வடகொரியா ஊடகங்கள் முடிச்சவுக்கும் வரை கிம் பற்றிய செய்திகள் அங்கீகரிக்க முடியாது. -ஐ.வி.மகாசேனன்-
தீநுண்மம் கொரோனா பற்றிய செய்திகளே இன்று உலக அரசியலின் பெரும் பேசுபொருளான விவாதமாகும். ஏற்கனவே ஊகிக்கப்பட்ட உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரங்களின் எதிர்கால வடிவங்களையே கொடிய கொரோனாவின் பரவுகை சிதைத்துள்ளது. இக்கொடிய செய்தியையும் தாண்டி இன்று உலகை தேட வைத்துள்ள செய்தியாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உயிருடன் உள்ளாரா? என்பது காணப்படுகின்றது. உலகின் ஏதோ ஓர் மூலையில் உள்ள வடகொரிய அதிபர் பற்றிய மர்மங்களையே இன்றைய உலக அரசியல் தேடுகின்றது. கொரோனாவினால் பெரும் அழிவுகளை சந்தித்து வரும் அமெரிக்காவும் தனது அழிவுகளிலிருந்து எவ்வாறு மீளுவது என்ற உரையாடலின் இடையே வடகொரிய அதிபரின் மர்மத்தின் உண்மையை தேடவே முயலுகின்றது. இத்தகு முக்கியத்துவத்தை வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் எவ்வாறு பெற்றார்? கிம் ஜொங் உன்-இன் உடல் நலம் பற்றிய மர்மங்களின் நம்பத்தன்மை? என்பவற்றை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
கிம் ஜொங் உன், உலகிலேயே மிகவும் இளமையான அரசியல் தலைவராக காணப்படுகின்றார். 2011ஆம் ஆண்டில் தனது 27ஆவது வயதில் தந்தை கிம் ஜாங் இல்-இன் மரணத்தை தொடர்ந்து வடகொரிய அதிபர் சிம்மாசத்தை பெற்றார். வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்-இன் உடல் நலம் பற்றிய மர்மத்தை உலகம் தேடுமளவிற்கு கிம் ஜொங் உன் முக்கியத்துவம் பெறுவதற்கு பிரதானமாக இருவிடயங்கள் காரணமாகிறது. இராணுவ அரசியலின் முக்கியத்துவம் மற்றும் வல்லாதிக்க அமெரிக்காவுக்கே சவால்விடும் சாணக்கியத்தனம் என்பனவே அவையாகும்.
அரசியலில் அனுபவம் இல்லாத போதும் கிம் இல் சங் இராணுவ பல்கலைக்கழக கல்வியூடாக பெற்ற இராணுவ அனுபவம் மட்டும் கொண்டிருந்த நிலையிலேயே கிம் ஜாங் இல்-இன் அரசியல் வாரிசாக கிம் ஜொங் உன் 2011இல் வடகொரிய அதிபர் பதவியை பெற்றார். கிம் ஜொங் உன் ஆரம்பத்திலிருந்தே வடகொரியாவின் ஆயூதம் தயாரிக்கும் திட்டத்தில் உறுதியாக இருந்தார். 2012 ஏப்ரல் 15ஆம் திகதி முதல் முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றுகையில், “இராணுவத்திற்கு முதலிடம்” என்ற கோட்பாட்டையே முன்வைத்தார். அவருடைய தலைமையின் கீழ் அணுகுண்டு மற்றும் ஏவுகனை சோதனைகளை உலக பொருளாதார தடைகள் மத்தியிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்தார். உலகமே கொரோனா பீதியில் இருக்கையில் கடந்த மார்ச் மாதம் மாத்திரம் 9 ஏவுகனை பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்துவதாக 2018ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தை கடந்த சனவரி வாபஸ் பெறுவதாக அறிவித்து, “இந்த உலகம் புதிய இராணுவ ஆயுதத்தை பார்க்க போகிறது” என எச்சரிக்கை விடுத்தார். இவ்அசட்டு துணிச்சலுடன் கிம் ஜொங் உன் இராணுவ அரசியலுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உலக நாடுகளை கிலி கொள்ள வைத்துள்ளது.
அனுபவமற்ற இளம் அரசியல் தலைவராகிய போதிலும் கிம் ஜோங் உன் உலக வல்லரசை பணிய வைத்துள்ளார். கிம் ஜொங் உன் மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை பரிசோதனையால் அமெரிக்க வடகொரியா மீது கடும் சினம் கொண்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ராக்கெட் மனிதர்” என்று வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்-ஐ ஏளனம் செய்தார். பதிலுக்கு அவர், “மூளை தடுமாற்றத்தில் இருக்கும் முதியவர்” என்று ட்ரம்பை கேலி செய்தார். அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான வார்த்தை போர் மூன்றாம் உலகப்போருக்கான அபாயத்தையே ஏற்படுத்தியது. எனிலும் எதிர் நாடுகளை அடக்க தனது இராணுவ பலத்தை குவித்தது போல அமெரிக்காவால் வடகொரியா மீது நிகழ்த்த முடியவில்லை. பேச்சுவார்த்தை அரங்கில் கிம் ஜொங் உன்-ஜ ட்ரம்ப் 2018ஆம் ஆண்டு சந்தித்தார். பின்னர் 2019ஆம் ஆண்டில் வடகொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் சேர்ந்த சாதாரண முறையில் கொரிய தீபகற்பத்துக்கு இடையில் இராணுவம் இல்லாத இடைநிலப்பரப்பில் சந்திப்பொன்றை நிகழ்த்தினார்கள். கிம் யோங் உன்-இன் இதுவரையான ஆட்சி காலத்தில் அமெரிக்காவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை நடாத்தியமை முக்கியத்துவமான நிகழ்வாக காணப்படுகின்றது.
இந்நிலையில் உலகின் கவனத்தை ஈர்த்த தலைமையின் உடல்நலம் பற்றிய மர்ம செய்திகள் ஏப்ரல்20ஆம் திகதி வடகொரிய அதிருப்தியாளர்களினால் நடாத்தப்படுகின்ற சியோல் நகரை தளமாக கொண்ட டெய்லி என்.கே செய்தி சேவையில் பிரசுரமாகியது. கிம் ஜொங் உன் இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளானதாகவும் நாட்டுப்புறத்தில் உள்ள தனது மாளிகையில் ஓய்வெடுத்து வருவதாகவும் வடகொரியாவில் நிகழும் நிகழ்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டது. கிம் ஜொங் உன் தொடர்பிலே மர்மமான செய்தி உத்வேகம் பெறுவதற்கு அடிப்படையாய் அமைவது, வடகொரியாவின் தந்தை என புகழாரம் சூடப்படும் கிம் இல் சங்-ன் பிறந்ததின விழாவில் கலந்து கொள்ளாததேயாகும். கிம் இல் சங்-ன் பிறந்ததினமாகிய ஏப்ரல்15 இனை வடகொரியாவில் சூரிய தினமாக (இல் சங் என்பதற்கு கொரிய மொழியில் சூரியனாக வருவது எனப்பொருள்.) அரச விடுமுறையளித்து வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கிம் ஜொங் உன் 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து சூரிய தின விழாவில் தவறாது கலந்து கொண்டுள்ளார். எனிலும் இம்முறை அவ்விழாவில் கிம் ஜொங் உன் கலந்து கொள்ளாததே மர்மத்துக்கு தூபமிட்டுள்ளது.
டெய்லி என்.கே செய்தியை தொடர்ந்து பல ஊடகமும் வடகொரிய அதிபரின் உடல் நலம் தொடர்பில் தேட தொடங்கியது. ஜப்பானிய சஞ்சிகையான ஷீகான் ஜென்டாய், கிம் ஜொங் உன்-க்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கொழுப்பினால் அடைபட்டுப்போன குருதிக்குழாயில் பலூன் போன்ற நுண்குழல் ஒன்றை வைப்பதற்காக வடகொரிய டாக்டர்கள் அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்றை செய்ததாகவும், அந்த சிகிச்சை பிழைத்ததாலேயே மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் பெயர் குறிப்பிடாத சீன மருத்துவ வட்டாரம் ஒன்றை சுட்டிக்காட்டி கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் கிம் ஜொங் உன்-இன் மருத்துவ ஆலோசனைக்கு மருத்துவ வல்லுநர்கள் குழுவை சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானை போன்றே அமெரிக்க ஊடகங்களும் அமெரிக்க உளவுப்பிரிவும் வடகொரிய அதிபரின் உடல்நிலை தொடர்பான மர்மத்தை களைய கடுமையான அவதானிப்பில் உள்ளது. அமெரிக்க ஊடகமான சி.என்.என், சமீபத்தில் நடந்த இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியிட்டது. மேலும் அமெரிக்காவின் உளவு செயற்கைகோள் படங்கள் மிகப்பெரிய இறுதி ஊர்வலத்துக்கு வடகொரிய தயாராவதை காட்சிப்படுத்துவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்கள் வடகொரியாவில் எடுத்த புகைப்படங்கள் ஏப்ரல்18ஆம் திகதிக்கு பின், தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள மிரிம் இராணுவ அணிவகுப்பு பயிற்சி மைதானம் அருகில், தற்காலிகமாக கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது தெரிய வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கொரியா, வடகொரியா அதிபரின் மரணம் தொடர்பாக வெளியிடும் செய்திகளை முற்றாக மறுத்துள்ளது. தென்கொரியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான ஆலோசகர் முன் ஜோங் இன் கூறுகையில், “வடகொரிய சனாதிபதி கிம் உயிருடன் நலமாகவும் இருக்கின்றார். கடந்த ஏப்ரல்13ஆம் திகதி முதல் வோன்சன் நகரில் ஓய்வு எடுத்து வருகின்றார். அவரது உடல் நிலை சார்ந்து சந்தேகத்துக்கு இடமான விடயங்கள் ஏதும் நடக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் ஜப்பானுமே ஊடக மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் வடகொரிய அதிபரின் மரணம் பற்றிய ஊகத்தை முதன்மைப்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபரின் ஊடக சந்திப்பொன்றின் பதிலும் அதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. கடந்த திங்கட்கிழமை ஊடக சந்திப்பொன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடம் வடகொரிய அதிபரின் உடல்நலம் தொடர்பாக கேட்கையில், “எனக்கு ஒரு நல்ல எண்ணம் உள்ளது. ஆயினும் அதனை என்னால் கூற முடியாது. என்னால் அவர் உடல்நலம் தேற வாழ்த்து மட்டுமே கூறலாம்.” என்றார். ட்ரம்புக்கு உள்ள எண்ணம் கிம்-இன் மரணம் தானோ என அரசியல் விமர்சகர்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
வடகொரிய தீவிரமான கொம்யூனிச நாடு என்ற அடிப்படையில் ஊடகங்களின் செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பின்பே வெளியாகும். வடகொரிய அதிபரின் உடல்நிலை தொடர்பில் வடகொரிய ஊடகங்கள் ஏதும் கூறாத நிலையில் வடகொரிய அதிபரின் உடல்நிலை இரகசியமாவே உள்ளது. கிம் ஜொங் உன்-இன் உணவு பழக்கவழக்க முறை அவருக்கு நோய் ஏற்பட காரணமாக அமையலாம் என அவரது முன்னாள் சமையல்காரன் ஒருவர் கூறியுள்ளார். கிம் ஜொங் உன் மாட்டுக்கறி, சீஸ் மற்றும் மது வகைகளை அதிகம் விரும்பி உண்பவராக குறிப்பிடப்படுகின்றது. இவ்உணவுப்பழக்கவழக்கம் அவருக்கு மாரடைப்பை ஏற்படுத்த கூடியது என பலராலும் நம்பப்படுகின்றது. எனிலும் கிம் ஜொங் உன் வெளிஉலகிற்கு வெளிவராது இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் 2014ஆம் ஆண்டு 40 நாட்கள் ஓய்வில் இருந்தார். அன்றும் இன்றுபோல் பல மர்மங்கள் உலாவின. புரட்சி மூலம் கிம் ஜொங் உன்-இன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு விட்டது. மற்றும் அவர் இறந்து விட்டார் என்ற செய்திகள் உலாவின. எனிலும் 40 நாட்களின் பின் கிம் ஜொங் உன் ஊடகங்களில் வெளிப்பட்டார். அன்றும் வடகொரிய ஊடகங்கள் எவ்வித மர்மங்களுக்கும் பதிலளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தககது. மேலும் உலகளாவில் பரவும் கொரோனா பல அரசியல் தலைவர்களையும் பதம் பார்த்தது. வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை என கூறிய போதிலும் பாதுகாப்பிற்காக ஓய்வெடுப்பதாவும் சில செய்திகள் உலாவுகின்றன.
வடகொரிய இரகசியங்கள் ஆய்ந்தறிவதன்பது எளிதானதல்ல. வடகொரிய முடிச்சவுக்கும் வரை காத்திருக்கவே வேண்டும். இங்கு ஊடகங்கள் பலதும் கிம் ஜொங் உன்-இன் நிலை பற்றிய மர்மங்கள் உறுதியாக முதலே வடகொரியாவிற்கான அடுத்த தலைமை தொடர்பிலான மர்மத்தை ஆராய தொடங்கி விட்டன. முதலாவது மர்மத்திற்கே தீர்வில்லாத நிலையில் இரண்டாவது மர்மத்துக்கு விடை தேட முயல்கின்றனர். கிம் ஜொங் உன் ஏகாதிபத்திய எஜமானோடு போட்ட மோதலை எமனோடும் நிச்சயம் போடுவார். வல்லாதிக்கத்தை வீழ்த்தியவர் எமனை வீழ்த்துவாரா? என்பதை வடகொரியா முடிச்சவிழ்கையிலேயே அறியலாம்.
Comments
Post a Comment