சுயகற்றலை வளர்க்க இணையவழி கற்றலை ஓர் சாதனமாக கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா வைரஸ் பரவுகையும் அதுசார்ந்த பாதுகாப்பை மையப்படுத்தி அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளும் இலங்கை மக்களில் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. அன்றாட கூலி வேலை செய்து உழைத்த மக்கள் வேலையின்றி பெரும் சிரமப்படுகின்றார்கள். நிறுவனங்களில் வேலை செய்தவர்களின் நிலைப்பாடும் ஊரடங்கின் பின் வேலை தொடருமா என்ற கேள்விக்குறியில் காணப்படுகின்றது. இதை தாண்டி சில அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை என இணையவழி முறையூடாக வேலையை மேற்கொள்ளும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துகின்றார்கள். இவ்வாறான பொறிமுறையிலேயே இணையவழி கல்வி முறைமையை மாணவர்களுக்கும் மேற்கொள்ள அரசாங்கம் திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆயினும் இதன் சாத்தியப்பாடு தொடர்பிலே பல எதிர்மறையான விமர்சனங்கள் சமூக பரப்பில் நிறைந்து காணப்படுகின்றது. அதனடிப்படையில் எம்சமூகத்துக்கு பொருத்தமான சுயகற்றல் வழிமுறையை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவுகை அடையாளங்காணப்பட்டதும் முதலில் முடக்கப்பட்ட நிறுவனமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலான கல்விசார் நிறுவனங்களே ஆகும். அது தொடர்பில் பல விமர்சனங்கள் காணப்பட்டாலும் மாணவர்கள் திரளாவது அதிகம் என்ற ரீதியிலும் ஒப்பீட்டளவில் புரிதலுடன் செயற்படக்கூடிய ஆற்றலற்றவர்கள் என்ற ரீதியிலும்  எளிதில் கொரோனா பரவுகையின் ஊடகமாக செயற்படக்கூடியவர்கள் மாணவர்கள் காணப்படுகின்றனர். மாணவர்களை முடக்குவது அவசியமானதாகும். அதனடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் குறித்த செயற்பாடு பாராட்டிற்குரியதாகும். எனிலும் நீண்டகால தொடர்ச்சியான விடுமுறை என்பது மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கக்கூடியதாகும்.

மார்ச்13ஆம் திகதி முடக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இரண்டு மாதங்களை அண்மிக்கின்ற போதும் திறப்பதற்குரிய எவ்வித சமிக்ஞைகளும் காணப்படவில்லை. முன்னர் மே மாத நடுப்பகுதியில் கல்வி நிறுவனங்களை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் தொடர்ச்சியாக கொரோனா பரவுகை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அம்முயற்சியும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. விடுமுறையின் கால நீடிப்பு முழு இலங்கைக்கும் ஆபத்தானது எனிலும் பெரிதும் பாதிக்கப்படும் சமூகமாக வடக்கு-கிழக்கு தமிழ் சமூகம் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் விடுகை வயது 24ஆக காணப்படுகின்றது. ஆயினும் தமிழர்களை மையப்படுத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விடுகை வயது 26-27 வரையிலும் நீண்டு செல்கின்றது. போரின் பாதிப்பால் 30வயதுக்கு மேற்பட்டோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் காலநீடிப்பு அவர்களை மிகவும் பாதிப்பதாக தென்படுகின்றது. இதற்கு வினைத்திறனான ஓர் செயற்பாட்டை தேட வேண்டிய பொறுப்பில் வட மாகாண கல்விசார் அரச நிர்வாகிகள் காணப்படுகின்றனர்.

மேற்குலகை சேர்ந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் சாதாரண காலங்களிலேயே இணையவழி கல்வியானது முதிர்ச்சி பெற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. ஆதலால் கொரோனா வைரஸ் முடக்க காலத்தில் அதன் பயன்பாடு மாணவர்களுக்கு கடினமான மாறுபட்ட சூழலை ஏற்படுத்தாது. எனிலும் அம்முறையை வளர்ச்சியடைந்து வரும் நம் நாடுகளில் பயன்படுத்த முனைகையில் எம் சமூக பொருளாதார நிலைப்பாடுகளை சீர்தூக்கி பார்க்க வேண்டி உள்ளது.

இலங்கை வளர்ச்சியடைந்து வரும் நாடாகவும், 1980களுக்கு பின்னர் நீண்ட ஆயுதப்போராட்ட வரலாற்றால் முடக்கப்பட்ட தேசமாக காணப்படுகின்ற போதிலும் எழுத்தறிவு வீதம் 92.6% உடன் முன்னிலையில் இருப்பதற்கு இலங்கையில் இலவசக்கல்வியே காரணமாகின்றது. ஏழை மக்களும் தங்கள் கல்வியறிவூடாக முன்னேற இலங்கையின் இலவசக்கல்வியே வழிவகுத்துள்ளது. ஆக இலங்கையில் ஏழை மக்களும் கல்வியறிவை பெற்று வருகின்றனர் என்பதை திட்டங்களை வகுப்போர் கருத்தில் கொள்ள வேண்டும். அதிலும் வடக்கு-கிழக்கு மக்கள் யுத்த வடுக்களிலிருந்து மீட்கப்படாதோர் அவர்களின் பொருளாதார நிலைகளையும் கருத்திற் கொண்டே இலங்கையில் கொரோனா முடக்க கால கல்வி கொள்கையை வகுக்க வேண்டியது அவசியமாகிறது. மாறாக மேற்குலக பாணியை முழுமையாக பிரதி செய்யின் அப்பயன் ஒரு தரப்பிற்கே பலன் கிடைக்கும். பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவை பெறுவதில் சிரமம் காணப்படும்.

மேற்குலகு நாடுகளுடன் எங்களது இணையவேகத்தை ஒப்பிட முடியாது. இன்றும் எங்களுடைய பல பிரதேசங்களில் இணையவசதிகள் போதியளவு காணப்படவில்லை என்பதை கல்விக்கொள்கையை வகுப்போர் நடைமுறைப்படுத்துவோர் கருத்திற்கொள்ள வேண்டும். இணையவழிக் கல்வியை நடைமுறைப்படுத்த முயல முதல் இலங்கை அரசாங்கம் நாடு பூராகவும் சீரான வேகத்தில் இணையவசதியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

இணையவழிக்கல்வி ஓர் முன்னேற்றகரமான பாதை என்பது மறுதலிக்க முடியாத உண்மையாகும். இன்று உலகம் உள்ளங்கையுக்குள் சுருக்கப்பட குறித்த இணையமே காரணமாகின்றது. பல கற்கை நெறிகள் ஆங்கிலத்திலும் பிற மொழியிலும் இணையப்பரப்பில் குவிந்து காணப்பட தமிழில் போதியளவு காணப்படவில்லை என்ற குறை அதிகமாகவே காணப்பட்டது. அந்நிலையை கொரோனா கால இணையவழிக்கல்வியின் அதிகரிப்பு குறைத்துள்ளது. நிறைவாக தமிழ்மொழியிலும் கற்கைநெறிகளை இணையத்தில் தேடி பெற வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. இணையவசதியை பெற கூடியவர்களுக்கு வரமாகவே காணப்படுகின்றது. எனிலும் நாம் இணையவழிக்கல்வியின் முழுமையான பயனை பெற நாடு தொலைத்தொடர்பு அபிவிருத்தியில் இன்னும் பலபடி நகரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் கொரோனாவுக்கு முன்னரே சமீபகால கல்விக்கொள்கைகள் படிப்படியாக இலவசக்கல்வியை சீரழிக்கும் செயற்பாடுகள் உள்வாங்கப்பட்டு வருவது அறிந்ததே. இந்நிலையில் ஏழை மாணவர்களின் பிரச்சினைகளை கருத்திற் கொள்ளாது கொரோனா வளர்த்துவிடும் இணையவழிக்கல்வி ஏற்பாடு இலங்கையின் இலவசக்கல்வி முறைக்கு முழுமையாக முழுக்கு போட்டுவிடுமோ என்ற அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஓர் அபாயகரமான நகர்வாகும்.

சமீபத்தில் வெளியாகிய க.பொ.த சாதாரணதர முடிவுகளில் வடமாகாணம் 9வது இடத்தில் இருப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. சென்ற ஆண்டும் முடிவுகள் வெளியான சில காலம் மாகாண இருப்பு தொடர்பில் விவாதிப்போடு நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டுள்ள சூழலில் எமக்கான சரியான சுயகற்றல் ஏற்பாடுகள் தொடர்பில் இதுவரை ஆரோக்கியமான உரையாடல் எம் சமூகத்தில் ஆரம்பிக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும். இன்னும் மூன்று மாதங்களில் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நடைபெற உள்ளது. அந்நிலையில் வடக்கு-கிழக்கின் பெறுபேற்றை உயர்ந்த ஆரேக்கியமான பரந்த ஆலோசனைகள் அவசியமாகின்றது.

யாழ்ப்பாணத்தில் ஓர் வைத்திய நிபுணர் தன்னார்வமாக க.பொ.த உயர்தரத்தை சேர்ந்த மாணவர்கள் யாருக்காவது தற்போதைய இணையவழிக்கற்கையை தொடர போதிய வசதி காணப்படவில்லையாயின் தன்னை அணுகுமாறும் தான் அதற்கான உதவியை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். இம்மனநிலை இவ் எண்ணம் எங்கள் அரசியல் பிரதிநிதிகளிடம் இன்னும் வரவில்லை. இனியும் வரப்போவதுமில்லை. குறித்த தன்னார்வ சேவையாளரின் பணி பாராட்டுக்குரியது. மேலும் தமிழ் சமூகம் பல வைத்திய நிபுணர்களையும், பொறியியலாளர்களையும் மற்றும் பேராசிரியர்களையும் கொண்டுள்ள சமூகம். சாதாரண மக்களையும் தாண்டி கல்வியின் தேவையை ஆழமாக உணர்ந்த அவர்களும் குறித்த வைத்திய நிபுணர் போன்ற செயற்பாட்டுக்கு முன்வரலாம்.

சுயகற்றல் என்பது மாணவர்கள் தங்களது திட்டமிடலின் கீழ் தங்கள் ஆற்றலுக்கேற்றவாறு திட்டமிட்டு கற்றலை தொடர்வதாகும். சுயகற்றலே புத்தாக்க சிந்தனைகளை உருவாக்க கூடிய ஏற்பாடாகும். எம்மிடத்தில் புத்தாக்க சிந்தனையாளர்கள் குறைந்து செல்வதற்கு பிரதான காரணமே சுயகற்றலற்ற தேர்ச்சி மட்டத்தை நோக்கி ஓடும் மாணவர் சமூகத்தின் உருவாக்கமே ஆகும். அக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய கொரோனா அபத்த காலம் சரியான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. சீரான திட்டமிடலுடன் சுயகற்றலுக்கான வழிவகைகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பின் எம்மிடமிருந்தும் புத்தாக்க சிந்தனையாளர்கள் தோற்றம் பெறுவார்கள்.

இணையவழிக்கற்றலுக்கு மாற்றீடான ஏற்பாடுகளை எம்சமூகம் சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் யுத்தங்களினுள்ளும் கல்வி கற்று எழுச்சி பெற்ற சமூகம் தான் எம் தமிழ் சமூகம். புதிய இணைய மோகம் தான் பலரை குழப்புகின்றது. ஏழ்மையிலும் கல்வி ஆர்வமுடைய மாணவர்கள் குறித்த இணைய ஏற்பாடுகளை பெற முடியவில்லை என எண்ணி கல்வியை இழந்துவிடாதீர்கள். இணையம் கல்வி கற்பதற்கான ஓர் உசாத்துணையே என்பதையும் மறவாதீர்கள். எம் முன்னைய தலைமுறையை சேர்ந்த பலரும் கடந்தகால வினாத்தாள்களை சுயமாக மீட்டி பார்த்து அதனூடகவே சிறந்த பெறுபேறுகளை யுத்த காலங்களிலுள்ளும் பெற்று வந்துள்ளனர். ஆக இணைய வசதி பெற முடியாதோர் அதனை நினைத்து வருந்தாது கடந்தகால பரீட்சை வினாக்களை சுயகற்றலில் மீட்டு பாருங்கள். அதற்கான வசதியையும் மாகாண கல்வித்திணைக்கள நிர்வாகிகள் செயற்படுத்த வேண்டும். இணையவழிக்கல்வி காணொளி தயாரிப்பில் ஈடுபடும் தன்னார்வாளர்களும் ஏழை மாணவர்களும் கற்க கூடிய வகையில் இலவச குறிப்பு தொகுதிகளையும் வழங்க ஏற்பாடு செய்வீர்களாயின் பொறுப்புடைய செயற்பாடாக அமையும்.

உலகளாவில் இடம்பெறும் கொரோனா கால கல்வி பிரச்சினைகள் தொடர்பில் யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அஸலாய், “அனைவருக்கும் கற்றல் தொடர்ச்சியை உறுதிப்படுத்த நாங்கள் நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம் குறிப்பாக பின்தங்கிய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளி மூடல்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய நிறுவனத்தின் மதிப்பீடு நம் உள்ளூர் அரச உயரதிகாரிகளுக்கும் நம் அரசியல் பிரதிநிகளிடமும் காணப்படாது எம் துரதிஸ்டமே ஆகும்.

நாளைய இருப்புக்கான மூலதனம் கல்வியே என்பதை பல உலக வரலாறுகளும் உணர்த்தியுள்ளது. ஈழத்தமிழரும் அதை உணர்ந்து செயற்படினேயே நாளைய இருப்பை உறுதி செய்யலாம். கொரோனா அபத்தத்திலிருந்து மாணவர்களின் கல்வியை பாதுகாக்க மாணவர்களின் சுயஆற்றலை விருத்தி செய்யக்கூடிய சுயகற்றலுக்கான வாய்பை திறந்து விட முயற்சி செய்வோம்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-