தேர்தல் வாக்குகளை கடந்து ஒற்றுமை இன்மை நிலவுமாயின்; வாழ்விடத்தை இழக்க நேரிடும். -மித்ரசகி-

கொரோனா அபத்த காலத்தை சாதமாக பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்க முக்கூட்டுக்குள் இலங்கையை ஒன்றினைப்பதில் மும்மரமாக ஈடுபடுவதனை கொரோனாவிற்கு பின்னரான இலங்கை அரசியல்  சூழல் தெளிவாக காட்டுகின்றது. சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்கலின் முக்கூட்டு ஆதிக்கம் அதீதமாக தமிழர்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கை மையப்படுத்தியே கட்டவிழ்த்து விடப்படுகின்றது. கொரோனா அபத்தத்தினுள் வாழப்பழகுவது என்பது இலங்கையில் தமிழர்களை ஒருங்கே சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்க முக்கூட்டுக்குள்ளும் வாழப்பழக திணிக்கப்படுகின்றது. கொரோனா பேராபத்தினுள், சிதைக்கப்படும் தமிழர் தாயகம் பற்றிய எச்சரிக்கையினை மற்றும் எதிர்வினையினை ஆற்ற முடியாத சமூகமாக தமிழ் சமூகம் காணப்படுகின்றது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பும் இலங்கையின் தமிழ்த் தலைவர்களும் ஒற்றுமைமையை சிதைக்கக்கூடிய திணிப்புகளுக்கு எதிராக பலமான எதிர்ப்பினை காட்டவும் முன்வருவதில்லை. அதனடிப்படையில் குறித் கட்டுரை தேர்தல் வாக்குகளுக்காக தமிழ் தலைமைகள் பிரிந்து செயற்படுவார்களாயின் தமிழர் தாயகத்தில் ஏற்படக்கூடிய தடுக்க முடியாத சிதைவுகளை விபரிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மே22ஆம்  திகதி சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் கூடப்பட்ட பௌத்த ஆலோசனை சபையில் கிழக்கில் பௌத்த மதத்தை மையப்படுத்திய தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவதாய் பௌத்த பீடங்களால் சனாதிபதியிடம் முறைப்பீடு செய்யப்பட்டது. அதற்கு தீர்வாய் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் முன்னால் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் தமிழர்களின் வாழ்வுரிமையை சிதைத்து கொண்டு வருகின்ற போதிலும், தூய தமிழர் தாயகமாக இருந்து சுதந்திரத்தின் பின்னர்  பல்லின சமூக மக்களை கொண்ட வாழ்விடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் தொல்பொருளியல் செயற்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் முன்னால் மேஜர் ஜெனரலிடம் ஒப்படைப்பது என்பது கிழக்கு மாகாணத்தை இராணுவ கட்டமைப்பூடாக தூய சிங்கள பௌத்த தேசமாக மாற்றும் முயற்சி என்பது வெளிப்படையாய் புலனாகின்றது. இதனை தொல்பொருளியலாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ள, 'பல்லின கிழக்கு மாகாணத்தை சிங்கள - பௌத்த வாழ்விடமாக மீட்டெடுப்பது சிங்கள - பௌத்த தேசியவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.' என்ற கூற்றும் உறுதி செய்கின்றது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் புனித பூமிகள் நிறைந்து காணப்படுகின்றது. அதனை மையப்படுத்தியே 1965ஆம் ஆண்டு டட்லி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பெற்ற தமிழரசுக்கட்சி, திருகோணமலையை புனித பூமியாக்க கோரி பின்னர் அது நடைபெறாத நிலையில் ஆட்சி முடியும் காலத்தில் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்திற்கு அழித்து வந்த ஆதரவை விலக்கியிருந்தது. இன்று தமிழர்களின் புனித பூமியை திரிவுபடுத்தப்பட்ட வரலாறுகள் மூலம் சிங்கள - பௌத்தம் முழுங்க முயற்சிக்கின்றது. தற்போதைய திருக்கோணேஸ்வரம் ஆலயமுள்ள இடத்தில் ஒரு சமண கோயில் இருந்ததாகவும், கி.பி 5ஆம் நூற்றாண்டில் மன்னர் மகாசேனன் அதை அழித்து அங்கு ஒரு புத்த கோயில் கட்டியதாகவும் வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. என்று தொல்பொருள் துறையின் ஜெயலத் குலசிங்கவை மேற்கொள்காட்டி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிழக்கின் தொல்பொருளியலை பாதுகாக்க என சிங்கள - பௌத்த கூட்டோடு இராணுவம் இணைக்கப்பட்டுள்ளமை முழுமையாக தமிழர்களின் புனித வரலாற்றை சிதைக்க வழிகோலுகின்றது. 

ஏற்கனவே திணைக்களங்கள் என்ற பெயரில் முழுமையாக சிங்கள - பௌத்த ஆளனிகளால் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புக்களால்,  சிங்கள - பௌத்த நிகழ்ச்சி நிரல் மேலோங்குவதுக்கு எதிராக கடந்த காலங்களில் மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகையிலே, ஏற்கனவே குடியேற்ற திட்டங்களால் தமிழர் தாயக நிலத்தொடர்ச்சி சிதைக்கப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை அனுபவிப்பதற்கே போராடும் கிழக்கு மாகாணத்தில் இராணுவ நெறிப்படுத்தலுக்குள் தொல்பொருளியல் செயற்பாடுகளை ஒப்படைப்பது என்பது தமிழ் பேசும் மக்களை கிழக்கு மாகாணத்திலிருந்து முழுமையாய் அகற்றுவதை இலகுபடுத்தக்கூடியதாகும்.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளியல் செயற்பாடு இராணுவயமயமாக்கலுக்குள் நேரடியாக பொறுப்பளிக்கப்பட்டு ஒரு வாரங்கள் கடக்கின்ற சூழலிலும் இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைகள் காத்திரமான எதிர்ப்பை இதுவரை காட்டவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பது அதிவிசேட குறிப்பாகும். ஏற்கனவே கடந்த வருடம் கின்னியா பிள்ளையார் கோயில் பிரச்சினைக்காகவும் தமிழ் மக்களே பலத்த இராணுவ எதிர்ப்புக்களின் மத்தியிலும் போராடியிருந்தார்கள். அன்று இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனையற்ற இணை பங்காளியாய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருந்தது என்பதுடன் தொங்கு அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்ததும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே ஆகும். எனிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தொல்பொருளியல் திணைக்களத்தால் கிழக்கு மாகாணம் சிதைக்கப்படுவதற்கு எதிராக அரசியல்ரீதியாக எவ்வித ஆக்கபூர்வமான முயற்சினையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் சுயாதின போராட்டங்கள் உச்சம் தொட்ட போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஏற்கனவே தொடுக்கப்பட்டிருந்த நீதிமன்ற வழக்கிற்காக ஆஜராகி இருந்தார். இது மலின அரசியல் தன்மையையே வெளிப்படுத்தியது அன்றி தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதிற்கான அக்கறையை வெளிப்படுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதிகளுக்கு அப்பால் இனியாவது தமிழ் மக்களின் நலனில் அக்கறைப்பட முயல வேண்டும். இல்லையேல் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதித்துவத்தை முழுமையாய் இழக்க வேண்டியே நேரிடும்.

கடந்த கால வரலாறுகளுக்கு அப்பால் எதிர்காலம் பற்றிய சிந்தனையை தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டி உள்ளது. வடக்கில் தமிழ் தலைமைகள் தமக்குள் முட்டி மோதிக்கொண்டிருப்பதன் பாதிப்பை தற்போது உணர முடியாத போதிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகள் பிளவுபட்டிருப்பதன் பாதிப்பை தெளிவாக மக்கள் உணர்ந்துள்ளனர். ஆதலாலேயே கிழக்கு மாகாண மக்கள், மக்கள் நலனை மையப்படுத்தி கட்சிகளை ஒன்றுசேருமாறு தொடர்ச்சியாய் அறைகூவல் விடுத்து வருகின்றனர். ஏற்கனவே வளர்ந்து வரும் பல்லின கட்டமைப்பால் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள தமிழ் சமூகம் தமிழ்த்தேசிய கட்சிகளின் மோதலால் இருக்கின்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதே யதார்த்தமான பார்வையாக உள்ளது. இந்த உண்மையை தமிழ் தலைமைகள் உணர வேண்டும். பிரதிநிதித்துவம் மற்றும் ஆட்சி பரப்பில் செல்வாக்குடன் இருந்த காலப்பகுதியிலேயே தமிழ்த்தலைமைகளால் கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியாத போது தேர்தல் வாக்கிற்காக தமக்குள் சிதைவுற்று மக்கள் வாக்குகளையும் சிதைத்து பிரதிநித்துவத்தையும் இழப்பார்களாயின் செல்வநாயகம் அவர்கள் கூறியது போல் தமிழ் மக்களை காக்க கடவுளை பிரார்த்திக்க வேண்டிய நிலையும் மாறி கடவுள்கள் தங்களை காக்க பௌத்தத்துடன் இயைந்து வாழப்பழக வேண்டிய சூழலே ஏற்படும்.

தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை தொடர்பில் வருடா வருடம் குறிப்பாக தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் ஆய்வுப்பரப்பில் இருப்போரும், தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அறைகூவல் விடுத்தே வருகின்றனர். எனிலும் தமிழ் தலைமைகளும் ஒற்றுமையை சொல்லாடலில் கூறுகின்ற போதிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி இதயபூர்வமான விட்டுக் கொடுப்புகளுடன் ஒன்றிணைவதை விரும்பாதவர்களாயே உள்ளனர். இந்நிலை தொடரின் ஏதோ ஓர் வடிவில் உரிமைகளுக்காக போராடிக்கொண்டாவது வாழும் தமிழ் மக்களின் இருப்புக்கள் முழுமையாக தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பறிபோகும் நிலையே ஏற்படும்.

தவறுகளற்ற பூரண முழுமையான மனிதனையோ கட்டமைப்யோ அடையாளம் காண்பது இயலாத காரியமாகும். பிறர் மீது தவறை சுட்டும் கைகளில் நான்கு விரல்கள் எம்மை சுட்டுகின்றது என்பதை மறந்து விடுகிறோம். ஆரசியல் கோபதாபங்களுக்கிடையிலான உணர்வுசார் விளையாட்டு அன்று. இது இராஜதந்திர ரீதியிலான விளையாட்டாகும். தமிழ் அரசியல் தலைமைகள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமே ஆகும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பதே பிரதான வாசகமாகும். ஆயுதத்தை பிரதானப்படுத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றிட ஆயுதப் போராட்டத்தில் பயணித்த விடுதலைப் புலிகள் அமைப்பினரே தம் எதிர்ப் போராட்ட இயக்கங்களை மன்னித்து ஒரே குடையின் கீழ் பயணிக்க முன்வருகையில் சாத்வீக அரசியலை பிரதானமாக நெறியாக கொண்டு இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையை பேண முடியவில்லையாயின் அது தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களை புறந்தள்ளி தம் அரசியல் நலன்களுக்காகவே செயற்படுகிறார்கள் என்பதே உர்ஜிதமாகின்றது. 


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-