலங்கையின் அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-